Last Updated : 13 Feb, 2014 12:00 AM

 

Published : 13 Feb 2014 12:00 AM
Last Updated : 13 Feb 2014 12:00 AM

பார்வையற்றோரை வஞ்சிக்காதீர்கள்- மனோகரன்

இந்தியா முழுக்கச் சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 17 லட்சம் பேர் என்கிறது ஒரு கணக்கீடு. இன்னொரு கணக்கீடு, 22 லட்சம் என்கிறது. அதில் ஒன்பதரை லட்சம் பேர் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள். 1970-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட எங்கள் தேசியப் பாதுகாப்புப் பார்வையற்றோர் இணையத்தில் மட்டும், நாடு முழுக்க 50 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டில் ஏழாயிரம் பேரும் உறுப்பினர்களாக உள்ளனர்.

சமீபத்தில் நமது நாடாளுமன்ற மாநிலங்களவையில் மாற்றுத் திறனாளிகள் வரைவு மசோதா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அது முழுக்க முழுக்க எங்கள் நலனுக்குக் குந்தகம் விளைவிக்கிற மாதிரியான குளறுபடிகளை உள்ளடக்கியிருக்கிறது. ஏற்கெனவே உள்ள சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யுமாறு தொடர்ந்து மத்திய அரசிடம் நாங்கள் வலியுறுத்திவந்தோம். உதாரணமாக, மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் 10 ஆண்டுகள் தளர்த்தப்படும் வகையில் சட்டம் உள்ளது. அதை அதிகப்படுத்த வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. ஆனால், இந்த மசோதாவில் 10 ஆண்டுகளாக இருந்ததை 5 ஆண்டுகளாகக் குறைத்துள்ளார்கள். ஏற்கெனவே, மாற்றுத் திறனாளிகள் பன்மடங்கு வேலைவாய்ப்புப் பெறாமல் இருக்கும் நிலையில், அவர்களை மேலும் வேலையில்லாதவர்களாக ஆக்கும் முயற்சியே இது. அதேசமயம், மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்கெனவே இருந்த 3% இட ஒதுக்கீட்டை 6%-ஆக ஆக்குமாறு கேட்டிருந்தோம். இந்த மசோதாவில் 5% ஆக ஆக்கப்பட்டிருக்கிறது. அதில் முழுமையாகப் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரை சதவீதமும், ஓரளவு பார்வை தெரியும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு அரை சதவீதமும் பிரித்து உள்ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

மாற்றுத் திறனாளிகள் ஆணையம்

முந்தைய சட்டத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு சதவீதம் ஒதுக்கீடு இருந்ததையே இப்படிப் பிரித்துப் போட்டிருப்பது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை வஞ்சிப்பதாகும். மாற்றுத் திறனாளிகளின் முறையீடுகளைக் கேட்கவும், பேசவும் பிரச்சினைகளை அரசின் முன் வைக்கவும் மாற்றுத் திறனாளிகள் ஆணையம் அமைப்பதாக அதில் உள்ளது. ஒரு மகளிர் ஆணையம் என்றாலோ, தாழ்த்தப்பட்டோர் ஆணையம் என்றாலோ மகளிர் மற்றும் தாழ்த்தப்பட்டோரில் ஒருவரைத்தான் ஆணையராக நியமிப்பது வழக்கம்.

அதுபோல மாற்றுத் திறனாளி ஆணையத்தின் ஆணையராக மாற்றுத் திறனாளி ஒருவரையே நியமிக்கச் சட்டத்தில் வழிவகைசெய்யக் கேட்டிருந்தோம். அதைச் செய்யவில்லை. இப்படி இந்த மசோதாவில் உள்ள 20 அம்ச சட்டத்திருத்தங்களும் ஏகப்பட்ட குளறுபடிகளுடன்தான் இருக்கின்றன. எனவே, இதையெல்லாம் சீர்செய்யாமல் சட்டத்தை அமலாக்கக் கூடாது என்று சட்ட அமைச்சர் கபில் சிபலைச் சந்தித்தோம். ரயில்வே மற்றும் சமூகநலத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுனைப் பார்த்துப் பேசினோம். எங்கள் திருத்தங்களை அவர்களிடம் மனுவாகக் கொடுத்தோம்.

ஆனால், அவர்களோ கொண்டுவந்திருக்கும் சட்டமசோதவை அப்படியே சட்டமாக்க முடிவு செய்து உள்ளார்கள். மாற்றுத் திறனாளிகள் விஷயத்தில் போதிய அனுபவம் இல்லாத, மாற்றுத் திறனாளிகள் அல்லாதவர்கள் கமிட்டியில் இடம்பெற்றுத்தான் மாற்றுத் திறனாளிகளின் உணர்வுகளையும், தேவைகளையும் புரிந்துகொள்ளாத இத்தகைய ஒரு சட்டத்திருத்த மசோதாவை உருவாக்கியிருக்க முடியும். எங்கள் பொதுச்செயலாளர் எஸ்.கே. ரூட்டா, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளார். அவர் பார்வையற்ற மாற்றுத் திறனாளிதான். அவரைப் போல் முதிர்ச்சியுள்ள மூத்த மாற்றுத் திறனாளிகள் எத்தனையோ பேர் நாட்டில் உள்ளனர். அவர்களையெல்லாம் கலந்தாலோசித்து வரைவு மசோதா தயாரித்திருந்தால், இந்தப் பிரச்சினையே வந்திருக்க வாய்ப்பில்லை.

பதில் சொல்லியாக வேண்டும்

எனவே, எங்களுக்கு எதிரான இந்த மசோதாவை எங்கள் எதிர்ப்பை மீறியும் சட்டமாக்கினால், நாங்கள் வரும் தேர்தலில் காங்கிரஸுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். இதுவரை நாங்கள் எந்த இடத்திலும் அரசியல்ரீதியாக ஒன்றுசேர்ந்ததில்லை. அரசியல் கண்ணோட்டத்தோடு பிரச்சாரமும் செய்ததுமில்லை. ஆனால், இந்த முறை நாடு முழுக்க இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

அதேபோல் 18 வயது எட்டியிருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதந்தோறும் அரசு ரூ.1,000 உதவித்தொகை வழங்கிவருகிறது. என்ன காரணமோ, நான்கு மாதங்களாக இந்த உதவித்தொகை நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஆட்சி யாளர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

மனோகரன், திட்ட இயக்குநர், தேசியப் பாதுகாப்புப் பார்வையற்றோர் இணையம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x