Last Updated : 19 Nov, 2013 11:46 AM

 

Published : 19 Nov 2013 11:46 AM
Last Updated : 19 Nov 2013 11:46 AM

சீட்டாட்டம் அல்ல.. சீட்டு சேமிப்பு!

எனக்குத் தெரிந்து முறையற்ற நிறுவனங்களிடம் சீட்டு கட்டி ஏமாறுபவர்கள்தான் அதிகம். சீட்டு கட்டுவது மட்டுமல்ல.. பாத்திரத்துக்கு, தங்கத்துக்கு, வீட்டு மனைக்கு, வீட்டு உபயோகப் பொருட்களுக்கு என பல வழிகளிலும் சிறுகச் சிறுக சேமிக்க நினைக்கும் வருமானம் குறைந்த மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஏமாற்றப்படுகிறார்கள். இப்படி செய்திகள் தினமும் வருகின்றன. சமீபத்தில் நடந்த ஒரு கருத்துக் கணிப்பில் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் இன்னும் சீட்டு கட்டுவதே சிறந்த சேமிப்பு, முதலீடு என்று நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது.

சீட்டு நிறுவனம் நடத்துவது தவறான செயல் அல்ல. ஆனால், அதிக வட்டி தருவதாக வைப்புநிதி பெறுவதும் போதிய நிதி பின்புலம் இல்லாமல் அந்நிறுவனத்தை நடத்துவதும் நிதியை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதும் முறையற்ற நிதி செயல்பாடுகள். இதைத் தடுப்பது மாநில அரசுகளின் கடமை என்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.

ஒரு சீட்டு நிறுவனத்தை நடத்துபவர் மற்றும் சீட்டு கட்டும் மற்ற உறுப்பினர்களின் நம்பகத்தன்மைதான் அந்நிறுவனத் தின் செயல்திறனை மேம்படுத்தும். ஒழுங்குபடுத்தப்படாத சீட்டு நிறுவனங்களில் இந்த நம்பகத்தன்மையை எதிர்பார்ப்பது இயலாத காரியம். அதனால், தீர விசாரித்து அதுபோன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்.

முறையற்ற சீட்டு நிறுவனங்களில் அதிக வட்டி கிடைக்கவேண்டும் எனில், முதலில் சீட்டு எடுப்பவர்கள் அதிக தொகையைத் தள்ளி எடுக்க வேண்டும். அப்படி எடுப்பவர்கள் அதை திருப்பிக் கட்டுவதும் சிரமம். ஏமாற்றமே மிஞ்சும்.

ஒழுங்குபடுத்தப்படாத சீட்டு நிறுவனங்களில் வருமான வரி கட்டுவது தொடர்பான எவ்வித கேள்விகளும் கேட்காமல் இருப்பதால் பலர் அங்கு செல்கிறார்கள். உண்மையில் வரி கட்டுவதுதான் பல நேரங்களில் உங்களை இதுபோன்ற சிக்கல்களில் இருந்து காப்பாற்றும். ஏனெனில், வரி கட்டும் நிறு வனங்கள் எப்போதும் அரசின் கண்காணிப்பிலேயே இருக்கும். எனவே, வரி கட்டுகிற நிறுவனங்களைத் தேடுங்கள்.

மத்திய அரசின் Chit Funds Act 1982, தமிழக அரசின் TamilNadu Chit Funds Act 1961 ஆகிய சட்டங்களின் கீழ் உரு வாக்கப்பட்ட நடைமுறை விதிகள் மூலமாக சீட்டு நிறுவனங் கள் ஒழுங்குபடுத்தப்படுகின்றன. Chit Vigilance Cell என்ற அமைப்பும் செயல்படுகிறது. இது சீட்டு நிறுவனங்களில் உள்ள விதிமீறல்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இந்த அமைப்பு ஒரு நிறுவனத்தின் மீது புகார் வந்த பிறகே செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு உண்டு.

மேலும், இவ்வாறான நிதி மோசடிகளுக்கு அடிப்படைக் காரணம், இங்கு எல்லோரும் எளிய வழிகளில் பணம் கடன் வாங்கவும் சேமிப்பு செய்யவும் வசதிகள் குறைவு. ஏழைகளின் தேவைக்கு ஏற்ப அவர்களது பொருளாதார சூழலைப் புரிந்து கொண்டு கடன் அளிக்கவும் அவர்களது சேமிப்பைத் திரட்டவும் ஒரு புதிய நிதி அமைப்பு தேவை. சுயஉதவிக் குழுக்கள் ஓரள வுக்கு இந்த வேலைகளைச் செய்தாலும், அவற்றின் செயல்பாடுகள் இன்னும் விரிவடையவும் மேம்படவும் முயற்சிகள் தேவை.

இன்னொரு பக்கம் வங்கிகளின் சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும். 120 கோடிக்கு மேல் மக்கள்தொகை கொண்ட நாட்டில் ஒரு லட்சத்துக்கும் குறைவான வங்கிக் கிளைகளே உள்ளன. அதாவது, 12 ஆயிரம் பேருக்கு ஒரு வங்கிக் கிளை. கிராமங்களில் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை மேலும் குறைவு. அதனால், மக்கள் தங்களைத் தாங்களே காத்துக்கொள்வதே சிறந்தது. முறைப்படுத்தப்பட்ட சீட்டு நிறுவனங்களிடம் செல்லுங்கள். உங்களுடன் சீட்டு கட்டும் மற்ற உறுப்பினர்களை தெரிந்துகொள்ளுங்கள். சீட்டு எடுத்த பணத்தை அரசு வங்கியில் வைப்புத் தொகையாக சேமியுங்கள். சீட்டு நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையை வாங்கிப் படியுங்கள். எந்த குறை என்றாலும் Registrar of Chits, Chits Vigilance Committee ஆகியோரை அணுகுங்கள். பாதுகாப்பான சேமிப்பே உங்கள் பக்க பலம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x