Last Updated : 06 Nov, 2013 11:06 AM

 

Published : 06 Nov 2013 11:06 AM
Last Updated : 06 Nov 2013 11:06 AM

மாற்றத்தின் வித்தகர்கள் 6 - எஸ். ராமகிருஷ்ணன்

சென்னை திருவான்மியூர் காமராஜர் நகரில் வீடுகளோடு வீடாக இருக்கிறது அந்தப் பதிப்பகம். கதவில் சின்னதாக இணைக்கப்பட்டிருக்கும் பலகை ‘க்ரியா’ என்று சொல்கிறது. சின்ன அலுவலகம். ஓர் அரசாங்கம் செய்யத் தவறியதை, ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டியதை இங்கிருந்துதான் அமைதியாகச் செய்துகொண்டிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். தற்காலத் தமிழுக்கான நம்பகமான ஒரே அகராதியான ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’, தமிழில் மட்டும் அல்ல, இந்திய மொழிகளிலேயே திருத்தப்பட்டு, விரிவாக்கப்பட்ட (Revised Edition) முதல் அகராதியும், பார்வையற்றோருக்கான முதல் ‘ப்ரெய்ல்’ அகராதியும் ஆகும். 80 லட்சம் வார்த்தைகளைக் கொண்ட தமிழ்ச் சொல்வங்கி ‘க்ரியா’வின் மற்றொரு பெரிய சாதனை. மொழியிலாளர்கள் ஆங்கில ‘ஆக்ஸ்ஃபோர்ட் ’ அகராதிக்கு இணையாகக் குறிப்பிடுகிறார்கள் இந்த அகராதியை. ஆனால், நிதி வளத்திலோ, ஆள் பலத்திலோ ‘ஆக்ஸ்ஃபோர்ட் பதிப்பக’த்தோடு ஒரு சதவீத அளவுக்குக்கூட ஒப்பிட முடியாத நிலையில், இதைச் சாதித்திருக்கிறார் ராமகிருஷ்ணன்.

உலகின் மிகச் சிறந்த படைப்புகளின் மொழிபெயர்ப்புகளான லாவோ ட்சுவின் ‘தாவோ தே ஜிங்’, ஆல்பெர் காம்யுவின் ‘அந்நியன்’, காஃப்காவின் ‘விசாரணை’, எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’; மருத்துவ நூலான டேவிட் வெர்னரின் ‘டாக்டர் இல்லாத இடத்தில்’; தமிழ்க் கல்வெட்டியல் குறித்த ஆங்கில நூலான ஐராவதம் மகாதேவனின் ‘எர்லி தமிழ் எபிகிராஃபி’ என்று விரியும் ‘க்ரியா’வின் நூல் வரிசையில் வெளியானவைதான் சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.: சில குறிப்புகள்’, அம்பையின் ‘வீட்டின் மூலையில் சமையலறை’, இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’, ந.முத்துசாமியின் ‘மேற்கத்திக் கொம்புமாடுகள்’, பூமணியின் ‘அஞ்ஞாடி’. தமிழ்ப் பதிப்புத் துறையில் பரிசோதனை முயற்சிகளுக்குப் பேர்போன ராமகிருஷ்ணன்தான் தமிழ்ப் பதிப்புத் துறையில் கறாரான எடிட்டிங்கை அறிமுகப்படுத்தியவர். ‘க்ரியா’வைத் தாண்டி இன்றைக்குத் தமிழ் மொழிக்கும் கலைக்கும் வளம் சேர்க்கும் ‘கூத்துப்பட்டறை’, ‘மொழி அறக்கட்டளை’, ‘ரோஜா முத்தையா நூலகம்’ஆகியவற்றின் உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகித்திருக்கும் ராமகிருஷ்ணன், மாற்றத்தை முன்னெடுத்த கதை அசாதாரணமானது.

“அப்போ நான் ‘ஆர்.கே.சுவாமி’யோட விளம்பர நிறுவனத்துல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். நல்ல சம்பளம் கொடுத்த வேலை அது. ஆனா, மனசு சொன்னுச்சு, ‘இது உன்னோட வேலை இல்லை; இந்த வேலையைச் செய்றதுக்கு நீ தேவை இல்லை’னு. வேலையை விட்டுட்டேன். அடிப்படையில் நான் ஒரு தீவிரமான வாசகன். ஆங்கிலத்துல வர்ற புத்தகங்களை எல்லாம் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும். இப்படிப்பட்ட புத்தகங்கள் தமிழ்ல, தரமான தயாரிப்புல வந்தா எப்படி இருக்கும்னு. என்னோட கனவைத் துரத்த ஆரம்பிச்சேன். தோழியும் வாழ்க்கைத் துணையுமான ஜெயலட்சுமியோடு சேர்ந்து ‘க்ரியா’வைத் தொடங்கினேன்.

அன்னைக்கெல்லாம் இப்படி ஓர் அகராதி யைக் கொண்டுவருவேன்னு கற்பனைலகூட நான் நெனைச்சுப் பார்த்தது இல்லை. அப்போ ஒரே இலக்குதான் இருந்துச்சு. அன்னைக்குத் தமிழ்ல யாரும் வெளியிட முன்வராத, ஆனா, வளர்ந்துகிட்டு இருக்குற புதிய இலக்கியத்தோட முக்கியமான படைப்பாளி களோட படைப்புகளை வெளியிடணும். அவ்வளவுதான். ‘க்ரியா’வோட ஆரம்ப காலப் படைப்புகள் எல்லாமே அப்படித்தான்.

டேவிட் வெர்னரோட மருத்துவ வழிகாட்டி நூலைப் படிச்சப்போ, மருத்துவ வசதி பெரிய சவாலா இருக்குற நம்ம சமூகத்துல இந்தப் புத்தகம் எவ்வளவு முக்கியமானதா இருக்கும்னு ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகத்தைக் கொண்டுவர முடிவுசெஞ்சோம். அதுக்காக, மருத்துவத்துல இருக்குற பல கலைச்சொற்களைத் தமிழுக்குக் கொண்டுவரும்போதுதான் மொழி என்னைப் பிடிச்சு இழுத்துச்சு.

எந்த ஒரு தொழில்லேயும் அதற்கான மூலவளங்களைப் பெருக்குறது நடக்கும் இல்லையா, அப்படிப் பதிப்புத் தொழிலின் மூலவளமான மொழியைப் பெருக்குறதுபத்தி யோசிச்சப்ப, எங்களுக்கான முக்கியமான தொழில் கருவி அகராதிங்கிறதை என்னோட நண்பரும் பேராசிரியருமான இ. அண்ணாமலை காட்டினார். அகராதி வேலைகள்ல இறங்கினப்போ, பதிப்பு வேலைகளும் அகராதி வேலைகளும் பரஸ்பரம் ஒண்ணுக்கொண்ணு செழுமைப்படுத்துறதை உணர்ந்தோம். பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் கைகோத்தார். இறங்கிட்டோம்.

இன்னைக்குத் திரும்பிப் பார்க்கும்போது, எவ்வளவு பண நெருக்கடிகள், ஆள் பற்றாக்குறை, எதிர்மறை விமர்சனங்களுக்கு நடுவுல இந்த அகராதி வந்திருக்குன்னு நெனைச்சுப்பார்க்கும்போதே ஆச்சரியமாத்தான் இருக்கு. உண்மையைச் சொல்லணும்னா இந்த மாதிரி ஒரு பெரிய காரியத்துல நான் ஒரு கருவின்னுதான் சொல்லணும். அவ்வளவு பேரோட உழைப்பும் உதவியும் இதுக்குப் பின்னாடி இருக்கு.

தாய்மொழிக்கு அகராதி கட்டாயம் தேவைங்கிறது பல சமூகங்கள்லேயும் நிரூபிக்கப்பட்டிருக்கு. ஆனா, தமிழுக்கு அகராதி தேவையில்லைனுதான் பொதுவா இங்கே எல்லாரும் நெனைக்கிறோம். இன்னும் சொல்லப்போனா, அகராதிங்கிறதே ஆங்கிலம் தெரிஞ்சுக்கறதுக்கான ஒரு கருவின்னு நெனைக்குறோம். இந்தப் பின்னணியில் பார்த்தால், ஓர் ஆங்கிலேயர் ஆங்கில அகராதி வாங்குறதுக்கான தேவையே இல்லை, இல்லையா? ஆனா, ஆங்கிலேயர்களோட ஒவ்வொரு வீட்டுலேயும் அகராதி இருக்கும்.

நிறைய பேர் நெனைக்குறாங்க, அகராதியாளர்கள்தான் மொழியை உருவாக்குறாங்கன்னு. அப்படிக் கிடையாது. அகராதிங்குறது ஒரு சொல்லைப் பத்தி அந்தச் சமூகம் என்ன நெனைக்கிறதுங்கிறதைத் திரட்டித் தர்றது. ஒரு சொல்லோட முழு அர்த்தத்தையும் அது தர்றதால, அறிவு சார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்க அது உதவுது. அதனால, அகராதிங்கிறது வெறுமனே மொழித் தெளிவைக் கொடுக்குறது மட்டுமே இல்லை. அறிவையும் கொடுக்குறது.

என்னைப் பொருத்த அளவுல அகராதிங்கிறது ஒரு மொழிக்கருவி மட்டும் இல்லை. அதுவும் ஜனநாயகத்துக்கான ஒரு சாவின்னு சொல்வேன். உலகமயமாக்கல்னு சொல்றோம், பெண்ணுரிமைனு சொல்றோம், பணவீக்கம்னு சொல்றோம்; முழு அர்த்தம் தெரியற வரைக்கும் எல்லாமே வெறும் வார்த்தைகள்தானே? அர்த்தம் தெரியும்போது தான் அதுக்குள்ளே இருக்குற அரசியல் வெளியே வருது. அப்படின்னா, அகராதி சாமானியர்களுக்கு ஒரு தெளிவையும், அதனால அவங்க கையில அதிகாரத்தையும் கொடுக்குது இல்லையா? அதைச் செய்யுறதுதான் இதுல உள்ள திருப்தி” என்று சொல்லும் ராமகிருஷ்ணன், கடந்த 40 ஆண்டுகளில் தமிழ்ப் பதிப்புத் துறையில் நீடிக்க தார்மீகரீதியாக எதிர்கொண்ட சவால்கள் கணக்கற்றவை.

சிங்கப்பூர் பாடத்திட்டத்தில் ‘க்ரியா’ அகராதி உண்டு. உலகெங்கும் தமிழ் கற்றுக்கொள்ளும் பலருக்கு அடிப்படையான கருவி ‘க்ரியா’ அகராதி. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தமிழக அரசு மொழிக்குத் தான் அளித்த பங்களிப்பாக ‘க்ரியா’ அகராதியைத் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்திக் கொண்டது. ஆனால், தமிழக அரசின் ஆக்கபூர்வமான பங்களிப்போ, உதவியோ ‘க்ரியா’வுக்கு இதுவரை கிடைத்ததில்லை. காரணம்: தான் உண்மை என நம்பும் அறத்துக்காக எதையும் சமரசம் செய்துகொள்ளாதவர் ராமகிருஷ்ணன். ஓர் உதாரணம் - தமிழ்ப் பதிப்புத் துறை உயிர்நாடியாகக் கருதும் நூலகங்களில் ‘க்ரியா’ புத்தகங்களைப் பெரும்பாலும் பார்க்க முடியாது. ஏனென்றால், புத்தகங்களை வெறும் காகிதத் திரட்டாகப் பார்க்கும் அரசின் நூலகக் கொள்கைக்கும் லஞ்சம் - சிபாரிசுக்கும் எதிரானவர் ராமகிருஷ்ணன்.

ராமகிருஷ்ணனுக்கு இப்போது 70 வயதாகிறது. மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியும் அடுத்த தலைமுறையில் இந்த அகராதிப் பணியை முன்னெடுக்கப்போவது யார் என்ற கேள்வியும் அவர் முன்னே பெரும் தடைகளாக நிற்கின்றன. ராமகிருஷ்ணனோ இளைய தலைமுறைக்கேற்ப ‘ஐபோன்’, ‘ஐபேட்’ என இணையத்தில் எளிதாகத் தமிழ் அகராதியை மேம்படுத்தும் பணிகளில் இருக்கிறார். அவருடைய கனவில் விரிகின்றன அடுத்த தலைமுறைக்கான தமிழ்ப் புத்தகங்கள். காந்தியிடமிருந்து ராமகிருஷ்ணன் பெற்ற செய்தி எதுவும் உண்டா?

“உண்டு. தார்மீகரீதியான ஒரு போரில், உலகமே எதிர்த்து நின்றாலும் ஒரு தனிமனிதனின் நெஞ்சுரத்துக்கு முன் அது ஒரு பொருட்டல்ல என்பது காந்தியிடமிருந்து பெற்ற செய்தி.”

- உயர்ந்து நிற்கிறார் ராமகிருஷ்ணன்.

சமஸ் - தொடர்புக்கு: writersamas@gmail.com

(அடுத்த புதன், அடுத்த மாற்றம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x