Last Updated : 20 Nov, 2013 12:00 AM

 

Published : 20 Nov 2013 12:00 AM
Last Updated : 20 Nov 2013 12:00 AM

மலரட்டும் மனிதநேயப் பொருளாதாரம்

அக்கறை செலுத்துகிறோம் என்கிற பெயரில் குழந்தைகள் மீது அதிக ஆளுமை செலுத்தி அவர்களை சிதைக்க முற்படுவதுபோல, முதியோரையும் அதிக அலட்சியத்தால் பலரும் வதைக்கிறார்கள். கடந்த படிப்படியான ஆண்டு களில் இந்தியாவில் மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துவருகிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி நாட்டின் மக்கள்தொகையில் 65 வயதைக் கடந்தவர்கள் 4.8% பேர். இதில் ஆண்கள் 4.6%, பெண்கள் 5%. தமிழகத்தில் 65 வயதைக் கடந்தவர்கள் 5.4% பேர். இதில் 5.3% ஆண்கள், 5.5% பெண்கள். அரசுத் துறைகளில் 58 முதல் 60 வயது வரையிலும் தனியார் துறைகளில் 65 வயது வரையிலும் தொழிலாளர்கள் வேலைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வேலையில் இருப்பதும் ஊதியம் ஈட்டுவதும் இயலாத காரியம். ஆனால், இன்று பெரும்பாலான இடங்களில் உழைக்கும் முதியோரைப் பார்க்க முடிகிறது. இவர்களில் பலர் நிர்ப்பந்தத்தால் உடல், மனம் நோக உந்தித் தள்ளப்பட்டே உழைக்க நேரிடுகிறது. இவர்கள் மூலம் சமூகத்துக்குக் கிடைக்கப்பெறுவது பொருளாதாரம் அல்ல; இருளாதாரம்!

கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து தனிக் குடும்பங்கள் ஆனது ஒரு சமூக, பொருளாதார மாற்றம். இன்று ஒவ்வொரு தலைமுறையும் வெவ்வேறு இடங்களில் வாழ்க்கை நடத்துகின்றனர். இது கூட்டுக் குடும்பங்கள் சிதைவதற்கு ஒரு காரணம். ஆண், பெண் இருவரும் சேர்ந்து சம்பாதித்துதான் குடும்பத்தை நடத்தவேண்டும் என்கிற சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஒரு குடும்பத்தில் பாலின வேற்றுமை குறையும்போது கூட்டுக் குடும்பங்களால் அதைக் கையாள்வது கடினமாகி, உடையத் துவங்கின. குடும்பங்கள் பொருளாதாரச் சந்தையின் கருத்தை ஏற்று அதுவே குடும்ப நாகரிகம் என்றானபோது சிக்கல்கள் அதிகமாயின. குழந்தைகள் எதிர்கால நுகர்பொருட்களாகவும் அதற்கான கல்வி முதலீடாகவும் பேணப்படுகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நண்பர் அவரது ஏழு வயதுப் பிள்ளையை என்னிடம் அழைத்துவந்து, ‘இவனை பொறியாளனாக ஆக்கவேண்டும்’ என்றார். பிள்ளை துறுதுறுவென என் மேஜையில் இருந்த பொம்மையை எடுத்து விளையாட முற்பட்டான். ‘குழந்தை குழந்தையாக இருக்கட்டும். அவன் வளரும்போது பொறியாளனாவான்’ என்றேன். இவர் விடுவதாக இல்லை. சிறிது நேரம் பேசிவிட்டு, கணக்கு, விஞ்ஞானப் பாடங்களுக்கு கூடுதல் புத்தகங்களைப் பெற்றுச் சென்றார். இன்று அவன் பொறியாளன். ஆனால் பெற்றோரை கவனிப்பது இல்லை. இதையும் அவர் சமீபத்தில் என்னிடம் சொன்னார்.

அவனைப் பொறியாளனாக ஆக்க முயற்சித்த நண்பர் ஏனோ நல்ல மனிதனாக வளர்க்க நினைக்கவில்லை. குழந்தைகளுக்கு அறிவின் தாகத்துடன் நல்ல ஒழுக்கங்களையும் ஊட்ட வேண்டும். அறிவின் தாக்கத்தால் ஒருவர் ‘தனி மனிதனால் எல்லாம் முடியும்’ என்று எண்ணுகிற போக்கு ஆபத்தானது. நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளோம் என்பதுதான் உண்மை. எனக்கு நீங்கள் முக்கியம். உங்களுக்கு நான் முக்கியம். என் தேவைக்கு உங்களைப் பயன்படுத்திக்கொள்வதும், பின்பு தூக்கி எறிவதும் மனிதனை சந்தைப் பொருளாக பார்க்கிறோம் என்பதற்கு அடையாளம். இதன் நீட்சிதான் முதியோர்களை வதைப்பதும். இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும். அதுவே உண்மையான - மனிதநேய பொருளாதார வளர்ச்சி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x