Published : 01 Nov 2025 06:02 PM
Last Updated : 01 Nov 2025 06:02 PM
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கும், காமராஜருக்கும் இடையே சில அபிப்பிராய பேதங்கள் இருந்து வந்தன. அதற்கான காரணம், சந்தர்ப்பச் சூழல்களை நம்மால் அறிய முடியவில்லை. இருபெரும் தலைவர்களுக்கு இடையேயான முரண்பாடுகளால் தமிழக அரசியல் களம் தர்மசங்கடமான நிலைக்கு ஆட்பட்டது என்றால் அது மிகையல்ல.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் பசும்பொன் தேவர். ஆரம்ப காலத்தில் காமராஜருக்கும், பசும்பொன் தேவருக்கும் நல்ல இணக்கமான சூழல் இருந்து வந்துள்ளது. விருதுநகர் மன்றத் தலைவராக காமராஜரை வெற்றி பெற வைப்பதற்கான வேலைகளில் பசும்பொன் தேவர் தீவிரமாக இறங்கி களப்பணியாற்றினார். இதற்கிடையே ஜவஹர்லால் நேருவுக்கும், பசும்பொன் தேவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமே, காமராஜருடனான கருத்துவேறுபாடுகளுக்கு காரணம் என்று அப்போது சொல்லப்பட்டது உண்டு.
காங்கிரஸில் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி, 1939-ம் ஆண்டு பார்வர்டு பிளாக் கட்சியை நேதாஜி தொடங்கினார். அதைத்தொடர்ந்து, நேதாஜி சுபாஷ் சந்திர போஸை தலைவராக ஏற்றுக் கொண்டார் பசும்பொன் தேவர். இதனால் ‘தமிழகத்தின் நேதாஜி’ என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
1957-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழகத்தில் பஸ் உரிமையாளர்களுக்கும், ஆலை உரிமையாளர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் தேர்தலில் போட்டியிட காமராஜர் சீட் வழங்கினார் என்ற குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சிக்குள் பூதாகரமாக வெடித்தது. இதனால் காங்கிரசில் இருந்து விலகிய நிர்வாகிகள் சிலர் சீர்திருத்த காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களை ஆதரித்து பசும்பொன் தேவரும், ராஜாஜியும் திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை பிரச்சாரம் செய்தார்கள்.
பசும்பொன் தேவரைப் பற்றி முக்கியமான ஒரு விடயத்தை இங்கே சொல்லியாக வேண்டும். பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் சட்டமன்றத் தேர்தலில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 10 பேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கி அவர்களில் 8 பேரை வெற்றி பெற வைத்தார் தேவர். அந்த வகையில் எங்கள் பகுதியில் ஒட்டப்பிடாரத்தில் ஆர்.முத்தையா வெற்றி பெற்றார். பின்னாளில் அவர் திமுகவில் இணைந்து விட்டார். என்னுடைய கோவில்பட்டி தொகுதியில் தியாகி சுப்பா நாயக்கர், பசும்பொன் தேவரின் தீவிர பிரச்சாரத்தில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.
மேலும், தேவரின் பார்வர்டு பிளாக் இயக்கத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மொட்டையக் குடும்பர் (முதுகுளத்தூர்), தோப்படைப்பட்டி ஏ.பெருமாள் குடும்பர் (முதுகுளத்தூர், திருச்சுழி), மொக்கையன் (ராஜபாளையம்), விருதுநகர் ஏ.வேலு குடும்பர் (பார்வர்டு பிளாக் மாநில துணைத் தலைவர்), துரைராஜ் (இமானுவேலின் தம்பி), ஜி.பாலச்சந்திரன் (இமானுவேலின் மைத்துனர்), பசும்பொன் சோலை குடும்பர் ஆகியோர் எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றனர். இவர்களைப் போன்ற எண்ணற்றோர் பார்வர்டு பிளாக் கட்சியில் தொண்டாற்றினார்கள்.
1939-ம் ஆண்டில், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் செல்ல வைத்தியநாத ஐயர் முடிவு செய்தார். ஆனால் எங்கு பார்த்தாலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் ஆலயப்பிரவேச நடவடிக்கைக் குழு மதுரை எட்வர்ட் ஹாலில் கூடியது. ராஜாஜி, வைத்தியநாத ஐயர், என்.எம்.ஆர். சுப்புராமன் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களோடு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரும் கலந்து கொண்டார். ஆலயப்பிரவேசம் அமைதியாக நடைபெற தேவரின் ஒத்துழைப்பும் உறுதிமொழியும் வேண்டும் என அவர்கள் கேட்டனர்.
அதற்கு பசும்பொன் தேவர், “என் சகோதரர்களான தாழ்த்தப்பட்ட மக்கள், அன்னை மீனாட்சி கோயிலில் ஆலயப்பிரவேசம் செய்கையில் அவர்களுக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பையும் என் மக்கள் தருவார்கள். அன்னையை வணங்கி, அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்” என்றார்.
மேலும், “ஆலயப்பிரவேச எதிர்ப்பாளர்களை நான் எச்சரிக்கிறேன். வைத்தியநாத ஐயர், ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அந்தக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன்” என்று ஒரு துண்டு பிரசுரம் மூலம், தேவரின் அறிக்கை வெளியானது. அதைத் தொடர்ந்து ஆலயப் பிரவேசம் அமைதியாக நடந்தது. பின்னாளில் தன்னுடைய சொந்த நிலத்தில் இருந்து 100 ஏக்கர் நிலப்பரப்பை விவசாயம் செய்வதற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பசும்பொன் தேவருக்கும் காமராஜருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகளுக்குப் பின்னர், 1957 பிப்ரவரி 25 அன்று சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் சீர்திருத்தக் கட்சி வேட்பாளரை ஆதரித்து பசும்பொன் தேவர் பேசியதாவது:
“சகோதரர்களே! அடியேன் இந்தக் கூட்டத்தில் மாலை நான்கரை மணிக்கே கலந்து கொள்வதாக ஏற்பாடாகி இருந்தது. காலதாமதத்துக்கு காரணம் அடியேன் சுற்றுப் பயணத்தின் வழியில், பல கிராமங்களில் தங்கி, பல மக்களைச் சந்தித்தும், சில இடங்களில் கொஞ்சம் பேச வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டு விட்டது. இவ்வளவு நேரம் உங்களைக் காக்க வைத்ததற்காக அடியேனை மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்போது அடியேன் உங்கள் முன் நிற்பதன் நோக்கம், வரப் போகிற மார்ச் மாதத்தில் இங்கே நடைபெறவிருக்கும் தேர்தலில் நீங்கள் என்ன செய்தால் உங்களுக்கும், நாட்டுக்கும் நலமாக இருக்கும் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். இந்த மாதிரி பிரம்மாண்டமான கூட்டங்களில், 1936-ஆம் ஆண்டில் காங்கிரஸ் தேர்தலில் நின்ற காலத்தில், நான் தமிழ்நாடு பூராவும் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறேன்.
காமராஜருக்கு ஓட்டுரிமை வாங்கித் தந்தேன்
அன்றைக்கு ராஜாஜியும் சத்தியமூர்த்தியும் பதவியில் இருந்திருக்கிறார்கள். இன்றைக்கு முதன் மந்திரியாக இருக்கும் காமராஜர்தான் நாங்கள் சொல்லிவந்த வேலைகளை அவ்வப்போது செய்து வந்தார். அற்றைக்கு காமராஜர் ஒரு ஓட்டர் ஆவதற்குக் கூட லாயக்கு அற்ற நிலைமையில் இருந்திருக்கிறார். அவரை அடியேன் ஓட்டர் ஆக்க வேண்டுமென்று கருதினேன். பழங்காலத்துச் சட்டம் என்னவென்றால் வயது வந்தவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. சொத்து வைத்திருக்கிறவர்கள் அல்லது வரி செலுத்துகிறவர்களுக்குத்தான் ஓட்டுரிமை இருந்தது. வேறு வகையில் ஓட்டுரிமை கிடையாது.
ஆகவே அன்றைக்கு காமராஜர் பெயர் ஓட்டர் லிஸ்டில் இல்லை. அவருடைய தாயார் பெயரில் வீடு ஒன்று இருந்தது. அதனால் அந்த அம்மாவிடம் சென்று, அந்த அம்மா பெயரில் இருந்த வீட்டை தன் மகன் பெயருக்கு மாற்றி எழுதி வைத்து விடும்படி சொன்னேன். அந்த அம்மாள் அப்படிச் செய்ய மறுத்து விட்டார்கள். “எனக்கு ஒரு பெண் பிள்ளை இருக்கிறாள். அவள் பெயருக்கு அந்த வீட்டை எழுதி வைத்தால்தான் நல்ல குடும்பத்தில் பிறகு அவளைக் கட்டிக் கொடுக்க முடியும். அவன் வேலை வெட்டியில்லாமல், பொருள் சேர்க்கத் தெரியாமல் ஊரைச் சுத்துகிறவனாயிற்றே. அவனுக்கு வீட்டை எழுதி வைத்துவிட்டு பிறகு என்ன செய்கிறது?” என்று அந்த அம்மாள் சொல்லிற்று.
அதனால் அடியேன் ஒரு வெள்ளாட்டை வாங்கி, அதன் கழுத்தில் பில்லை கட்டி, அதற்கு முனிசிபாலிடியில் காமராசரின் பெயரில் வரி செலுத்தி, அந்த ரசீதைக் காட்டித்தான் காமராஜருக்கு ஓட்டு உரிமை வாங்கித் தந்தேன். இது சரித்திரம் கண்ட உண்மை.
அன்றைக்கு தேர்தலுக்கு நிற்க நூறு ரூபாய் டெபாசிட் கட்டி, காங்கிரஸ் கமிட்டிக்கு அடியேன் மனு ஒன்றும் போடவில்லை. ‘தேர்தலுக்கு அபேட்சா பத்திரம் தாக்கல் செய்ய வாருங்கள்’ என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடமிருந்து அடியேனுக்கு ஒரு தந்தி வந்தது. மதுரை வக்கீல் கே.ஆர்.வெங்கட்ராமய்யரிடம் இருந்தும் ‘தேவர் தேர்தலில் நிற்க வேண்டும்’ என்று தந்தி வந்தது.
காங்கிரசின் மானத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ராமநாதபுரம் ராஜா சேதுபதியை எதிர்த்து அடியேன் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்று தெரிவித்திருந்தார்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடமிருந்து நூறு ரூபாய் மணியார்டர் செய்திருப்பதாகத் தகவல் வந்தது.
அப்போது நிலவரம் எப்படி இருந்தது என்றால், ராமநாதபுரம் ராஜா அபேட்சை மனுவைத் தாக்கல் செய்துவிட்டு. அவருக்கு யாரும் போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் இருந்திருக்கிறார். பின்பு அடியேன் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்தக் காலத்தில் அடியேன் இப்படி எல்லாம் பிரச்சாரம் பயங்கரமாக இருப்பதாகத் தெரிவித்து அடியேனிடம் ஜாமீன் வாங்கி இருந்தார்கள்.
அந்தக் காலத்தில் என்னுடைய தகப்பனார் ராமநாதபுரம் ராஜாவுடன் சேர்ந்து கொண்டு, தேர்தலில் என்னை எதிர்த்துப் பிரச்சாரம் செய்திருக்கிறார். தன்னுடைய மகன் அக்கிரமம் செய்வதாகச் சொல்லிக் கொண்டு, சேதுபதி ராஜாவுடன் சேர்ந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். தேசத்தின் மானத்தைக் காப்பாற்றுவதற்கு பெற்ற தகப்பனை எதிர்த்து அடியேன் தேர்தலில் நிற்க வேண்டியதாயிற்று.
அன்றைக்கு காமராஜரும் தேர்தலில் நின்றார். விருதுநகரில் காமராஜர் ஒரு போலிங் பூத்தில் நின்றிருந்தபோது, இரண்டு ஆட்கள் அவருடைய வேஷ்டியைப் பிடுங்கிக் கொண்டு போய் இருக்கிறார்கள். காமராஜர் அதைத் திருப்பிப் பெற முடியாமல் கையறு நிலையில் நின்றிருக்கிறார். அந்தத் தகவல் அடியேனுக்குக் கிடைத்த உடன் காங்கிரஸில் ஒரு தொண்டருக்கு அவமானம் வந்தால், அது எல்லோருக்கும் அவமானமென்று கருதி உடனே விருதுநகர் போய்ச் சேர்ந்தேன்.
பழனி குமாரசாமிப் பிள்ளையை செருப்பால் அடித்திருக்கிறார்கள். அவர் காங்கிரசுக் கமிட்டி ஆபீசுக்கு வந்து இருந்தார். அவர் நிலைமை ரொம்ப மோசமாக இருப்பதாகச் சொன்னார். காமராஜரைத் தூக்கிப் போய் செளந்தரபாண்டியன் தோப்பில் கொல்லப் போவதாக எதிரிகள் திட்டமிட்டிருந்ததாகச் சொன்னார். காமராஜரைப் பாதுகாப்பது அப்போது அடியேனுடைய பொறுப்பாக இருந்தது.
ஜஸ்டிஸ் கட்சியில் இருந்த ஆட்கள் தேர்தல் காலத்தில் காங்கிரஸ் இருக்கிற ஏழைத் தொண்டர்களுக்குப் பயத்தையும் உண்டு பண்ணியிருக்கிறார்கள். அவர்களுக்கு வெள்ளைக்கார சர்க்காரில் இருந்த டி.எஸ்.பி., போலீஸ்காரர்கள் உதவியாக இருந்திருக்கிறார்கள். தேர்தல் முடியும் வரை ராமநாதபுரம் தொகுதிக்குப் போகாமல், அடியேன் விருதுநகரிலேயே முகாம் செய்யப் போவதாகச் சொன்னேன்.
அக்கிரமம் செய்தவர்கள் உடனே வந்து மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தெரிவித்தேன். அதற்குப் பிறகுதான் எதிரிகளுக்குப் புத்தி வந்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். அந்தத் தேர்தலில் காமராஜர் ஜெயித்து எம்.எல்.ஏ.வாகி இருக்கிறார். ராமநாதபுரம் ராஜாவைத் தோற்கடித்து அடியேனுக்குத் தேர்தலில் வெற்றி ஏற்பட்டது.
காங்கிரசை எதிர்ப்பதற்குக் காரணம்?
காமராஜருக்காக அடியேனுடைய கார்தான் இரவு பகலாக அந்தக் காலத்தில் வேலை செய்தது. அப்போது காங்கிரசின் மானத்தை அடியேன் காப்பாற்றி இருக்கிறேன். காங்கிரஸ் மகா சபையைக் கண்ணீர் விட்டு வளர்த்திருக்கிறோம். இற்றைக்கும் இதில் குறைந்தவர்களில்லை. அதற்காகவே உயிரை வைத்திருக்கிறோம்.
இந்த நிலையில் இப்போது காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டுமென்று சொல்வதன் நோக்கம் என்ன? என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அடியேன் சுபாஷ் சந்திர போஸின் தீவிரவாதிகள் கட்சியைச் சேர்ந்தவன். மிதவாதிகள் தலைமையில் ராஜாஜி இருந்திருக்கிறார். அவருக்குப் பின்பு கள்ள மார்க்கெட்காரர்களின் உதவியாலும், காங்கிரசிலுள்ள சில சுயநலவாதிகளின் உதவியாலும் காமராஜர் இந்த நாட்டு முதன் மந்திரியாக வந்திருக்கிறார்.
காமராஜர் மந்திரி சபை அமைப்பதற்கு முன்பு டாக்டர் வரதராஜுலு நாயுடு மூலம் என்னை அணுகி, என்னுடன் பேச வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் முதன்முதலாக பிராமணர் அல்லாத ஒரு மந்திரி சபை அமைப்பதற்குக் காமராஜர் என்னுடைய உதவியை எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. டாக்டர் வரதராஜுலு நாயுடு வீட்டில் ஏதோ விருந்து வைப்பதாக அடியேனை அழைத்துப் போய் அங்கு காமராஜரைச் சந்திக்கச் செய்தார்.
1928-லிருந்து இன்றுவரை அடியேனை சி.ஐ.டி.க்கள் தொடர்ந்து வருகிறார்கள். யாராவது அடியேனுக்குக் கடிதம் எழுதினாலும், அந்தக் கடிதங்களை இன்றும் சி.ஐ.டி.க்கள் பிரித்துப் பார்த்து அனுப்புகிறார்கள். இந்த நிலைமையில் காமராஜரைச் சந்தித்துப் பேசினேன். புதிய மந்திரிசபை அமைப்பதாக இருந்தால் அதன் முதன் மந்திரி யார் என்று கேட்டேன். அதற்கு காமராஜர் பதில் சொல்ல முடியாமல் சும்மா இருந்தார். தலைமைப் பதவி என்றால் அதற்கு யாரும் வரலாம் என்ற நிலை ஜனநாயகத்தில் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு படிப்பு, தகுதி ஒன்றும் தேவை இல்லை. அப்படி இருந்தும் டாக்டர் வரதராஜுலு நாயுடுவைப் போன்ற அறிவாளிகள்தான் முதன் மந்திரியாக இருக்க வேண்டுமென்று சொன்னேன்.
ஆனால் காமராஜர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியாக அவரே அந்தப் பதவியில் இருக்கிறார். அவர் முதன் மந்திரியாக இருப்பதற்கு யோக்கியதை இல்லாததால், காங்கிரஸ் தலைமைப் பதவியில் இருந்து கொண்டு, வேறு யாரையாவது முதன் மந்திரியாக வைத்துக் கொள்ளலாமென்று சொன்னேன். அடியேன் அப்படிச் சொல்லுவேனென்னு அவர் எதிர்பார்க்கவில்லை.
முன்பு ராஜாஜியின் மந்திரி சபையில் இருந்த ஆட்கள்தான் காமராஜர் மந்திரி சபையிலும் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் காங்கிரஸின் தரம் குறைந்து போவதற்குக் காரணம் என்ன? இற்றைக்கு காமராஜர் காங்கிரசை கருப்புச் சட்டைக்காரர்கள் காலடியில் கொண்டுபோய் வைத்திருப்பதுதான்.
இற்றைக்குத் திராவிடர் கழகம் நாட்டில் நாஸ்திகத்தை தீவிரமாகப் பரப்பி வருகிறது. திராவிடர் கழகத்தினர் இந்து மதத்தை மாத்திரம் எதிர்க்கின்றனர். மற்ற மதங்களை அவர்கள் எதிர்ப்பதில்லை. குறை கூறுவதில்லை. காமராஜர் திராவிடர் கழகத்தின் மேல் நடவடிக்கை ஒன்றும் எடுத்துக் கொள்ளவில்லை.
பீகாரில் மாணவர்கள் இந்த நாட்டின் தேசியக் கொடிக்குத் தீ வைத்ததற்காக, அவர்கள் மேல் இந்த சர்க்கார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது. எப்படிச் சுட்டு தள்ளலாமாவென்று கேட்ட காலத்தில், ‘தேசியக் கொடிக்குக் கெடுதல் உண்டு பண்ணுவதை எந்த அரசாங்கமும் அனுமதிக்காது’ என்று ஆட்சியாளர்கள் சொன்னார்கள்.
ஆனால் தென் இந்தியாவில் என்ன நடந்தது? திராவிடக் கழகத் தலைவர் ‘தேசியக் கொடியை கொளுத்தியே தீருவேன்’ என்று ஒரு பெரும் கிளர்ச்சியை நடத்தினார். பின்பு ஏதோ காரணத்தைக் காட்டி அந்தக் கிளர்ச்சியை வாபஸ் பெற்றுக் கொண்டதாக அந்தத் தலைவர் அறிவித்திருந்தும், சில இடங்களில் திராவிடக் கழகத்தினர் தேசியக் கொடியைக் கொளுத்தி இருக்கின்றனர். இந்த அரசாங்கம் அவர்கள் மேல் நடவடிக்கை ஒன்றும் எடுக்கவில்லை.
இந்த நிலைமையில் தமிழ்நாட்டில் அடியேனை அரசியலில் வர விடாமல் செய்துவிட்டால், காமராஜர் சவுக்கியமாக இருக்கலாமென்று நினைக்கிறார். காமராஜர் சேதுபதி ராஜாவைக் கேட்டிருக்கிறார். என்னை எதிர்த்து அவர் முதுகுளத்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தால், அவருக்கு முதல் மந்திரி வேலை கொடுப்பதாகச் சொல்லி அவருடைய சம்மதத்தைக் கேட்டிருக்கிறார்.
‘தேர்தலில் தேவரை எதிர்த்து ஜெயித்தால்தானே முதல் மந்திரி வேலை கிடைக்கும். அப்படி இல்லை என்றால் என்ன செய்வது? நீங்களே தேவரை எதிர்த்துப் போட்டியிடுங்கள்’ என்று சேதுபதி ராஜா சொல்லிவிட்டார். இதன் பின்புதான் சேதுபதி ராஜாவிற்கு காங்கிரஸ் டிக்கெட் மறுக்கப்பட்டது. காமராஜர் அவரைக் கைவிட்டு விட்டார்.
ஆனால் ராஜா சர் முத்தையா செட்டியார் தேர்தல் செலவுக்காக காங்கிரசுக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுத்ததால் அவருக்கு சட்டசபைத் தேர்தலில் காரைக்குடியில் நிற்கவும், அவருடைய சகோதரர் ராமநாதன் செட்டிக்கு பார்லிமெண்ட் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் நிற்கவும் காங்கிரஸ் டிக்கெட் கொடுக்கப்பட்டது. மற்றொரு சகோதரர் சிதம்பரம் செட்டிக்கு எம்.எல்.ஏ. பதவி கொடுப்பதாகவும் வாக்களித்து இருக்கிறாராம். இந்த நிலைமையில் பெரிய பண மூட்டைகளைத்தான் காங்கிரசில் தேர்தலுக்குப் போட்டியிட நிறுத்தி இருக்கிறார்கள்.
இற்றைக்கு காங்கிரஸில் யோக்கியர்கள், நல்லவர்கள் இல்லை என்ற காரணத்தால், ராஜகோபாலாச்சாரியார் யோக்கியமானவர்களுக்குத்தான் ஓட்டுப் போட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார். ஆனால் டாக்டர் சி.பி.இராமசாமி ஐயர் ‘காங்கிரஸ் அபேட்சகர்களுக்குத்தான் ஓட்டுப்போட வேண்டும்’ என்று சொல்கிறார். காரணம் அவருடைய மகனுக்கு இந்தத் தேர்தலில் பார்லிமெண்டுக்குப் போட்டியிட கும்பகோணம் தொகுதியில் காங்கிரஸ் டிக்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இற்றைக்கு அடியேன் ஸ்ரீவில்லிபுத்தூர் பார்லிமெண்டு தொகுதியில் தேர்தலுக்கு நிற்கின்றேன். அந்தத் தொகுதியில் மொத்தம் பதினொரு லட்சம் வோட்டர்கள் இருக்கிறார்கள். முதுகுளத்தூர் சட்டசபைத் தொகுதியிலும் போட்டியிடுகிறேன். பல தேசத் துரோகிகளுக்கு இந்தத் தேர்தலில் காங்கிரஸ் டிக்கெட்டு கொடுத்திருக்கிறார்கள்.
திராவிடக் கழகத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்து விட்டவர்களுக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸில் டிக்கெட் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில யோக்கியமான தேச பக்தர்களுக்கு இந்தத் தேர்தலில் நிற்க காங்கிரஸ் டிக்கெட் கிடைக்காததால், அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறி ‘காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி’ சார்பில் தேர்தலுக்கு நிற்கிறார்கள்.
அடியேன் முன்பு காமராஜரைத் தேர்தலில் தோற்கடித்தாக வேண்டுமென்று சபதம் செய்திருக்கிறேன். இந்தத் தமிழ் நாட்டில் அடியேன் சமூக வாதியல்ல. நாடார் சமூகத்திலிருக்கிறவர்கள் எங்களுடைய வீட்டில் சாப்பிட்டிருக்கிறார்கள். ஆலயப் பிரவேசத்தில் அரிசனங்களுக்காக அடியேன் உழைத்திருக்கிறேன். அரிசனங்கள் மதுரை மீனாட்சி கோயிலில் நுழைந்த பிறகு திருப்பரங்குன்றம் கோயிலுக்குப் போனார்கள். அங்கே அவர்கள் உள்ளே போக அடியேன் உதவி புரிந்திருக்கிறேன்.
இந்த நாட்டில் சோஷலிஸ்டு, கம்யூனிஸ்டு கட்சிகள் விவசாயிகள் சங்கத்தை ஏற்படுத்தியதற்கு முன்பே இங்கு அடியேன் கிஸான் சங்கத்தை அமைத்திருக்கிறேன். சர்க்கார் அடியேன் மேல் பல கேஸ்கள் போட்டிருக்கிறார்கள். அதற்காக காபி ஸ்டாம்புக்கு மாத்திரம் 1,25,000 ரூபாய் செலவு செய்திருக்கிறேன். கிஸான் சங்கத்தை வைத்து ஜமீன்தாரர்களை எதிர்த்திருக்கிறேன். ஜமீன்தாரர்களெல்லாம் என்னுடைய சொந்தக்காரர்கள்தான். அவர்கள் சொத்துகள் அழிந்து போகுமென்று தெரிந்திருந்தும் அவர்களை அடியேன் மதிக்கவில்லை. விவசாயிகள் முன்னேற வேண்டுமென்று தான் கருதினேன்.
இந்தத் தேர்தலில் காமராஜர் வெற்றி பெற, தமிழ்நாடு காங்கிரஸ் இருபது லட்ச ரூபாய் வசூல் செய்து, சாத்தூர் தொகுதியில் வாக்காளர்களுக்குச் செலவு செய்ய வைத்திருக்கிறது. இந்த நிலைமையில் ‘பார்லிமெண்டு ஓட்டை தேவருக்குப் போட்டு விடுங்கள் சட்டசபை ஓட்டை காமராஜருக்குப் போட்டு விடுங்கள்’ என்று சொல்லுகிறார்கள்.
லஞ்சம் கொடுத்து மக்களுடைய ஓட்டுகளைக் கேட்கிறார்கள். ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு மக்கள் காமராஜருக்கு ஓட்டு போடாமல் மோசம் செய்துவிட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள். ஓட்டுச் சாவடியில் மக்களுக்குக் கொடுக்கப்படும் ஓட்டுச் சீட்டை பெட்டிக்குள் போடாமல் ரகசியமாக வெளியே கொண்டுவந்து விட வேண்டுமென்று சொல்கிறார்கள். அப்படிக் கொண்டு வருகிறவர்களுக்குத்தான் பணம் கொடுக்கப் போவதாகத் தெரிவிக்கிறார்கள்.
பிறகு அந்த வாக்குச் சீட்டுகளை அவர்களின் மூலமாக ஓட்டுப் பெட்டியில் போடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். பொதுமக்கள் இந்த வேலையில் இறங்கினால் ஒரு வருஷக் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் ஐநூறு அபராதமும் கிடைக்கும். யாராவது அகப்பட்டுக் கொண்டால் விடமாட்டார்கள். இந்தத் திருட்டு வேலைக்கு யாரும் ஒப்புக் கொள்ளக் கூடாது. இதைக் கண்டுபிடிக்க அடியேன் தகுந்த நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளவிருக்கிறேன்.
கடந்த காலத்தில் பொப்பிலி ராஜாவை எதிர்த்து வி.வி.கிரி ஜெயித்திருக்கிறார். பின்பு இங்கு பிரதம மந்திரியாக இருந்த பிரகாசமும், குமாரசாமி ராஜாவும் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். அடியேனுடைய முயற்சியால்தான் அவர்கள் தோல்வியுற்றார்கள். இந்த நிலைமையில் காமராஜும் இந்தத் தேர்தலில் தோற்றுப் போவது நிச்சயம்.
உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கிறவர்கள் விவசாயிகள். ஆனால் அவைகளுக்கு விலையை நிர்ணயிக்கிறவர்கள் வியாபாரிகள். வியாபாரிகள் வருமான வரி கொடுப்பதால் இந்தச் சர்க்கார் அவர்களுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொள்கிறது. அதனால் காங்கிரசுக்குத் தேர்தலில் விவசாயிகள் சின்னத்தை வைத்திருப்பதற்குப் பதிலாக வியாபாரிகள் சின்னத்தை வைத்திருக்க வேண்டும்.
அடியேன் உங்களைக் கேட்டுக் கொள்வது காங்கிரஸ் அபேட்சகரை எதிர்த்து, இந்தத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி சார்பில் நிற்கும் அபேட்சகரை நீங்கள் ஆதரிக்க வேண்டுமென்று விரும்புகின்றேன்.
அடியேன் இந்தக் கூட்டம் முடிந்த பிறகு சிவகிரிக்குப் போக வேண்டியதிருப்பதாலும், நாளை நாங்குனேரி தொகுதிக்குப் போக வேண்டியதாக இருப்பதாலும், இத்துடன் நிறுத்திக் கொண்டு உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.”
இவ்வாறு தன் உரையை முடித்தார் பசும்பொன் தேவர்.
(தொடர்வோம்...)
> முந்தைய அத்தியாயம்: திமுகவின் திராவிட நாடு கோரிக்கையும், பிரிவினை வாத தடை சட்டமும் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 68
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT