Published : 04 Feb 2014 12:00 AM
Last Updated : 04 Feb 2014 12:00 AM
நம் நாட்டில் மூன்றில் ஒருவர் விவசாயி. ஆனால், விவசாயம் ஊக்கம் தரக்கூடியதாக இருக்கிறதா? அமெரிக்காவோடு நம் நிலைமையை ஒப்பிட்டுப் பார்த்தால், நம்முடைய பிரச்சினை விளங்கும்.
அமெரிக்காவில் நிலம் அதிகம்; விவசாயிகள் குறைவு. இங்கு விவசாயிகள் அதிகம்; நிலம் குறைவு. ஆனால், அங்கு படித்தவர்கள் விவசாயத்தில் ஈடுபடுவது அதிகரித்துவருகிறது. ஏனென்றால், அங்கு விவசாயம் வருமானத்துக்குரிய தொழிலாக இருக்கிறது. அரசு எல்லா வகையிலும் அக்கறை எடுத்துக்கொள்கிறது. இங்கோ, அரசு விவசாயிகளுக்கு மானியமும் நிவாரணமும் தந்தால் போதும் என்ற நினைப்பிலேயே இருக்கிறது.
எப்படி இருக்கிறது நெற்களஞ்சியம்?
நம்மூரிலிருந்தே ஆரம்பிப்போம். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று காவிரிப் படுகை மாவட்டங்களைச் சொல்கிறோம். தமிழ்நாட்டின் உணவுத் தேவையில் மூன்றில் ஒரு பகுதியைக் காவிரி மாவட்டங்கள்தான் தருகின்றன. ஆனால், இன்றைக்கு இங்கே நிலவும் நிலைமை என்ன? வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது. பலருக்கு ஆச்சரியம் அளிக்கலாம்.
காவிரி மாவட்டங்களில் இப்போது பெண்களை நம்பித்தான் விவசாயம் நடக்கிறது. அதிலும் இளம் பெண்கள் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது. இத்தனைக்கும் வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் அடிமட்ட வேலைக்குத்தான் சென்றுகொண்டிருக்கிறார்கள் இப்பகுதியின் பெரும்பான்மை இளைஞர்கள். காரணம் என்ன? சாகுபடிக்குத் தேவைப்படும் தண்ணீரில் தொடங்கிக் கஷ்டப்பட்டுச் சாகுபடி செய்த நெல்லைக் கொண்டுசேர்க்கும் கொள்முதல் நிலைய ஊழல் வரை எல்லாம் பிரச்சினை. எல்லாவற்றையும் தாண்டி, விவசாயம் கட்டுப்படியாகக் கூடிய தொழிலாகவும் இல்லை. இப்படியே போனால், என்னவாகும்? சோற்றுக்கே வெளிநாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலைமைதான் உருவாகும்.
சிறப்புக் கவனம் அத்தியாவசிய சிகிச்சை
அரசாங்கம் விவசாயத்துக்கென்று தனிக் கவனம் கொடுக்க வேண்டும். முக்கியமாக, விவசாயத்திலிருந்து கவனம் திரும்பும் தலைமுறையின் கவனத்தை மீண்டும் விவசாயத்தை நோக்கிக் கொண்டுவர வேண்டும்.
காவிரி மாவட்டங்களையே எடுத்துக்கொண்டால், சுமார் 22 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் இங்கு உள்ளது. இதில், கல்லூரிகள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் என மூன்று, நான்கு லட்சம் ஏக்கர் போனாலும், மீதம் 18 லட்சம் ஏக்கர் இருக்கும். இந்த நிலத்தை முறையாகப் பயன்படுத்தினாலே, எல்லோருக்கும் வேலை அளிக்க முடியும். ஆனால், அதற்கு அரசாங்கம் விவசாயத்தைத் தொழில்முறைமயமாக்க வேண்டும். இங்கு கோயில்கள், மடங்களுக்கு மட்டும் நான்கு லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தைக் கையகப்படுத்துவதிலிருந்து அரசாங்கம் வேலையைத் தொடங்கலாம். இந்த நிலங்களை ஒரு வேளாண் மன்றத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். இளைஞர்களை அதில் இணைத்து, அவர்களுக்கு முறையான பயிற்சியும் ஊக்கமும் தந்து விவசாயத்தில் ஈடுபட வைக்க வேண்டும். சாகுபடியில் தொடங்கி சந்தை வரை அந்த மன்றமே நேரடியாகக் கையாள்கிறது என்று வைத்துக்கொள்வோம். நல்ல லாபம் கிடைக்கும் அல்லவா? அப்படி ஒரு முன்னோடி விவசாய அமைப்பாகக் கட்டமைக்கப்பட வேண்டும். இதேபோல நாடு முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும். அப்புறம், சூழலுக்கு உகந்த உபகரணங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட - வடிவமைக்கப்பட வேண்டும். விவசாயம் மனித உழைப்பைச் சுரண்டாத வகையில் இயந்திரமயமாக்கப்பட வேண்டும்.
நதிநீர்ப் பிரச்சினைகள்
இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சினை நீர்ப் பிரச்சினை. இந்தியா - பாகிஸ்தான் நதிநீர் சச்சரவுகள்கூட அமைதியாகத் தீர்க்கப்பட்டுள்ளன. ஆனால், உள்நாட்டு நதீநீர்ப் பங்கீட்டில் ஏன் இவ்வளவு சிக்கல்? நதிகளைத் தேசியமயமாக்க வேண்டும். அப்புறம் நிலத்தடி நீராதாரத்தின் அவசியத்தை உணர்த்த விவசாயிகளுக்கு நீர் மேலாண்மைப் பயிற்சி கட்டாயமானதாக்கப்பட வேண்டும்.
இப்படிப் பல வேண்டும் கோரிக்கைகள் எங்களிடம் இருக்கின்றன. காலங்காலமாக எல்லாத் தேர்தல்களிலும் அவை அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம்பெறுவதோடு கதை முடிந்துவிடுகிறது. கடைசி விவசாயியும் விவசாயத்திலிருந்து வெளியேறிவிடும்முன், அமையவிருக்கும் நாடாளுமன்றமாவது விவசாயத்துக்கு முக்கியக் கவனம் அளிக்க வேண்டும் என்பதே விவசாயிகளான எங்கள் கோரிக்கை!
- மன்னார்குடி ரங்கநாதன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலஉரிமைப் பாதுகாப்புச் சங்கம், தொடர்புக்கு: sranganathanratnam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT