Published : 14 Nov 2025 08:00 AM
Last Updated : 14 Nov 2025 08:00 AM
அந்த ‘இருக்கையில்’ அமர்ந்திருப்பதன் அர்த்தம் என்ன என்ற வினாவை, ஒரு நீதிபதி என்றாவது எதிர்கொள்ள வேண்டிவரும். அது வெறும் நாற்காலி அல்ல, நீதிமன்றத்தில் நுழையும் ஒருவரின் பரிமாணங்களை அது மாற்றியமைக்கும்.
நீதிபதிகளுக்கும் பலவீனங்கள், தன்னம்பிக்கை வறட்சி, தடுமாற்றங்கள், தயக்கங்கள் வரும். ஆனால், நீதி பரிபாலனத்துக்காக அந்த நாற்காலியில் ஏறும்போது சிந்தனைகள் தீட்டப்படும், வார்த்தைகள் வலுப்பெறும், மிகுந்த வீரியத்துடனும், தைரியத்துடனும் முடிவுகள் வெளிப்படும். இதுவே, ஒருமுறை ஒரு முன்னாள் தலைமை நீதிபதியின் துணைவியாருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘ஒரு நீதிபதியின் கடமையைச் செய்வது கிட்டத்தட்ட தெய்வீக அனுபவம்போல உணர்கிறேன்’ என்று உரைக்கச் செய்தது. ‘ஆனந்த் வெங்கடேஷ் என்ற தனிமனிதனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத எண்ணங்கள் மற்றும் செயல்களை, நீதிபதியான ஆனந்த் வெங்கடேஷ் செய்ய முடிகிறது’ என்றேன்.
என்னைவிடப் பெரிய சக்தி ஒன்று இயங்குகிறது என்ற உணர்வு, இது இறைவனின் கைதானோ? என்ற வினாவை எழுப்பியது. ஆனால், அந்த அம்மையார் தந்த பதிலின் எளிமை, ஞானத்தின் முத்தாய் என்னில் விழுந்தது. ‘அந்த மாற்றம் தெய்வீக வரமல்ல, அது ஒரு மனித அனுபவம்’ என்றார் அவர். மேலும், ‘ஆவலும், கடமையும் ஒன்றிணையும்போது எழும் விந்தை அது! தனிமனிதன் தன்முனைப்பு துறந்து, தான் ஏற்ற பாத்திரத்தை நிறைவேற்றுவதில் கரைந்துபோகும் அரிய அனுபவக் கலை அது’ என்றார்.
ஒழுக்கமும், ஒருமுகப்படுத்தலும்... இதை வியத்தகு உதாரணங்களால் விளக்கினார். ‘மைக்கேல் ஜாக்சன் மேடைக்கு வெளியே கூச்ச சுபாவம் கொண்டவர். ஆனால், அரங்கில் கால் வைத்தவுடன், ஆற்றலும், வசீகரமும் நிறைந்த ஆடும் அக்னியாய் பொங்கி எழுவார். அவரது ஆளுமை எங்கும் கண்டிராத வித்தையாய் மிளிரும்.
அது தனிப்பட்ட வாழ்க்கையில் காணப்பட்ட ஆளுமைக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாகத் தோன்றும். சாதாரண மருத்துவ நிபுணர் அறுவை சிகிச்சை அரங்கில் நுழைந்தவுடன், 10 மணி நேரம் தொடர்ந்து சிக்கலான அறுவை சிகிச்சை செய்யத் தேவையான கவனத்தையும், திறனையும், மன ஒருமைப்பாட்டையும் பெறுவர். ஒழுக்கமும், ஒருமுகப்படுத்துதலும் மட்டுமே அவர்களை மாற்றியமைத்தது போலத் தோன்றும்’ என்றார்.
உளவியலாளர்கள் ‘ஃப்ளோ’ (Flow - செயல் லயிப்பு/ ஒன்றிப்போதல்) என்று அழைக்கும் நிகழ்வுதான் அது. அதாவது, நேரம் மறைந்து, தன்முனைப்பு கரைந்து, பணியே நம்மை ஆட்கொள்ளும் ஓர் அரிய நிலை அது. இது தெய்வீகம் அல்ல; தனிநபர்கள் தங்களுக்குள் மறைந்திருக்கும் உச்சத்தைத் தொட உதவும் சரணாகதி சார்ந்த நிலை!
நீதிபதியின் இருக்கை மந்திர இருக்கை அல்ல. எல்லோரும் அதன் ஆற்றலை உணர்வதில்லை. மேற்சொன்ன தெய்வீகத்தன்மை விலைக்கு கிடைப்பதில்லை; அது ஓர் ஆன்ம அழைப்பு. உறுதிப்பாடும், தொடர் பயிற்சியும், உண்மைத் தன்மையுமே ஒருவரை உயர்த்துகிறது. இவற்றை உணராதவருக்கு நீதிபதியின் இருக்கை என்பது பதவியின் குறியீடு மட்டுமே.
அந்தப் பெண்மணியின் வார்த்தைகள் என்னை வளப்படுத்தின. வலிமையும், தெளிவும் தெய்வீகத் தன்மையின் அடையாளங்கள் அல்ல. மாறாக, கடமையும், தொழில் பற்றும், நேர்மையும் மட்டுமே மாற்றத்தை உருவாக்கும். கடமையின் புனிதப் பொறுப்பை உணர்ந்து, அதற்கான பணிவையும், உழைப்பையும் செலுத்த வேண்டும். இது நீதித்துறைக்கு மட்டுமல்ல; எல்லாத்தொழிலுக்கும் பொருந்தும்.
இந்தப் புரிதல் நீதிபதிகளுக்கு முக்கியமானது. அவர்களின் இருக்கையை அதிகாரத்தின் சிம்மாசனமாகக் காணும் சோதனை அவ்வப்போது நேரும். ஆனால், நீதிபதி பதவியின் மெய்யான கண்ணியம் அதிகாரத்திலோ அல்லது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமையிலோ இல்லை. பிழை செய்யக்கூடிய மனிதராய், அதிகாரத்தை தொலைத்து, பணிவைக் கைக்கொண்டு சேவை செய்யும்போதுதான் ஒரு நீதிபதியின் பணி செம்மார்ந்து உயர்கிறது.அந்த இருக்கையின் தெய்வீகத் தன்மை, அது செய்யப்பட்ட மரத்திலோ, செதுக்கி வைத்துள்ள சின்னத்திலோ இல்லை.
மாறாக, அந்த நீதிபதியின் செயலில்தான் உள்ளது. சாதாரண மனிதருக்கும், அசாதாரணத் தருணத்துக்கும் இடையிலான மெல்லிய கோடு அது. அந்த இருக்கை நம்மை ஒருபோதும் மாயையில் ஆழ்த்தி விடக்கூடாது; மாறாக, அது நம்மை விழிப்புடன் வைத்திருக்கச் செய்ய வேண்டும். நாம் கருப்பு அங்கி தரித்த கடவுளர்கள் அல்ல; மக்களின் நம்பிக்கையை காக்கும் பணியாளர்கள் என்பதை உணர வேண்டும். அந்தப் பணிவை உயிர்ப்புடன் வைத்திருப்பது சட்டத்துக்கு மட்டுமல்ல; நமக்கும் நியாயம் செய்வதாக அமையும்.
-ஆனந்த் வெங்கடேஷ், உயர் நீதிமன்ற நீதிபதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT