Published : 08 Nov 2025 04:31 PM
Last Updated : 08 Nov 2025 04:31 PM
இந்திய தேசிய விடுதலைப் போராட்ட வீரரரும், காந்தியின் நெருக்கமான நண்பர் மட்டுமல்ல, அவரது சம்பந்தியாகவும் விளங்கியவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (பழைய சேலம் மாவட்டத்தின்) ஓசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா, தாயார் சிங்காரம்மா ஆவர்.
பெங்களூர் சென்ட்ரல் கல்லூரி, மற்றும் சென்னை மாகாணக் கல்லூரியில் கல்வி பயின்றார். 1900-ம் ஆண்டில் ஒரு வழக்குக்கே 1000 ரூபாய் வாங்கும் வெற்றிகரமான வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். சிறந்த எழுத்தாளரும் கூட. காங்கிரஸ் கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.
காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, வழக்கறிஞர் தொழிலை கைவிட்டார். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். ரவுலட் சட்டத்துக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கேற்றார். 1917-ல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் நகராட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை மாகாண முதல்வர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர்.
ராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்துக்குப் பங்களித்துள்ளார். தமிழிலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். இவர் கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சியுடன் இணைந்து குற்றாலத்தில் இலக்கிய ஆய்வுகள் நடத்தினார். புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடலான “குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா” இவர் இயற்றிய பாடலே. ராஜாஜியின் மகள் லட்சுமி, மகாத்மா காந்தியின் நான்காவது மகன் தேவதாஸ் காந்தியை மணந்தார்.
ராஜாஜி தனது வாழ்நாள் கொள்கைகளாக பூரண மதுவிலக்கு, அரிஜன நல முன்னேற்றம், நாட்டு விடுதலை இவற்றையே கைக்கொண்டிருந்தார். சென்னை மாகாணத்தின் பிரதமராக 1937 முதல் 1939 வரை பொறுப்பு வகித்தபோது, மதுவிலக்கை அமல்படுத்தினார். அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய பிற பொருட்கள் மீது விற்பனை வரி என்ற திட்டத்தையும் செயல்படுத்தினார். மேலும் ஆலயப் பிரவேச சட்டம், விவசாயக் கடன் நிவாரண சட்டம், தஞ்சைப் பண்ணையில் உழவர் பாதுகாப்புச் சட்டம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களை நிறைவேற்றினார்.
ஆலயப்பிரவேச சட்டம் இயற்றுவதற்கு உந்து சக்தியாக ஒரு சம்பவம் நிகழ்த்தது. ஒரு சமயம் திருப்பதி அருகில் உள்ள திருச்சானூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த முருகேசன் என்பவர் நுழைந்த குற்றத்துக்காக கீழ்க்கோர்ட்டில் ரூ.75 அபராதம் விதிக்கப்பட்டது. இதனையறிந்த ராஜாஜி, மேல் கோர்ட்டில், ‘முருகேசனின் செயல் குற்றமல்ல’ என்பதை பல இதிகாச புராண சான்றுகளுடன் வாதாடி அபராதத்தைத் தள்ளுபடி செய்யும் உத்தரவைப் பெற்றார். அன்றே அவர் உள்ளத்தில், இறைவன் உறையும் ஆலங்களில் எல்லோரும் நுழையலாம் என்ற திட்டம் உதயமாயிற்று.
ராஜாஜி இயற்றிய ஆலயப் பிரவேச சட்டம் குறித்து சென்னையின் முன்னாள் கவர்னர் லார்டு எர்ஸ்கைன், லண்டனில் கிழக்காசிய சங்கக் கூட்டம் ஒன்றில் பேசும்போது ‘நான் சென்னையில் கவர்னராக இருந்தபோது எனது அருமை நண்பர் ராஜாஜி, இந்துக்கள் யாவருக்கும் ஆலயப் பிரவேச உரிமை அளித்ததன் பயனாக, பல நூற்றாண்டுகளாக நீடித்து வந்த ஒரு பெரும் அநீதியை ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் ஒழித்துக் கட்டினார்’ என்றார்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக ராஜாஜி இருந்தபோது கொண்டுவரப்பட்ட குலக்கல்வி திட்டம், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு பலரால் விமர்சிக்கப்பட்டது. இதுகுறித்து முன்பே கூறியுள்ளேன். ‘இந்தியத் தலைவர்களிலேயே மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் ராஜாஜி’ என்று மகாத்மா காந்தி கூறியது முற்றிலும் ஏற்கக் கூடியதாகும்.
பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சில அரசியல் செயல்பாடுகள், கொள்கைகள் ராஜாஜிக்கு அதிருப்தியை ஏற்படுத்தின. இந்த அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஒரு கட்டத்தில் காங்கிரஸில் இருந்து விலகினார். பின்னர் 1959-ம் ஆண்டு ‘சுதந்திரா கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தங்கதூரி பிரகாசம் பந்துலு, மினு மசானி, பேராசிரியர் என்.ஜி.ரங்கா, கே.எம்.முன்ஷி போன்றோர் இணைந்து இக்கட்சியை உருவாக்கினார்கள். தாராளவாத மற்றும் தாராள பொருளாதார கொள்கைகளைக் கொண்ட கட்சியாக இது இருந்தது.
1959 ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் பம்பாயில் நடைபெற்ற ஆயத்த மாநாட்டில் சுதந்திரா கட்சியின் கொள்கைகள் குறித்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில் இடம்பெற்ற 21 கொள்கைகள் இந்தியாவில் அரசியலில் தாராளமய மற்றும் சந்தை சார்ந்த அணுகுமுறைக்கு அடித்தளமிட்டன. அறிக்கையில் இடம் பெற்ற கொள்கைகள் வருமாறு:
* மதம், சாதி, தொழில் அல்லது அரசியல் சார்பு இல்லாமல் அனைத்து மக்களுக்கும் சமூக நீதி மற்றும் சம வாய்ப்பு.
* மக்களின் முன்னேற்றம், நலன் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை தனிப்பட்ட முன்முயற்சி, தொழில்முனைவு மற்றும் ஆற்றலைப் பொறுத்தது. சமூக விரோத நடவடிக்கைகளைத் தடுத்து தண்டிக்கவும், சமூகத்தின் பலவீனமான கூறுகளைப் பாதுகாக்கவும், தனிப்பட்ட முன்முயற்சி செழித்து பலனளிக்கக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்கவும் கடமைப்பட்ட தனிநபருக்கு அதிகபட்ச சுதந்திரம் மற்றும் அரசின் குறைந்தபட்ச தலையீடு என்ற கொள்கையை கட்சி ஆதரிக்கிறது.
* அதிகாரத்துக்கு வாக்களிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியால் கட்டுப்படுத்தப்படும் சர்வ வல்லமையுள்ள மாநிலத்தில், நமது பாரம்பரியத்தில் உள்ளார்ந்த தார்மீகக் கடமை உணர்வு, பெருமை, திருப்தி மற்றும் நிறைவேற்றத்தை அரசு வளர்த்து பயன்படுத்த வேண்டும் என்று கட்சி கருதுகிறது.
* அரசாங்கத்தின் கொள்கைகள் மக்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டுமே அன்றி, அரசின் வற்புறுத்தல் மற்றும் வர்க்கத்துக்கும் இடையிலான வெறுப்பு மற்றும் மோதலை ஊக்குவித்தல், சொத்துகளை பறிமுதல் செய்தல், கடமைகளை நிராகரித்தல் மற்றும் குடிமக்களின் சுதந்திரத்தை பலிகொடுத்து அரசாங்க அதிகாரிகளுக்கு மேலும் மேலும் அதிகாரங்களை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் அல்ல.
* ஆன்மீக விழுமியங்களை வளர்ப்பதற்கும் பராமரிப்பதற்கும், நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் உள்ள நல்லதைப் பாதுகாப்பதற்கும், வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையில் மட்டுமே சிந்திக்கும் முற்றிலும் பொருள்முதல்வாத வாழ்க்கைத் தத்துவத்தின் ஆதிக்கத்தைத் தவிர்ப்பதற்கும் கட்சி ஆதரிக்கிறது.
* அரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகளாலும், எதிர்காலத் திட்டங்கள் குறித்த அதன் மாறுபட்ட கணிப்புகளாலும் உருவாக்கப்பட்ட நிச்சயமற்ற உணர்வை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், இது நிலம், கடை மற்றும் தொழிற்சாலை இரண்டிலும் முன்முயற்சி மற்றும் தொழில்முனைவு வறண்டு போக வழிவகுக்கிறது.
சொத்துரிமை, வர்த்தகம் மற்றும் ஆக்கிரமிப்பு சுதந்திரம் தொடர்பாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் உத்தரவாதங்களை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலமும், பொது நோக்கங்களுக்காக அரசால் கட்டாயமாக கையகப்படுத்தப்பட்ட எந்தவொரு சொத்துக்கும் நியாயமான இழப்பீடு வழங்குவதன் மூலமும் மட்டுமே தனிப்பட்ட முயற்சிகளுக்கான நிலைத்தன்மை மற்றும் ஊக்கத்தை மீட்டெடுக்க முடியும்.
* தேசிய வளர்ச்சிக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளில், மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், வீட்டுவசதி மற்றும் உடைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
* ஒவ்வொரு குடிமகனும் தனது குழந்தைகளுக்கு தனது விருப்பப்படி, அதிகாரப்பூர்வ உத்தரவுகளால் தடையற்ற சுதந்திரமான சூழ்நிலையில் கல்வி கற்பிப்பதற்கான அடிப்படை உரிமையைக் கொண்டுள்ளார் என்றும், அத்தகைய கல்விக்கான வசதிகளை அரசு பாகுபாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்றும் கட்சி நம்புகிறது.
* உணவு உற்பத்தியை அதிகரிப்பதே மிக முக்கியமான தேவை என்றும், தனது நிலத்திலிருந்து அதிக மகசூலைப் பெற ஆர்வமுள்ள சுயதொழில் செய்யும் விவசாயி-உரிமையாளர் மூலம் இதை சிறப்பாக அடைய முடியும் என்றும் கட்சி கருதுகிறது. கிராமப்புற வாழ்க்கையின் நல்லிணக்கத்தை சீர்குலைக்காமல் அதிக உற்பத்திக்கான பொருள் மற்றும் உளவியல் தூண்டுதல்களை ஊக்குவிப்பதன் மூலம் விவசாய மேம்பாட்டுக்கான தீவிர திட்டத்தில் கட்சி நம்பிக்கை கொண்டுள்ளது.
நிலத்தின் உரிமை, மேலாண்மை மற்றும் சாகுபடிக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்று கட்சி கருதுகிறது, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, அவர்கள் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைவதற்குத் தடையாக இருக்கும் அனைத்துத் தடைகளையும் நீக்கி, அந்த நோக்கத்துக்காகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும், குறிப்பாக விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான மற்றும் நிலையான விலையை பராமரிக்க, இது மற்ற விலைகளுக்கு இணையாக இருக்க வேண்டும்.
* அரசு, வர்த்தகத் துறையில் நுழைந்து இலவச விநியோகத்தைத் தொந்தரவு செய்வதையும், அதன் அனைத்து வீண்செலவு மற்றும் திறமையின்மையுடன் கட்டுப்பாடுகள் மற்றும் அதிகாரப்பூர்வ நிர்வாகத்தை அறிமுகப்படுத்துவதையும் கட்சி எதிர்க்கிறது. உற்பத்தித் துறையில், உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரின் இலவச தேர்வுக்கு அடிப்படை இடம் மற்றும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
* அரசு கொள்கையின் காரணமாக தொழில் வாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ள சிறு மற்றும் சுயதொழில் செய்பவர்கள், கைவினைஞர்கள் மற்றும் வர்த்தகர்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக கட்சி பாடுபடுகிறது.
* பொதுச் செலவினங்களில் அதிக சிக்கனத்தை கட்சி ஆதரிக்கிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் நியாயமான வாழ்க்கைத் தரத்தில் தலையிடாத அளவுக்கு வரிவிதிப்பு இருக்க வேண்டும்.
* முடக்கும் வரிவிதிப்பு, அசாதாரண பற்றாக்குறை நிதி மற்றும் நாட்டின் திருப்பிச் செலுத்தும் திறனுக்கு அப்பாற்பட்ட வெளிநாட்டுக் கடன்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சித் திட்டத்தை கட்சி எதிர்க்கிறது.
* அதிகப்படியான பணவீக்கத்துக்கு வழிவகுக்கும் அனைத்து கொள்கைகளையும், சேமிப்பு, நன்கொடைகள் மற்றும் நிலையான வருமானங்களின் மதிப்பைக் குறைக்கும் அதிக விலைகளையும், நீண்டகால ஆதாயத்தை எதிர்பார்த்து தற்போதைய தலைமுறைக்கு தேவையற்ற கஷ்டங்களை உருவாக்கும் அனைத்து கொள்கைகளையும் கட்சி எதிர்க்கிறது.
* பொது நிர்வாகச் செலவு கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும்.
* தொழில்துறையின் பரவலாக்கப்பட்ட விநியோகத்துக்கான வசதிகளை ஊக்குவிக்க வேண்டும்.
* வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் முழுமையான மற்றும் நீடித்த வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகளை உருவாக்குவதை இந்தக் கட்சி ஆதரிக்கிறது. தேசிய வளங்களை மேம்படுத்துவதற்கும் வேலையின்மையைக் குறைப்பதற்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் அனைத்து வகையான தொழில்மயமாக்கல் திட்டத்தையும் ஆதரிக்கிறோம்.
* களத்திலோ, தொழிற்சாலையிலோ அல்லது அலுவலகத்திலோ உழைப்புக்கு நியாயமான ஒப்பந்தத்தையும், கூலியை உற்பத்தித்திறனுடன் தொடர்புபடுத்துவதையும், கூட்டு பேரம் பேசுவதற்காக தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கும் உரிமையையும் கட்சி ஆதரிக்கிறது.
* பாகுபாடு இல்லாமல் நியாயமான கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து அதிகாரிகளை திசை திருப்ப எந்த வகையான அரசியல் அழுத்தத்தையும் கட்சி எதிர்க்கிறது.
* கட்சி, அனைத்து விஷயங்களிலும், காந்திஜியின் முக்கிய போதனைகளை, மக்கள் மீதும், உண்மை மற்றும் அகிம்சையின் செயல்திறனில் நம்பிக்கையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
* ஒவ்வொரு அரசியல் கட்சியும் அதன் உறுப்பினர்களுக்கு கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு வெளியே உள்ள அனைத்து விஷயங்களிலும் கருத்து சுதந்திரத்தை அனுமதித்தால் ஜனநாயகம் சிறப்பாகச் செயல்படும் என்று சுதந்திரக் கட்சி கருதுகிறது.
எனவே, மேலே கூறப்பட்ட கொள்கைகளின் எல்லைக்குள் வராத அனைத்து விஷயங்களிலும் அதன் உறுப்பினர்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்குகிறது.
இவ்வாறு அந்த மாநாட்டில் சுதந்திரா கட்சியின் கொள்கைகள் வரையறுக்கப்பட்டன.
சுதந்திரா கட்சி 1962-ம் ஆண்டு தனது முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது மக்களவையில் 25 இடங்களை வென்றது. பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் சுமார் 1000 இடங்களில் போட்டியிட்டு மொத்தம் 207 இடங்களை வென்றது, மேலும் பீகார், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஒரிசா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் காங்கிரசுக்கு ஒரு முக்கிய எதிர்க்கட்சியாக அமைந்தது.
1967 பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்ட 175 வேட்பாளர்களில் 44 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பதிவான வாக்குகளில் கிட்டத்தட்ட 9.6% வாக்குகளைப் பெற்று, சுதந்திரக் கட்சி மக்களவையில் எதிர்க்கட்சியில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட 973 வேட்பாளர்களில் 256 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967-ல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. பல்வேறு கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தபோதும் பெரியாருடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர் ராஜாஜி.
சுதந்திரா கட்சியின் பல கொள்கைகளை காங்கிரஸும் கடைபிடித்ததால் சுதந்திரா கட்சி வளரவில்லை. நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் அக்கட்சியை ஆதரிக்கவில்லை. 1969-ல் காங்கிரஸ் பிளவுபட்ட பிறகு ஸ்தாபன காங்கிரஸ் கட்சி, சுதந்திரா கட்சியின் இடத்தை நிரப்பியது. துரதிர்ஷ்டவசமாக, 1971-ஆம் ஆண்டு நடந்த அடுத்த பொதுத் தேர்தலில் வெறும் 8 இடங்களை மட்டுமே பெற முடிந்ததால் சுதந்திராக் கட்சியின் எழுச்சி நின்றுவிட்டது. 1972-ல் ராஜாஜியின் மறைவு சுதந்திரா கட்சி அரசியல் வானிலிருந்து விடைபெற வழிவகுத்தது. 1974-ல் இக்கட்சி சரண்சிங் தலைமையிலான பாரதிய லோக் தளத்தில் இணைந்துவிட்டது.
(தொடர்வோம்...)
> முந்தைய அத்தியாயம்: பசும்பொன் தேவரின் இரு முக்கிய உரைகள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 70
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT