Published : 01 Dec 2013 11:47 AM
Last Updated : 01 Dec 2013 11:47 AM

அகதிகளை விரட்டுகிறது பிரித்தானியா!

பிரித்தானியாவில் அகதிகள் ஒரு முற்றுகையில் இருப்பதாகவே தெரிகிறது. கோ ஹோம் வேன் (GO HOME VAN) என்ற பெயருடைய விளம்பர வாகனங்கள் பல தொடர்ச்சியாக லண்டன் தெருக்களில் ஓடிக்கொண்டே இருக்கின்றன. இது அகதிகளை அல்லது விசா இல்லாதவர்களை “வந்து சரணடையுங்கள்” என்று அழைக்கிறது. அப்படி இல்லாவிடில் நீங்கள் கைதுசெய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவீர்கள் என்று அச்சுறுத்துகிறது.

இங்கிலாந்திலும் இலங்கையைப் போலவே…

இங்கு லண்டனில் வோல்தம்ஸ்டோ, கென்சல் கிறீன், ஸ்ரட்போட், ஈஸ்ட்ஹம் போன்ற பகுதிகளில் அதிகாலை 7 மணிக்கே சுரங்க ரயில் நிலையங்களைச் சுற்றி டஜன் கணக்கான பிரிட்டிஷ் குடிவரவு (இமிக்ரேஷன்) அதிகாரிகள் வந்து நிற்கிறார்கள். வெள்ளை நிறம் தவிர்ந்த ஏனைய நிறமுடையவர்களை மறித்து விசா கேட்கிறார்கள். இங்கு வெளிநாட்டவர்கள், அகதிகள், மாணவர்கள் போன்றவர்கள் விசா அட்டை ஒன்றை வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையை பார்டர் ஏஜன்ஸி அண்மையில் கொண்டுவந்தது. முதலில் எல்லா பிரித்தானியரும் அந்த அட்டை எடுக்க வேண்டும் என்று இருந்ததைப் பின்னர் ஐரோப்பியர் அல்லாத வெளிநாட்டுக்காரர் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். ஐரோப்பியர் அந்த அட்டையை ஏற்கெனவே அவர்கள் நாடுகளில் வைத்திருக்கிறார்கள்.

மாணவர் விசா, வேலை விசா விண்ணப்பிக்கும்போது இப்போது அட்டையில்தான் விசாவைப் பதிவுசெய்து வழங்குகிறார்கள். அதில் கண்விழி அடையாளம்கூட பதிந்திருக்கிறது. அதனை அதிகாரிகள், ‘அடையாள அட்டை’ போல சோதனையின்போது கேட்கிறார்கள். அந்த அட்டை இல்லாதவர்கள் விசாவில் குளறுபடி உள்ளவர்கள் என்று அவர்களைக் கைதுசெய்து தடுப்பு முகாமுக்கு அனுப்புகிறார்கள்.

இலங்கையில்தான் அடையாள அட்டையை சிங்கள ராணுவத்தினரிடம் காட்டிக் காட்டி நொந்துபோனோம்; இப்போது லண்டனில் அடையாள அட்டை காட்ட வேண்டிய அவலம் வந்துவிட்டது என்று ஈழத் தமிழர் ஒருவர் சொன்னார்.

கருப்பு நிறம் என்றால் மோசடியா?

கருப்பு நிறமுடையவர்களை மறித்து விசா கேட்பது இப்போது குடிவரவு-குடியகல்வு அமைச்சுக்குப் பெரும் சவாலாக மாறியிருக்கிறது. இது நிறவெறி சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. வெள்ளை நிறமுடையவர்கள் விசா மோசடி செய்ய மாட்டார்களா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், வெள்ளைக்காரர்களுக்கு விசா மோசடி செய்ய வேண்டிய தேவை இல்லை.

இராக்கியர், இந்தியர், வங்கதேசியர், ஆப்கானிஸ்தான்காரர், இலங்கையர், ஆப்பிரிக்க நாட்டவர்தான் விசா இல்லாமல் இங்கு பிரித்தானியாவில் தங்கியிருக்கின்றனர். எனவே, அவர்களைத்தான் தாங்கள் சோதனை செய்ய வேண்டும் என்று குடிவரவு அதிகாரிகள் சொல்கின்றனர்.

தினமும் இங்கே இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வரும் மாணவர்கள் விமான நிலைய இமிக்ரேஷனில் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

மாணவர் விசா

பொய்யான கல்லூரிகளைக் காட்டி விசா எடுத்தவர்கள் பிடிபடுகிறார்கள். நிறைய பணம் கொடுத்துப் பொய்யான கல்லூரிகள் பெயரில் விசா விண்ணப்பம் போட்டு இங்கு வந்து வேலை செய்யலாம் என்று வரும் இளைஞர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். இங்கு, இப்போது மாணவர் விசாவில் வருபவர்கள் வேலை செய்யவே முடியாது; அவர்களுக்கு இன்சூரன்ஸ் நம்பர் கிடைக்க மாட்டாது. படிக்க என்று வருபவர்கள் முழுமையாகப் பணத்தைச் செலுத்திப் படிக்க வேண்டும்.

அப்படி மாணவர் விசாவில் வந்து இன்சூரன்ஸ் நம்பர் இல்லாமல் களவாக வேலை செய்து பிடிபட்டால் வேலை கொடுத்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்; அபராதம் ஒரு ஆளுக்கு இருபதாயிரம் பவுண்டுகள். பிரித்தானியாவில் வரி கட்டாமல் வேலை செய்வது கிரிமினல் குற்றமாகும். அப்படிப் பிடிபட்டவர்களின் விசாக்கள் உடனடியாகவே ரத்துசெய்யப்பட்டு அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள்.

கன்டெய்னருக்குள் கரியமில வாயு

இப்போது ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்து இங்கு கன்டெய்னரில் களவாக வருபவர்களைக் கண்காணிக்க என்று குடிவரவுப் படை விசேடமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் படை துறைமுகத்துக்கு வரும் அனைத்து கன்டெய்னர்களையும் முழுமையாகச் சோதனை செய்கிறது. சோதனை எவ்வளவு கடுமை என்றால் கன்டெய்னருக்குள் கரியமில வாயு (கார்பன்டை ஆக்சைடு) இருக்கிறதா என்று கருவி வைத்து சோதிக்கிறார்கள். அகதிகள் இங்கு வந்து பொருளாதாரத்தில் முன்னேறிவிடலாம் என்று நினைக்க கூடாது என்று உள்துறை அமைச்சர் நேரடியாகவே சொல்கிறார்.

நிரூபியுங்கள்!

இப்போது ஈழத்தமிழ் அகதிகள் லண்டன் தெருக்களில் நடமாடவே அச்சப்படுகின்றனர். எந்த நேரமும் கைதுசெய்யப்படலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம்தான் அது. தங்கள் அரசியல் தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படும் அபாயம் காணப்படுகிறது. அவர்கள் அங்கு திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில் தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை இங்கு அதிகாரிகளிடம் நிரூபிக்கப் பெரும் பிரயத்தனப்படுகிறார்கள். அவ்வாறு உறுதியாக நிரூபிக்காவிட்டால் அவர்கள் உடனடியாக நாடுகடத்தப்படுகிறார்கள்.

கொழும்பில் கைது செய்யப்படலாம் என்பதை இங்குள்ள அதிகாரிகளுக்கு எப்படி உறுதிப்படுத்துவது? அதனால் அவர்கள் அடைத்து வைக்கப்படுகிறார்கள்.

இங்கு ஈட்டன் ஹவுஸில் அகதிகளை உடனடியாகக் கொண்டுசெல்வதற்கு வாகனங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.

ஊரிலும் போய் வாழ முடியாது; இங்கும் கைதுசெய்கிறார்கள்; என்ன செய்வது? ஓடுகின்ற ரயில் முன்னால் பாய்ந்து தற்கொலைசெய்துகொள்ளலாம்போல இருக்கிறது என்று ஈழத்தமிழ் அகதி ஒருவர் விரக்தியாகத் தெரிவித்தார்.

ஒரு மாற்றமும் வராது

பிரித்தானிய பிரதமர் யாழ்ப்பாணத்துக்குப் போய்வந்ததன் பின்னர் அகதிகள் தொடர்பான கொள்கைகளில் மாற்றம் வரும் என்று சிலர் எதிர்பார்க்கின்றனர். ஆனால் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என்று சொல்பவர்கள்தான் அதிகம். ஏனெனில், பிரித்தானியா தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் (அறிக்கை) அகதிகளைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லியிருக்கிறது. அதுதான் நடைமுறையில் இருக்கும் கெடுபிடி என்று அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

உண்மையான அகதிகளுக்கு பிரித்தானியா எப்போதும் விசா வழங்கும் என்று குடிவரவு அமைச்சர் சொல்கிறார். பிரச்சினைகளை இங்குள்ள அதிகாரிகளுக்கு எழுத்துபூர்வமாக நிரூபிப்பதற்காகப் படாத பாடு பட வேண்டியிருக்கிறது.

ஓரின உறவாளரென்றால் சரி

ஆனால் அகதிகளாகப் பதிவுசெய்வதற்கு இன்னொரு முறையையும் பிரித்தானியா சொல்கிறது. ஒரின உறவாளராக இருப்பவர்கள் (ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி) தங்கள் நாடுகளில் வாழ்வதற்கு முடியாமல் இன்னல் அனுபவித்தால், பகிரங்கமாக வாழ முடியாதுபோனால் இங்கு பிரித்தானியாவில் சரியான ஆதாரத்தைக் காண்பித்து அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பிக்கலாம். ஆதாரபூர்வமாக தாங்கள் ஓரின உறவாளர்கள் என்று நிரூபிக்க வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து இங்கு வருகின்றவர்கள்மீது அதிகாரிகளின் கண் பின்தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நான் எனது வீட்டிலிருந்து லண்டன் நகரத்துக்குப் போகும்போது ஆயிரக் கணக்கான கமெராக்கள் என்னைக் கண்காணிக்கின்றன என்பது எனக்குத் தெரியும். ஆனால் அது ஒரு அகதிக்கு ரண வேதனை.

இளைய அப்துல்லாஹ், புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தாளர்,தொடர்புக்கு: anasnawas@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x