Published : 02 Nov 2025 06:05 PM
Last Updated : 02 Nov 2025 06:05 PM

பசும்பொன் தேவரின் இரு முக்கிய உரைகள் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 70

இடது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை | வலது: ஆப்பநாடு மறவர் மகாஜன மாநாடு குறித்த அறிவிப்பு

1957 பிப்ரவரி 25 அன்று சங்கரன்கோவில் பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து, மார்ச் 1-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்து பசும்பொன் தேவர் பேசியதாவது:

“சகோதரர்களே! தலைவர் அவர்களே! கூட்டத்திலே பேச ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு விபரீதச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதையும் நான் பயன்படுத்த வேண்டும். என்னை எதிர்த்து அரசியல் நடத்துகிறவன் தரம் என்ன என்பதைச் சொல்ல வேண்டி வந்து விட்டது. அது என் கடமையாகிறது.

இங்கே நாங்கள் பேசுவதற்காக இருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு நான் வருவதற்கு முன்பு, யாருடைய உபயமோ தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள் உபயம் என்று கருத வேண்டி இருக்கிறது. அவர்களுடைய உபயமாக இந்தக் கல் மேடையிலே எறியப்பட்டிருக்கிறது. இதை அடியேன் முதல்லே ஏலத்திலே விடப் போகிறேன். இங்கே உபயமா வந்த இதை ஏலத்திலே கேட்கிறவர்கள் கேட்கலாம். (5 ரூபாய், 10 ரூபாய், 15 ரூபாய், 25 ரூபாய், 50 ரூபாய் ஒருதரம், 50 ரூபாய் இரண்டு தரம், 50 ரூபாய் மூன்று தரம், 50 ரூபாய். இதை ஏலத்தில் எடுத்தவர் பெயர் குளம் காந்திக் கோனார்).

இன்று அடியேன் உங்களை இந்த நேரத்திலே சந்திப்பதன் நோக்கம், வருகிற மார்ச்சு மாதம் நான்காம் தேதி நடைபெறுகிற தேர்தலில், ஓட்டர் மகாஜனங்கள் என்ன செய்தால் தேசத்துக்கு நல்லது என்பதை ஞாபகப்படுத்துவதற்குத்தான் அடியேன் உங்கள் முன்னால் நிற்கிறேன்.

இப்போ புதிதாக நான் மேடை ஏறி ஓட்டு கேட்கவில்லை. 21 ஆண்டுகளுக்கு முன்பே, 1936 ஆம் வருடத்தில் தேசிய மகாசபை முதன்முதலாக சட்டசபைக்குப் போட்டியிட்ட காலத்திலே, மஞ்சள் பெட்டிக்காக அப்போது அடியேனும் பாடுபட்ட காலத்திலே, சத்தியமூர்த்தி ஐயர் அவர்களுடன் தமிழ்நாடு பூராவும் அடியேன் சுற்றுப்பயணம் செய்து, மஞ்சள் பெட்டியை ஜெயிக்கச் செய்து, அதற்குப் பெரிய வாழ்வு தேட பாடுபட வேண்டி இருந்தது.

அந்தக் காலத்திலே இற்றைக்குப் பெரிய பெரிய பதவிகளிலே அமர்ந்திருக்கின்ற காங்கிரஸ்காரர்கள் எல்லாம், பெரும்பாலும் சாதாரணத் தொண்டனாக, நாங்கள் ஏவிய வேலைகளைக் கேட்பவர்களாக இருந்தார்கள். அவர்தான் இற்றைக்கு பிரதம மந்திரி பதவியிலே அமர்ந்து இருக்கிறார்.

அரசியலிலே பழகியவர்களுக்கு இந்தச் சரித்திரம் நன்கு விளங்கும். அன்று அவ்வாறு சிரமப்பட்டு இந்த அரசியலில் ஒரு பெரிய வெற்றி காண வேண்டி, அப்போது கிராமம் கிராமமாக காங்கிரஸை ஆதரித்த அடியேன், இப்போது காங்கிரஸ்காரர்களை எதிர்த்து, காங்கிரஸை எதிர்த்து நிற்கும் நிலைமை.

அற்றைக்கு அடியேன் முதன் முதலிலே அரசியலிலே பாடுபட வேண்டும் என்று, அந்தக் காலத்திலே தேர்தலிலே போட்டியிட வேண்டும் என்று, அந்தக் காலத்திலே ஒரு நிர்பந்தம் இருந்தது. எங்கள் குலத் தலைவனாகிய ராமநாதபுரம் ராஜாவை எதிர்க்க வேண்டி இருந்தது.

அக்காலத்திலே என் தகப்பனார், ராஜா அவர்களோடு சேர்ந்து கொண்டு ‘என் மகனுக்கு ஓட்டுப் போடாதீர்கள், அவன் நம்முடைய குலத் தலைவன் ராஜாவை எதிர்த்து, காங்கிரஸ் பெயரிலே போட்டியிடுகிறான். இமயம் முதல் குமரி வரையில் உள்ள எல்லா தலைவர்களுமே இராமலிங்க விலாசத்திற்கு வந்து, அவருக்கு மரியாதை செலுத்திப் பணிந்து போகிறார்கள். இப்படிப்பட்ட மதத் தலைவனை எதிர்க்கிறான். ஆகையால் அவனுக்கு ஓட்டு அளிக்க வேண்டாம். ராஜாவுக்கே ஓட்டு அளியுங்கள்’ என்று என் தகப்பனாரே பிரச்சாரம் பண்ணினார்.

ஊரை எதிர்த்துப் போனதினாலே பலவிதமான கஷ்ட நிலைமை அடியேனுக்கு. அதோடு கூட ஆங்கிலேயன் சட்டம் அடியேனுக்கு வாய்ப்பூட்டு, பிரசங்கம் செய்யக் கூடாது என்று தடுத்து இருந்த நிலைமையிலே, மவுனமாக அந்தத் தேர்தல் நடந்து, வெற்றி காண வேண்டிய இருந்தது.

அப்படியிருக்கிறபோது அதையும் சகித்து, உலக சரித்திரத்திலே இல்லாத முறையிலே ஓட்டர்களைப் பார்த்து ‘ஓட்டுப் போடுங்கள்’ என்று கேளாமலே அந்த வெற்றி அடியேனுக்குக் கிடைத்தது. சிறையிலே இருந்து கொண்டு, ‘ஓட்டுப் போடுங்கள்’ என்று கேளாமலே, ஓட்டு நடந்து வெற்றி கிடைத்திருக்கும் வாய்ப்பு அரசியல் சரித்திரத்திலேயே என்னுடையது ஒன்றுதான். வேறு எங்கும் அப்படி இதுவரை சரித்திரத்திலே இல்லை.

இந்த நிலைமையிலே பலத்தை மறந்து, வாய்ப்பை மறந்து, காங்கிரஸ்காரர்கள் பதவிக்காக மானத்தை விட்டு நடப்பதை எதிர்த்து, காந்தியடிகள் கண்ட ராமராஜ்யத்துக்காகப் பாடுபட அடியேன் இன்று காங்கிரசை எதிர்க்கிறேன். வகுப்புத் துவேஷிகளை எதிர்த்து ஆஸ்தீக தர்மம் தழைக்கப் பாடுபடுவேன்.

பதவியை அடியேன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று கருதியது கிடையாது. காரணம் என்ன? சாஸ்திரம் தெரிந்தவன் நான். பதவி என் வீட்டிலே இருக்கிறது. பதவிக்காக இற்றைக்குக் காங்கிரஸ்காரர்கள் மாதிரி புரட்டு செய்கிறவன் அல்ல அடியேன்.

புலிக் கூட்டத்தினிடையிலே வந்த ஒரு நரி, நிறத்தால் புலி போல் தோன்றினாலும், அது கத்த ஆரம்பித்தவுடன் அது புலி அல்ல என்று தெரிந்து விடும். புலியைப் போல உறுமத் தெரியாமல் ஊளையிட்டால் அது புலி அல்ல என்று விரட்டப்படுவது போல, இற்றைக்குக் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகம் பேசுகிறார்கள்.

“நாங்கள் தான் ஓட்டுரிமை கொடுத்திருக்கிறோம். எங்களுக்கு ஓட்டுப்போட வேண்டும்” என்று சொல்கிறார்கள். சரி தேர்தலுக்கு முன்னால் என்ன செய்தார்கள்? சென்ற தேர்தலிலே மக்கள் என்ன செய்தார்கள்? காங்கிரஸ் மந்திரிகள் அவ்வளவு பேரையும் தோற்கடித்தார்கள். அதிலே இருந்து மக்கள் என்ன செய்து காட்டினார்கள்?

ஜனநாயக முறைக்கு மாறாக, தவறாக காங்கிரஸ் நடந்து கொள்கிறது என்று சட்டப்பூர்வமாக, ஒழுங்காக மக்கள் காட்டினார்கள். மக்கள் செய்ய வேண்டிய கடமையைக் கண்ணியமாகச் செய்தார்கள். இந்தக் கடமையை அவர்கள் செய்த உடனே மானத்தோடு ஒதுங்கினார்களா? தோற்கடித்தப் பிறகும், ஜனநாயகத்தைக் கேலி செய்யும் முறையிலே பதவியிலே உட்கார்ந்தார்கள். எந்த மக்கள், சட்டசபையிலே தீர்மானித்து, அதன்படி தேர்தலிலே ஜெயித்தவர்கள் வரவேண்டுமென்று தீர்மானித்தார்களோ, அந்த முறையை அவமதித்தது காங்கிரஸ். இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

இற்றைக்கு காங்கிரஸ் பேரால் நிற்பவர்களிலே பெரிய நிலப் பிரபுக்கள் 52 பேர், பெரிய மில் முதலாளிகள் 14 பேர், பெரிய ஆலை முதலாளிகள் 21 பேர், பஸ் முதலாளிகள் 15 பேர்.

அந்தக் காலத்திலே காந்தியார் காங்கிரசா, காந்தியார் அல்லாத காங்கிரசா? என்று காங்கிரசில் பிளவு ஏற்பட்டது. அப்படி பிளவுபட்டவுடனே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சாதாரணமாக பாமரர்கள் காந்தி பேரைச் சொல்லிக் கொண்டு தீவிரவாதிகளைத் தூற்ற ஆரம்பித்தனர்.

எத்தனையோ பொய் புரட்டுகள் நடந்தன. அதன் பின்னால் காந்தியார் பல போராட்டங்களை நடத்தினபோது, தீவிரவாதிகள் இரண்டாவது உலக யுத்தத்தை எதிர்பார்த்து ஆறு மாத நோட்டீஸ் கொடுத்தார்கள். அதே முறைப்படி யுத்தம் வந்தது. இந்தச் சந்தர்ப்பத்திலே எங்களையெல்லாம் ‘இந்திய பாதுகாப்புச் சட்டம்’ என்ற ஒரு சட்டம் மூலம் கட்டுப்படுத்தினார்கள்.

‘மதுரை எல்லையை விட்டு போகக் கூடாது, மதுரையிலே இருந்தாலும் இந்தக் கூட்டத்திலே பேசக் கூடாது. பேசாமல் இருப்பதோடு கூட யார் பேசுவதையும் நின்று கேட்கக் கூடாது. அதற்கும் மேலே தெருவிலே நடமாடுகிறபோது நான்கு பேருக்கு மேலே சேர்ந்து கூட்டமாக இருக்கக் கூடாது, எனக்கு மேலே மூன்று பேர் இருக்கலாம். அதற்கும் மேலே எந்த வீட்டிலே, எந்தத் தெருவிலே இருக்கிறேன் என்று சென்னை கலெக்டருக்குத் தினமும் காலையிலே தெரிவித்துக் கொண்டிருக்க வேண்டும்’ என்று ஒரு சட்டம் எனக்குக் கொடுக்கப்பட்டது.

ஜனநாயகத்திற்காகப் பாடுபடுவதாகச் சொல்லும் வெள்ளைக்காரன், மனிதனை மிருகம்போல பாவித்து, தன்னுடைய வாழ்விற்காக இந்தியாவைப் பாதுகாக்கிறதாகச் சொல்லிவிட்டு, இப்படி மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி, மிருக பலத்தின் மூலம் பயமுறுத்த நினைத்தான். இவன் சட்டத்தை மதிக்காமல் என் ஊருக்குப் புறப்பட்டு விட்டேன்.

அப்போது ஆயுதபலம் தாங்கிய ரிசர்வ் பட்டாளத்தை, ஜில்லா கலெக்டர் உத்தரவின் பேரில், ஜி.எஸ்.டி. தலைமையில் என்னைக் கைது செய்து வந்தது. அதிலும் கொஞ்சம் பெரிய ஊரிலே கைது செய்தால் விளைவு விபரீதமாக இருக்கும் என்று எண்ணி, ஒரு கிராமத்திலே கைது செய்து காவல் கைதியாக கொண்டு போனார்கள். ஆங்காங்கு இருந்த தீவிரவாதிகள் எல்லாம் சுபாஷ் பாபு அவர்கள் அற்றைக்குத் தப்பிய பின்னாலே கைது ஆனார்கள். ஆங்காங்கு கலவரங்கள், போராட்டங்கள் ஆரம்பித்த உடனே காந்தியார் பார்த்தார். அரசியல்வாதிகளை ஏமாற்றத் தனிப்பட்டோர் சத்தியாக்கிரகம் ஆரம்பித்தார்.

தேர்தலிலே ஓட்டுப்போட்டால், ‘எதிர்க்கட்சி என்ன செய்தது? என்று கேட்கக் கூடாது. எதிர்க்கட்சியிலே போனவர்கள் என்ன தவறு செய்தார்கள்’ என்றுதான் கேட்க வேண்டும். அரசாங்கத்திலே யார் லஞ்சம் வாங்குகிறார்கள்? பொய் புரட்டுப் பேசுகிறார்கள் பதவியை விலைக்கு விற்கிறார்கள் என்று கண்டுபிடித்து, பொது மக்களுக்குச் சொல்வது எதிர்க்கட்சியிலே இருக்கிறவன் வேலை. இதைச் செய்தாரா என்றுதான் பார்க்க வேண்டும்.

எதிர்க்கட்சிக்காரன் என்ன செய்ய முடியுமென்று பேசலாமா, எனக்குத் தெரியாதா? இற்றைக்கு காங்கிரஸிலே இருக்கின்றவர்களிலே எவ்வளவு பேருக்குச் சொத்து இருந்தது? இன்று எவ்வளவு இருக்கிறது? கணக்குச் சொல்ல முடியுமா?

நான் சாதித் துவஷேத்தைக் கிளப்புவதாகப் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். நானல்ல சாதித் துவேஷத்தைக் கிளப்புவது. 1936 எலக்ஸனிலே காமராஜர் நிற்கிற இடத்திலே, அவருக்கு ஆபத்து ஏற்பட இருந்த சமயத்திலே அடியேன் அவருக்குப் பந்தோபஸ்து கொடுத்தேன். அப்போது அவரைக் காப்பாற்றியவன் அடியேன். இது வரலாறு. இதை மறைத்து என்னை வகுப்புவாதி என்று சொல்வதிலே என்ன உண்மை இருக்கிறது?

விருதுநகர் வியாபாரி சமாச்சாரம் தெரிஞ்ச ரகசியமில்லே. இதை மறைக்கலாமா? இற்றைக்கு அரசியலையும் அப்படி கெடுக்கப் பார்க்கிறீர்கள். பத்து வருஷமா இப்படித்தானே அரசியலிலே காலம் தள்ளினீர்கள். இனிமேல் நடக்க விடுவோமா? எவ்வளவு சீக்கிரம் காமராஜர் பதவியை விட்டுப் போறாரோ அவ்வளவுக்கவ்வளவு அவருக்கு நல்லது. நாட்டுக்கும் நல்லது.

இதற்கு மேலே எனக்கு ராசபாளையத்திலே கூட்டம் இருக்கு. இப்பவே 11.30 மணி. இத்தோடு என் பிரசங்கத்தை முடித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு தேவர் தன் பேச்சை முடித்துக் கொண்டார்.

அதற்குப் பிறகு மறுநாள், மார்ச் 2-ம் தேதி கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தமது வேட்பாளரை ஆதரித்து பசும்பொன் தேவர் பேசியதாவது:

“தாய்மார்களே, சகோதரர்களே, இந்தப் பிராந்தியத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய அடியேன் காலையிலேயே வருவதாக இருந்தேன். ஆனால் நடுவெயிலில் வந்திருக்கிறேன். காரணம் அடியேன் ஒரு இடத்தில் மாத்திரம் பிரச்சாரம் செய்கிறவன் அல்ல. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை சுற்றுப் பிரயாணம் செய்து வருகிறேன்.

சென்ற டிசம்பர் மாதம் இறுதியிலிருந்து, அடியேன் பல இடங்களில் கூட்டங்களில் பேசி வருகிறேன். அனேகமாக தினந்தோறும் இரவு 12 மணி வரையில், சில நாட்களில் இரவு முழுவதும் வேலை செய்ய வேண்டியதாக இருந்தது. அடியேனுடைய தொண்டை சப்தத்திலிருந்து நீங்கள் புரிந்து கொள்வீர்கள். குறிப்பிட்ட நேரப்படி பல இடங்களுக்கு வர முடியால் போய்விடுகிறது.

காலங்கடந்த வேளையில் மக்களைச் சந்திக்க வேண்டியதாகி விடுகிறது. இந்தக் கடும் வெயிலில் உங்களைக் காக்க வைத்ததற்காக அடியேனை மன்னிக்க வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன். அற்றைக்கு அடியேன் இராமநாதபுரம் ராஜாவை எதிர்த்து தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஜெயித்திருக்கிறேன். அற்றைக்கு விருதுநகரில் ஓட்டுச் சாவடியிடம், காமராஜருடைய வேட்டியை சில ஆட்கள் சேர்ந்து பிடுங்கிக் கொண்டு போய்விட்டார்கள்.

தகவல் கிடைத்ததும் விருதுநகருக்கு உடனே சென்று, காமராஜருக்கு ஏற்பட்ட ஆபத்திலிருந்து விடுவித்திருக்கிறேன். கடைசியாக காமராஜர்தான் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வி.வி.ராமசாமி நாடார் தோல்வியுற்றார். அடியேன் அந்தக் காலத்தில் காமராஜருடைய வெற்றிக்காகப் பாடுபட்டு இருக்கிறேன். காங்கிரஸின் கவுரவத்தைக் காப்பாற்றி இருக்கிறேன். அற்றைக்குக் காமராஜரை ஒரு ஓட்டர் ஆக்கியதும் அடியேன்தான்.

இந்த காங்கிரஸ் ஆட்சியில் விவசாயிகளுடைய வாழ்க்கை, வியாபாரிகள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உழுது பயிர் செய்பவர்கள் விவசாயிகள். ஆனால் அவைகளுக்கு மார்க்கெட்டில் விலையை நிர்ணயிக்கிறவர்கள் விருதுநகரில் இருக்கிற வியாபாரிகள்தான். உழைப்புக்குத் தகுந்த ஊதியம் வியாபாரிகளுக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலைமையைத்தான் காமராஜர் ஆட்சியில் நாம் பார்க்கிறோம்.

இந்தத் தேர்தலில் பல பெரிய பஸ் முதலாளிகள், மில் சொந்தக்காரர்கள், பண மூட்டைகள் காங்கிரஸ் டிக்கெட்டில் போட்டியிட நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இவர்களுடைய ஆதரவில்தான் காமராஜர் ஆட்சிப் பீடத்தில் அமருவதற்குத் திட்டமிட்டிருக்கிறார். இந்த நிலைமையில் காமராஜர் சுற்றுப்பயணம் செய்கிற காலத்தில், அவரை யாரும் சரியாக வரவேற்கவில்லை.

சில கிராமங்களில் காமராஜர் வரப் போகிறார் என்று தெரிந்தவுடன் கிராமத்தை விட்டு மக்கள் வெளியே போய்விடுகிறார்கள். மீதி இருக்கிற ஆட்களைக் காமராஜர் பார்க்கிறார்; அவர்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்கிறார். ஏழை அரிஜன மக்கள் ‘குடி இருப்பதற்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்’ என்று அவர்கள் காமராஜரைப் பார்த்துக் கேட்கிறார்கள். உடனே காமராஜர், அவர்களுடைய வேண்டுகோளைக் கவனிப்பதாகச் சொல்கிறார்.

ஆனால் உண்மையில் குடியிருக்க வீடில்லாத அரிஜனங்களுக்குத் தேவையான வீடுகளை, தேர்தல் காலத்திற்குள் காமராஜரால் கட்டிக் கொடுக்க முடியுமா? இந்தத் திட்டத்தை மத்திய சர்க்கார் தான் நிறைவேற்றி வருகிறது. இந்தத் திட்டத்தை எடுத்துக் கொள்வதற்கு முன் அசெம்பிளியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதில்லையா? அப்படி இருக்க இந்தத் திட்டத்தை உடனடியாக எப்படி நிறைவேற்ற முடியும்? ஒரு பொறுப்புள்ள மந்திரி இந்த மாதிரி பதில் சொல்லலாமா? இது மக்களை ஏமாற்றும் வித்தைதானே?

ஒரு மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம். ஆனால் கங்கையே சூதகமானால் எங்கே போய் மூழ்குவது? சாத்தூர் தொகுதியில் காமராஜர் வெற்றிக்கு காங்கிரஸ்காரர்கள் மக்களுடைய ஓட்டுக்களைப் பணம் கொடுத்து வாங்க முயற்சி செய்கிறார்கள். இந்த தில்லுமுல்லுகளை முறியடித்து, இந்த ஆட்சியை அகற்ற எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு உங்களை கேட்டுக் கொண்டு, இந்தப் பிரசங்கத்தை முடித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு பசும்பொன் தேவர் பேசினார்.

ஆப்பநாடு மறவர் மகாஜன மாநாடு

பசும்பொன் தேவர் பெருமகனாருக்கும், கர்மவீரர் காமராஜருக்கும் இடையே நடந்த தேவையற்ற சர்ச்சைகள் பொதுஜனங்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை. இருவரும் இருதுருவங்களாக மோதிக் கொண்டாலும், ஆரம்ப கட்டத்தில் காமராஜருக்கு ஆதரவாகவும், அவரை வெற்றியடையச் செய்வதில் உறுதுணையாகவும் பசும்பொன் தேவர் இருந்துள்ளார் என்பது கடந்த கால சம்பவங்களால் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரை சட்டம் மறவர் சமுதாய மக்களை ரணப்படுத்தியது. அதிலும் குறிப்பாக மிகவும் பாதிக்கப்பட்டவர் பசும்பொன் தேவர். எனவே அந்தச் சட்டத்தை நீக்க கடுமையாகப் போராடினார். இதை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் ஆப்பநாடு மறவர் மகாஜன மாநாடு, 1934-ம் ஆண்டு மே 12, 13-ம் தேதிகளில் நடத்தப்பட்டது.

மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு தலைவராக சேலம் வரதராஜுலு நாயுடு இருந்தார். அவருடன் பசும்பொன் தேவர், சசிவர்ணத் தேவர், நவநீத கிருஷ்ண தேவர், பெருமாள் தேவர் இணைந்து இம்மாநாட்டை நடத்தினார்கள். குற்றப்பரம்பரைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இம்மாநாட்டில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

சேலம் வரதராஜுலு நாயுடுவைப் பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளேன். அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தபோது, காங்கிரஸ் கமிட்டி செயலாளராக பெரியார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தமிழ்நாடு’ என்ற தனித்தமிழ் தினசரி ஏட்டையும் நடத்தினார். பிற்காலத்தில் அந்த ஏடு மதுரை கருமுத்து தியாகராஜ செட்டியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ என்ற ஆங்கில தினசரி ஏட்டையும் தொடங்கி நடத்தினார். அதுவும் பின்னாளில் சந்தானத்திடம் வழங்கப்பட்டு, பின்னர் ராம்நாத் கோயங்காவிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்திய விடுதலைக்கு முன், இலங்கை சென்று அங்குள்ள மலையகத் தமிழர்கள், ஈழப் பூர்வீகத் தமிழர்கள் எவ்வாறெல்லாம் பிரிட்டிஷாரால் அவதிப்படுகிறார்கள் என்று அறிக்கை தயாரித்து மகாத்மா காந்தியிடம் ஒப்படைத்தார். ஒருசமயம் மகாத்மா காந்தியிடம், ‘தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் எப்படியிருக்கிறது?’ என்று கேட்கப்பட்டபோது, ‘அது நாயுடு, நாயக்கர், முதலியார் கைகளில் இருக்கிறது’ என்று பதிலளித்தார். அதாவது நாயுடு என்றால் வரதராஜுலு நாயுடு, நாயக்கர் என்றால் பெரியார், முதலியார் என்றால் திரு.வி.கலியாண சுந்தரனார் என்பதை குறிப்பிட்டுச் சொன்னார்.

அன்றைய சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் தலைமகன்களாக ராஜாஜி, பசும்பொன் தேவர், வரதராஜுலு நாயுடு, திரு.வி.கலியாண சுந்தரனார், பெரியார் போன்றோர் இருந்துள்ளனர். இவர்களுக்கு முன்னோடியாக வ.உ.சிதம்பரம் பிள்ளை இருந்தார். அதேபோல், நேதாஜி, திலகர், லாலா லஜபதிராய், பிபின் சந்திர பால் ஆகியோரை மிகவும் நேசித்து தங்கள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர்கள் பசும்பொன் தேவர், சேலம் வரதராஜுலு நாயுடு. ஒருபுறம் காமராஜரை வரதராஜுலு நாயுடு ஆதரித்தாலும், பசும்பொன் தேவருக்கு உற்ற சகோதரராகவும் விளங்கினார்.

‘வடக்கே கீழக்கரை, மேற்கே விருதுநகர் அருகில் உள்ள சூளக்கரை எனது எல்லை’ என்று பசும்பொன் தேவர் அடிக்கடி சொல்வதுண்டு. கேரள மாநிலம் மலப்புரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காயிதே மில்லத் எவ்வாறு நேரடியாகச் சென்று வாக்கு கேட்கவில்லையோ, அதுபோல, தான் போட்டியிட்ட நாடாளுமன்றத் தேர்தலிலோ, சட்டமன்றத் தேர்தலிலோ நேரடியாக வாக்கு கேட்க மாட்டார் பசும்பொன் தேவர். மக்களோடு மக்களாக இருப்பார்.

‘எனக்கு வாக்களியுங்கள் என்று மக்களிடம் நான் ஏன் கேட்க வேண்டும். என்னுடைய செயல்பாட்டைப் பார்த்து மக்களே எனக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறி, அவ்வாறே தேர்தலில் வெற்றியும் பெற்றவர் தேவர். நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய ஆங்கில உரை அற்புதமானது. ஆஜானுபாகுவான உடல்வாகு, நீண்ட தலைமுடி, நெற்றி நிறைய திருநீறு, குங்குமப்பொட்டுடன் கூட்டத்தில் கம்பீரமாக அவர் பேசும்போது, சிங்கம் கர்ஜிப்பதைப் போல் இருக்கும். அதனால்தான், நேதாஜி தனது பார்வார்டு பிளாக் கட்சியின் சின்னமாக சிங்கத்தை தேர்வு செய்தார் போலும்!

அனைத்து சாதி மக்களையும் அரவணைத்துக் கொண்டவர் தேவர். பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக இடங்களில், ஒடுக்கப்பட்ட மக்களை இடம்பெறச் செய்தார். இதுபற்றி முன்பே கூறியிருக்கிறேன். பசும்பொன் தேவர் தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலிலேயே தன்னிகரற்ற தலைவராக ஒளிர்ந்திருக்க வேண்டியவர். நான் ஏற்கெனவே கூறியது போன்று தகுதியே தடைதான்... ஒளிர வேண்டியவர்கள், குடத்தில் இட்ட விளக்காக ஆகி விடுகிறார்கள்.

தன்னுடைய அக்னி வார்த்தைகளால் மக்களை போராட்டக் களத்துக்குக் கொண்டு வந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களையும், பட்டியலின மக்களையும் சகோதரர்களாக நேசித்தார் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆலயப்பிரவேசம்.
நான் பல தலைவர்களை நேசித்தேன். அவர்களுள் முக்கியமானவர்கள் காந்திஜி, நேதாஜி, சர்தார் படேல், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி, அம்பேத்கர், தமிழகத்தில் ஓமந்தூரார், ராஜாஜி, குமாரசாமி ராஜா, பசும்பொன் தேவர், காமராஜர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள்தான் என் அரசியல் ரோல் மாடல்கள்.

பசும்பொன் தேவரின் சட்டமன்ற, நாடாளுமன்ற உரைகளைப் படித்துப் பார்த்தால் அவருடைய ஆழ்ந்த கருத்துகள், சிந்தனைகள், நாம் அறியாத பல விடயங்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி நம்மை தெளிவுபடுத்தும் என்றால் அது மிகையில்லை...

அனைத்து சமுதாய மக்களுக்காகவும் போராடிய தலைவர் பசும்பொன் தேவர் என்பதால்தான், இன்றைக்கு அவரது நினைவிடத்தில் நடைபெறும் குருபூஜை நிகழ்வில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் மரியாதை செலுத்தி அவரைப் போற்றுகின்றனர்.

(தொடர்வோம்...)

> முந்தைய அத்தியாயம்: அரசியல் களத்தில் காமராஜருக்கு எதிராக பசும்பொன் தேவர் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 69

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x