Published : 30 Oct 2013 11:37 AM
Last Updated : 30 Oct 2013 11:37 AM
கல்விக்கடனாக 70,000 கோடி ரூபாய் இதுவரை கடன் அளித்துள்ளதாகவும், அதன் விளைவுகள் பத்து ஆண்டுகள் கழித்தே தெரியவரும் என்றும் தமிழகத்தில் கடந்த வாரம் பேசிய கூட்டம் ஒன்றில் மத்திய நிதியமைச்சர் பெருமிதப்பட்டார். கடன் வாங்கியோர் எல்லாம் சிறப்பான பட்டம் பெற்று தகுந்த வேலையில் அமர்ந்து 10 ஆண்டுகள் கழித்து கடனைத் திருப்பித் தருவார்களா? (அ) கடனுக்கு ஜாமீன் கொடுத்த உற்றத்தார்கள் மீது நடவடிக்கைகள் பாயுமா? பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்! கடன் வாங்கியோரது எண்ணிக்கை கூடி, ஓட்டு வங்கியாக மாறினால் ஜனார்த்தனன் பூஜாரி (முன்னாள் நிதியமைச்சர்) அறிவுறுத்தியதுபோல கடன்களையெல்லாம் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்ற கோரிக்கைகளும் வலுப்பெறலாம். “இந்தியன் வங்கி.. அது உங்களுடைய வங்கி” என்பது போன்ற விளம்பரங்களை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டார்களோ என்று தெரியவில்லை.
சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் சேரும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு கல்விக் கடன் அளிக்கப்படுகிறது. அதற்கான விதிமுறைகளை இந்திய வங்கிகள் சங்கமும் ரிசர்வ் வங்கியும் ஏற்படுத்தியுள்ளன. தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றுவந்தால்தான் வங்கிக் கடன் தொடரும் என்பதையும், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணங்களுக்கு மேல் வசூலிக்கும் கல்வி நிலையங்களில் சேர்ந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கு மேல் கடன் வழங்கப்படமாட்டாது என்பதும், அதே வங்கியில் வாராக்கடன் வைத்துள்ள நபர்களின் வாரிசுகளுக்கு கல்விக் கடன் வழங்கப்படமாட்டாது என்பதும் பல வழக்குகளில் சோதனைக்குள்ளானது. தந்தை வைத்த கடனுக்கு மகனின் படிப்பை பலியாக்கக் கூடாது என்றும், மதிப்பெண் அடிப்படையில் கடன் கொடுத்தால் அம்பேத்கர் போன்ற மேதைகள் உருவாகியிருக்க முடியாது என்றும், ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளுக்கு சட்ட அடிப்படை இல்லை என்றும் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
வங்கிக் கடன் பற்றிய வழக்குகளில் உயர் நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் இருக்கின்றனரோ, அத்தனை விதமான தீர்ப்புகள் வந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடியாமல் மண்டை காய்ந்து போயின வங்கி நிர்வாகங்கள்.
சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் செயல்படுவதை அனுமதிக்கும் அதே வேளையில் அவர்கள் லாபம் சம்பாதிக்கும் வகையில் செயல்படக் கூடாது. நுழைவு நன்கொடை பெறக்கூடாது. மெரிட் அடிப்படையில் ‘இலவச இடங்கள்’ 50 விழுக்காடுகளும், மிச்சமுள்ள இடங்களை நிர்வாக விருப்பப்படியும் நிரப்பிக் கொள்ளலாம் என்று உன்னி கிருஷ்ணன் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் டி.எம்.ஏ.பாய் வழக்கில் அத்தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு நிர்வாகங்கள் தம் விருப்பப்படி மாணவர் சேர்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நிர்வாகங்கள் தன்னிச்சையாக கட்டண விகிதங்களை நிர்ணயித்துக் கொள்ளவும், கட்டண நிர்ணய மேற்பார்வைக் குழுவும் அமைக்கப்பட்டன. மேற்பார்வைக் குழுவின் கீழ் வருவதைத் தவிர்க்க பல கல்வி நிறுவனங்கள் மத்திய அரசால் பல்கலைக்கழகமாகக் கருதப்படக்கூடிய (Deemed University) அந்தஸ்து பெற்றன. இந்நிறுவனங்கள் பெரும்பாலும் அரசியல்வாதிகளாலும் அவர்களது பினாமிகளாலும் நடத்தப்பட்டு வருவது தெரிந்ததே.
பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு குறைந்தபட்ச தகுதியும் குறைக்கப்பட்டு, விருப்பப்படுவோர் எல்லாம் சேர்ந்துகொள்ளும் வகையில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. அதிக கட்டணங்கள் வசூலிக்கும் இந்நிலையங்களில் சேர்ந்துகொள்ள வசதியாக விதிமுறைகளற்ற கல்விக் கடன்களும் வாரி வழங்கப்படுகின்றன.
இவ்வரலாற்றை உற்று நோக்கினால், அரசுப் பணத்தை எடுத்து தனியார் நிறுவனங்களைக் கொழிக்கவைக்கும் முயற்சியே இவை. கல்விக் கடன்கள் மனித ஆற்றலைப் பெருக்குமா? (அ) வாராக்கடன்களுக்கு வழிவகுக்குமா? சரித்திரம்தான் கூற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT