Published : 01 Oct 2013 11:50 AM
Last Updated : 01 Oct 2013 11:50 AM
ஸ்ரீஜனா என்கிற அந்தப் பெண்ணுக்குப் பன்னிரண்டு வயதுதான். சொல்லிக்கொள்ளும்படியான மகிழ்ச்சி எப்போதும் இருந்திராத வாழ்க்கை. பதினெட்டு மணிநேர வேலை, இரண்டு வேளை சாப்பாடு. எப்போதாவது தூக்கம். எப்போதும் இருப்பது எஜமானியம்மாளின் ஏவல். ஒன்றும் புதிதல்ல. பழகிவிட்ட அவஸ்தைதான். அன்றைக்கும் எப்போதும்போலத்தான் நாள் கழிந்தது.அடுத்த நாள் காலை விடிந்தபோதுதான் ஸ்ரீஜனா இறந்துவிட்ட விஷயம் தெரிந்தது. போலீஸ் அதைத் தற்கொலை என்று சொன்னது. ஏழைமையைக் காரணமாகக் காட்டி கேசை முடித்து ஏறக்கட்டிவிட்டுப் போனார்கள்.
அது ஒரு பூதத்தைத் தட்டி எழுப்பும் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை. நேபாளத்தின் இண்டு இடுக்குகளிலெல்லாம் இன்றைக்கு கம்லாரி என்கிற வேலைக்காரப் பெண்ணினம், அரசுக்கும் அடிமை முறைக்கும் எதிராகப் போர்க்குரல் எழுப்பி ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.
நம்புவது சற்று சிரமமே. நாகரிக உலகில்தான் நேபாளமும் இருக்கிறதென்றாலும் இன்றைக்கும் அடிமை முறை அங்கே ஒரு ரகசிய ஏற்பாடாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. 'தாரு' என்ற பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்கள் வறுமையின் காரணத்தால் வருஷாந்திரக் குத்தகைக்குப் பணக்கார முதலாளிகளின் வீடுகளுக்கும் பண்ணைகளுக்கும் வேலை செய்யப் போகிறார்கள். வீட்டு வேலை என்பது நாகரிகமான சொல். அது கொத்தடிமை வாழ்க்கை. அடி உதை சித்ரவதைகளும் பாலியல் பலாத்காரங்களும் சமயத்தில் கொலைகளும் சகட்டு மேனிக்கு அரங்கேறுவது நேபாள அரசுக்குத் தெரியாததல்ல. சும்மா கண் துடைப்புக்கு இந்தக் கொத்தடிமை முறையை அரசு கண்டிப்பதாக அவ்வப்போது பேசுவார்கள். ஜூலை 2000ல் அடிமை முறையைத் தடை செய்து ஒரு சட்டமே கொண்டு வந்தார்கள். ஆனால் அதையெல்லாம் யாரும் கண்டுகொள்ளவேயில்லை.
'தாரு' பழங்குடி இனத்தவர்கள் பண்ணை முதலாளிகளிடம் வாங்குகிற கடனுக்கு ஈடாகத் தம் பெண்களை அவர்களுக்கு எழுதிக் கொடுப்பார்கள். வாங்கிய கடன் தொகைக்கு ஏற்ப உழைப்புக் காலம் தீர்மானிக்கப்படும். குறிப்பிட்ட காலம் வரை பெண்களை வேலைக்கு அனுப்பியது போல் நினைத்துக்கொண்டுவிடுவார்கள். திரும்பி வராமலே போய்விட்டால்தான் கண்ணீரும் கதறல்களும்.
இப்படிக் கொத்தடிமைகளாகப் போகும் பெண்கள் படும்பாடு கொஞ்சமல்ல. நேபாளமெங்கும் ஆறு வயது முதல் பன்னிரண்டு வயது வரையிலான பெண் குழந்தைத் தொழிலாளிகள் மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளை ஐநா கடுமையாகக் கண்டித்திருக்கிறது. அகில உலகமே கண்டித்திருக்கிறது. அதனாலென்ன? அடப்போய்யா, ஏழைப் பெண்களுக்கு நாங்கள் வேலை கொடுத்து வாழ்க்கை கொடுக்கிறோம்; இதைப் புரிந்துகொள்ள முடியாமல் கொத்தடிமை, மண்ணாங்கட்டி என்று பேசிக்கொண்டிருக்கிறீர்களே என்று தட்டிக்கொண்டு எழுந்து போய்விடுவார்கள், முதலாளி குலத்தவர்கள்.
டெக்னிகலாகப் பார்த்தால் இது சிறுவர்களை வேலைக்கு வைக்கிற விஷயம்தான். உற்றுப் பார்த்தால்தான் இது எட்டு மணிநேர வேலை, வாரமொரு நாள் லீவு, சம்பளம், போனஸ், அலவன்ஸ் வகையறாக்கள் இல்லாத ஜோலி என்பது புரியும். அனைத்திலும் கொடுமை, நேபாளமெங்கும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்திருக்கும் பாலியல் பலாத்கார நடவடிக்கைகள். இதில் சிக்கிச் சீரழியும் குழந்தைகளின் அதிகபட்ச வயது 16 என்கிறது ஒரு புள்ளி விவரம்.
எஜமானனின் விருப்பத்துக்கு இணங்கிப் போய்விட்டால் பிரச்னை இராது. எதாவது கத்தி கலாட்டா பண்ணிவிட்டால் தீர்ந்தது. ஸ்ரீஜனாவின் தற்கொலை போல என்னவாவது நடந்துவிடும்.
சில என்.ஜி.ஓக்கள், தனியார் அமைப்புகளின் முயற்சியால் கடந்த ஐந்தாண்டு களில் நேபாளத்தில் இம்மாதிரி பன்னிரண்டாயிரம் குழந்தைக் கொத்தடிமைகள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட கொத்தடிமைக் குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அரசைக் கேட்டால், அதான் அடிமை முறையை ஒழிச்சாச்சே என்கிறார்கள். முதலாளிகளோ, 'நாங்கள் காட்டும் அன்பா உங்களுக்கு அடிமைத்தனமாகத் தெரிகிறது?' என்கிறார்கள்.
அடித்தட்டுக்கும் கீழ்த்தட்டில் வசிக்கும் தாரு இன மக்களின் கல்வித்தரம், பொருளாதாரம் உயர்ந்து, அவர்களாக உணர்ந்து இப்படித் தம் வீட்டுக் குழந்தைகளைக் கொத்தடிமைகளாக அனுப்புவதை நிறுத்தினால்தான் இதற்கு நிரந்தர விடிவு. நேபாள அரசாங்கம் அதற்கு என்னவாவது செய்தால் நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT