Published : 26 Oct 2025 05:59 PM
Last Updated : 26 Oct 2025 05:59 PM
1957-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முதன்முறையாக திமுக 124 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களைக் கைப்பற்றியது. அண்ணா தலைமையில் சட்டமன்றத்துக்குள் நுழைந்தனர் திமுக உறுப்பினர்கள். அதற்கு அடுத்து 1962-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 142 தொகுதிகளில் போட்டியிட்டு 50 தொகுதிகளை தனித்தே கைப்பற்றியது திமுக. மேலும், 18 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு 7 தொகுதிகளைக் கைப்பற்றியது. சட்டசபைத் தேர்தலில் அண்ணா தோல்வியடைந்தாலும், மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். இது நேரு தலைமையிலான மத்திய அரசாங்கத்தை அதிர்ச்சியடைச் செய்தது.
காரணம், திமுகவின் இந்த வளர்ச்சி, தென்னிந்தியா பிரிவினைக் கோரிக்கைக்கு ஆதரவாக திரும்பிவிடும் என்று மத்திய ஆட்சியாளர்கள் கருதினர். திமுகவின் வளர்ச்சியைத் தடுக்க ஈ.வி.கே.சம்பத்தை அக்கட்சியில் இருந்து பிரித்தார்கள். அப்படியிருந்தும் மிகப் பெரிய வெற்றியை திமுக பெற்றது.
1962-ம் ஆண்டு தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இருந்தது. இந்தத் தேர்தலில் அண்ணாவைத் தோற்கடிக்க காங்கிரஸும், பெரியாரும், முத்துராமலிங்கத் தேவரும் கடுமையாகப் பிரச்சாரம் செய்தார்கள். பசும்பொன் தேவரின் பிரச்சாரம் மிகத் தீவிரமாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது.
அண்ணாவை அவருடைய தொகுதியில் தோற்கடிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1962 தேர்தலில் அவர் தோற்றாலும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால், சட்டமன்றத்தோடு நின்றிருக்க வேண்டிய அவருடைய குரல், இந்தியா முழுக்க கேட்க இதுவே வாய்ப்பாக அமைந்து விட்டது.
அண்ணாவின் மாநிலங்களவை உரை வட இந்திய பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக மாறியது. திமுக என்ற இயக்கத்தின் குரல் இந்தியா முழுமைக்கும் பரவியது.
திமுக, தான் சந்தித்த 2 தேர்தல்களிலும் ‘திராவிட நாடு’ அடைவதையே இலக்காகக் கொண்டு போட்டியிட்டது. திமுகவின் வளர்ச்சி பிரதமர் ஜவஹர்லால் நேருவையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாகப் பாதித்தது. திராவிட நாடு கோரிக்கையை மக்களவையில் பிரதமர் நேரு கடுமையாக விமர்சித்தார். திமுகவை பிரிவினைவாதக் கட்சி என்றும், அந்தக் கோரிக்கையை ஒடுக்க ஒரு யுத்தத்தை வேண்டுமானாலும் நடத்தத் தயார் என்று ஆவேசமாகப் பேசினார்.
அதற்குப் பதில் அளித்து மாநிலங்களவையில் அண்ணா பேசினார். அப்போது, “இதனால் ஒரு போரே என்றாலும் அந்தப் போர் வரட்டும் என்று நேரு கூறியிருக்கிறார். இது மிகவும் அவசரமான, தெளிவற்ற பேச்சாகும். இத்தகைய கொடூரமான திசையில் நேருவின் சிந்தனை ஏன் திரும்பியது என்று தெரியவில்லை. இதுதான் கடைசி வார்த்தை. இதோடு இந்த விவகாரம் முடிந்து விடும் என்று நேரு கருதுகிறாரா?
இந்தப் போர் முரசங்களைக் கேட்டு திமுக ஏமாந்து விடாது. போர் என்பதே தேவையற்ற, அறவே வேண்டப்படாத இந்த இடத்தில் போரைப் பற்றி பேசுகிறார் நேரு. ஆனால் வெளிநாட்டுப் படை முற்றுகையிட்டு முன்னேறும்போது, சமாதானவாதியாகக் காட்சி அளிக்கிறார். எல்லாவற்றையும் தாமே செய்ய வேண்டும் என்ற சக்திக்கு மீறிய வகையில் முயல்வதால் ஏற்படும் குழப்பம் மிக்க சிந்தனையின் அறிகுறியே இது” என்று பேசினார். அண்ணாவின் இந்த தெளிவான பேச்சு, பிரதமர் நேருவை அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில், இந்திய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் யுத்தத்தைத் தொடங்கியது.
இந்தியா - சீனா இடையே எல்லை சிக்கலை காரணம் காட்டி இப்போர் நடந்தாலும், வேறு சில காரணங்களும் இருந்தன. 1959-ல் திபெத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியைத் தொடர்ந்து சீன அதிகாரத்தை ஏற்க தலாய் லாமா மறுத்தார். அவருக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. இது சீனாவைக் கோபப்படுத்தியது.
1962 அக்டோபர் 20-ம் தேதி, லடாக் மற்றும் மெக்மோகன் கோட்டுக்கு அருகே எல்லையைக் கடந்து தாக்குதலை நடத்தியது சீனா. மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் சீனப் படைகள் முன்னேறி பல பகுதிகளைக் கைப்பற்றினர்.
இத்தகைய போர் சூழலில் விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் 1962-ம் ஆண்டு திமுக சார்பில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. இதில் அண்ணா பங்கேற்றார். இதற்காக தமிழக அரசு அண்ணாவைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தது. கிட்டத்தட்ட 70 நாட்கள் சிறைவாசம் முடிந்து வெளியே வந்த அண்ணா, வேலூர் கோட்டை மைதானத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, சீனாவுடனான போர் சமயத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக திமுக இருக்கும் என்று அண்ணா அறிவித்தார். மேலும், ‘நாட்டுக்கு ஒரு ஆபத்து எனும்போது கட்சி வேறுபாடுகளை மறந்து கைகோர்ப்போம். அதேசமயம் பிரிவினைக் கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருப்பதாகவும்’ அண்ணா தெரிவித்தார். ‘வீடு என்ற ஒன்று இருந்தால்தான் அதை மாற்றி அமைக்க முடியும், அதுபோல, இந்திய நாடு இருந்தால்தான் திராவிட நாட்டுக் கோரிக்கையை அடைய முடியும்’ என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, திமுகவை எப்படியும் தடை செய்துவிட வேண்டும் என்ற சதித்திட்டம் தீட்டப்பட்டது. இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தியதைக் காரணம்காட்டி, 1963-ம் ஆண்டு பிரிவினைவாத தடுப்புச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை எதிர்த்து அண்ணா பேசியபோது, “சட்டத்தின் மூலம் ஒடுக்குவதை விட, மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அதேநேரம், நேருவின் சதியை முறியடித்து, திமுவைக் காப்பாற்ற திராவிட நாடு கோரிக்கையை கைவிடுவதாக அண்ணா அறிவித்தார்.
ஒரு இயக்கத்தை தலைமையேற்று நடத்தும் தலைவன் எவ்வளவு பக்குவப்பட்டிருக்க வேண்டும். தனது இயக்கத்தை பாதுகாக்க எப்படியெல்லாம் சமயோசிதமாக முடிவெடுக்க வேண்டும் என்பதை அண்ணாவின் நடவடிக்கைகளின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
இதற்கிடையே, தனிநாடு கோரிக்கைகளை கைவிட்டதற்காக திராவிட இயக்கத்தை கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி கடுமையாக விமர்சித்தார். மேலும், திராவிட இயக்கத்தை ‘இனவாத சித்தாந்தம்’ என்றும், அது ‘திராவிட மாயை’ என்றும் குற்றம்சாட்டினார். திராவிட இயக்கத்தின் தோற்றத்தையும், அதன் கொள்கைகளையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார்.
ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய ஈ.வே.கி.சம்பத்
1957-ம் ஆண்டில் இலங்கைத் தமிழர் பிரச்சினை விஸ்வரூபமெடுத்தது. ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவழியினர் இலங்கையிலிருந்து துரத்தப்பட்டு நிராதரவாக தமிழகக் கரையோரங்களில் அகதிகளாக வந்து குவிந்தனர். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமானது. அப்போது திமுக சார்பில் ஈ.வி.கே.சம்பத் மற்றும் தர்மலிங்கம் ஆகிய இருவர் மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
நாடாளுமன்ற மக்களவையில், உள்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற சம்பத், பிரதமர் பண்டித நேரு முன்னிலையில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை மிக உருக்கமாக எடுத்துரைத்து பிரச்சினைக்குத் தீர்வு காண வற்புறுத்தினார். மேலும், 21.8.57 அன்று நாடாளுமன்ற மக்கள் அவையில் அந்தமான், இலங்கைத் தமிழர்கள் இன்னல்களைத் களைய சம்பத் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து உரையாற்றினார். அதுவே, இன்றும் ஈழத் தமிழர்களுக்காக எழுதப்பட்ட உரிமைச் சாசனமாக விளங்குகிறது.
மக்களவையில் சம்பத்தின் ஆவேசப் பேச்சை உற்று கவனித்துக் கொண்டிருந்தார் பிரதமர் நேரு. பின்னர் நேரு பதிலளித்துப் பேசும்போது, “உங்களுடைய உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த விவகாரம் பற்றி இலங்கையில் உள்ள நம் தூதுவர் அந்நாட்டு அதிபருடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்திட இன்றே உத்தரவிடுகிறேன். இலங்கை இந்தியர்களுக்குக் குடியுரிமை கிடைத்திட இந்த அரசு ஆக்கப்பூர்வமாகச் செயல்படும்” என்று வாக்குறுதி தந்தார்.
அதற்கு சம்பத், “நமது தூதுவர் பேசுவது மட்டும் போதாது நீங்களும் இலங்கை அதிபரோடு தொடர்புகொண்டு விவாதிக்க வேண்டும்” என்றார்.
மொழிப் பிரச்சினை குறித்து ஆவேச உரை
அந்த காலகட்டத்தில் இந்தியாவில் மொழி பிரச்சினை தீவிரமாக இருந்தது. இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அப்போது நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நேரு மற்றும் அமைச்சர்கள் எல்லோரும் வீற்றிருந்தபோது, மொழிப் பிரச்சினையை சுட்டிக் காட்டிப் பேசிய ஈ.வி.கே.சம்பத், “இந்தியா ஒரு நாடல்ல. இது பல நாடுகளைக் கொண்ட துணைக்கண்டம்” என்று கோபாவேசமாகப் பேசினார். இதனால் மக்களவையில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். ஒரு புரட்சிக்காரரைப் பார்ப்பதுபோல் சம்பத்தை நோக்கினர்.
இருப்பினும் தனது பேச்சைத் தொடர்ந்தார் சம்பத். “நீங்கள் என் மீது கோபப்படலாம், ஆத்திரப்படலாம், பரிகாசம் செய்கிறீர்கள். ஆனால் இந்தக் கோரிக்கை பிறப்பதற்கு காரணமாயுள்ள சூழ்நிலைகளையும், தர்க்கவாத நிலைமைகளையும் அருள்கூர்ந்து நீவிர் சற்று சிரமப்பட்டு பரிசீலிப்பீர்களேயானால் இந்தக் கோரிக்கை உங்கள் அளவில் மோசமாயினும், எங்களைப் பொறுத்தவரை அது தவிர்க்க முடியாதது என்பதை நீங்கள் உணரமுடியும்... இந்தி ஆதிக்க எதிர்ப்பு என்பது எப்போது, எக்காரணத்துக்காக எங்கள் மண்ணில் வெடித்தது என்பதை, நீங்கள் சற்றுப் பொறுமை காட்டுவதாயின் சுருக்கமாகவே கூறி, உங்களுக்கு உணர்த்த முடியும் என்று நினைக்கிறேன்.
தொன்மைச் சிறப்புடைய மொழி தமிழ். அது அழிவதை எங்கள் மக்கள் ஏற்க மாட்டார்கள். நாங்களே கூட உறங்கிக் கிடந்தோம். நீங்கள் இந்தியை திணித்து தூங்குகின்ற புலியை இடறி விட்டிருக்கிறீர்கள். இன்று மாநிலத்தின்முன் இன உணர்வும் மொழி உணர்வும் பொங்கிப் பிரவகிக்கிறது. கலப்பில்லாத நல்ல தமிழில் பேசுவோர் வரவேற்கப்படுகின்றனர்...” என்றார்.
அப்போது நேரு, “இந்தி மட்டுமல்ல அரசியல் சட்டத்தின் எட்டாவது ஷெட்யூலில் கண்டுள்ள மொழிகள் அனைத்தும் நமது தேசிய மொழிகளே” என்றார்.
அதைத் தொடர்ந்து சம்பத் பேசும்போது, “பிரதமரின் இந்த வாக்குறுதியை நாங்கள் வெகுவாக மதிக்கிறோம். ஆனால் சமீப காலமாக உயர்ந்த பதவியில் இருக்கும் சிலர், ‘இந்தியாவின் தேசிய மொழி இந்தி' எனத் திரும்பத் திரும்பச் சொல்லித் திரிகிறார்கள். உயர்மட்டத்தில் எழும் இந்த முரண்பாடு நமது உண்மையான பரிசீலனைக்குரியது. அரசு இதற்கு தகுந்த விளக்கமும், காரணமும் தந்தாக வேண்டும். இந்தி மட்டுமா அல்லது எல்லா மொழிக்குமா நமது தேசிய மொழிக் கொள்கை பற்றி அரசு தனது நிலையை கொள்கைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்” என்று முழங்கினார்.
தன்னுடைய ஆணித்தரமான கருத்துகளை எடுத்து வைத்ததன் மூலம், இந்தி பேசாதவர்களுக்கு இந்தி ஒருபோதும் திணிக்கப்படாது என்றும், ஆங்கிலம் ஒரு அலுவல் மொழியாகத் தொடரும் என்றும் நேருவிடம் இருந்து உத்தரவாதத்தைப் பெற்றார் ஈ.வி.கே.சம்பத்.
(தொடர்வோம்...)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT