Published : 16 Oct 2013 12:37 PM
Last Updated : 16 Oct 2013 12:37 PM
வீணாப் போன நோபல் பரிசுக்கு எத்தனை போட்டி! இவருக்கா அவருக்கா என்று மாசக் கணக்கில் ஆரூடம் பார்த்து, இறுதியில் உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே என்று சொல்லிவிடுகிறது கமிட்டி. ஆனால், இங்கே பாருங்கள். ஒரு பரிசு காத்திருக்கிறது. அதுவும் கொஞ்ச நஞ்ச பரிசுத்தொகை இல்லை. அஞ்சு மில்லியன் டாலரை அள்ளிக் கொடுக்க ரெடி என்கிறது இந்த கமிட்டி. ஆனால் எனக்கு வேணாம், உனக்கு வேணாம் என்று அலறியோடுகிறார்கள் பிரகஸ்பதிகள். உலகம்தான் எத்தனை விசித்திரங்கள் நிறைந்தது!
சூடானில் பிறந்து லண்டனில் வசிக்கும் தொழிலதிபரான டாக்டர் மொஹம்மத் இப்ராஹிம், டெலிகாம் உலகில் ஒரு பெரியாள். ஆப்பிரிக்க தேசங்களில் பிரசித்தி பெற்ற செல்டெல் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர். பெரும் பணக்காரர். இவர் 2006ம் வருஷம் மோ இப்ராஹிம் ஃபவுண்டேஷன் என்றொரு அறக்கட்டளையை நிறுவி மேற்படி அஞ்சு மில்லியன் டாலர் பரிசுத் தொகையை அறிவித்தார். யாருக்கு இந்தப் பரிசு?
ஆப்பிரிக்க நாடுகளை ஆளும் அதிபர்களுக்கு. ஆட்சியில் இருக்கும் காலத்தில் சிறப்பான நிர்வாகத்தை அளித்து, மக்களுக்கு நல்லது பல செய்து, நல்ல பேர் எடுத்திருக்க வேண்டும். மிகச் சிறந்த தலைவர் என்று மகாஜனங்கள் ஏகமனதாகச் சொல்லியிருக்கவேண்டும்.
இப்படியாக நல்ல பேரை வாங்கிக்கொண்டு காலக்கிரமத்தில் ரிடையர் ஆகி வீட்டுக்குப் போகும் அதிபர்களிடையே மேற்படி மோ இப்ராஹிம் ஃபவுண்டேஷன் மிகச் சிறந்த ஒருவரைத் தேர்ந்தெடுக்கும். அவருக்குத்தான் அந்த அஞ்சு மில்லியன் டாலர் பரிசு.
இதில் இன்னொரு நிபந்தனையும் உண்டு. இந்த அதிபராகப்பட்டவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும். தடாலடிப் புரட்சி பண்ணி ஆட்சியைக் கவிழ்த்து நாற்காலியை அபகரிப்பவர்களுக்குப் பந்தியில் இடம் கிடையாது. அதே மாதிரி பதவிக்காலம் என்னவோ, அதை முடித்துவிட்டு சமர்த்துப் பிள்ளையாக அடுத்தத் தேர்தலுக்கும் ஏற்பாடு பண்ணி வைத்தவராயிருக்க வேண்டும்.
சே. எத்தனை கஷ்டமான நிபந்தனைகள். இருந்தாலும் வேறு வழியில்லை. டாக்டர் மோ இப்ராஹிம் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். அவரே ஒன்றும் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுப்பதில்லை. தகுதி வாய்ந்த பெருந்தலைவர்களைக் கொண்ட கமிட்டி ஒன்றை அவர் வைத்திருக்கிறார். அந்த கமிட்டிதான் விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும்.
இந்த கமிட்டி கொடுக்கும் விருது ஒரு பக்கம் இருக்க, உள்ளதிலேயே (53 உள்ளது) பெஸ்டு, ரெண்டாமிடம், மூணாமிடம் என்று தொடங்கி கட்டக்கடைசி தரத்து ஆப்பிரிக்க நாடுகள் வரை வருஷம் தோறும் ஒரு பட்டியல் கொடுக்கும். சுய பரிசீலனைக்கு ரொம்ப சௌகரியமான விஷயம் இது. அதையெல்லாம் யார் கேட்டார்கள் என்றால் பேச்சே இல்லை.
நிற்க. இந்த மோ இப்ராஹிம் கமிட்டியாருக்கு இந்த வருஷ 53 அதிபர்களுள் ஒருத்தர்கூடப் பரிசுக்குத் தேறவில்லை. ஏற்கெனவே மூன்று முறை (2009, 10, 12) இம்மாதிரி ஆகி, பரிசு கிடையாது போ என்று சொல்லிவிட்டது கமிட்டி. இந்த வருஷமும் இப்படி ஆனதில் ஆப்பிரிக்க மக்களுக்கு அது ரொம்ப அவமானமாகப் போய்விட்டது. என்னமாதிரியான தலைவர்கள் நம்மை ஆண்டுகொண்டிருக்கிறார்கள்? இந்த அழகுராஜ் அண்ணன் நல்லவர், வல்லவர் என்று அடுத்தவன் சொல்ல வக்கில்லாத வகையிலா ஒரு ஆட்சி நடக்கும்? வெட்கம், வெட்கம்.
ஆனால் அதிபர்கள் பொருட்படுத்தத் தயாராயில்லை. யாருக்கு வேண்டும் அஞ்சு மில்லியன்? அதற்கு மேலும், அதைவிட மேலும் அள்ளித்தர ஆட்சி இருக்கிறது. அது போதும், போ.
மொரீஷியஸ், போஸ்வானா, கேப் வெர்தெ, சீஷெல்ஸ், தென்னமெரிக்காவெல்லாம் ஒப்பீட்டளவில் ஓரளவு நல்லாட்சி தேசங்கள் என்று சுட்டிக்காட்டியிருக்கும் இக்கமிட்டியானது 53வது ரேங்க்கை சோமாலியாவுக்கு வழங்கியிருக்கிறது. சோமாலியாவில் கடலில் மட்டும் கொள்ளையர்கள் இல்லை என்பது இதன் உள்ளுறை நல்லர்த்தம்.
நமது நல்ல தேசத்தில் உள்ள மாநில முதல்வர்களுக்கிடையே இம்மாதிரி ஒரு போட்டி வைத்து வருஷம் தோறும் ஒரு பட்டியல் போட்டுப் பார்க்கலாம். யார் ஆட்சி நல்லாட்சி? தங்கத் தமிழகம் எத்தனை வருஷம் நம்பர் ஒன்னாக வருகிறது என்று பார்க்கும் ஆவல் இப்போதே தறிகெட்டு எகிறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT