Published : 17 Sep 2013 04:01 AM
Last Updated : 17 Sep 2013 04:01 AM
மே மாதத்திலிருந்து அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிய ஆரம்பித்தது. ஒரு டாலர் சுமார் 48 ரூபாய் என்று இருந்தது, கொஞ்சம் கொஞ்சமாக 50 வந்து, 60 வந்து, கிட்டத்தட்ட 70-ஐ நோக்கிச் சென்று, பிறகு 63, 64 என்று வந்துள்ளது.
எனக்கு வந்த பல மின்னஞ்சல்களிலும் குறுஞ்செய்திகளிலும் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “சுதந்திரம் பெற்றபோது ஒரு ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு இணையாக இருந்தது. இன்று இந்தியப் பொருளாதாரம் படு மோசமாகி ரூபாய் 60, 70 என்று போய்க்கொண்டிருக்கிறது. இதை மாற்றியமைத்து மீண்டும் ஒரு டாலர் = ஒரு ரூபாய் என்றாக்கி, அடுத்து ஒரு ரூபாய் என்பது இரண்டு, மூன்று டாலர் என்று ஆக்கப்படவேண்டும்.”
ஓர் அமெரிக்க டாலருக்கு இணை, சுமார் 100 ஜப்பானிய யென். அதேபோல் ஓர் அமெரிக்க டாலருக்கு இணை சுமார் 1,000 கொரியன் வொன்! அப்படியானால் ஜப்பான், கொரியா எல்லாம் குப்பை நாடுகளா? இரண்டுமே இந்தியாவைவிட வளர்ந்த, மிக நல்ல நிலையில் உள்ள பொருளாதாரங்கள்.
மறு பக்கம், ஒரு பஹ்ரைன் தினார் என்பது 2.65 அமெரிக்க டாலர். அப்படியென்றால் பஹ்ரைன் அமெரிக்காவைவிடச் சிறந்த நாடா? உள்நாட்டுக் குழப்பங்கள் நிலவும் பஹ்ரைன், அண்டை நாடுகளின் நிதி மற்றும் ராணுவ உதவியுடன்தான் இன்று காலம் தள்ளிக்கொண்டிருக்கிறது.
சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் இந்தியாவின் சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் 1,500 டாலர் என்ற கணக்கில் இருக்கிறதே என்பதுதான் நமக்கு வருத்தம் தர வேண்டும். ஒப்பீட்டின்படி, சீனாவின் தனிநபர் ஆண்டு வருமானம் சுமார் 6,000 டாலர். அமெரிக்காவில் இது சுமார் 50,000 டாலர். ஜப்பானில் 46,000 டாலர், கொரியாவில் 22,500 டாலர்.
நாம் அடைய வேண்டிய தூரம் மிக அதிகம்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால் பொதுமக்களுக்கு உடனே ஏற்பட்ட தீங்கு பெட்ரோல் விலை அதிகரிப்பு. ஆனால் இதனால் பலன் பெறுபவர்களும் பலர் உண்டு. ஏற்றுமதித் தொழிலில் உள்ள அனைவருக்கும் இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தது நல்ல விஷயம். முக்கியமாக, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் லாபம் இந்தக் காலாண்டில் அதிகமாக இருக்கும். திருப்பூர் துணி ஏற்றுமதியாளர்கள் முதல் மஞ்சள், மிளகு, அல்ஃபோன்சா மாம்பழம் ஏற்றுமதி செய்பவர்கள் வரை அனைவருக்கும் லாபம் அதிகம். ஆனால் பிளாஸ்மா டிவி முதல் கம்ப்யூட்டர், மொபைல் ஃபோன் வரை இறக்குமதி செய்பவர்களுக்கு நஷ்டம். ஆனால், அவர்கள் நஷ்டப்பட மாட்டார்கள். தலையைத் தடவத்தான் நாம் இருக்கிறோமே?
பத்ரி சேஷாத்ரி,பதிப்பாளர், தொடர்புக்கு: bseshadri@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT