Published : 18 Dec 2013 12:00 AM
Last Updated : 18 Dec 2013 12:00 AM
ஊதிய ஏற்றத்தாழ்வு என்பது புதிய கவலையல்ல. 1987-ல் வெளியான ஆலிவர் ஸ்டோனின் ‘வால் ஸ்ட்ரீட்’ என்ற திரைப்படம் பேராசை மிக நல்லது என்றே சொல்லியது. வர்க்கப்போர் மூளும் என்று அஞ்சிய அரசியல் தலைவர்கள், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் ஏற்படும் இந்த இடைவெளியை ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதி ஒதுங்கிக்கொண்டார்கள்!
ஏற்றத்தாழ்வு: மிகப் பெரிய சவால்
இதெல்லாம் இனி மாறக்கூடும். நியூயார்க் நகர மேயர் தேர்தலில் பில் டி பிளாசியோ வென்றது எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றோ, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு எலிசபெத் வாரன்ஸ் ஒப்புக்கொண்டது எவ்வளவு மகத்தானது என்றோ நாம் விவாதிக்கலாம். “ஏற்றத்தாழ்வு என்பதுதான் நம்முடைய காலத்தின் மிகப் பெரிய சவால்” என்று பிரகடனம் செய்தாரே அதிபர் பராக் ஒபாமா, அதை மனதில்கொண்டு கொள்கைகளில் மாறுதல் செய்கிறாரா என்று பார்ப்போம். ஏற்றத்தாழ்வு ஒன்றும் அப்படி முக்கியத்துவம் தந்து விவாதிக்க வேண்டிய விஷயமே இல்லை என்று பண்டிதர்கள் கூறுகின்றனர். அவர்கள் சொல்வது சரியல்ல!
இந்த விஷயம்குறித்து இப்போது பேச வேண்டாம், பிறகு பேசுவோம் என்று சொல்வதற்கான சரியான காரணம், நம்முடைய நாட்டின் பொருளாதாரம் இப்போது நல்ல நிலையில் இல்லை என்கிறார்கள். பொருளாதார வளர்ச்சியைப் பழைய நிலைக்குக் கொண்டுவருவது முக்கியமா, பொருளாதார வளர்ச்சியால் கிடைக்கும் லாபத்தை அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுப்பது முக்கியமா?
அதிருக்கட்டும், முதலில் இந்த ஏற்றத்தாழ்வுகளால் அமெரிக்காவின் மத்தியதரக் குடும்பத்தினர் மீது ஏற்பட்டிருக்கும் பாதிப்பை ஆராய்ந்தாலே அது மிகப் பெரிய சவாலாக இருக்கும். நம்முடைய பொருளாதாரக் குழப்பத்தில், இந்த ஏற்றத்தாழ்வுக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. ஏற்றத்தாழ்வைச் சரிசெய்யத் தவறியதால்தான் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க ஏழைகள்
முதலில் எண்ணிக்கையில் தொடங்குவோம். சராசரியாக எல்லா அமெரிக்கர்களும் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னால் இருந்ததைவிட, இப்போது மேலும் ஏழைகளாகிவிட்டார்கள். ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களில் கடைசி 90% குடும்பங்களைப் பார்த்தால், பொருளாதாரமும் சுருங்கி, அதில் இந்தக் குடும்பங்களுக்கு வரவேண்டிய பங்கும் குறைந்துவிட்டது நன்றாகத் தெரிகிறது.
இதில் எது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது? இதற்கான விடையைக் காண்பதற்கு முன்னால், இன்னொரு உண்மையைத் தெரிந்துகொள்வோம். கடந்த ஆறு ஆண்டுகளாக அமெரிக்க ஏழைகளின் வாழ்க்கைத்தரம் மேலும் மோசமடைந்திருக்கிறது. 1930-களில் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சிக் காலத்தில்கூட இருந்திராத அளவுக்கு நிலைமை மோசமாகிவருகிறது. வருமான ஏற்றத்தாழ்வுதான் மத்தியதரக் குடும்பங்களின் இந்த நிலைமைக்கே முக்கியக் காரணமாக இருக்கிறது.
மிகப் பெரிய பொருளாதாரச் சரிவையும், அந்த அளவுக்கு இல்லாமல், ஓரளவுக்கு அடுத்து ஏற்பட்டுள்ள மீட்சி நிலையையும் ஆராய்ந்தால் வருமான ஏற்றத்தாழ்வால் ஏற்படக்கூடிய அரசியல், பொருளாதார விளைவுகள்தான் இனி பெரிதாக இருக்கும் என்று தெரிகிறது. வீடு கட்டக் கொடுத்த கடனை நடுத்தர வர்க்கக் குடும்பங்களால் திருப்பிச் செலுத்த முடியாததால்தான் வங்கிகள் திவாலாகும் நிலைக்குச் சென்று, பொருளாதாரத்தையும் படுகுழியில் தள்ளியது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
பணக்காரர்களுக்கும் நடுத்தர வகுப்பு மக்களுக்கும் இடையே ஊதியத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளால்தான் இந்த நிலைமையே ஏற்பட்டது. இந்த நெருக்கடி முற்றமுற்ற நடுத்தர மக்களுக்கு வேலைவாய்ப்பும் ஊதியமும் குறைய, பெரும் பணக்காரர்களான மிகச் சிலருக்கே வேலைவாய்ப்பும் அதிக ஊதியமும் தொடர்ந்து கிடைக்கலாயிற்று. இவ்விதம் பொருளாதார நெருக்கடிக்கும் வலுவில்லாத பொருளாதார மீட்சிக்கும் இந்த ஊதிய ஏற்றத்தாழ்வே காரணமாகத் திகழ்கிறது. இந்த ஊதிய ஏற்றத்தாழ்வுக்கு முக்கியக் காரணம் ‘அரசியல்தான்’ என்று நான் கருதுகிறேன்.
கருத்தொற்றுமை
இந்த நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னதாக, நிதி நிர்வாகத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது தொடர்பாக ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நல்ல கருத்தொற்றுமை இருந்தது. அது நல்லது என்பது கொள்கையாலா, வரலாற்றாலா என்று கூறிவிட முடியாது. நெருக்கடி ஏற்பட்டவுடனேயே வங்கிகளை மீட்கத்தான் கவனம் செலுத்தப்பட்டது. அந்தப் பணி முடிந்ததும் கவனமெல்லாம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலிருந்து விலகி, அரசின் வருவாய்க்கு ஏற்ப செலவைக் குறைக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பதில் சென்றது.
நெருக்கடிக்கு முன்னாலும் பின்னாலும் இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்ட கருத்தொற்றுமைகளின் ஒற்றுமை என்ன? இரண்டுமே பொருளாதாரத்துக்கு நாசத்தையே ஏற்படுத்தின.
கட்டுப்பாடுகளை நீக்கியதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அதன் பிறகு கையாண்ட பொருளாதாரச் சிக்கன நடவடிக்கைகள் காரணமாக பொருளாதாரம் மீட்சியடைய முடியாமல் போனது. இரண்டு கருத்தொற்றுமை முடிவுகளும் அந்த முடிவை எடுத்த அரசியல் தலைவர்களுக்கு வேண்டப்பட்ட சிறு குழுக்களுக்குச் சாதகமாகவே இருந்தன. அந்த முடிவுகளால் அவர்களின் அரசியல் அந்தஸ்தும் பொருளாதார அந்தஸ்தும் உயர்ந்தன.
பணக்காரர்களுக்கு முன்னுரிமை
வேலைவாய்ப்பின்றி மக்கள் தவித்துக்கொண்டிருக்கையில், வாஷிங்டனில் இருந்த அரசியல் தலைவர்கள் மட்டும் ஏன் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கும் மருத்துவ நலன் சார்ந்த திட்டங்களுக்கும் ஒதுக்கும் தொகையைக் குறைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். இது உண்மையான பொருளாதார வளர்ச்சியின் மேல் உள்ள அக்கறையில் கூறப்பட்ட யோசனைகளே அல்ல.
ஒரு நாட்டின் பொருளாதாரம் சரிந்து, வங்கி வட்டிவீதங்கள் வீழ்ச்சி அடைந்துள்ள வேளையில், அரசானது அதிகம் செலவு செய்ய வேண்டும். ஏழை மக்களுடைய நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைத் தீவிரத்துடன் அமல்செய்ய வேண்டும். அவர்களுடைய வாங்கும் சக்தியை அதிகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். அந்த நேரத்தில், அரசின் வரவைவிட செலவு அதிகமாகிறதே என்று கவலைப்பட்டு, செலவுகளை வெட்டக் கூடாது. இந்தத் திட்டங்களுக்கான செலவுகளைக் குறையுங்கள் என்று மக்களும் கோரிக்கை எழுப்பவில்லை.
நாட்டின் மிகப் பெரும் பணக்காரர்களில் பெரும்பாலானவர்கள், அரசின் வரவைவிட செலவு அதிகமாக இருக்கக் கூடாது என்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் அரசு அதிகம் செலவிடக் கூடாது என்றும் வலியுறுத்தியதாகக் கருத்தறியும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அவர்களுடைய விருப்பத்துக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
பொருளாதாரம் தொடர்பான இந்த விவாதத்தில் அரசியலைக் கலக்கக் கூடாது என்று சில நிபுணர்கள் முயல்கின்றனர். இதில் விருப்புவெறுப்புக்கு இடம்தரக் கூடாது என்றும் நுணுக்கமாக இதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். வாதத்துக்கு இதை அப்படியே ஏற்றுக்கொண்டாலும், வருமான ஏற்றத்தாழ்வையும் வர்க்க வேறுபாட்டையும் ஒதுக்கிவிட்டு விவாதித்தால் விவாதமே முழுமையானதாக இருக்காது.
எனவே, அதிபர் ஒபாமா கூறியபடி ஏற்றத்தாழ்வுதான் நம்முடைய காலத்தின் முக்கியச் சவாலாக இருக்கிறது. இதைச் சந்திக்க நாம் எந்த நடவடிக்கையையாவது எடுப்போமா?
தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT