Published : 18 Nov 2013 12:00 AM
Last Updated : 18 Nov 2013 12:00 AM
ஐக்கிய நாடுகள் சபையினால் (United Nations) நவம்பர் 19ம் தேதி ‘உலக கழிப்பறை தினம்’ என்று அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் 25 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதி இல்லை. இருந்திருந்தால் ஆண்டுதோறும் 15 லட்சம் குழந்தைகளை இறப்பிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். இந்தியாவில் 61.5 கோடி பேர் திறந்தவெளியில் மலம் கழிப்பதாக 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது நம் மக்கள்தொகையில் 50 சதவீதத்தைவிட அதிகம். நமக்கு கைப்பேசி முக்கியம். 59% இந்தியக் குடும்பங்களில் கைப்பேசி உண்டு. ஆனால், 47% குடும்பங்களில்தான் கழிப்பறைகள் உள்ளன.
திறந்தவெளியில் மலம் கழிப்பது மனித சுகாதாரத்துக்கு மிகப் பெரிய கேடு. இதனால் ஆண்டுதோறும் உலகில் $260 பில்லியன் உற்பத்தி இழப்பு ஏற்படுவதாக உலக வங்கி கூறுகிறது. மலத்தில் உள்ள கிருமிகள் காற்று, நீர், ஈ ஆகியவை மூலமாக குழந்தைகளின் கால் மற்றும் கை விரல் நகங்கள், உணவு, குடிநீர் என எல்லா வகைகளிலும் தாக்கி வயிற்றுப்போக்கு, குடல் புண், வயிற்றில் கிருமிகள் ஏற்படுத்துகின்றன. இதனால், போதுமான சத்துணவு சாப்பிட்டாலும், குழந்தைகளின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும். அவ்வாறே இந்தியாவில் இருக்கின்றது.
போதிய கழிப்பறைகள் இல்லாமல் இருப்பது ஒரு காரணம். அதேபோல, குடிசைப் பகுதிகளில் கழிப்பறைகள், கழிவு நீர் வெளியேற்றம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. சொந்தக் குடிசைகூட இல்லாத ஏழைகள் எங்கிருந்து 24 மணி நேரம் தண்ணீர் வரக்கூடிய கழிப்பறைகளை கட்டுவது? பல இடங்களில் அரசு கழிப்பறைகள் கட்டினாலும், அதற்கு தண்ணீர் வசதி செய்யாமல் இருப்பதால், அவை பயன்பாட்டில் இருப்பதில்லை.
அரசும் முயற்சிக்காமல் இல்லை. 1999-ம் ஆண்டிலிருந்து ‘எல்லாருக்கும் சுகாதாரம்’ (Total Sanitation Campaign) என்ற திட்டத்தின் மூலமாக குறைந்த செலவில் கழிப்பறை கட்டுவதற்கு மானியம் வழங்கிக்கொண்டிருக்கிறது. இதே திட்டத்தின் கீழ் தொகுப்பு கழிப்பறைகளும் கட்டித் தரப்பட்டன. ஆனால், இவற்றில் தொடர்ந்து தண்ணீர் வசதி இல்லாததால், கழிப்பறைகள் பயன்படுத்தப்படாமலே போயின. திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத கிராமப் பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசு ‘நிர்மல் புரஸ்கார்’ விருதும் பணமும் கொடுக்கிறது.
பல தொண்டு நிறுவனங்களும் கழிப்பறைக் குறையை போக்க முன்வந்து பல செயல்களை செய்துகொண்டுதான் இருக்கின்றன. கடந்த அக்டோபர் 2ம் தேதி பில் கேட்ஸ் பவுண்டேஷன் ‘கழிப்பறையை மறுபடி கண்டுபிடி’ (Reinvent the Toilet) என்ற திட்டத்தை மத்திய அறிவியல் துறையுடன் சேர்ந்து செயல்படுத்தத் துவங்கியுள்ளது. இதில் குறைந்த விலையில் கழிப்பறைகள் கட்டி தொடர்ந்து பயன்படுத்துவதற்காக புதிய யோசனைகள் கேட்கப்படுகிறது.
E-Kutir என்ற தன்னார்வு நிறுவனம் ஒடிஷா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கழிப்பறை பயன்பாட்டை விளக்கி, கழிப்பறை கட்டி தொடர்ந்து பயன்படுத்த கிராம மக்களுக்கும் குடிசைவாழ் மக்களுக்கும் உதவி வருகின்றனர். இது போல் peepoo, sulab, grama vikas, gramalaya எனப் பல தொண்டு நிறுவனங்கள் இந்த சுகாதார வேலையில் ஈடுபட்டுள்ளன.
மனித வளர்ச்சிக்காக, ஏழ்மையைக் குறைப்பதற்காகவும் பசியின் கொடுமையை போக்குவதற்காகவும் விலையில்லா உணவு தானியமும், குறைந்த விலை உணவகமும் நடத்தும் அரசு, பொது சுகாதாரத்தை மேம்படுத்த கழிப்பறைப் பயன்பாட்டை அதிகரிக்க உடனடியாக ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தை செயல்படுத்தினால், அது மற்றுமொரு புரட்சியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT