Published : 15 Nov 2025 04:33 PM
Last Updated : 15 Nov 2025 04:33 PM
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 1957-ல் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து, முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த இக்கட்டான நேரத்தில் பசும்பொன் தேவருக்கு ராஜாஜி ஆதரவாக இருந்தார். இப்படியான சூழலில் 1957-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 15 இடங்களில் வெற்றிபெற்று முதன்முறையாக தமிழக சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தது. இந்தத் தேர்தலில் திமுகவினர் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர். அப்போது அவர்களுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்படவில்லை.
அந்தச் சின்னம் இதற்கு முன், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமியிடம் இருந்தது. அவர் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்ணாவுக்கு உதயசூரியன் சின்னம் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. நாள் விடியும்போது உதயசூரியன்தானே தன் ஒளிக் கற்றைகளை பரவச் செய்கிறான். எனவே இந்த நாடு விடியல் பெற உதயசூரியன் சின்னம்தான் பொருத்தமாக இருக்கும் என்று அண்ணா கருதினார். அதன் பின்னர் திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை தேர்தல் ஆணையம் 1.03.1958 அன்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கியது. இதற்கு முன்னதாகவே கலைஞர் எழுதிய ‘உதயசூரியன்’ எனும் நாடகம் தமிழ்நாடு முழுவதும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதனால் ‘உதயசூரியன்’ சின்னம் மக்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.
1957 தேர்தலில் திமுக சட்டப்பேரவைக்குள் நுழைந்தபோதும் அதற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. சீர்திருத்தக் காங்கிரஸ் கட்சிதான் எதிர்க்கட்சியாக இருந்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ராஜாஜி, பசும்பொன் தேவர் ஆகியோரின் பிரச்சாரத்தால் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் போராட்டத்தில் பங்குபெறாத, எத்தகைய தியாகங்களும் செய்யாதவர்களுக்கும், பண முதலாளிகளுக்கும்தான் அந்தத் தேர்தலில் போட்டியிட காமராஜர் வாய்ப்புக் கொடுத்தார் என்ற அதிருப்தியில், காங்கிரசில் சீர்திருத்தம், ஜனநாயகம் வேண்டும் என்று உருவானதுதான் சீர்திருத்தக் காங்கிரஸ் என்பதை முன்னமே பதிவிட்டிருந்தேன். சீர்திருத்த காங்கிரஸை ஜனநாயகக் காங்கிரஸ் என்றும் சொல்வார்கள். தமிழக சட்டப்பேரவையில் திமுக நுழைந்ததுமே திராவிட நாடு குறித்து உரக்கப் பேசினார்கள். மேலும் விலைவாசி உயர்வு குறித்து மிகக் கடுமையாக வாதம் செய்தார்கள்.
அன்றைக்கு திமுக தலைமை அலுவலகமாக ‘அறிவகம்’ சென்னை திருவொற்றியூரில் இருந்தது. அங்கிருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேரும் அண்ணா தலைமையில் 2 - 3 கார்களில் தலைமைச் செயலகத்துக்குச் சென்றனர். அவர்களைக் காண அங்கு திமுகவினர் ஏராளமானோர் கூடியிருந்து உற்சாகக் குரல் எழுப்பினார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு திருப்புமுனையாக அமைந்த தேர்தல் என்றால் அது 1967-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல்தான். அந்தத் தேர்தலில் காமராஜர் தலைமையிலான காங்கிரசை எதிர்த்து திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டது. தேர்தல் கூட்டணி என்பது தமிழக அரசியல் களத்தில் அது புதிதாக இருந்தது.
ராஜாஜியின் சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மா.பொ.சி.யின் தமிழரசுக் கழகம், மூக்கையாத் தேவர் தலைமையில்இருந்த பார்வர்டு பிளாக், காயிதே மில்லத் தலைமையிலான முஸ்லிம் லீக், பிரஜா சோசலிஸ்ட், சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி என பல கட்சிகள் திமுக தலைமையில் கூட்டணி அமைத்து அந்தத் தேர்தலில் போட்டியிட்டன. இக்கூட்டணி 179 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 137 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது.
பொதுத் தேர்தல் நடந்த 1967-ம் ஆண்டு தமிழகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தது. இந்தி மொழி திணிப்பு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் மிகவும் தீவிரமாக இருந்தன. மேலும் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்த எம்ஜிஆர், நடிகர் எம்.ஆர்.ராதாவால் சுடப்பட்டார். குண்டடி பட்டு ஆபரேஷன் செய்த நிலையில் கழுத்தில் கட்டுடன் எம்ஜிஆர் அமர்ந்திருக்கும் சுவரொட்டிகள் தமிழ்நாடு முழுவதும் ஒட்டப்பட்டன. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் அனுதாபத்தையும் ஏற்படுத்தியது.
அந்தத் தேர்தலில் திமுகவில் அண்ணா, கலைஞர், எம்ஜிஆர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரக் களத்தில் இருந்தாலும், எம்ஜிஆரின் பிரச்சாரம் வெகுஜன மக்களை வெகுவாகக் கவர்ந்தது. கவர்ச்சிகரமான தோற்றம், திரைப்படங்களில் அவரது கதாபாத்திரங்கள், பெண்கள், ஏழைகள், தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுக்கும்படியான காட்சியமைப்புகள், கொடைத் தன்மை, கருத்தாழம் மிக்க தத்துவப் பாடல்கள் போன்றவற்றால் மக்கள் பெரிதும் கவரப்பட்டனர்.
குறிப்பாக பெண்கள் மத்தியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. மேலும் அவரது படங்களில் மது குடிப்பது, புகை பிடிப்பது போன்ற காட்சிகளை அறவே தவிர்த்து இருந்தார். இத்தகைய நல்ல குணாம்சங்களுடன் திரையில் தோன்றிய கதாநாயகனை, நிஜ வாழ்விலும் தங்களது கதாநாயகனாக மக்கள் கருதினார்கள். இதனால் கடைக்கோடி கிராமங்கள் வரை அவரது செல்வாக்கு விரிந்தது. தனது படங்களில் திமுகவின் கொள்கைகள், மற்றும் திமுக தொடர்புடைய காட்சிகளை இடம் பெறச் செய்து மக்களின் மனதில் திமுக எனும் கட்சியை வேரூன்றச் செய்ததில் எம்ஜிஆரின் பங்கு முக்கியமானது.
1967-ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் இரட்டை காளை மாடு சின்னத்தில் காங்கிரஸ் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தாலும், திமுக தலைமையிலான கூட்டணியை விட ஒட்டுமொத்தத்தில் ஒரு லட்சம் ஓட்டுகள் அதிகமாகப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா மறைவுக்குப் பின்னர் 1971 நடந்த பொதுத் தேர்தலிலும் திமுக கூட்டணி 205 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 184 இடங்களில் வெற்றிபெற்று தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தத் தேர்தலிலும் எம்ஜிஆரின் பிரச்சாரம் முக்கியமாகக் கருதப்பட்டது.
சைதாப்பேட்டை தொகுதியில் கலைஞர் போட்டியிட்டார். அன்றைய காலகட்டத்தில் நான் ஸ்தாபன காங்கிரசில் இருந்தேன். அண்ணன் குடந்தை ராமலிங்கம் ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். தேர்தல் களத்தில் ஸ்தாபன காங்கிரஸ் வெற்றி பெற்று விடும் என்று பரவலான கருத்து நிலவியது. இதனால் ஓட்டு எண்ணிக்கைக்கு முதல் நாளே அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பலர் காமராஜரை சந்திக்க சென்னை, தியாகராயநகரில் உள்ள திருமலைப்பிள்ளை சாலைக்கு வரத் தொடங்கினர். ஸ்தாபன காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும் என்று ஓட்டு எண்ணிக்கைக்கு முதல் நாள் வரை நம்பிக்கையுடன் இருந்தனர்.
மறுநாள் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி அதற்கு அடுத்தநாள் வரை தொடர்ந்தது. ஆரம்பம் முதலே திமுக கூட்டணி முன்னணியில் இருந்தது. முடிவில் திமுக கூட்டணி 205 இடங்களில் மகத்தான வெற்றி பெற்றது. தமிழ்நாட்டின் வடக்கெல்லையான திருத்தணி பள்ளிப்பட்டு முதல் தெற்கே கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் வரை மக்கள் ஒரே மாதிரியாக திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
அதேநேரம் திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மட்டும் ஸ்தாபன காங்கிரஸ் கட்சி குறிப்பிடத்தக்க அளவில் இடங்களைப் பெற்றிருந்தது. நடுநாடு என்று சொல்லக் கூடிய வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் வெற்றி பெற்றது. மேலும் தஞ்சை டெல்டா மாவட்டங்களிலும் ஆதரவு அதிகமாக இருந்தது.
இதற்கிடையே 1971 தேர்தலுக்குப் பிறகு திமுகவில் இருந்து எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து அண்ணா திமுக என்ற கட்சியை எம்ஜிஆர் தொடங்கினார். புதுச்சேரியிலும் இக்கட்சி தொடங்கப்பட்டது. திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்த பின்னர், திமுகவால் வெற்றி பெற முடியவில்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் 1989-ல் வலுவான கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார் கலைஞர்.
அதேபோல், 1996-ல் திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்றபோதும், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி, நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவுக் குரல், அதிமுக ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற காரணங்களால் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. திமுகவில் இருந்து பிரிந்து சென்ற வைகோ, மறுமலர்ச்சி திமுக என்ற கட்சியைத் தொடங்கினார். அக்கட்சி, மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தபோதும், 180 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் மட்டுமே டெபாசிட் பெற முடிந்தது.
குறிப்பாக விளாத்திகுளத்தில் வைகோ, கோவில்பட்டியில் நான், சங்கரன்கோவிலில் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, முன்னாள் துணை சபாநாயகராக இருந்த வேடசந்தூர் பாலசுப்பிரமணியம் இப்படி நாலைந்து பேர்தான் டெபாசிட் பெற்றோம். கோவில்பட்டியில் போட்டியிட்ட நான் 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்றேன். இதுதான் தேர்தல் களத்தில் போட்டியிட எனக்குக் கிடைத்த இறுதி வாய்ப்பு.
கடந்த 2006-ம் நடந்த தேர்தலிலும், அதைத்தொடர்ந்து 2021 தேர்தலிலும் வலுவான கூட்டணியுடனேயே திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆக திமுக வெற்றி பெறும்போதெல்லாம் வலுவான கூட்டணி அமைந்திருக்கிறது. கூட்டணி பலமே திமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. அதேநேரம் அதிமுக கூட்டணி இல்லாமலும் வெற்றி பெற்றுள்ளது என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.
தமிழகத்தில் தேர்தல் கூட்டணி என்ற புதிய யுக்தியை புகுத்தியவர் அண்ணாதான். கொள்கைகள் வெவ்வேறாக இருக்கும்போது தேர்தல் வெற்றிக்காக கூட்டணி அமைப்பது சரிதானா என்பது என்னைப் பொறுத்தவரையில் மாறுபட்ட கருத்து உள்ளது. வெவ்வேறு கொள்கையுடைய கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களுடைய அரசியல் நிலைப்பாடு என்னவாகும்? கொள்கைகள் என்னவாகும்?
அரசியல் களத்தில் என்றுமே சாணக்கியராக விளங்கியவர் கலைஞர். எப்படி கணக்குப் போட்டால் சரியாக வரும் என்பது அவருக்கு கைவந்த கலை. அதிகாலையிலேயே அனைத்து பத்திரிகைகளையும் படித்து விடுவார். ஆதரவான செய்திகள் மட்டுமின்றி விமர்சிக்கும் செய்திகளையும் படிக்க அவர் தவறுவதில்லை. எத்தனையோ அரசியல் சூறாவளிகளை உறுதியுடன் எதிர்கொண்டு கட்சியை கட்டிக் காப்பாற்றினார்.
குறிப்பாக அவசர நிலை பிரகடனத்தின்போது முக்கிய நிர்வாகிகள் கைது, ராஜீவ் படுகொலையின்போது ஏற்பட்ட நெருக்கடிகள் போன்றவற்றை எல்லாம் எதிர்கொண்டு கட்சியைக் காப்பாற்றியதோடு, தொண்டர்கள் சோர்வடையாமல், உத்வேகத்துடன் இருக்க சுற்றிச் சுழன்று பணியாற்றினார் கலைஞர். அவர் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளத்தில்தான் இன்றைய ஆட்சியாளர்கள் நடைபோடுகின்றனர்.
ஆரம்ப காலத்தில் திமுகவை தீவிரவாத கட்சியாகவே கிராமப்புறங்களில் பெரும்பாலான மக்கள் பார்த்தார்கள். காரணம் அன்றைக்கு திமுகவினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் மட்டுமே மக்கள் பிரச்சினைகளுக்காகக் குரல்கொடுத்து வந்தார்கள். அரசாங்கத்தை தட்டிக் கேட்டார்கள். அதேபோல் கேரள மலபாருடன் ஒன்றுபட்ட சென்னை ராஜதானியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஏ.கே.கோபாலன், நம்பூதிரி பாடு, நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், சுந்தரய்யா போன்றவர்கள் எல்லாம் அன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான விமர்சனங்களை வைக்கும் முக்கிய தலைவர்களாக அறியப்பட்டனர்.
இன்றைய அரசியல் கூட்டணிகளைப் பொறுத்தவரை வெற்றிக்கு எது சாத்தியமோ... எந்தக் கட்சியை இணைத்தால் வெற்றி கிடைக்குமோ... அதை நோக்கித்தான் கட்சிகள் நகர்கின்றன... கட்சிகளின் அடிப்படை நோக்கங்கள் வேறுவேறாக இருந்த போதிலும்...!
இனி, பசும்பொன் தேவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டதன் பின்னணி, இந்த விவகாரத்தில் ராஜாஜி என்ன செய்தார்? காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோதும், சேலம் வரதராஜுலு நாயுடு ராஜாஜிக்கும், பசும்பொன் தேவருக்கும் எப்படி நட்பாக இருந்தார்? சிறையில் இருந்த பசும்பொன் தேவர், வழக்கில் இருந்து எவ்வாறு விடுவிக்கப்பட்டார்... என்பது குறித்து எல்லாம் அடுத்து பார்ப்போம்...
(தொடர்வோம்...)
முந்தைய அத்தியாயம்: ‘சுதந்திரா கட்சி’யை ராஜாஜி தொடங்கியதன் நோக்கம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 72
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT