Published : 08 Nov 2013 12:00 AM
Last Updated : 08 Nov 2013 12:00 AM
சாலை விதிகளை மீறும்போதெல்லாம் போலீஸ் நமக்கு தண்டனை வரி விதிக்கிறார்கள். பல நேரங்களில் நான் கவனித்திருக்கிறேன். பலர் தவறு செய்துவிட்டோம் என்கிற குற்ற உணர்வே இல்லாமல் தண்டனை வரி கட்டிக்கொண்டிருந்தார்கள். மாறாக சில இளைஞர்களின் முகத்தில் பெருமித மிடுக்கு வேறு!
வசதி படைத்த பல இளைஞர்களும் அரசியல் மற்றும் அதிகார குடும்பப் பின்னணி கொண்டவர்களும் தவறுகளை செய்ய தங்களுக்கு உரிமை உள்ளது என்று தாங்களாகவே கற்பிதம் செய்து கொண்டிருப்பார்கள் போல. தவறுகளை செய்துவிட்டு சிக்கும்போது தண்டனை வரி கட்ட முடியாது என்று வீம்புடன் சாலையில் காவல் துறையினருடன் வாக்குவாதம் செய்துகொண்டிருப்பார்கள். நடு இரவிலும் போன் அழைப்புகள் பறக்கும்.
மேற்கண்ட தண்டனை வரிகள் ஒரு ரகம். ஆனால், பள்ளிக்கூடங்களில் மாணவர்களிடம் தண்டனை வரி வசூலிப்பது கொடும் ரகம். சொல்லப்போனால் அது ஒரு திருட்டு, பகல் கொள்ளை, வழிப்பறி என்பேன். மாணவர்கள் சரியாகப் படிக்கவில்லை என்று ஒரு ஆசிரியர் நூதன தண்டனை ஒன்றைக் கொடுத்தார். தான் எழுதிய புத்தகத்தை கட்டாயமாக வாங்க வேண்டும் என்பதே அது. வேறு வழியின்றி மாணவர்கள் வாங்கினார்கள். அப்புறம் என்ன... வாங்கிய காசுக்கு வஞ்சனை இல்லாமல் அவரும் நூற்றுக்கு நூறு என மதிப்பெண்களை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
உண்மையில் எந்தெந்தத் தவறுகளுக்கு தண்டனை வரி உண்டோ.. அவை எல்லாம் தவறுகளே அல்ல என்ற சிந்தனை பெரும்பான்மை பொதுப் புத்தியில் ஆழ உறைந்துவிட்டிருக்கிறது. ஆனால், அது சரியான பாதை அல்ல; சமூகத்துக்கு ஆரோக்கியமானதும் அல்ல.
அமெரிக்காவில் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் தினம் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணிவரை குழந்தைகளை பார்த்துக்கொள்வார்கள். அதற்கு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கிறார்கள். பொதுவாக பெற்றோர்கள் மாலை 5 மணிக்கு மேல் வந்துதான் குழந்தைகளை அழைத்துச் செல்வார்கள். ஆனால், சரியாக 5 மணிக்கு வரவைக்க வேண்டும் அல்லது கூடுதல் காசு பார்க்க வேண்டும் என்று நினைத்த அந்த காப்பக நிர்வாகம், 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் வரும் பெற்றோர்கள் கூடுதலாக 10 டாலர் தண்டனை வரி கட்டவேண்டும் என்று அறிவித்தது. ஆனாலும், அலட்டிக்கொள்ளவில்லை பெற்றோர்கள். எல்லாரும் 6 மணிக்கு வந்து 10 டாலர்கள் செலுத்தி புன்சிரிப்போடு குழந்தைகளை அழைத்துச் சென்றனர். அவர்களை பொறுத்தவரை 10 டாலர்கள் தண்டனை வரி அல்ல. ஒரு மணி நேரத்துக்கான காப்பகக் கட்டணம்.
இப்படித் தொடங்கும் மனோபாவம்தான் கடைசியில் காசு கொடுத்து தப்பு செய்துகொள்ளலாம் என்பதில் நிறைவடைகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரணமாகத் தோன்றும். ஆனால், உலகின் மொத்த பொருளாதாரத்தில் கணிசமான பகுதி இப்படியான குற்றங்களை செய்யவும் அவற்றை மறைக்கவுமே புழக்கத்தில் இருக்கிறது என்பது தெரியுமா? ஒவ்வொருவரும் மனசாட்சிக்கு நேர்மையாக இருந்துவிட்டால் கணிசமான பொருளாதாரத்தை ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு மடை மாற்றிவிடலாமே நண்பர்களே.
பெற்றோர்கள்கூட குழந்தைகள் படித்தால் காசும் பொருளும் (புத்தகங்கள் விதிவிலக்கு) கொடுப்பதை தவிர்த்து, குழந்தைகளின் அறிவை மெச்சி போற்றச் செய்யுங்கள். குழந்தைகள் தவறு செய்தால் தவறை
உணரச் செய்யுங்கள். அதற்காக பணத்தைக் கொடுத்து தவறுகளை சரியாக்க நினைப்பது சரியல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT