Published : 23 Dec 2013 12:00 AM
Last Updated : 23 Dec 2013 12:00 AM

வேளாண் விளைபொருள்களின் விலை சரிவது ஏன்?

அசோக் குலாத்தி பிரபலமான வேளாண் பொருளியல் நிபுணர். கல்வியாளரான அவர் இந்தியாவிலும் உலக அளவிலும் வேளாண் சந்தைகளில் என்ன நடக்கிறது என்பதை நன்கு அறிந்தவர். வேளாண் உற்பத்திச் செலவு - விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர். அவருடைய அமைப்புதான் பல்வேறு வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கிறது. உலக அளவில் விவசாயப் பொருள்களுக்கான விலைகளில் சரிவு ஏற்பட்டுவரும் சூழலில், இந்திய விவசாயிகள் அதை எப்படிச் சமாளிப்பது என்பதுகுறித்து விரிவாகப் பேசுகிறார்.

நாம் இப்போது எங்கே இருக்கிறோம்?

உலக அளவில் 2011-ல் உணவு தானியங்களின் விலை அதிகரித்ததால் எல்லா நாடுகளிலும் சாகுபடியாளர்கள் அதற்கேற்ப விளைச்சலைப் பெருக்கி சந்தைக்கு அனுப்பத் தொடங்கினார்கள். அதன் விளைவாக எல்லா வகை தானியங்களின் உற்பத்தியும் உச்சத்தை எட்டி அவற்றின் விலையைச் சரிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக பாமாயில் உங்களுக்கு இப்போது ஒரு டன் 800 டாலருக்குக் கிடைக்கிறது. 2011-ல் அதன் விலை டன்னுக்கு 1,100 டாலராக இருந்தது. கோதுமையின் விலை டன்னுக்கு 400 டாலரிலிருந்து குறைந்து இப்போது 285 - 290 டாலர் வரை விற்கிறது.

உலக அளவில் விலை உயர்ந்து உச்சத்தை எட்டியபோது காலந்தாழ்ந்து நம் நாட்டிலும் எப்படி விலை உயர்ந்ததோ, அதேபோல விலை இறங்கும்போதும் காலந்தாழ்ந்து இறங்கிக்கொண்டிருக்கிறது. நல்ல பருவமழையை அடுத்து விளைச்சல் அமோகமாக இருப்பதால் இந்தச் சரிவு மேலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

எந்த வகைப் பயிர்களில் இது வெளிப்படையாகத் தெரிகிறது?

சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு வகைகளின் விலை அதிகமாக இருக்கிறது என்று இப்போது யாராவது புகார் செய்கிறார்களா? மக்காச்சோளமும் நிலக்கடலையும் (வேர்க்கடலை - மணிலா) இப்போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் கீழே சந்தையில் விற்கப்படுகின்றன. கடந்த கோடைப் பருவத்தில் கொண்டைக் கடலை அறுவடையின்போது இதேதான் நிகழ்ந்தது. பருப்பு வகைகள், புன்செய் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் விலை இப்போது இறங்குமுகமாகவே இருக்கிறது. பருத்திகூட இந்த முறை அமோக விளைச்சல் கண்டுள்ளது.

உலக அளவில் விலை குறைந்துவிட்டதால் மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை நிலவுகிறது. சீனத்திலிருந்து பருத்திக்குக் கேட்பு இருப்பதால் குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிக விலைக்கு அது விற்பனையாகிறது. கடுகு, கொண்டைக் கடலை விளைச்சல் வரும் கோடைப் பருவத்திலும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். காரணம், அவை சாகுபடியாகும் பிரதேசங்களில் மண்ணில் நல்ல ஈரப்பதம் காணப்படுகிறது.

எந்தப் பயிர்களில் இந்தப் பணவீக்கம் தொடர் கவலையாக நீடிக்கும்?

அரிசி, கோதுமை, காய்கறிகள், பழங்களில் இந்த நிலை நீடிக்கும். அரிசி, கோதுமை விலை உயர்வுக்குக் காரணம், அரசு தன் வசமிருந்த கையிருப்பை முறையாகச் செலவிடாததே ஆகும். அரிசி, கோதுமையில் அரசு உபரியாக 20 மில்லியன் டன்னைத் தன் கையிருப்பில் வைத்திருக்கிறது. இவற்றை ஏன் சந்தையில் நேரடியாக விற்கவில்லை என்று தெரியவில்லை. அப்படியே விற்றாலும் அவை மீண்டும் கொள்முதல் நிலையங்கள் வழியாக அரசுக் கிடங்குகளுக்கே வந்துவிடும் என்ற அச்சம் இருந்தால், குறைந்தபட்ச ஆதரவு விலையிலேயே மக்களுக்கு விற்றிருக்கலாம். இது செயற்கையாக ஏற்றப்பட்டுள்ள புன்செய் தானியங்களின் விலையைக் குறைப்பதுடன், இந்த அளவுக்கு உணவு தானியத்தைக் கிடங்கில் வைத்து, பராமரிக்கும் செலவைக் கணிசமாகக் குறைத்திருக்கும். உபரியாக இருக்கும் தானியங்களை அரசு ஏற்றுமதிகூடச் செய்யலாம்.

ஒரு டன் கோதுமை இப்போது சர்வதேசச் சந்தையில் 285 டாலர் முதல் 290 டாலர் வரையில் விற்கப்படுகிறது. இதன் குறைந்தபட்ச ஆதரவு விலை 225 டாலர். பாசுமதி அல்லாத அரிசி ஒரு டன் ரூ.24,000 என்ற விலையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதே வேளையில், இதே ரக நெல்லின் விலை குவிண்டாலுக்கு ரூ.1,600தான். குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.1,310. இவற்றைவிட்டால் மிஞ்சுவது பழங்களும் காய்கறிகளும்தான்.

இதை எப்படித் தீர்ப்பது?

பிரச்சினை எதுவென்றால் அரசின் கொள்கைதான். விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய முடியாது. எல்லா மாநிலங்களிலும் சந்தையில், கட்டாயக் கொள்முதல் (லெவி) அளவு மிக அதிகமாக இருக்கிறது. குஜராத் மட்டும்தான் விதிவிலக்கு. அங்குதான் தரகு வியாபாரிகளின் கமிஷன் குறைவாக இருக்கிறது. வேர்க்கடலை அல்லது பருத்தியைக் கொள்முதல் செய்தால் குஜராத் தரகர் 100 ரூபாய்க்கு வெறும் 50 பைசாவைத்தான் தரகாகப் பெற்றுக்கொள்கிறார். இது சதவீதக் கணக்கில் வெறும் 0.5%. குஜராத்தைப் பொருத்தவரை இந்தத் தரகு, இதர கட்டணம் என்று எல்லாவற்றையும் கூட்டினாலும் அது 3%-க்கு மேல் போவதில்லை. பஞ்சாபில் தரகருக்குத் தர வேண்டியதே 2.5%. இதர கட்டணங்களெல்லாம் சேர்ந்து கோதுமைக்கும் நெல்லுக்கும் அவற்றின் விலையில் 14.5% வந்துவிடுகிறது.

பழங்கள், காய்கறிகள் விஷயத்தில் இது மேலும் மோசம். டெல்லி ஆசாத்பூர் மண்டியில் 6%-ம் மும்பையின் வாஷி மார்க்கெட்டில் 8%-மாக இருக்கிறது. அதிகாரபூர்வமற்ற முறையில் இதுவே சமயங்களில் 10% முதல் 14% வரையில் இருக்கிறது.

வேளாண் விளைபொருள் விற்பனை கமிட்டியின் விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அடித்தளக் கட்டமைப்புகளில் மாற்றியமைக்காமல் பழங்கள், காய்கறிகள் விலையில் உங்களால் எந்த மாற்றங்களையும் செய்துவிட முடியாது. மத்திய அரசு இதற்கு மாநிலங்கள் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் பழியைப் போடலாம். காலத்துக்கு ஒவ்வாத வேளாண் விளைபொருள் சந்தைக் குழுச் சட்டங்களையும் மண்டிகளின் அதிகபட்சத் தீர்வைகளையும் மத்திய அரசு தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலும் தங்களுடைய கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களிலும் மாற்றியிருக்கலாமே?

தோட்டக்கலைப் பொருள்களை அப்படியே வயலிலிருந்து எடுத்து நேரடியாக நுகரும் இப்போதைய வழிமுறைகளில் நாமும் சில மாறுதல்களைச் செய்துகொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி இவற்றில் இதை முதலில் தொடங்க வேண்டும். சந்தைச் சீர்திருத்தங்களையும் மேற்கொள்வது அவசியம். வேளாண் விளைபொருள்களை வாங்கிப் பக்குவப்படுத்தவும் பதப்படுத்தவும் நேரடியாக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்வதற்கேற்ற வகையில் நடைமுறைகளை அரசு திருத்த வேண்டும்.

பிசினஸ்லைன், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x