Published : 22 Jan 2014 09:48 AM
Last Updated : 22 Jan 2014 09:48 AM
2014-ல் நாம் கவனிக்க வேண்டிய ஒன்று உண்டு: அதுதான் சீனாவின் கடன். முழு வீச்சிலான பொருளாதார நெருக்கடி அங்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், வாய்ப்புகள் அறவே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது.
சாலைகள், பாலங்கள், நீர் பகிர்மான அமைப்புகள், கழிவுநீர்ப் பாதைகள், சுரங்க நடைபாதைகள், தொலைத்தொடர்பு அமைப்புகள் என்று பெரும் உள்கட்டுமானங்களில் சீனாவின் உள்ளாட்சி அமைப்புகள் பணம் செலவிடுவதாலும் வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலின் வளர்ச்சியினாலும் சீனாவுக்கு ஏற்படும் கடன் வீங்கி வெடிக்கும் நிலையில் இருக்கிறது.
இந்தத் திட்டங்களால் கிடைக்கும் வருமானங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தப் போதுமானதாக இருக்காது என்று அஞ்சப்படுகிறது. இதனால் ‘கடன்செலுத்தா நிலை’ (டிஃபால்ட்) ஏற்பட்டு, வங்கிகள ்மீதான நம்பிக்கை குறைந்துபோய் எல்லாரும் ஒரே நேரத்தில் வங்கிகளிலிருந்து பணம் எடுக்கக்கூடிய நிலை (பேங்க் ரன்) உருவாகிவிடும். இது உலக அளவில் பொருளாதாரத்தை உலுக்கிவிடும்.
1997-க்குப் பிறகு…
இந்த அச்சத்தை அதிகரிக்கச் செய்வது அதிகாரபூர்வமான ஓர் அறிக்கை. டிசம்பர் 30 அன்று வெளியான இந்த அறிக்கை, சீனாவின் உள்ளாட்சி அமைப்புகளின் கடன் 2010-ன் இறுதிக்கும் 2013 ஜூனுக்கும் இடைப்பட்ட காலத்தில் 67%. அதாவது, மூன்று லட்சம் கோடி டாலர்கள் அதிகரித்திருக்கிறது.
யூபிஎஸ் வங்கியைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர் டாவோ வாங்க், தங்கள் வாடிக்கையாளர்களுக்காகப் பிரத்தியேகமாக வெளியிட்ட அறிக்கையில், கடன் நிலைமையானது ‘சமாளிக்கக் கூடிய’ அளவில் இருக்கிறது என்றும், ஆனால் கடன் அதிகரிக்கும் வேகம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இப்போதைய உள்நாட்டுக் கடனானது சீனப் பொருளாதாரத்தில் (அதாவது, மொத்த உற்பத்தி மதிப்பில்) மொத்தம் 33% இருக்கிறது. இதுவே 2008-ல் 10% ஆகவும் 1997-ல்
பூஜ்ஜியமாகவும் இருந்தது.
2008-ன் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, வேலைவாய்ப்பிலும் பொருளாதாரத்திலும் ஏற்பட்ட பாதிப்புகளை மட்டுப்படுத்துவதற்காக சீனா புதிய கட்டுமானங்களை, அதாவது உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவிகளைப் பெற்ற கட்டுமானங்களைச் சார்ந்திருந்தது.
இது மாதிரியான முதலீட்டுச் செலவினங்களைச் சார்ந்திருப்பது சீனாவுக்குப் பெரும் பிரச்சினையை ஏற்படுத்திவிடும் என்று வாங்க் சொல்கிறார். கட்டுமானத்தையும் அதன் சார்பான கடனையும் தொடர்ந்து குறைத்துக்கொண்டே வந்தால், அதனால் பொருளாதாரம் பெருமளவில் பாதிப்படையும். அதே நேரத்தில், செலவினங்கள் மட்டுப்படுத்தப்படாவிட்டால் நிதி நெருக்கடிகள் பன்மடங்கு பெருகி, திட்டங்கள் யாவும் செயற்படுத்த முடியாதவையாக ஆகிவிடும்.
சுரங்க ரயில்பாதைத் திட்டங்கள்
பெரும்பாலான திட்டங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்துக்கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது என்பதை பீட்டர்சன் நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் நிக்கோலஸ் லார்டி ஒப்புக்கொள்கிறார். “பெருமளவு பணம் சுரங்க ரயில்பாதைத் திட்டங்களுக்காகச் செலவிடப்படுகின்றன. ஹாங்காங் சுரங்க ரயில்பாதைத் திட்டம் நீங்கலான எல்லா சுரங்க ரயில்பாதைத் திட்டங்கள் போலவே, இந்தத் திட்டங்களால் நஷ்டம்தான் ஏற்படப்போகிறது.
கிடைக்கும் வருமானத்தை வைத்துக்கொண்டு நடைமுறைச் செலவுகளை மட்டுமே ஈடுகட்டலாம்” என்று அவர் சொல்கிறார். இறுதியில், மத்திய அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஏற்படும் என்று லார்டி எதிர்பார்க்கிறார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வரிவருவாய்களில் பெருமளவு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மடைமாற்றம் செய்யப்படும்; கூடவே, கட்டுமானங்களுக்கான கடனை உள்ளாட்சி அமைப்புகளே பார்த்துக்கொள்ள வேண்டும்.
சந்தேகம்தான்…
இதற்கிடையே, இந்தக் கடன்களால் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்படுவது சந்தேகம்தான் என்று லார்டி கருதுகிறார். மத்திய அரசு, உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றின் கடன்களை உள்ளடக்கிய, சீனாவின் ஒட்டுமொத்தக் கடனை மற்ற பெரிய நாடுகளின் கடனுடன் ஒப்பிட்டு பார்த்தால், சீனாவின் நிலை அவ்வளவு மோசமாக இல்லை என்பதே உண்மை.
2013-ன் மத்தியில் சீனாவின் மொத்த உற்பத்தி மதிப்போடு ஒப்பிட்டால் அதன் கடன் என்பது அதில் 56% என்று மதிப்பிடுகிறார் வாங்க். இதற்கு மாறாக, 2010-ல் அமெரிக்காவின் மத்திய, மாகாண, உள்ளாட்சி அரசுகளின் ஒட்டுமொத்தக் கடனானது, மொத்த உற்பத்தி மதிப்பில் 100% என்று மதிப்பிடுகிறார் லார்டியின் சகாவான ரையான் ருட்கோவ்ஸ்கி.
கடன் செலுத்தா நிலை
‘கடன் செலுத்தா நிலை’ ஏற்பட்டிருந்தால், வங்கிகள் மேல் மக்கள் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்தில் அரசாங்கம் விரைந்து செயல்பட்டிருக்கும் என்று லார்டி கருதுகிறார். “வங்கிகள் மீதான நம்பிக்கை குறைந்துபோய் எல்லாரும் ஒரே நேரத்தில் வங்கிகளிலிருந்து பணம் எடுக்கக்கூடிய நிலை ஏற்பட்ட சில சந்தர்ப்பங்களில் முதலீட்டாளர்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அரசாங்கம் வங்கிகளுக்குப் பணஊட்டம் கொடுத்திருக்கிறது” என்கிறார் லார்டி.
இருந்தாலும், கடன் பிரச்சினை என்ற அபாயம், அது எவ்வளவு தொலைவில் இருந்தாலும், சீனாவின் மிகப் பெரிய பொருளாதாரப் பிரச்சினையைப் படம்பிடித்துக்காட்டுகிறது. லார்டியும் பிறரும் வலியுறுத்தியதுபோலவே, அதிகமாக முதலீட்டுச் செலவினங்களில் ஈடுபடாமல் மேலும் அதிகமாக நுகர்வை நோக்கி நகர வேண்டும். அதிக அளவிலான முதலீடு என்பது ஏராளமான தொழிற்சாலைகள்,
வீட்டுவசதித் துறை, வணிக நிறுவனங்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். சீனாவின் முதலீட்டுச் செலவினம் என்பது அதன் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட பாதி அளவு என்றும் மற்ற பெரிய நாடுகளைவிட இது மிக மிக அதிகம் என்றும் சொல்கிறார் லார்டி. நன்றாகச் சமன்படுத்தப்பட்ட பொருளாதாரமே சீனாவுக்கும் நல்லது உலகத்துக்கும் நல்லது.
© தி வாஷிங்டன் போஸ்ட், தமிழில்: ஆசை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT