Published : 24 Nov 2013 12:00 AM
Last Updated : 24 Nov 2013 12:00 AM
குணால் சஹா வழக்கு குறித்து படித்திருப்பீர்கள். இவ்வாறான தீர்ப்புகளே சட்ட ரீதியாக அந்தத் துறை சார்ந்த அம்சங்களைப் பற்றி புதிய விவாதங்களையும் அதன் நீட்சியாக சீர்திருத்தங்களையும் ஏற்படுத்தும். அந்த வழக்கில் தொடர்புடைய மருத்துவமனை, பொதுத்துறை நிறுவனம்என்பதால் 11 கோடி ரூபாய் இழப்பீட்டை அரசு கட்டிவிடலாம். ஆனால், தனியார் துறை தாங்குமா?
அனுராதா அமெரிக்காவில் வாழ்ந்தவர். அங்கு அவரது பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டு இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிட வேண்டும் என்று சஹா வாதிட்டதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுதான் 11 கோடி ரூபாய் என்று நிர்ணயித்தது.
நாளை அதிகம் சம்பாதிக்கும் அமெரிக்க நட்சத்திரம் ஒருவருக்கு இங்கு இதுபோல் நடந்தால் என்ன ஆவது? நஷ்டஈடு கொடுத்து மருத்துவமனையே திவால் ஆகிவிடும். அந்த வகையில் சஹா வழக்கின் தீர்ப்பு, நஷ்டஈட்டை கணக்கிட ஒரு புதிய பாதையை வகுத்துள்ளது.
ஒருவரின் இறப்புக்கான நஷ்டஈட்டை நிர்ணயிப்பதில் வயது மற்றும் அவர் கடைசியாக சம்பாதித்த பணம் ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒரு குழந்தை இதுபோன்று இறந்திருந்தால், வேலைக்கு செல்லாத குழந்தையின் கடைசி வருவாயைக் கணக்கிட முடியாது. ஆனால், குழந்தையால் பெற்றோருக்கும் சமுதாயத்துக்கும் என்ன பயன் என்பதை எப்படிக் கணக்கிடுவது?
ஒரு நடிகர் இறந்திருந்தால்.. அந்த நேரத்தில் அவரின் படம் வெற்றி பெற்று அதிக சம்பளம் வாங்கலாம். பின்னர் அவரே தோல்விப் படங்கள் கொடுத்து மார்க்கெட் இழக்கலாம். அல்லது இதற்கு நேர்மாறாகக்கூட நடக்கலாம். இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
விடைதான் தெரியவில்லை. எதிர்காலத்தில் பொருளாதார நிபுணர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் இதற்கான விதிமுறைகளை வகுத்து விடைகளைக் கண்டுபிடிக்கலாம். ஆக, கேள்விகளே இப்போதைக்கு லாபம்தான்.
தொழிலில் கவனமின்மை என்பதிலும் குழப்பங்கள் உண்டு. சிவில் கவனமின்மைக்கும், கிரிமினல் கவனமின்மைக்கும் வேறுபாடு உள்ளது. சட்டத்துறையில் ஒரு வழக்கறிஞர் கவனக் குறைவாக இருந்தால்? ஒரு அரசு கவனக் குறைவாக சில முடிவுகளை எடுத்தால்?
கவனக்குறைவை சட்ட ரீதியாக நிரூபிப்பது கடினம். அப்படியெனில் அவற்றுக்கு எல்லாம் நஷ்டஈட்டை எப்படி நிர்ணயிப்பது? இப்போதைக்கு இந்தக் கேள்விகளுக்கு விடை இல்லைதான். ஆனால், இந்தக் கேள்விகளை எழுப்ப வைத்ததே குணால் சஹா வழக்கு தீர்ப்பின் இன்னொரு வெற்றி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT