Published : 06 Nov 2017 09:54 AM
Last Updated : 06 Nov 2017 09:54 AM
முதுபெரும் அரசியல் ராஜதந்திரி கருணாநிதி, தமிழக சட்ட மன்றத்தில் உறுப்பினராகிய 60-வது ஆண்டு இது. நாட்டிலேயே இப்படி ஒரு சாதனையாளர் வேறு ஒருவர் கிடையாது. ஆனால், டெல்லி ஊடகத்தார் பார்வையிலும், ஆங்கிலோ-இந்தி கண்ணோட்டத்திலும் அவர் மீதான மதிப்பீடு என்ன? மாறிவரும் நவீன காலத்துக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்ளாத ஒரு கிழவர், ஊழல் புகார்களுக்கு உள்ளான கட்சியின் தலைவர்! ஏனென்றால், டெல்லியில் இருப்பவர்களுக்குச் சங்கடம் அளிக்கக் கூடிய கேள்விகளை யார் கேட்டாலும் அவர்களுக்குக் குத்துவதற்கான முத்திரைகளை டெல்லிக்காரர்கள் எப்போதும் தயாராக வைத்திருப்பார்கள். டெல்லிக்காரர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ‘தமிழர், வங்காளி, கன்னடிகர்’ என்ற தனி அடையாளங்களைக் கைவிட்டு, நாமெல்லாம் மூவர்ணம் பூசிய உணர்ச்சியற்ற உயிரினங்களாகத் திரிய வேண்டும் என்பதுதான். இல்லாவிட்டால் இதுதான் கதி! ஆனால், அவ்வளவு சாதாரணமான ஆளுமையா கருணாநிதி! ‘இந்தியர்கள் என்றொரு தனி அடையாளம் இல்லை, வெவ்வேறு தேசிய இனங்களின் ஒன்றியம்தான் இந்தியா’ என்ற உண்மையை உரக்கப் பேசிய அண்ணாவின் தளகர்த்தர்! இந்துஸ்தானி சித்திரக் குள்ளர்கள் இடையே அவர் ஒரு இமயம்!
தாய்மொழிக்குத்தான் முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று திராவிட இயக்கம் நடத்திய உரிமைப் போராட்டத்தின் தன்மையும் நன்மையும் என் தலைமுறை வங்காளிகள் பெரிய அளவில் அறிந்திருக்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு. அண்ணாவும் கருணாநிதியும் இன்னும் லட்சக்கணக்கான தமிழ் மொழிக் காவலர்களும் 1960-களில் மத்திய அரசின் ‘இந்தி கட்டாயம்’ என்ற மொழித் திணிப்புக்கு எதிராகத் தன்னெழுச்சியாகத் திரண்டு போராட்டங்களை நடத்தியிருக்காவிட்டால், இந்தியா முழுமைக்கும் இன்றைக்கு இந்தி மட்டும்தானே ஆட்சி மொழியாக – அதிகார மொழியாக – தொடர்பு மொழியாக இருந்திருக்கும்! ஆங்கிலம்-இந்தி என்ற இரட்டை அலுவல் மொழியைக் கடைப்பிடிப்பதால், இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கும் இரண்டாம்தரக் குடிமக்கள் என்ற அந்தஸ்துகூடப் போய், மூன்றாந்தரக் குடிமக்களாக அல்லவா என்னைப் போன்ற வங்காளிகள் மாறியிருப்போம்! இதற்குக் காரணமான திராவிட இயக்கத்தை எப்படி மறக்க முடியும்! இந்திக்குக் கொடுக்கும் அதே ஆட்சிமொழி, இணைப்புமொழி அந்தஸ்தைத் தமிழுக்கும் கொடுங்கள் என்று கேட்டு, தமிழர்களின் கனவுக்கு உரம் ஊட்டிய கருணாநிதியைத்தான் எப்படி விட்டுக்கொடுக்க முடியும்!
இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தின் தரத்தைக் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்த்தியவர் கருணாநிதி. அவருடைய உயரத்தை வங்காளிகளான நாங்கள் இதுவரை எட்டவில்லை. சுதந்திரம் அல்லது சுயாட்சி என்ற வார்த்தைகளே இங்கு பேசப்படக் கூடாதவையாகப் பார்க்கப்படும் சூழலில், அவற்றை உயிர்மூச்சுபோல ஆக்கிக்கொண்ட அண்ணா, கருணாநிதியின் போராட்டங்களை இன்று தமிழ் மக்களுக்கான போராட்டங்களாக மட்டும் பார்க்க முடியவில்லை. நாட்டின் கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்துவதற்கான, இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலத்துக்குமான போராட்டங்களாகவே பார்க்கிறோம். நான் தமிழனாக இல்லாமல் இருக்கலாம்; இப்போது வங்க அரசுக்கென்று சில தனி உரிமைகள் இருக்கின்றன என்றால், அதற்கு கருணாநிதி தமிழ்நாட்டுக்காகப் போராடிப் பெற்ற உரிமைகள்தான் காரணம் என்பதை உணர்கிறேன். கருணாநிதியைப் போல எங்களுடைய உரிமைகளுக்காக, நலன்களுக்காகப் போராட எங்களுக்கு ஒரு தலைவர் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறேன். அதனாலேயே கருணாநிதியை எங்களில் ஒருவராகப் பார்க்கிறேன். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இணையான மரியாதையும் கண்ணியமும் எங்களுக்கும் வேண்டும் என்று கருதும் கோடிக்கணக்கான பிறமொழி பேசும் இந்தியர்கள் ஒவ்வொருவராலும் கருணாநிதி ஒரு போராளியாக நெடுங்காலத்துக்கு நினைவுகூரப்படுவார்!
தமிழில்: வ.ரங்காசாரி
கர்க சட்டர்ஜி
வங்கத்தைச் சேர்ந்த ஆய்வறிஞர்,
இந்தியப் புள்ளியியல்
நிறுவனத்தில்
பணிபுரிகிறார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT