Published : 14 Dec 2017 12:14 PM
Last Updated : 14 Dec 2017 12:14 PM
ஜூன் 3 1924-ல் பிறந்த மு.கருணாநிதி, தன் 14 வயது முதல் தொடர்ந்து 78 ஆண்டுகளாகத் தீவிர அரசியலில் இருப்பவர். முதல் அரசியல் குரு பட்டுக்கோட்டை அழகிரிசாமி. அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டே திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். தன் முதல் மகன் முத்துவுக்குத் தன் தந்தை முத்துவேலரின் பெயரைச் சூட்டியவர், இரண்டாவது மகனுக்கு அரசியல் ஆசான் அழகிரி யின் பெயரையே சூட்டினார். ஸ்டாலினுக்கு அவர் சூட்ட திட்டமிட்டிருந்த பெயர் அய்யாதுரை. அய்யா என்பது பெரியாரையும், துரை என்பது அண்ணாவையும் குறிப்பது. ஸ்டாலின் பிறந்த 1953 மார்ச்சில்தான் ரஷ்யத் தலைவர் ஸ்டாலின் மறைந்தார். கம்யூனிஸத்தின் மீது கருணாநிதிக்கு இருந்த காதலின் விளைவோடு இந்தச் சூழலும் சேர அய்யாதுரை ஸ்டாலின் ஆகிவிட்டார்!
திமுக தொடங்கப்பட்டபோது, கருணாநிதி 25 வயது இளைஞர். திமுக நிறுவப்பட்ட போது அதன் முன்வரிசைத் தலைவர்களில் ஒருவராக கருணாநிதி இல்லை என்பது உண்மை. ஆனால், 1959-ல் அவர் கட்சியின் பொருளாளர் ஆகிவிட்டார். 1967-ல் அண்ணா, நாவலருக்கு அடுத்தபடியாக மூன்றாவது அந்தஸ்தில், பொதுப்பணித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் கருணாநிதி. இவ்வளவு வேக வளர்ச்சிக்கு முக்கியமான காரணம், அவரது அயராத உழைப்பும் சமயோசிதமான முடிவுகளும்!
திமுக எவ்வளவு கீழே விழுந்தாலும், கருணாநிதி அசராமல் நிற்க முக்கியமான காரணம், கட்சியின் வேர் வரை அவர் உயிரோட்டமான உறவைத் தொடக்கத்திலிருந்தே பராமரித்தது. திமுக முன்னணித் தலைவர்கள் பலரும் மாலையில் கூட்டம் என்றால், காலையில் ஓய்வாக அமைத்துக்கொள்வது ஆரம்ப நாள் வழக்கம். ஏனென்றால், கூட்டங்கள் நள்ளிரவு வரை நீளும். கருணாநிதியோ காலையிலும் உள்ளூர் கட்சிக்காரர் யாரையேனும் உடன் அழைத்துக்கொண்டு சுற்றுப்புற ஊர்களைச் சுற்றிவருவார். நிர்வாகிகள் வீடுகளுக்குச் செல்வார். மேல்நிலையில் மட்டும் அல்லாமல் கீழ்நிலையிலும் உறவாடி கட்சியையும் வளர்த்தார், தானும் வளர்ந்தார்!
திமுக முதன்முதலில் போட்டியிட்ட 1957 தேர்தலில், கருணாநிதி கேட்டபடி தஞ்சாவூர் மாவட்டத்தில் அவருக்குத் தொகுதி கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு அது ஒதுக்கப்படலாம் என்றிருந்த நிலையில், “சரி, எந்தத் தொகுதி கொடுத்தாலும் காவிரிப் படுகையில் கொடுங்கள்!” என்று அண்ணாவிடம் சொல்லிச் சென்றார் கருணாநிதி. குளித்தலை மிகப் பெரிய தொகுதி. ஆனால், ஐந்து ஊர்களில்தான் அப்போது கட்சிக்குக் கிளை இருந்தது. தினமும் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 1 மணி வரையில் தேர்தல் பணியாற்றினார். இந்தக் குளித்தலை அனுபவம்தான் கீழே அமைப்பை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்ற பயிற்சியை அவருக்கு வழங்கியது!
முதல் முறையாக 1962 தேர்தலில் திமுக சார்பில் வென்ற 15 பேரையும் வீழ்த்த பெரும் வியூகம் அமைத்தார் காமராஜர். 14 பேர் வீழ்ந்தனர். தப்பித்த ஒரேயொருவர் கருணாநிதி. இதுவரை போட்டியிட்ட 13 சட்ட மன்றத் தேர்தல்களிலும் தோல்வியையே சந்திக்காத தலைவர் அவர்!
கடுமையான உழைப்பாளி கருணாநிதி என்பதும் தீவிரமான வாசகர் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், எல்லாப் பணிகளுக்கு இடையிலும் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். 10 நாவல்கள், 21 நாடகங்கள், 8 கவிதை நூல்கள், 37 சிறுகதைகள், 6 உரை நூல்கள், ஒரு பயண நூல், தன் வரலாறு என்று ஏராளமாக எழுதியவர். தன்னுடைய உடன்பிறப்புகளுக்கு அவர் எழுதிய கடிதங்கள் மட்டும் 12 தொகுப்புகளாக வெளியாகியுள்ளன. சட்ட மன்ற உரைகள், மேடைப் பேச்சுகளைத் தொகுத்தால் அவை பல லட்சம் பக்கங்களுக்கு விரியும்!
கருணாநிதி மீது ஒரு பிம்பமாகவே கட்டமைக்கப்பட்ட பொய்கள் பல உண்டு. அவற்றில் பிரதானமானது, ஆட்சியதிகாரத்துக்கு வரும் முன்பு அவர் ஒன்றுமே இல்லாதவராக இருந்தார் என்பது! உண்மையில் திமுகவின் முதல் நிலைத் தலைவர்களிலேயே அன்று வசதியானவர் கருணாநிதிதான். 1957 முதல் தேர்தலில் போட்டியிடும் முன்னரே, 1955-ல் அவர் கோபாலபுரம் வீட்டை வாங்கிவிட்டார். அந்நாட்களிலேயே காரும் வைத்திருந்தார். நட்சத்திர அந்தஸ்து மிக்க வசனகர்த்தாவாக ஒருகாலத்தில் சிவாஜியைப் போல இரு மடங்கு சம்பளத்தைப் பெற்றவர் கருணாநிதி. 75 திரைப்படங்களில் அவர் பங்களித்திருக்கிறார்!
இந்தியாவில் தெருவோர வீடமைந்த மிக அரிதான தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. தெருமுக்கில் உள்ள வீடு பாதுகாப்பானது அல்ல என்று பலரும் சொல்லியும் தன்னுடைய கோபாலபுரம் வீட்டை மாற்ற மறுத்துவிட்டார் கருணாநிதி. அதேபோல இரவு - பகல் எந்நேரமும் வாயிற்கதவு திறந்திருக் கும் வீடும் அவருடையதுதான். கட்சிக்காரர்கள் ஒரு தலைவரின் வீட்டில் சகஜமாகப் புழக்கடை வரை புழங்கும் வீடும் கருணாநிதியினுடையதுதான்.
தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே நீண்ட கால முதல்வர் கருணாநிதிதான். நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவரும் அவரேதான். தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே அதிகபட்ச இடங்களில் வென்று ஒரு கட்சி ஆட்சி அமைத்தது அவருடைய தலைமையின் கீழ்தான் - 1971 தேர்தலில் 182 இடங்கள்; அதிகபட்ச இடங்களைப் பெற்று எதிர்க்கட்சியானதும் அவருடைய தலைமையின் கீழ்தான் - 2016 தேர்தலில் 89 இடங்கள். தமிழ்நாட்டில் அதிகமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதும் அவர் முதல்வராக இருந்த காலகட்டத்தில்தான்!
இந்தியாவில் கூட்டணி யுகத்தின் பிதாமகன்களில் ஒருவர் கருணாநிதி. மாநிலக் கட்சிகள் டெல்லியை எப்படி அணுக வேண்டும் என்பதற்கும், அண்ணா வழியில் திமுகவை அவர் ஒரு முன்னுதாரணம் ஆக்கினார். மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அவர் அமைத்த ‘ராஜமன்னார் குழு’ அளித்த பரிந்துரைகள் இந்திய அரசியலில் என்றும் நினைவுகூரப்படும். ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ முழக்கம் இந்தியா வில் என்றும் உயிரோடு இருக்கும்!
கருணாநிதியின் மிகப் பெரிய பலம் அவருடைய துணிச்சல். நெருக்கடிநிலைக் காலகட்டத்தில் பெற்ற மகனையும் உற்ற மருமகனையும் சிறைக்குள் வைத்தபோதும் யதேச்சதிகாரத்துக்கு எதிரான தன்னுடைய போரை நிறுத்தவில்லை கருணாநிதி. 78-வது வயதில் நள்ளிரவில் கைதுசெய்து, அவரைத் தரதரவென்று பிடித்து இழுத்துச் செல் கிறார்கள். நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படும் பதற்ற மான சூழலில், ஒரு நிருபர் கருணாநிதியிடம் ஒரு துண்டுச் சீட்டை நீட்டி, ‘‘மக்களுக்குச் சொல்ல எதாவது செய்தி இருந்தால் எழுதிக்கொடுங்கள்” என்கிறார். கருணாநிதி ஒரு புன்னைகையோடு எழுதிக்கொடுக் கிறார்: ‘அநீதி வீழும்.. அறம் வெல்லும்!’
தொகுப்பு: கே.கே.மகேஷ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT