Published : 09 Nov 2025 10:32 PM
Last Updated : 09 Nov 2025 10:32 PM

‘சுதந்திரா கட்சி’யை ராஜாஜி தொடங்கியதன் நோக்கம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 72

ராஜாஜியின் சுதந்திரா கட்சிக் கொடி

ராஜாஜி தொடங்கிய சுதந்திரா கட்சியின் தோற்றம் மற்றும் அதன் வீழ்ச்சி குறித்து கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இருப்பினும் தமிழகத்தில் சுதந்திரா கட்சியின் தாக்கம் எப்படி இருந்தது. அக்கட்சியின் தளகர்த்தர்களாக செயல்பட்டவர்கள் யார் என்பதைக் குறித்து அறிந்து கொள்வது அவசியம். இதுகுறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அதன் செயல்பாடுகளில் இருந்தும் ராஜாஜி ஒதுங்கிக் கொண்டபோதும், அவ்வப்போது அரசியல் கருத்துகளையும், முக்கிய விடயங்களில் தன்னுடைய நிலைப்பாட்டையும் தெரிவித்துக் கொண்டே வந்தார். காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதிவை புதுப்பித்துக் கொள்ளவும் இல்லை. ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வலுவான ஒரு எதிர்க்கட்சி இருக்க வேண்டும் என்று ராஜாஜி விரும்பினார். அதற்காகவே தனது அரசியல் பயணத்தை வழியமைத்துக் கொண்டார். ‘ராஜாஜி ஓர் சத்தியாக்கிரகி. பலம் பொருந்திய ஒரு ஸ்தாபனத்துக்கு நிகரானவர்’ என்று காந்தியடிகளே அவரை வியந்து பாராட்டியது உண்டு.

காங்கிரஸ் தனது கொள்கைகளுக்கு, எண்ணங்களுக்கு சரிப்பட்டு வராது... இனி எந்த மாதிரியான இயக்கத்தை ஆரம்பிக்கலாம் என்று யோசிக்கலானார் ராஜாஜி. அந்த வகையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் கட்சிகளுக்கு மாற்றாக பிரிட்டனில் உள்ள ‘கன்சர்வேடிவ்’ கட்சியைப் போன்று ஒரு இயக்கத்தை கட்டமைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் உதித்தது. இதை அறிந்து கொண்ட ராஜாஜியின் நெருங்கிய நண்பரான ம.பொ.சி, ‘முதலாளி வர்க்கத்தை ஆதரிக்கும் கன்சர்வேடிவ் கட்சியைப் போன்று கட்சியை ராஜாஜி ஆரம்பிப்பது நடைமுறைக்கு ஒத்து வராது. அது நன்றாகவும் இருக்காது’ என்று தனது ‘செங்கோல்’ இதழில் 3.9.1959-ம் ஆண்டு தனது எண்ணத்தை விரிவாக எழுதினார்.

அதேநேரம் அகில இந்திய அளவில் கன்சர்வேடிவ் கட்சியைப் போன்று ஓர் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களிடமும், பத்திரிகை செய்திகளின் மூலமும் ராஜாஜி தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே வந்தார். கம்யூனிஸ்டுகளும், சோசலிஸ்ட்களும் தீவிரவாதம் என்ற போக்கில் காங்கிரசையும் தம் வசம் இழுத்துக் கொள்கிறார்கள். எனவே கன்சர்வேடிவ் போன்ற கட்சிதான் காங்கிரஸுக்கு மாற்றாக இருக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். மிதவாதம், சுதந்திரமான நிலை என்பதெல்லாம் அங்கே இருக்கிறது. அதனாலே தாமும் அதேபோன்ற கட்சியைத் தோற்றுவிக்கலாம் என்று தன்னுடைய நெருங்கிய ஆதரவாளர்களிடம் ராஜாஜி கூறி வந்தார்.

அதேநேரம், சமுதாயத்தின் அடித்தட்டு மக்களை புறந்தள்ளினால் அவர்களின் ஆதரவை, நல்லெண்ணத்தை எப்படிப் பெற முடியும் என்று எதிரான கருத்துகளையும் ராஜாஜியிடம் வைத்தனர் அவரது நலம் விரும்பிகள். இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சி மாபெரும் இயக்கமாகச் செயல்படுகிறது. பல்வேறு காலனி நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது அந்நாடு.

பிரித்தாளும் சூழ்ச்சியால், ராஜதந்திர சாகசங்களால் அன்றைக்கு உலக மார்க்கெட்டில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தது பிரிட்டன் அரசு. தனது காலனி நாடுகளை வாணிபம் என்ற பெயரில் சுரண்டி, அந்நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்து தன் நாட்டின் செல்வச் செழிப்பை பெருக்கிக் கொள்கிறது. அதுபோன்று நாம் நினைக்க முடியுமா? அல்லது அதை செயல்படுத்தத்தான் முடியுமா? என்றும் சிலர் தங்களது கருத்துகளை ராஜாஜியிடம் முன்வைத்தனர். எதிர்கருத்துகளையும் மதிக்கும் ஜனநாயகப் பண்பு ராஜாஜியிடம் மிகுந்திருந்ததால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் மனம் புண்படுமாறு சுடு சொற்களையும் கூறவில்லை.

தேசிய அளவில் 1957 காலகட்டங்களில் காங்கிரசுக்கு சரியான எதிர்க்கட்சி இல்லாத சூழ்நிலை நிலவியதை எல்லோரும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இன்றைக்கு பாரதிய ஜனதா கட்சி என்ற ஒரு கட்சி காங்கிரசுக்கு போட்டியாக களத்தில் உள்ளது. வெறும் 2 எம்.பி.க்களுடன் இருந்த கட்சி இன்றைக்கு தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவை ஆள்வது மட்டுமின்றி பல மாநிலங்களில் ஆளும்கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

பிரிட்டன் கன்சர்வேடிவ் கட்சியைப் போன்று ஒரு கட்சியை தோற்றுவிக்க வேண்டும் என்று இருந்தாலும், அந்தக் கட்சியின் கொள்கைகளையே தாமும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பிடிவாத போக்கு ராஜாஜியிடம் இல்லை. எனவே, ராஜாஜியின் எண்ணத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவுக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. குறிப்பாக என்.ஜி.ரங்கா, எம்.ஆர்.மசானி உள்ளிட்ட பெரும் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அந்த வகையில் உருவான சுதந்திரா கட்சிக்கு என்.ஜி.ரங்கா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். என்றைக்குமே கட்சியின் தலைமைப் பொறுப்பை விரும்பாதவர் ராஜாஜி என்பது எதார்த்தம்.

சுதந்திரா கட்சி தொடக்க விழாவுக்கு ராஜாஜி தன்னை அழைக்கவில்லை என்ற வருத்தம் ம.பொ.சி.க்கு இருந்தது. அதனால் இந்த விவகாரத்தில் ம.பொ.சி. பட்டும் படாமலும் இருந்தார். பல்வேறு கட்சிகளில் இருந்தவர்கள் தங்கள் கட்சிகளைக் கலைத்துவிட்டு சுதந்திரா கட்சியில் சேர்ந்தபோதும், தன்னுடைய தமிழரசுக் கழகத்தைக் கலைத்து விட்டு சுதந்திரா கட்சியில் சேர வேண்டும் என்ற விருப்பமோ, எண்ணமோ ம.பொ.சியிடம் இருந்ததில்லை.

சுதந்திரா கட்சியை ராஜாஜி தொடங்கியவுடன், பிரதமர் ஜவஹர்லால் நேரு வாழ்த்து அறிக்கையை வெளியிட்டார். சுதந்திரா கட்சி முதன்முதலில் கருக்கொண்டது சென்னை உட்லண்ட்ஸ் விடுதியில்தான் என்பது எனது நினைவு...

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், எங்கள் குடும்பத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவரும், என் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டவருமான எஸ்.எஸ்.மாரிசாமி, சுதந்திர கட்சி தொடக்கம் பற்றி என்னுடன் சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதிலிருந்து...

எஸ்.எஸ்.மாரிசாமி பேரிகை என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். ஒருநாள் அவர் தன்னுடைய பத்திரிகை அலுவலகத்தில் இருந்தபோது, ராஜாஜி அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்த சி.பெருமாள்சாமி ரெட்டியார் அவசர அவசரமாக மாரிசாமியைச் சந்திக்க அங்கு வந்தார். ‘இவ்வளவு சிரமப்பட்டு வரவேண்டுமா? அழைத்தால் நானே வந்திருப்பேனே?’ என்று மாரிசாமி கூறியபோது, ‘முக்கியமான விஷயத்தைப் பற்றி பேச வேண்டும். அதனால் நானே நேரில் வந்தேன்’ என்றார் பெருமாள்சாமி.

ஒரு குறிப்பிட்ட நாளில் (21 ஜூன் 1959) தனது ஆதரவாளர்கள் எல்லோரையும் அழைத்து சென்னை உட்லண்ட்ஸ் விடுதியில் மதிய விருந்து அளிக்க உள்ளேன். அந்த விருந்தில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாரிசாமிக்கு அழைப்பு விடுத்தார் பெருமாள்சாமி ரெட்டியார். அவரது அழைப்பை ஏற்று, மாரிசாமியும் அந்த விருந்தில் கலந்து கொண்டார்.

பெருமாள்சாமி ரெட்டியார் ஆதரவாளர்கள் ஏராளமானோர் அங்கு வந்திருந்தனர். பழைய காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். சீர்திருத்தக் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களும் வந்திருந்தனர். (இவர்களுக்காக ராஜாஜியும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள் என்பதை முன்னரே கூறியுள்ளேன்.) ராஜாஜி சற்று தாமதமாகவே வந்தார். அன்று மதியம் எல்லோருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. அப்போது, ராஜாஜி, தான் ஒரு புதிய கட்சியைத் தொடங்க இருக்கிறேன் என்ற விவரத்தை எல்லோரிடமும் விவரித்தார். விருந்து முடிந்து எல்லோரும் கலைந்து சென்றனர்.

அப்போது மாரிசாமியை அழைத்த ராஜாஜி, ‘என் வீட்டுக்கு வாருங்கள். உங்களுக்கு சில முக்கியமான வேலைகள் கொடுக்க வேண்டியுள்ளது’ என்று கூறி அழைப்பு விடுத்தார். சீர்திருத்தக் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த வெங்கடகிருஷ்ண ரெட்டியாரும், ராஜாஜியை உடனே பாருங்கள் என்று மாரிசாமியிடம் கூறினார். அதன்படி சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள ராஜாஜியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார் மாரிசாமி.

ராஜாஜியின் சுதந்திரா கட்சியில் சேர, சீர்திருத்தக் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தயாராக இருந்தார்கள். காமராஜருக்கு எதிராகத் தொடங்கப்பட்ட சீர்திருத்தக் காங்கிரஸ், சுதந்திரா கட்சியில் கரைந்து விட்டது. அதேநேரம், எங்கள் கோவில்பட்டி தொகுதியில் வெற்றிபெற்ற தியாகி சுப்பாநாயக்கர், ராஜாஜியுடன் செல்லாமல் காங்கிரஸுடன் சேர்ந்து கொண்டார்கள். மேலும், பிஎஸ்பி, எஸ்எஸ்பி என்ற சோசலிஸ்ட் கட்சிகளில் இருந்தவர்கள் குறிப்பாக பட்டுக்கோட்டை ஏ.ஆர்.மாரிமுத்து போன்றவர்களும் காங்கிரஸில் சேர்ந்து கொண்டனர். இப்படித்தான் தமிழகத்தில் சுதந்திரா கட்சி உருப்பெற்றது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சுதந்திரா கட்சியை விரிவுபடுத்த விரும்பினார் ராஜாஜி. தன்னைச் சந்திக்க வந்த எஸ்.எஸ்.மாரிசாமியிடம், அன்றைக்கு ஒன்றுபட்ட மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்து ஆதரவாளர்களை ஒன்றுதிரட்ட வேண்டும் என்ற பொறுப்பை ஒப்படைத்தார் ராஜாஜி.

அதன்படி மாரிசாமி, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களுக்கு காரில் சென்று, சுதந்திரா கட்சியை வளர்த்தெடுக்கும் பணிகளை மேற்கொண்டார். அதேபோல் ஒன்றுபட்ட கோவை மாவட்டத்துக்கும் சென்றார். கோவையில் உள்ள ராமநாதபுரத்தில் கூட்டம் நடத்தி ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டினார். அவர்கள் மூலம் கிராம அளவில் தொண்டர்களைத் திரட்டும் களப் பணிகளை முடுக்கி விட்டார். சுதந்திரா கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் போன்ற இடங்களில் அதிக செல்வாக்கு காணப்பட்டது.

தொடர்ந்து, திருச்சியில் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று ராஜாஜி கூறினார். அதன்படி திருச்சி அசோகா ஓட்டலில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதிக ஆட்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அக் கூட்டத்துக்கு ராஜாஜியை அழைத்து வரவேண்டும் என்று சென்னை சென்றார் மாரிசாமி. ஆனால் ராஜாஜி வட மாநிலங்களுக்குச் சென்றிருந்ததால் அவரைப் பார்க்க இயலவில்லை.

பின்னர், ராஜாஜி இல்லாமலேயே திருச்சியில் கூட்டம் நடைபெற்றது. ஆதரவாளர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கூட்டத்தில் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், சுதந்திரா கட்சி தொடங்கப்படுவதன் நோக்கம், கட்சியின் செயல்பாடு, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேசினார் மாரிசாமி. இவ்வாறாக கட்சி வளர்ச்சிப் பணிகள் வேகமெடுத்தன.

அக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. குறிப்பாக சீர்திருத்தக் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு சுதந்திரா கட்சியில் இணைவது என்ற முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. சுதந்திரா கட்சி வளர்ச்சியில் இத்தனை முழுவீச்சுடன் செயல்பட்டாலும் சிலர் மாரிசாமி மீது எதிரான மனப்பான்மையில் இருந்தனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தந்தி வடிவில் ராஜாஜிக்கு அனுப்ப வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் தபால் ஆபீசுக்கு ஓடினார்கள். மறுநாள் சென்னை வந்த மாரிசாமி, ஒய்.கிருஷ்ணசாமியின் அறிவுறுத்தலின் பேரில் ராஜாஜியை நேரில் சந்தித்து, மாவட்ட சுற்றுப் பயணங்கள் குறித்து அவரிடம் விரிவாக விளக்கினார் மாரிசாமி.

அவரது செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டினார் ராஜாஜி. மாரிசாமியை சுதந்திரா கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்து அவரைப் பெருமைப்படுத்தினார் ராஜாஜி. கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக அப்பொறுப்பை வகித்தார் மாரிசாமி. பின்னாளில் அவர் சுதந்திரா கட்சியில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்து விட்டார்.

ஏற்கெனவே மாரிசாமி மீது வன்மம் கொண்டிருந்தவர்கள் ராஜாஜியிடம், “பார்த்தீர்களா? அவரை நம்பாதீர்கள் என்றோம். ஆனால் அவருக்கு நீங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தீர்கள். இப்போது கட்சிக்கும், உங்களுக்கும் துரோகம் செய்துவிட்டு திமுகவில் இணைந்து விட்டார்...” என்று கூறினார்கள்.

ராஜாஜியோ அதை பெரிதுபடுத்தவில்லை. அவர் விருப்பம் அதுவாக இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்? என்று அந்த விவகாரத்தை மிகவும் எளிதாக எடுத்துக் கொண்டார் ராஜாஜி.

சுதந்திரா கட்சிக்கு செல்வந்தர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருந்தது. குறிப்பாக நிலப்பிரபுக்கள், தொழில் அதிபர்கள், பஸ் முதலாளிகள், மில் முதலாளிகள் போன்றோரின் ஆதரவு அதிகமாக இருந்தது. அதே நேரம் வட இந்தியாவில் கிடைத்த அளவுக்கு தமிழ்நாட்டில் சுதந்திரா கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜாஜியைப் பற்றியும், சுதந்திரா கட்சியைப் பற்றியும் இவ்வளவு விரிவாக விளக்க வேண்டிய அவசியம் என்ன என்று சிலர் நினைக்கலாம். தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மூத்த அரசியல் ஆளுமை, தேசிய அளவில் ஒரு கட்சியைத் தொடங்கி, குறிப்பிடத்தக்க அளவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களையும் பெற்று காங்கிரஸ் என்ற மாபெரும் இயக்கத்தை எதிர்த்து அரசியல் நடத்தியவர் என்ற வகையில் ராஜாஜியின் அரசியல் வாழ்க்கை குறித்து தெரியப்படுத்த வேண்டியதும் நமது கடமைதானே?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x