Published : 16 Nov 2025 04:59 PM
Last Updated : 16 Nov 2025 04:59 PM
1957-ஆம் ஆண்டு, அன்றைய ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூரில் இரு சமூகங்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. ஒரு பக்கம் முக்குலத்தோர்; மறுபுறம் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர். இரண்டு சமுதாய மக்களையும் சமாதானப்படுத்த ஊர் முக்கியஸ்தர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. பிரச்சினை தீவிரமடைந்தது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 10-ம் தேதி சமாதானக் கூட்டத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஏற்பாடு செய்தார். பசும்பொன் தேவர் அக்கூட்டத்தில் பங்கேற்றார். அதேபோல், இரண்டு சமுதாயங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் பசும்பொன் தேவர் பேசும்போது, “எல்லா மக்களும் நம் மக்கள்தான். ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. எல்லோரும் அமைதியாக வாழ வேண்டும். யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்கக் கூடாது” என்று மக்கள் சமரசமாகப் போகும்படி வலியுறுத்தினார்.
அவரது பேச்சை கலெக்டர் உள்பட அனைவரும் வரவேற்றனர். தொடர்ந்து பேசிய கலெக்டர், “பெரிய தலைவரான பசும்பொன் தேவரே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். எனவே, இந்தப் பிரச்சினையை இத்தோடு முடித்துக் கொள்ள வேண்டும். தேவர் முன்னிலையில் இரு தரப்பினரும் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
அப்போது ஒடுக்கப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்த இமானுவேல் சேகரன், “பெரிய தலைவர் கூட்டத்தில் பங்கெடுத்து பேசியதாகக் கூறினீர்கள். நானும் இந்த விவகாரம் குறித்துப் பேச வேண்டும்” என்றார். அப்போது கலெக்டர் “இந்தப் பிரச்சினையைப் பற்றி பேசிப் பேசி மேலும் சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டாம். எனவே சமாதானமாகச் செல்லுங்கள்” என்று கூறினார். கூட்டமும் கலைந்து சென்றது.
இதற்கிடையே மறுநாள் (செப்.11) இமானுவேல் சேகரன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இக்கொலை பசும்பொன் தேவர் தூண்டுதலின் பேரில் ஏற்பட்டது என ஒடுக்கப்பட்டோர் மக்கள் பேசத் தொடங்கினர். போலீஸாரும் அதே சந்தேகக் கண்ணோடு இந்த விவகாரத்தை அணுகினார்கள். மேலும் காங்கிரஸ் கட்சியினரும் பசும்பொன் தேவரைக் கைது செய்ய வேண்டும் என்று எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாகப் பேசினார்கள். இதனால் காங்கிரஸார் மீது முக்குலத்தோர் சமுதாயத்தினர் கடும் விமர்சனம் வைத்தனர்.
இந்தக் கலவரத்தின் தொடர்ச்சியாக, 1957 செப்.14-ம் நாள் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தமிழகம் முழுவதும் எதிரொலித்தது. சட்டப்பேரவையிலும் இதுகுறித்து பிரச்சினை எழுப்பப்பட்டது.
இத்தகைய சூழலில் மதுரையில் சீர்திருத்தக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகப் பெரிய அளவில் 2 நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மிகவும் திட்டமிட்டு கச்சிதமாக மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டின் நிறைவு நாளில் பசும்பொன் தேவர் பங்கேற்று நிறைவுரை ஆற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நூற்றுக்கணக்கான வண்டிகளில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் மாநாட்டில் குவிந்தனர்.
அன்று இரவு சுமார் 7 மணி அளவில் பசும்பொன் தேவர் பேசத் தொடங்கினார். சரியாக 9 மணிக்கு தனது பேச்சை நிறைவு செய்தார். ‘எது உண்மையான காங்கிரஸ்? எது மக்களுக்கான காங்கிரஸ்?’ என்று விளக்கியதோடு, ‘காங்கிரசில் சீர்திருத்தம் வேண்டும் என்று போராடிய இந்த நல்லுள்ளங்களைப் பாராட்டுகிறேன்’ என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். தேவரின் 2 மணி நேர உரை பார்வையாளர்களை கட்டிப்போட்டு விட்டது. பசும்பொன் தேவரின் உரையோடு மாநாடும் நிறைவு பெற்றது.
அதைத் தொடர்ந்து மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள சசிவர்ணத் தேவரின் வீட்டுக்குச் செல்ல பசும்பொன் தேவர் திட்டமிட்டார். இதற்காக முன்னாள் எம்.பி. எஸ்.எஸ்.மாரிசாமி காரில் தல்லாகுளத்தில் இருந்து புறப்பட்டார். மதுரை வைகை பாலத்தின் வழியாகச் சென்றபோது பாலத்தின் நடுவில் போலீஸ் வேன் ஒன்று வழிமறித்து நின்றது. கூடவே ஐந்தாறு ஜீப்புகளும் நின்றன.
தேவரின் காரை தடுத்து நிறுத்திய போலீஸார், உங்களைக் கைது செய்யப் போகிறோம் என்றார்கள். காரில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி. ஆனால் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல், காரில் இருந்து இறங்கிய தேவர், கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்சம், கையில் அணிந்திருந்த மோதிரங்கள்ஆகியவற்றை கழற்றி மாரிசாமி மற்றும் உடன் வந்தவர்களிடம் கொடுத்தார். பின்னர் போலீஸ் வாகனத்தில் ஏறினார். மறுநிமிடம் அந்த வாகனம் வேகமாகக் கிளம்பிச் சென்றது.
பசும்பொன் தேவர் கைது செய்யப்பட்ட செய்தி வேகமாகப் பரவியது. பார்வர்டு பிளாக் கட்சி, சீர்திருத்தக் காங்கிரஸ், சுதந்திரா கட்சி ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் குவிந்தனர். தேவரைக் கைது செய்த போலீஸார் அவரை எங்கு கொண்டு சென்றனர் என்ற தகவல் தெரியாமல் பல இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
காங்கிரஸ் பின்னணியில்தான் இந்த கைது நடவடிக்கை நடந்திருக்கும் என்று கருதிய பார்வர்டு பிளாக் கட்சி, இமானுவேல் சேகரன் கொலைக்கும் தேவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது காங்கிரஸின் கைங்கர்யம்தான் என்று ராஜாஜியும் பட்டும் படாமல் கருத்து தெரிவித்தார்.
எஸ்.எஸ்.மாரிசாமி மற்றும் பார்வர்டு பிளாக் கட்சிகளின் நிர்வாகிகள் காவல் துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து, பசும்பொன் தேவரை எங்கு கொண்டு சென்றீர்கள் என்று கேட்டனர். ஆனால் அவர்கள் பதில் ஏதும் கூறவில்லை. காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரத்தில் கமுக்கமாக இருந்தது. இந்நிலையில் பசும்பொன் தேவர் சென்னையில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் அவரைச் சந்திக்க வேண்டுமென்றால் மனு எழுதிக் கொடுத்து அனுமதி பெற்று சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சென்னை புறப்பட்ட மாரிசாமி, தலைமைச் செயலகம் சென்று தேவரைச் சந்திக்க மனு கொடுத்தார். இந்தத் தகவல் முதலமைச்சர் காமராஜர் மற்றும் அமைச்சர் கக்கன் ஆகியோருக்கும் உடனடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 4 மணிக்கு சிறையில் தேவரைச் சந்திக்கலாம் என்று காவல் துறை அனுமதி கொடுத்தது.
சரியாக மாலை 4 மணிக்கு மத்திய சிறைக்குச் சென்ற மாரிசாமியை, போலீஸ் அதிகாரிகள் உள்ளே அழைத்துச் சென்று காத்திருப்பு அறையில் தங்க வைத்தனர். அங்கு தேவர் வந்தார். அவருடன் 2 காவல் அதிகாரிகளும் வந்தனர். சுற்றிலும் காவல் அதிகாரிகள், சிஐடி அதிகாரிகள் சூழ்ந்திருக்க, தேவரைச் சந்தித்துப் பேசினார் எஸ்.எஸ்.மாரிசாமி. ‘ராஜாஜி மிகவும் வருத்தப்பட்டார். அவர்தான் உங்களைப் பார்க்கச் சொல்லி என்னை அனுப்பினார். முடிந்தால் அவரே நேரில் வந்து பார்ப்பதாகவும் சொன்னார்’ என்று தேவரிடம் மாரிசாமி கூறினார்.
அதற்குள் போலீஸார் கெடுபிடி காட்டினார்கள். 5 நிமிடத்துக்கு மேல் பேச அனுமதியில்லை என்றனர். உடனே மாரிசாமி, தேவரைப் பார்த்து “நீங்கள் நல்லவர், உத்தமர், மக்களுக்கு உங்கள் மீதான மதிப்பு என்றும் குறையாது” என்று கூறிவிட்டு வெளியே வந்துவிட்டார்.
சென்னை மத்திய சிறையில் தேவர் அடைக்கப்பட்டுள்ள செய்தி தமிழ்நாடெங்கும் காட்டுத் தீ போல் பரவியது. இதற்கிடையே, பசும்பொன் தேவர் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், மாநில தலைநகரான சென்னையில் ஏதேனும் பிரச்சினைகள், கலவரங்கள் ஏற்படுமோ என்ற அச்சத்தில், ஐந்தே நாட்களில் புதுக்கோட்டை சிறைக்கு தேவரை மாற்றினார்கள். அதைத்தொடர்ந்து புதுக்கோட்டைக்கு தென் மாவட்டங்களில் இருந்து கூட்டம் கூட்டமாக தொண்டர்கள் படையெடுத்தார்கள்.
எம்எல்ஏவாக இருந்த மூக்கையாத் தேவர், திருச்சி கலெக்டரைச் சந்தித்தார். அப்போது புதுக்கோட்டை திருச்சி மாவட்டத்தில் இருந்தது. கலெக்டராக இருந்த மலையப்பன், சற்று கெடுபிடியானவர். அவரிடம் தேவரைச் சந்திக்க அனுமதி கோரினார் மூக்கையாத் தேவர். அப்போது, ‘உங்களை மட்டும் தேவரை சந்திக்க அனுமதிக்கிறேன். வேறு யாரும் கூட வரக் கூடாது. அதேபோல் ரொம்ப நேரம் கொடுக்க முடியாது’ என்ற கண்டிஷனுடன் அனுமதி கொடுத்தார் கலெக்டர்.
சிறையில் தேவரை மூக்கையாத் தேவர் சந்தித்தபோது, அவர் உற்சாகமாகவே இருந்தார். முகத்தில் எந்தவித கவலையோ, களைப்போ தெரியவில்லை. எப்போதும்போல் பேச்சில் கம்பீரம் தெரிந்தது. ‘நீங்கள் கைது செய்யப்பட்டதால் மக்கள் கொதிப்புடன் உள்ளனர்’ என்று தேவரிடம் கூறினார் மூக்கையாத் தேவர்.
அதற்கு தேவர், “இந்தப் பிரச்சினையை நான் பார்த்துக் கொள்கிறேன். நேதாஜி வழியில் வந்தவன் நான். காங்கிரஸ் தலைவராக நேதாஜி தேர்ந்தெடுக்கப்பட்டபோதும், அவரை செயல்பட விடாமல் தடுத்தனர். அவற்றையெல்லாம் எதிர்கொண்டுதான் ஐஎன்ஏ-யை அமைத்தார். அவரைப்போல் யாருக்கும் நான் அஞ்ச மாட்டேன். அதேபோல் யாருக்கும் விரோதமாகவும் செயல்பட மாட்டேன். தெய்வபக்தி, நாட்டு பக்தி என்னிடம் நிரம்ப இருக்கிறது. சிறை செல்லாத தலைவர்கள் யார் இருக்கிறார்கள்? இந்தப் பிரச்சினையை மேலும் பெரிதாக்கி சமுதாயங்களுக்கு இடையே பிரிவினையை, பகையை உருவாக்கி விடக் கூடாது” என்று கூறினார்.
பசும்பொன் தேவர் கைதைக் கண்டித்து பார்வர்டு பிளாக், சுதந்திரா கட்சி, சீர்திருத்தக் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக தென் தமிழகத்தின் மதுரை, ராமநாதபுரம் சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய பகுதிகள் மட்டுமல்லாமல், சென்னை, கோவை, தஞ்சாவூர் பகுதிகளிலும் கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இத்தகைய சூழலில் சிறையில் இருந்து பசும்பொன் தேவரை விடுவிக்க சட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. எஸ்.எஸ்.மாரிசாமியோடு, சசிவர்ணத் தேவர் சென்னை புறப்பட்டுச் சென்றார். அவர்களுடன் சீர்திருத்தக் காங்கிரசைச் சேர்ந்த வி.கே.ராமசாமி முதலியார், வெங்கட கிருஷ்ண ரெட்டியார், மூக்கையாத் தேவர் ஆகியோடும் உடன் வந்தனர். ஐந்து பேரும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி அல்ல) பார்க்கச் சென்றனர். ஆனால் அவர் வீட்டிருந்தும் இவர்களைப் பார்க்க விரும்பவில்லை. (இதன் பின்னணியில் காங்கிரஸ் இருந்தது என்றும் அதனால் அவரை இந்த வழக்கில் ஆஜராகாமல் தடுத்து விட்டார்கள் என்று பின்னாளில் எஸ்.எஸ்.மாரிசாமி என்னிடம் கூறியதுண்டு.)
இருப்பினும், ராஜாஜிதான் உங்களைப் பார்க்க அனுப்பி வைத்தார் என்று இவர்கள் சொன்னதும், 2 பேரை மட்டும் உள்ளே அனுமதித்தார் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலாச்சாரி. அதன்படி 2 பேர் மட்டும் அவரைச் சந்தித்தனர். அப்போது, “நான் ரிஷிகேஷ் செல்லப் போகிறேன். அதனால் இந்த வழக்கை உடனே கவனிக்க இயலாது” என்றார். அதைத்தொடர்ந்து ராஜாஜி, வழக்கறிஞர் ராஜகோபாலாச்சாரியை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவரிடம், “தனக்கு வழக்கு பீஸாக ரூ.6 ஆயிரம் வேண்டும். தன்னுடைய ஜூனியர் வழக்கில் வாதாடுவார்” என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து, பிரபல வழக்கறிஞர் நாராயணசாமியிடம் (பின்னாளில் எம்ஜிஆர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்) சொன்னவுடன், அவர், ‘இந்த வழக்கில் ராஜகோபாலாச்சாரிக்கு நான் உதவுகிறேன். எனக்கு எந்த கட்டணமும் வேண்டாம்’ என்று கூறினார். இந்த தகவல் ராஜகோபாலாச்சாரியிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.
பசும்பொன் தேவர் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகி விட்டன. வழக்கு கட்டணம் ரூ.6 ஆயிரத்தைத் திரட்டுவதற்கு பல்வேறு முயற்சிகளை எஸ்.எஸ்.மாரிசாமி தலைமையிலான குழு மேற்கொண்டது. அந்த வகையில் டாக்டர் சீனிவாசனிடம் உதவி கேட்கப்பட்டது. இவர் யாரென்றால், பிரபல வழக்கறிஞர் வி.பி.ராமனுடைய சித்தப்பா. அவர் ரூ.500 கொடுத்தார். பிறகு அந்தக் குழு எம்ஜிஆரைச் சந்தித்தது. அவர் ரூ.1000 கொடுத்தார். (இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பசும்பொன் தேவர் மீது எம்ஜிஆருக்கு தனிப்பட்ட மரியாதை இருந்தது. தேவர் மறைந்தபோது அவரது இறுதி ஊர்வலத்தில் அண்ணாவுடன் எம்ஜிஆர் கலந்து கொண்டார்.)
அதேபோல் எஸ்.டி.ராஜா ரூ.1000 கொடுத்தார். இப்படி பலரிடம் பணம் வசூலித்து ரூ.6 ஆயிரத்தை ராஜகோபாலச்சாரியிடம் கொடுத்து வழக்கை நடத்தும்படி கூறப்பட்டது. இந்த வழக்கு தனி கோர்ட்டில் ஐசிஎஸ் எஸ்.வெங்கடேஸ்வரன் தலைமையில் நடக்கப் போவதாகச் செய்தி வெளியானது. புதுக்கோட்டையில் சிறப்பு நீதிமன்றம் இதற்காக அமைக்கப்பட்டது. அரசு சார்பில் பிரபல வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். குறிப்பிட்ட நாளில் வழக்கு விசாரணைக்கு வந்தது. புதுக்கோட்டையில் வழக்கறிஞர்கள் தங்குவதற்கு எஸ்.எஸ்.மாரிசாமி தலைமையிலான குழு ஏற்பாடு செய்திருந்தது.
பசும்பொன் தேவருக்காக வழக்காடும் வழக்கறிஞர்கள் தங்கியிருந்த இடத்தில்தான் அரசு வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜும் தங்கியிருந்தார். அப்போது எதிர் தரப்பு வழக்கறிஞர்களுடன் அவர் பேசுவதுண்டு. அவ்வாறு பேசும்போது இந்த வழக்கில் தேவையில்லாமல் பசும்பொன் தேவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று மனதில் பட்டதை சொல்லிவிட்டார். வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. தேவரின் நடவடிக்கைகள் மூலமே, அவருக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெளிவாயிற்று.
வழக்கின் முடிவில் வழக்கில் இருந்து பசும்பொன் தேவர் விடுவிக்கப்பட்டார். வெளியே வந்ததும், அங்கிருந்தவர்களிடம், நான் உடனே ஆடுதுறைக்குச் செல்ல வேண்டும் என்று கூறி புறப்பட்டுச் சென்று விட்டார்.
நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட முதுகுளத்தூர் கலவர சம்பவத்தில் பசும்பொன் தேவர் மீது கொலைப்பழி சுமத்தப்பட்ட வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
(தொடர்வோம்...)
> முந்தைய அத்தியாயம்: தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கு அடித்தளமிட்ட அண்ணா! - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 73
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT