Published : 18 Dec 2013 12:00 AM
Last Updated : 18 Dec 2013 12:00 AM
“மீடியாவுக்கு வந்தாலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும். நான் இது வரை ஒரு சொட்டு குடித்ததில்லை!” என்று தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அறிவுரை செய்தார் ஒரு நடிகர். குடி உடலையும் மனதையும் பலவீனப்படுத்தி தவறான முடிவுகள் எடுக்க வழி வகுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆதி காலம் முதல் மனிதன் போதையைத் தேடிப் போயிருக்கிறான். அதன் நுகர்வு, பின் வணிக, அரசியல், கலாசார, பண்பாட்டுத்தளங்களில் மனிதக்கூட்டத்தை பாதித்துக் கொண்டே இருக்கிறது.
மிக இளம் வயதில் படிப்பு காரணமாக குடியினால் ஏற்படக்கூடிய சகல மன/வாழ்வியல் நோய்கள் பற்றி அறியவும் சிகிச்சை அளிக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. நிம்ஹான்ஸ் காலத்தில் டாக்டர்கள், மற்றும் இதர சிகிச்சையாளர்களும் குடிப்பது முதலில் அதிர்ச்சியாய் பட்டது. Detoxification-ஐ தொழில் முறையாக தினம் செய்யும் டாக்டர்கள் பலர் இரவில் குடிப்பது சகஜம் என அறிந்தேன்.
பிற்பாடு ஹெச்.ஆர் சேர்ந்த காலத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வராமைக்கு குடியும் மிகப்பெரிய காரணம் எனத் தெரிந்தது. சம்பள நாளில் மனைவிகள் வாசலுக்கே வந்து காத்திருப்பதையும், இவர்கள் மாற்று வழியில் தப்பிப் போவதையும் பார்த்திருக்கிறேன். அங்கும் வேலைக்கு வராத நிரந்தர தொழிலாளர்களை அழைத்து கவுன்சலிங் செய்வார்கள். இங்கும் உயர் நிலை மேலாளர்கள் குடிப்பது சகஜம். பல கார்ப்பரேட் விருந்துகளில் மது தவிர்க்க இயலாத அங்கம்.
சினிமாவில் நாயகன் குடித்தால் கீழே பொடி எழுத்துகளில் அறிவுரை செய்கிறார்கள். தவிர இன்று குடிக்காத கதாபாத்திரங்கள் குறைவு. அரசின் “முகேஷ்” விளம்பரம் வந்தவுடன் இளைஞர்கள் கை தட்டி சிரிப்பது கொடூர நகைச்சுவை. ஒரு விளம்பரம் எப்படி எதிர் வினையாக அமையக்கூடாது என்பதற்கு இதை விஷுவல் மீடியாவில் பாடமாகச் சேர்க்கலாம்.
அரசாங்கம் கடை விரித்து வியாபாரம் செய்கிறது. குடிப்பவனை கம்பி ஜன்னலில் வெளியே நிறுத்தி அசிங்கப்படுத்துகிறது. ரோட்டை கடந்தவுடன் போலீஸ் பிடிக்கிறது. என் மாணவன் ஒருவன் கேட்டான், “இவ்வளவு கஷ்டப்படுறதுக்கு போலீஸ் ஒவ்வொரு கடையிலும் நின்று வண்டியில் வருபவரை பிடிக்கலாமே?”
இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.
நம் சமூகம் குடிப்பவரை விட அதிகம் குழம்பிப் போயிருக்கிறது என்றே தோன்றுகிறது!
தொழிற்சாலைகள் ஆண் தொழிலாளிகளை விட பெண் தொழிலாளிகளை நியமிக்க பல காரணங்கள உண்டு. உலகம் முழுவதும் பெண்களுக்கு ஆண்களை விட சம்பளம் குறைவு. எல்லா இடங்களிலும் இந்தக் கொடுமை நேரடியாகவோ மறைமுகமாகவோ நடந்து வருகிறது. (இது பற்றி பின்னர் விரிவாகப் பேசலாம்).
பெண் பொறுமைசாலி. நிதானம் இழக்கமாட்டாள். சிக்கனமானவள். தவறாமல் பணிக்கு வருவாள். வேலையை பாதிக்கும் எந்த பழக்கத்திற்கும் அடிமையாக மாட்டாள். இன்று கைத்தறி, ஆடை அணிகலன், மருந்து முதல் ஆட்டோமொபைல் வரை பெண்கள் தான் பெரும்பான்மை.
பெண்கள் எளிதில் குழு சேரமாட்டார்கள்; சங்கம் வைக்க மாட்டார்கள் என்றும் நிர்வாகங்கள் இதை வியூகமாகச் செய்கின்றன. ஆனால் சங்கம் அமைப்பதும், தொழிலாள நலன்களுக்காக போராடுவதும் இரு பாலினருக்கும் பொது என்பதை சரித்திரம் உணர்த்துகிறது.
என் கவலை இது தான். சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் அனேகமாக எல்லா பெண்களையும் பஸ் வைத்து வேலைக்கு அழைத்து செல்கிறார்கள். விழுப்புரத்திலிருந்து வேலைக்கு வந்து போகும் பெண் தொழிலாளிகள் எனக்கு தெரியும். ஆண்களுக்கு நிரந்தர வேலைகள் குறைந்து வருகின்றன. ஆனால் குடும்பத்திற்கு பெண் மூலம் வருமானம் உறுதியாகிறது. ஒப்பந்தக் கூலியாக அங்கும் இங்கும் அலைந்த ஆண்கள் ஒரு காலத்தில் வீட்டிலேயே முடங்க ஆரம்பிக்கிறார்கள். மதுப் பழக்கம் உள்ளவர்களுக்கு இப்போது நேரம், பணம், சுதந்திரம் அனைத்தும் கிடைக்கிறது.
10 ஆண்டுகளில் பெண்கள் பதவிகளில் முன்னேறி பண வசதியுடன் அந்தஸ்துடன் வளைய வரும் போது இவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் சிறு வேலைகள் (அமைப்பு சாராத் துறைகளில்) செய்து பெரும்பாலும் குடிக்கு அடிமையாகின்றனர். பிறகு மனைவியின் மீது சந்தேகம், தாம்பத்திய உறவில் சிக்கல், குடும்பத்தில் மரியாதைக் குறைவு, தற்கொலை எண்ணங்கள்/ முயற்சிகள் என்று பயணிக்கிறார்கள். தவிர கூடா நட்புகள் குற்றங்களுக்கு இட்டுச் சென்ற கதைகளும் உண்டு.
இந்த விரிசல்களில் அவர்கள் பிள்ளைகளின் மன நலத்திற்கும் பாதிப்புகள் வருகின்றன.
ஓசூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் இதை கூர்ந்து நோக்கினேன். 17 வயதில் பள்ளிப்படிப்பு முடித்து வேலைக்கு வந்தவர்கள் ஆண்களும் பெண்களும். 15 ஆண்டுகளில், பலர் மேல் படிப்பு அஞ்சல் வழியில் படித்து, பதவி உயர்வுகள் பெற்று நல்ல சம்பளத்தில் வீடு/ வண்டி வாங்கி சிறப்பாக வாழ்கிறார்கள் ஆண் தொழிலாளிகளுக்கு பிரச்சினை இல்லை. பெண்கள் வேலைக்கு சேர்ந்த சில ஆண்டுகளில் மணந்தவர்கள் மிகச்சாதராண வேலையில் இருந்தவர்கள். அவர்கள் இன்றும் பெரிதாக வளராமல் இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வில் பல உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். பணியிடங்களில் திருமணம் மீறிய உறவுகளுக்கும் சிலரை இது இட்டுச் செல்கிறது. இதையெல்லாம் ஆராய்ந்தது அந்த நிர்வாகம். பெண் தொழிலாளிகளை நன்கு பராமரித்த நிர்வாகம் அவர்கள் கணவர்களை பேணுவதையும் அவசியம் என உணர்ந்தது. ஆலோசனை, நல்ல வேலை/ தொழில் வாய்ப்புகள், மதுப் பழக்க மறக்க சிகிச்சை என ஈடுபட்டதில் நல்ல பலன் தெரிந்தது.
தமிழ் நாட்டில் ஆண் தொழிலாளிகள் இல்லை என்று வட மாநில ஆட்களை அழைத்து வருவது தீர்வு அல்ல. நாம் சரியாக பயன்படுத்தத் தவறிய ஆண்கள் வேலைக்கும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயனற்றுப் போவார்கள். பின்னர் இதைச் செய்த சமூகத்திற்கு எதிராக திரும்புவார்கள். மதுவிற்கு அடிமையாவது இந்த எதிர்ப்புக்கு வலு சேர்க்கும்.
“தமிழகத்தில் குடிப்பழக்கம் 15 வயதில் 10ம் வகுப்பு படிக்கையில் துவங்குகிறது” என்கிறார் மது சிகிச்சை நிபுணர்/ சமூக ஆர்வலர் சாந்தி ரங்கனாதன்.
ஆசிரியரும், மருத்துவரும், மேலாளரும், அரசாங்க அதிகாரியும் அளவாய் குடித்து விட்டு அதிக பாதிப்பு வராமல் தப்பிக்கலாம். தொழிலாளர்களும் மாணவர்களும் தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் அபாயத்தில் உள்ளனர்.
வேலைக்கு ஆள் வரவில்லை என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் வராதவர் என்ன செய்கிறார் என்று தொழில் கூடங்கள் கவனிக்க வேண்டிய காலம் இது!
டாக்டர். ஆர்.கார்த்திகேயன் - gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT