Published : 30 Oct 2013 01:15 PM
Last Updated : 30 Oct 2013 01:15 PM
‘ஒபாமாகேர்’- நுழைவுதளமான (போர்ட்டல்) ‘ஹெல்த்கேர்.கவ்’ குறித்த நல்ல செய்தி என்னவென்றால், அதன் நிர்வாகம் தன் பிரச்சினைகளைச் சாதாரணமானவையாகக் கருதவில்லை. பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கான முதல் படி அதுதான், நிச்சயம் சரிசெய்யப்பட்டுவிடும். என்ன, ‘சீரான நிர்வாகம்’என்ற புதிய நம்பிக்கை நவம்பர் இறுதிக்குள் சாத்தியப்படுமா என்பதுதான் கேள்வி.
அரசியல் விளையாட்டு
மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை நிறைய நாடுகள் வெற்றிகரமாகச் செயல்படுத்திக்கொண்டிருப்பதால் ‘ஒபாமாகேர்’என்பது நடைமுறைச் சாத்தியம் என்று நமக்குத் தெரியும். ஆனால், சாகசக்காரர்கள் அவர்களின் வேலையைச் செய்து முடிப்பார்கள் என்று நாம் காத்திருக்கும் வேளையில், இது தொடர்பாக ஒரு கேள்வியை நாம் கேட்டுக்கொள்வோம். முதலில் இந்த விஷயம் இவ்வளவு சிக்கலாக இருந்துதான் ஆக வேண்டுமா? ‘ஒபாமா கேர்’சட்டத்தை எதிர்ப்பவர்கள் கருதுவதுபோல் அந்தச் சட்டம் அவ்வளவு சிக்கலானது இல்லை என்பது உண்மைதான். அடிப்படையில், காப்பீட்டு நிறுவனங்கள் ஒரே மாதிரியான காப்பீடுகளை வேறுபாடின்றி எல்லாருக்கும் வழங்க வேண்டும் என்று இந்தச் சட்டம் சொல்கிறது; அந்தக் காப்பீடுகளுள் ஒன்றை எல்லாரும் வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது; காப்பீடுகள் கட்டுப்படியாகக் கூடிய அளவில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தச் சட்டம் அவரவருடைய வருமானத்தையும் பொறுத்து மானியங்களை வழங்குகிறது.
மக்களைப் பொறுத்தவரை விஷயம் இத்தோடு முடிந்துவிடவில்லை. காப்பீட்டு நிறுவனங்களையும் காப்பீட்டுத் திட்டங்களையும் தேர்வுசெய்வதோடு மக்களின் வேலை முடிந்துவிடாது. அவர்கள் தங்கள் சுயவிவரங்களை விரிவாக அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் யாருக்கு எவ்வளவு மானியம் கொடுப்பது என்று அரசு முடிவுசெய்ய முடியும். பிறகு, மென்பொருள் ஒன்று இந்தத் தகவல்கள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அவற்றை அனுப்பும். அரசு இணையதளத்தில் இன்னும் இந்தச் செயல்பாடு தொடங்கவில்லை என்பது கூடுதல் தகவல்.
இப்போது, இன்னும் எளிமையான ஓர் அமைப்பைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த அமைப்பில், அதிக அளவு பணம் தேவைப்படும் சிகிச்சைகளுக்கு அரசாங்கமே பணம் செலுத்திவிடும் என்றும் கற்பனை செய்துகொள்ளுங்கள். கற்பனையான இந்த அமைப்பில், மருத்துவக் காப்பீடுகளுக்காக நீங்கள் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அலைந்து திரிய வேண்டாம்; உங்கள் சுய விவரங்களையும் யாருக்கும் தர வேண்டாம். அரசாங்கம்தான் உங்கள் காப்பீட்டாளர்; வெறும் அமெரிக்கப் பிரஜையாக இருப்பதன் மூலமாகவே நீங்கள் இந்தச் சேவையைப் பெறுவதற்குத் தகுதியுடையவராகிவிடுவீர்கள்.
இப்படிப்பட்ட ஓர் அமைப்பு ஏற்கெனவே இருப்பதால் நாம் அதைக் கற்பனை செய்துகொள்ளத் தேவை இல்லைதான். அதன் பெயர் ‘மெடிகேர்’, 65 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய குடிமக்களை உள்ளடக்கும் திட்டம் இது; மிகவும் பிரசித்தமான ஒரு திட்டம். எனவே, அனைவரையும் உள்ளடக்கும் வகையில் அந்தத் திட்டத்தை ஏன் நாம் விரிவுபடுத்தவில்லை?
இந்தக் கேள்விக்கு ஓரளவு சரியான விடை: அரசியல். இரண்டு விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால், நாம் கற்பனை செய்துபார்க்கும் ‘மெடிகேர்’ திட்டத்தை நிறைவேற்றுவதற்குச் சாத்தியமே இல்லை என்பது உங்களுக்குப் புரியும். முதல் விஷயம், காப்பீட்டுத் துறையின் அளப்பரிய செல்வாக்கு. இரண்டாவது விஷயம், தொழிலாளர்களுக்கு அவர்களின் நிறுவனங்களிலிருந்து ஏற்கெனவே நல்ல காப்பீட்டுத் திட்டங்கள் கிடைக்கும் வேளையில், புதிய ஒன்றுக்காக அவற்றை இழப்பதில் அவர்களுக்கு உள்ள தயக்கம். இப்படிப்பட்ட அரசியல் சூழலை வைத்துப் பார்க்கும்போது, ‘ஒபாமாகேர்’ என்பதுதான் நமக்கு அதிகபட்சமாக சாத்தியமாகக் கூடியது என்று தெரிகிறது. கோடிக் கணக்கான அமெரிக்கர்களின் வாழ்க்கையை ‘ஒபாமாகேர்’மேம்படுத்தும் என்பதில் எந்த விதச் சந்தேகமுமில்லை.
இவ்வளவுக்குப் பிறகும், ‘ஒபாமாகேர்’, மாபெரும் அலங்கோலம் என்ற நிலையில்தான் இருக்கிறது. பிரச்சினையை ஏதோ ஒருவகையில், ஆனால் திறமைக் குறைவாகக் கையாளும் கண்றாவியான, அசிங்கமான ஓர் அமைப்புதான் ‘ஒபாமாகேர்’.
அலங்கோலநாயகம்
உண்மை என்னவென்றால், ‘எரிகிற கொள்ளியில் நல்ல கொள்ளி’எதுவோ அதுவே அமெரிக்க அரசின் ஆட்சிமுறை லட்சணமாக ஆகியிருக்கிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஸ்டீவ் டெலெஸ் சமீபத்தில் ஒரு கட்டுரையில் தெரிவித்திருந்ததைப் போல நமது ஜனநாயகம் ‘அலங்கோல நாயகம்’ஆகிவிட்டது. இதெற்கெல்லாம் முக்கியக் காரணம், சித்தாந்தம்தான் என்று நான் உறுதியாகச் சொல்வேன்.
நான் என்ன சொல்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ‘மெடிகேர்’ சம்பந்தமாக நாம் வைக்கக் கூடிய கோரிக்கைகளைப் பாருங்கள். வழிமுறைகள் - சோதனை குறித்து கோரிக்கைகள் உள்ளன. இந்தச் சோதனையில் எல்லாருடைய சுயவிவரங்களையும் திரட்டுவது அவசியமான ஒன்று. ‘ஒபாமாகேர்’ திட்டத்துக்கு இது அவசியம் என்றாலும், ‘மெடிகேர்’ திட்டத்துக்கு இது அவசிய மில்லை. மெடிகேர் திட்டத்துக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்ற நெருக்குதலும் தரப்படுகிறது. இதனால், 65-66 வயது அமெரிக்கர்கள் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை நாடும்படி ஆகிவிடும்.
மெடிகேரை ஒபாமாகேராக...
மூத்த குடிமக்கள் தனியார் துறையின் காப்பீட்டுத் திட்டங்களை வாங்குவதற்கு வசதியாக மானியங்களைத் தருவதை விட்டுவிட்டு, மெடிகேரை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளும் நினைப்பிலேயே குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும், மெடிகேரை ஒபாமாகேராக ஆக்குவதில்தான் உண்மையிலேயே அவர்களுக்கு விருப்பம்.
நாம் இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும்? ‘வரி செலுத்துபவர்களின் சுமையைக் குறைப்பதற்காக’ என்று நீங்கள் பதிலளிக்கலாம். ஆனால், தனியார் காப்பீட்டுத் திட்டங்களின் தொகையைவிடக் குறைவாகத்தான் மெடிகேருக்குச் செலவாகும். எனவே, இந்தத் திட்டத்தைச் சிதைப்பதன் மூலம் பெறக்கூடிய லாபத்தைவிட, அதிகமாகவே காப்பீட்டுக்கான தவணைகளுக்கு வரி செலுத்துபவர்கள் செலவிட வேண்டிவரும்.அரசாங்கத்தின் செலவினங்கள் குறையுமா என்றும் தெளிவாகத் தெரியவில்லை: மெடி கேருக்கான வயதுவரம்பை உயர்த்துவதன் மூலம் அரசு அநேகமாக எதையும் சேமிக்கப்போவதில்லை என்று சமீபத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் தெரிவித்திருந்தது கவனிக்கத் தக்கது.
மக்கள்விரோத சித்தாந்தம்
அரசாங்கம் மக்களுக்குச் செய்யும் உதவிக்கு விரோதமான ஒரு சித்தாந்தம்தான் மெடிகேரின் மீது தாக்குதல் நடத்துகிறது. மக்களுக்குக் கிடைக்கக்கூடிய எந்த ஒரு சிறு உதவியையும் குறுக்கி, முடிந்த அளவுக்கு அதை மறைமுகமானதாக மாற்றி அதையும் தனியார் மயமாக்கிவிடக் காத்திருக்கும் சித்தாந்தம்தான் அது. ஒபாமாகேர் மாபெரும் அலங்கோலமாக மாறியிருப்பதற்கு அடிப்படைக் காரணம் சுய நல சக்திகளைவிட அடிப்படைக் காரணம் - மேற்குறிப்பிட்ட சித்தாந்தம்தான்.
இதைச் சொல்வதன் மூலம் மருத்துவச் சீர்திருத்தத்தின் முதல் மாதத்தை அவ்வளவு மோசமாக்கிய அதிகாரிகளையும் ஒப்பந்தக்காரர்களையும் நான் மன்னித்துவிட்டேன் என்று அர்த்தமில்லை. அதே போல், ஒட்டுமொத்த மருத்துவச் செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அரசியல் அமைப்பு தயாராகும் காலம்வரை ஒபாமாகேர் காத்திருக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை. இப்போதைக்கு நமது தலையாய அக்கறை, இந்த அலங்கோலத்தைச் செயல்பட வைப்பதுதான். அதைச் செய்ய முடிந்தால், அமெரிக்கா ஒரு உன்னதமான நிலையை அடையும்.
காலப்போக்கில் இந்தச் சித்தாந்தத்தை நாம் சமாளித்துத்தான் ஆக வேண்டும். அரசாங்கம் எப்போதுமே மோசம் என்ற எண்ணத்துடன் இருக்கும் எந்தச் சமூகமும் மோசமான அரசாங்கத்தையே பெறும். எனவே, இந்த விவகாரமும் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை.
நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT