Published : 25 Dec 2013 12:00 AM
Last Updated : 25 Dec 2013 12:00 AM
ஜனவரி 15-ம் தேதி ஸி.ஆர். முடிவெடுத்தார். “ஸி. ராஜகோபாலாச்சாரி தேர்தலில் போட்டியிடுவார் என அறிகிறோம்” என்று மறுநாள் ‘ஹிந்து’ பத்திரிகை கூறியது. “இந்த ராஜதானியிலும் சரி, அதற்கு வெளியேயும் சரி காங்கிரஸ் தலைவர்கள் அவர் ஓய்விலிருந்து திரும்பிவர வேண்டும் என்று நீண்ட காலமாக வற்புறுத்தி வந்திருக்கிறார்கள்.”
“சர்வகலாசாலைத் தொகுதியில் ஸி. ஆர். நிற்க வேண்டும் என்று சத்தியமூர்த்தி வற்புறுத்தி வெற்றி கண்டிருக்கிறார்; அந்த ஸ்தானத்தை ஸி. ஆருக்குத் தாமே விட்டுக் கொடுத்துமிருக்கிறார்” என்று பம்பாயிலிருந்து பட்டேல் அறிவித்தார். தம் நிகரற்ற தலைவர் வழிகாட்ட, காங்கிரஸ் சக்திகள் அனைத்தும் ஒன்று கூடும் என்று தாம் நம்புவதாகவும் பட்டேல் சேர்த்துக்கொண்டார்.
*******
சென்னையில் மட்டுமன்றி காங்கிரஸ், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வென்றிருந்தது. ஆனால் அது புதிய அரசியல் சட்டம் நிர்ணயித்த வரையறை களுக்கு உட்பட்டு பதவி ஏற்குமா? “ஏற்கவும் செய்யலாம்; ஏற்காமலும் இருக்கலாம்” என்று ஸி.ஆர். சட்டசபையாளருக்குச் சொன்னார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தீர்மானத்துக்கு – அது என்னவாக இருந்தாலும் – அவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்று சேர்த்துக்கொண்டார்.
*******
இரண்டு நாட்கள் கழித்து, அதுவரை ஐந்து முறை அரசினால் சிறைப்படுத்தப்பட்டிருந்த ஸி. ஆரை எர்ஸ்கைன் அழைத்தார். ராஜதானியின் பிரதம மந்திரியாக இருக்குமாறு கோரினார்;- அன்று அப்பதவிக்கு அதுதான் பெயர் – மந்திரிசபை அமைக்குமாறு வேண்டினார். ஸி. ஆர். ஒப்புக்கொண்டார். அவர் வாழ்க்கையில் அரசுப் பொறுப்பு என்னும் ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகி இருந்தது.
*******
பதவியின் பெருமை ஸி. ஆரைச் சூழ்ந்துகொண்டிருந்தாலும் அவரும் அவர் சகாக்களும் ஆங்கில ஆட்சி நிர்ணயித்த சம்பளத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். வருடத்திற்கு ரூ.56,000 என்று முதல்வருக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை, வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு உள்பட ரூ.9,000 மட்டுமே என்று மாற்றி அமைக்கப்பட்டது. அரசு, மந்திரிகளுக்கு வீடு அளிக்கவில்லை. ஆனால் ரூ.3000-க்கு வாங்கப்பட்ட காரை உபயோகத்துக்கு அளித்தது. ஸி.ஆரும் அவர் சகாக்களும் பதவியேற்ற முதல் மாதத்தில் பழைய (அதிகப்படி) சம்பளம் மாற்றப்படவில்லை. ஸி.ஆர். ஒவ்வொரு மந்திரியிடமும் அதிகப்படி பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாக வாக்குமூலம் பெற்றுவிட உத்தரவு பிறப்பித்தார். மந்திரிகளோ, அவர்களின் சந்ததிகளோ இப்பணத்தைப் பிற்காலத்தில் கேட்கக் கூடாது என்பதற்கே இந்த முன்னேற்பாடு!
*******
ஸி. ஆர். தம் முதல் ஆணையாக சிறைக் கைதிகளுக்கு மோர் வழங்க வேண்டும் என்று அறிவித்த போது, ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் தாங்கள் சிறையில் பெற்ற அரைகுறை உணவை நினைவில் கொண்டு இந்த உத்தரவை வரவேற்றனர். என்றாலும் ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் இதை ஒரு பெரிய விஷயமாகவே எண்ணவில்லை. ஆனால் அடுத்தாற்போல் வன்முறையில் ஈடுபட்டதற்காக சிறையிடப்பட்டு இப்போது வன்முறையைத் துறப்பதாக உறுதி அளித்த பல விடுதலைப் போராட்டக் கைதிகளை ஸி. ஆர். விடுதலை செய்தபோது ஆங்கிலேயே அதிகார வர்க்கம் நிமிர்ந்து உட்கார்ந்தது. அதைத் தடுக்கவும் முயன்றது. வைஸ்ராய், கவர்னரிடம் தம் விருப்பமின்மையைத் தெரிவித்தார். ஆனால் ஸி. ஆர். விட்டுக்கொடுத்துப் பணியவில்லை. உறுதியாயிருந்து தம் முயற்சியில் வெற்றி கண்டார். 38 அரசியல் கைதிகள் விடுதலை பெற்றனர்.
*******
ஸி. ஆர். பதவி ஏற்று மூன்று மாதங்களுக்குள், 1937 அக்டோபர் 1 முதல் அவரது சொந்த ஜில்லாவான சேலத்தில் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. படிப்படியாக பிற ஜில்லாக்களுக்கும் விரிவுபடுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் அரசின் வருவாயில் கணிசமான தொகை குறைந்துபோயிற்று. நிலவரியும் கள்ளுக்கடை ஏலமுந்தாம் அரசின் வருமானத்தின் பெரும் பகுதி. இருப்பினும் ஸி. ஆர். 1937-இல் ஓர் உபரி பட்ஜெட்டையே வழங்கினார். அடுத்த இரண்டு வருடங்களிலும் அவ்வாறே வழங்க இருந்தார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.யான அப்பாதுரைப்பிள்ளை ‘விவரங்களைப் புரிந்துகொள்ளும் ஸி.ஆரின் திறனையும், பொருளாதார நுணுக்கங்களனைத்தையும் அறிந்திருந்த நேர்த்தியையும்’ வியந்து போற்றினார்.
*******
எர்ஸ்கைன், வைஸ்ராய்க்கு எழுதிய கடிதத்தில் உத்தேசிக்கப் பட்டிருந்த இந்தச் சட்டத்தை ‘அனாவசியமான கஞ்சத்தனம்’ என்றே குறிப்பிட்டிருந்தார். ‘அரசுச் செலவினங்களைப் பொறுத்த வரையில் பிரதம மந்திரி சுத்த கருமியே’ என்றும் எழுதினார். ஆட்சியின் முதல் எட்டு மாதங்களில் தமது சுற்றுப் பயணங்களுக்காக ஸி. ஆர். செலவிட்ட தொகை, அவர் பொதுப்பணத்தை எவ்வளவு ஜாக்கிரதையாகக் கையாண்டார் என்பதை உணர்த்தும். அத்தொகை: ரூ. 400. இரண்டாவது பட்ஜெட்டுக்கு ஸி. ஆர். மத்திய சர்க்காரிடமிருந்து மாகாணத்தின் வரிப் பங்காக ரூ.21 லட்சம் பெற்றார். இவ்வாறு மாகாணங்களுக்கு வருமான வரியில் பங்கு அளிக்கப்பட்டது அதுவே முதல் முறை. எதிர்க்கட்சியினர் இத் தொகை கிடைத்ததை “பெரிய எதிர்பாராத அதிர்ஷ்டம்” என்றனர். “இதென்ன பெரிய விஷயம்? நம்மிடம் திருடியதைத் திருப்பித் தருகிறார்கள். அவ்வளவுதானே!” என்றார் ஸி. ஆர்.
*******
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT