Published : 29 Oct 2013 10:55 AM
Last Updated : 29 Oct 2013 10:55 AM
பசுமைத் தீர்ப்பாயம் புதிய கட்டிடத்துக்குக் குடிபெயர்ந்த நிகழ்வை துவக்கி வைத்து இந்திய தலைமை நீதிபதி ஆற்றிய உரையின் சில பகுதிகள் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “கோர்ட்களும் தீர்ப்பாயங்களும் ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு முழுத்தடை விதித்தது வருந்தத்தக்கது மற்றும் தவறானது. ஏப்ரல் முதல் ஜூன் வரை ஆற்று நீரில்லா காலத்தில் 3 அடி முதல் 5 அடி வரை மணல் அகற்றப்படாவிட்டால் வெள்ளப்பெருக்கு கடலுக்குப் போகும் என்ற அனுபவம் தனது வீடும் நிலமும் தமிழ்நாட்டில் காவிரிக்கரையில் இருந்ததால் கிட்டியது” என்று கூறினார்.
நீதிமன்றத்திற்கு வெளியே பொது நிகழ்ச்சியில், பசுமைத் தீர்ப்பாயத்தின் புது அலுவலகத்தை துவக்கும் வேளையில், தீர்ப்பாய நீதிபதிகளின் முன்னிலையில் இப்படிக் கருத்து கூறலாமா என்ற கேள்வி எழுகின்றது. விசாரிக்கும் வழக்குகளின் இடையே தங்களது தனிப்பட்ட கருத்துகளை நீதிபதிகள் வெளியிடுவது தவறு.
1999-ல் ஏ.கே.சிங் வழக்கில், கீழமை நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது உயர் நீதிமன்றம் தனது கருத்தைப் பதிவு செய்யக்கூடாது என்றும், 2009-ல் மீரட் வளர்ச்சிக் குழுமம் தொடுத்த வழக்கில், பெஞ்சமின் கார்டோசா என்ற சட்ட மேதையின் மேற்கோளை குறிப்பிட்டு ஒரு நீதிபதிக்கு சுதந்திரம் உண்டென்றாலும் அது முழு சுதந்திரமல்ல, அவர் தனது கருத்தை சட்டவரைக்கு உள்ளடக்கியே தீர்ப்பளிக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் 7-5-1997ல் நீதிவாழ்வின் விழுமியங்கள் அடங்கிய பிரகடனத்தை வெளியிட்டனர். அதில் 8-வது பத்தியில் நீதிபதி பொது விவாதத்தில் ஈடுபடவோ, பொதுவில் தனது கருத்தை வெளியிடவோ (அ) நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை பாதிக்கும் விதமாகவோ (அ) எதிர்காலத்தில் தன் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வரக்கூடிய பிரச்சினைகள் பற்றியோ கருத்துகள் தெரிவிக்கமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து நடத்தப்படும் மணல் கொள்ளையால் நீராதாரங்கள் பாதிக்கப்பட்டு தமிழகமே பாலைவன மாக்கப்படும் சூழலிலும் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் கிளையிலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் இப்பிரச்சினைகள் குறித்து வழக்குகள் நிலுவையில் உள்ளபோதும் இப்படி பொத்தாம்பொதுவாக பேசியுள்ளது தவறே. பொது இடத்தில் கருத்துக் கூறியதால் அக்கருத்தை மறுத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு.
நீர்வரத்து இல்லாதபோது ஆற்று மணலை அள்ளா விட்டால், பின்னர் வரும் வெள்ளப்பெருக்கு உபயோகமின்றி கடலில் சேருமென்றும், காவிரிக்கரை கிராமமொன்றைச் சேர்ந்தவன் என்பதால், நீர்வரத்தற்ற பருவங்களில் மணல் எடுக்கப்பட்டதைப் பார்த்த அனுபவம் தனக்கு உண்டென்றும் அவர் கூறியுள்ளார். ‘தமிழ்நாட்டின் நீர்வளமும் எதிர்காலமும்’ மற்றும் ‘காவிரி நதிநீர் பங்கீடு’ என்ற நூல்களின் ஆசிரியரும், திருச்சி மாவட்ட காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கத்தின் தொழில்நுட்ப ஆலோசகரும், முன்னாள் பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளருமான என்.நடராஜன் இதை வன்மையாக மறுத்துள்ளார். கரூர் முதல் தஞ்சை வரை மட்டுமே ஆற்றுமணல் கிட்டுமென்றும் விதிமுறைகளை மீறி காவிரியில் மணல் கொள்ளையடிக்கப்பட்டதால் நதியின் போக்கு தடைப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் 14-7-99ல் அளித்த தீர்ப்பின்படி இதுவரை தமிழகத்திலுள்ள நதிகளில் எங்குமே ஆற்று மணல் அள்ளுவதற்கான வரைமுறைகள் உருவாக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
மணல் ஆதாரம் குறைந்தால் மாற்று கட்டுமானப் பொருட் களைத் தேட முற்பட வேண்டுமேயொழிய நீராதாரங்களை சீரழிக்க முயலக்கூடாது என்பதே நீதிமன்றங்களின் தீர்ப்புகளாக இருக்கட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT