Published : 14 Nov 2013 12:00 AM
Last Updated : 14 Nov 2013 12:00 AM
நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள் (0-14 வயது). இவர்களுக்கு சரியான சூழலும் அரவணைப்பும் இருந்தால் வருங்காலம் பிரகாசமாக இருக்கும். ஆனால், அவர்களை நசுக்குவதே நம் வழக்கமாகிவிட்டது. ஆணாதிக்க சமுதாயம் என்பதுபோல, இன்று வயது வந்தோர் ஆதிக்க சமுதாயத்தில் பெரும்பான்மை குழந்தைகள் சிக்கித் தவிக்கிறார்கள். 2001-2011ல் இந்திய மக்கள்தொகை 1810 லட்சம் அதிகமாகியுள்ளது. ஆனால், 0-6 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 50.5 லட்சம் குறைந்துள்ளது. அதில் ஆண் குழந்தைகள் எண்ணிக்கை 20.6 லட்சம். பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 29.9 லட்சம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பாகவும் பாகுபாடின்றியும் பிறப்பை ஏற்படுத்துவதற்கே கடின முயற்சி தேவைப்படுகிறது. அதன் பிறகு பாகுபாடின்றி வளரும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துவது அடுத்த படி. 1991-2011க்கு இடைப்பட்ட 20 ஆண்டுகளில் நாட்டின் பாலின விகிதம் 927-ல் இருந்து 940 என உயர்ந்துள்ளது.
பாலின விகிதம் என்பது 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் உள்ளனர் என்பதாகும். இரண்டு பாலாரும் சரிசமமாக இருக்க வேண்டும். அதாவது, பாலின விகிதம் 1000 என்று இருக்க வேண்டும். இதற்கு மாறாக, குழந்தைகள் பாலின விகிதம் 945-ல் இருந்து 914 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 2002-04 முதல் 2008-10 வரை பிறப்பில் பாலின விகிதம் 19 புள்ளிகள் குறைந்துள்ளது என்றும் ஒடிஷாவில் 6 புள்ளிகள் குறைந்துள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற பெரிய மாநிலங்களில் இந்த பாலின விகிதம் உயர்ந்துள்ளது.
12 முதல் 23 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளில் 62% ஆண் குழந்தைகளும் 60% பெண் குழந்தைகளும் அனைத்து வகையான தடுப்பு மருந்துகளையும் பெறுகின்றனர். மீதம் 38% முதல் 40% குழந்தைகள் வரை தடுப்பு மருந்து பெறுவதில்லை. பாலின விகிதம் குறைவதற்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான சூழல் உருவாவதற்கும் இதுவும் ஒரு காரணம்.
கல்வி என்று எடுத்துக்கொண்டால், குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது முதல் அவர்களை தொடர்ந்து படிக்கவைத்து, கற்றலை மேம்படுத்தி, பள்ளிப் படிப்பை முடிக்க வைப்பதே அநேக இடங்களில் சிரமமாக உள்ளது. 98% குழந்தைகளை ஆரம்பப் பள்ளியில் சேர்த்துவிட்டோம் என்றாலும், ஏழைகள், குடிபெயர்ந்த குழந்தைகள் அதில் விடுபட்டுப்போவதும் அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதும் பெரும் சிக்கலாக உள்ளது. நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் சேர்ப்பு விகிதம் வேகமாக குறைவதும் (குறிப்பாக இது பெண்களுக்கு) நம் பெண்களின் மோசமான சமுதாய நிலையைக் காட்டுகிறது.
அடுத்த சவால், குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுத்து ஆரோக்கியமாக வளர்ப்பது. குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துவது, வேலைக்கு அமர்த்துவது, கொடுமைப்படுத்துவது என எல்லா வகையான கொடுமைகளில் இருந்தும் காப்பாற்றுவது அதைவிட பெரும் சவாலாக இருக்கிறது.
2011-ல் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் 24% அதிகரித்துள்ளன. இதில் குழந்தைகள் கடத்தல் 43%, பெண் குழந்தை பலாத்காரம் 30%, சிசுக்கொலை 20% என விகிதாச்சாரங்கள் நெஞ்சம் பதற வைக்கின்றன.
குழந்தைத் திருமணம் சட்டரீதியாக தடை செய்யப்பட்டாலும், அந்தச் சட்டம் மீறப்படுவது குறைந்தபாடில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுக்குப் பிறகும் குழந்தைகள் நிலை மிக மோசமாகத்தான் இருக்கிறது.
குழந்தைகள் தினமான இன்று, பெரியவர்களுக்கு குழந்தைகள் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது அவசியம். பெற்றோர் தொடங்கி ஆசிரியர், சகோதரர், சகோதரி வரை எல்லோருக்கும் இந்த புரிதல் மிக மிக அவசியம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT