Published : 25 Oct 2025 03:42 PM
Last Updated : 25 Oct 2025 03:42 PM

பாரதிய ஜனதா கட்சியாக உருப்பெற்ற ‘ஜனசங்கம்’ - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 67

சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா

இந்திய அரசியல் களத்தில் உள்ள மிகப் பெரிய கட்சிகளில் ஒன்று பாரதிய ஜனதா கட்சி. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளும் கட்சியாக அக்கட்சி உள்ளது. 1980-ம் ஆண்டு உருப்பெற்ற இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் முதலாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இக்கட்சியின் தொடக்கம் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்...

ஆர்எஸ்எஸ் என்று அழைக்கப்படும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் மிகப் பெரிய அமைப்பாக நாடெங்கும் பரந்து விரிந்திருந்தது. இந்நிலையில், டில்லியில் ஆர்எஸ்எஸ்-ஸுடன் கலந்தாலோசித்த சியாமா பிரசாத் முகர்ஜி, 1951, அக்டோபர் 21-ம் தேதி ‘பாரதிய ஜன சங்கம்’ என்ற புதிய கட்சியை நிறுவினார். கட்சிக்கு தீபம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. 1952-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது அக்கட்சி. அதைத்தொடர்ந்து, 1967-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 35 இடங்களைப் பெற்றது. அப்போது இக்கட்சியின் தலைவராக தீனதயாள் உபாத்யாயா இருந்தார்.

பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனரான சியாமா பிரசாத் முகர்ஜி, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்தவர். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். மிகச் சிறந்த வழக்கறிஞர். சுதந்திர இந்தியாவில் 1947-ம் ஆண்டு அமைந்த ஜவஹர்லால் நேரு தலைமையிலான முதல் மத்திய அமைச்சரவையில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக, ஏப்ரல் 6, 1950 வரை பணியாற்றினார்.

இந்நிலையில், காஷ்மீரத்துக்கான சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட சில விவகாரங்களில் பிரதமர் நேருவுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து விலகினார். மேலும் காங்கிரஸ் உறுப்பினர் பதவியில் இருந்து விலகி பாரதிய ஜன சங்கம் என்ற கட்சியை நிறுவினார்.
இக்கட்சியின் தலைவர்களாகப் பலர் பணியாற்றியுள்ளனர்.

அந்த வகையில் பார்த்தோமானால் சியாமா பிரசாத் முகர்ஜி (1951–52); மௌலி சந்திர சர்மா (1954); பிரேம் நாத் டோக்ரா (1955); தேபபிரசாத் கோஷ் (1956–59); பிதாம்பர் தாஸ் (1960); அவசரல ராமராவ் (1961); தேபாபிரசாத் கோஷ் (1962); ரகு வீரா (1963); தேபாபிரசாத் கோஷ் (1964); பச்ராஜ் வியாஸ் (1965); பால்ராஜ் மாதோக் (1966); தீனதயாள் உபாத்யாயா (1967–68); அடல் பிஹாரி வாஜ்பாய் (1968–72); எல் கே.அத்வானி (1973–77) ஆகியோர் இக்கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து மக்களிடம் கொண்டு சென்றனர்.

இத்தகைய சூழலில் 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி, உள்நாட்டுக் குழப்பத்தைக் காரணம் காட்டி பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை அறிவித்தார். இந்த அவசரநிலை 1977 மார்ச் 21 வரை அமலில் இருந்தது. இந்தக் காலத்தில் குடிமை உரிமைகள் முடக்கப்பட்டன, பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர், மற்றும் பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியானது. அன்றைக்கு இந்திரா காந்தி எடுத்த இந்த முடிவுதான், பாரதிய ஜனதா கட்சி உருவாக ஒருவிதத்தில் காரணமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.

இந்திரா காந்தியின் சர்வாதிகாரப் போக்கை முறியடித்திட, ஜனநாயகத்தைக் காத்திட, பாரதிய ஜனசங்கம் கட்சி களத்தில் இறங்கியது.அப்போது அந்தக் கட்சிக்கு இந்திரா காங்கிரஸ் மற்றும் ஸ்தாபன காங்கிரசை அடுத்து, 22 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது.

1977-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரே கூட்டணியில் ஒரே சின்னத்தில் போட்டியிட்டால் மட்டுமே இந்திராகாந்தியை வீழ்த்த முடியும் என்ற நிலை அப்போது நிலவியது. இதற்கான முயற்சியில் பல்வேறு முக்கியத் தலைவர்கள் ஈடுபட்டனர். அத்தகைய சூழலில்தான் பாரதிய ஜனசங்கம், ஜனதா கட்சியோடு இணைக்கப்பட்டது.

அந்த பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி கூட்டணி 295 இடங்களைப் பெற்று மகத்தான வெற்றியை அடைந்தது. அதைத்தொடர்ந்து மொரார்ஜி தேசாயைப் பிரதமராகக் கொண்டு அமைச்சரவை அமைந்தது. உபாத்யாயாவின் மறைவுக்குப் பிறகு பாரதிய ஜனசங்கத்தின் தலைவராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், புதிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் அந்த அரசு அதிக நாள் நீடிக்கவில்லை. மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜனதா கட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள பாரதிய ஜன சங்கம் கட்சி பெறும் முயற்சி செய்தது. பின்னர் இஸ்லாமியரான ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சி.சாக்லா, வாஜ்பாய் மற்றும் அத்வானி முன்னிலையில் பம்பாயில் 1980-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க காலம் முதல் அதன் தலைவராக இருந்தவர்கள் விவரம் வருமாறு:

அடல் பிஹாரி வாஜ்பாய் (1980–1986): 1980-ம் ஆண்டு பாஜக உருவானபோது வாஜ்பாய் அதன் முதல் தலைவரானார். எல்.கே.அத்வானி (1986–1991): இவர் இந்துத்துவா என்ற சித்தாந்தத்தில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டார். அதன் தொடர்ச்சியாகவே, 1990-ம் ஆண்டில் அவரது தலைமையில் நாடெங்கும் ராம ரத யாத்திரை நடைபெற்றது. இந்து தேசியவாதத்துக்கு அழைப்பு விடுப்பதன் மூலம். பெரும்பான்மை இந்து மக்களை ஒருமுகப்படுத்தி, அவர்களின் ஆதரவைப் பெறும் முயற்சியாக இந்த ரத யாத்திரை மேற்கொள்ளப்பட்டது.

முரளி மனோகர் ஜோஷி (1991–1993): இவர் 1991-ல் பாஜக தலைவராவதற்கு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஆர்எஸ்எஸ் உடன் இணைந்து பணியாற்றினார். அவருக்கு முன்னோடியாக இருந்த எல்.கே.அத்வானியைப் போலவே, ராம ஜென்மபூமி போராட்டத்தில் அவர் பெரும் பங்கு வகித்தார். பின்னர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கங்களில் மத்திய அமைச்சராகப் பணியாற்றினார். இவருடைய காலத்தில்தான், பாஜக முதல்முறையாக பிரதான எதிர்க்கட்சியாக மாறியது. பிரதமராகப் பதவி வகித்த வி.பி.சிங்-குக்கு பெளதிக போராசிரியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்.கே.அத்வானி (1993–1998): பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது, ஆர்எஸ்எஸ்.சில் தனது ஐம்பது ஆண்டுகால பணியை நிறைவு செய்திருந்தார். அவரது தீவிர பிரச்சாரத்தால், 1996 தேர்தலுக்குப் பிறகு இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் பாஜக மிகப்பெரிய கட்சியாக மாறியது. அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமரான போதிலும், அத்வானி கட்சிக்குள் சக்திவாய்ந்த தலைவராக விளங்கினார். பின்னர் துணைப் பிரதமராகவும் பணியாற்றினார் .

குஷாபாவ் தாக்கரே (1998–2000): இவர் 1942 முதல் ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புடையவராக இருந்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, 1998-இல் அவர் பாஜக தலைவராகப் பொறுப்பேற்றபோது, ​​பொதுமக்களால் அறியப்படாத தலைவராகவே இருந்தார். இருப்பினும் அவரது பதவிக் காலத்தில், இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

பங்காரு லட்சுமணன் (2000–2001): நீண்டகால ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான லட்சுமண், 2000-ம் ஆண்டில் பாஜகவின் முதல் தலித் தலைவர் என்ற பெருமையோடு பதவி ஏற்றார். இந்நிலையில், 2001-ம் ஆண்டு தெஹல்கா பத்திரிகையின் ஒரு ‘ஸ்டிங் ஆபரேஷன்’, அவர் லஞ்சம் வாங்கியதை வெளியுலகத்துக்கு காட்டியது, அதைத்தொடர்ந்து, லட்சுமண் உடனடியாக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜனா கிருஷ்ணமூர்த்தி (2001–2002): பங்காரு லட்சுமணன் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி தற்காலிகத் தலைவராகப் பொறுப்பேற்றார், சிறிது நேரத்திலேயே தேசிய நிர்வாகக் குழுவால் அவர் தலைவராக உறுதி செய்யப்பட்டார். பாஜக தலைவராக ஒரு வருடம் பணியாற்றிய நிலையில், அடல் பிஹாரி வாஜ்பாயி தலைமையிலான மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது, சட்ட அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். இதனால் பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் .

வெங்கய்ய நாயுடு (2002–2004): ஜனா கிருஷ்ணமூர்த்தி மத்திய அமைச்சரானவுடன், வெங்கய்ய நாயுடு பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முழு பதவிக்காலத்துக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், 2004-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் என்டிஏ கூட்டணி தோல்வியடைந்ததை அடுத்து பாஜக தலைவர் பதவியில் இருந்து வெங்கய்ய நாயுடு ராஜினாமா செய்தார் .

எல்.கே.அத்வானி (2004–2005): வெங்கய்ய நாயுடு ராஜினாமாவுக்குப் பிறகு, மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அத்வானி 3-வது முறையாக
பாஜக தலைவரானார். இந்நிலையில் முகமது அலி ஜின்னாவை மதச்சார்பற்ற தலைவர் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து, 2005-ல் பாஜக தலைவர் பதவியில் இருந்து அத்வானி விலகினார்.

ராஜ்நாத் சிங் (2005–2009): அத்வானியின் மீதமுள்ள பதவிக் காலத்துக்காக டிசம்பர் 2005-ல் ராஜ்நாத் சிங் பாஜக தலைவராகப் பதவியேற்றார். பின்னர், 2006-ல் முழு பதவி காலத்துக்கும் தலைவராக அவர் மீண்டும் நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் உத்தரப்பிரதேச முதலமைச்சராகவும், பாஜகவின் இளைஞர் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் முக்கியப் பொறுப்பை வகித்துள்ளார். இந்துத்துவா சித்தாந்தத்தை அவர் ஆதரித்தார். இந்நிலையில் 2009-ல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாஜக தலைவர் பதவியை ராஜ்நாத் சிங் ராஜினாமா செய்தார்.

நிதின் கட்கரி (2009–2013): பாஜகவின் இளைய தலைவராக 2009-ம் ஆண்டு கட்கரி பொறுப்பேற்றார். நீண்டகால ஆர்எஸ்எஸ் உறுப்பினரான இவர், மகாராஷ்டிராவில் கூட்டணி அரசாங்கத்தில் அமைச்சராகவும், பாஜக இளைஞர் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியவர். அவருக்கு ஆர்எஸ்எஸ் தலைமையின் வலுவான ஆதரவு இருந்தது. அமைச்சராக இருந்த காலத்தில் ஏற்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு பாஜக தலைவர் பதவியை கட்கரி 2013-ல் ராஜினாமா செய்தார்.

ராஜ்நாத் சிங் (2013–2014): கட்கரி பதவி விலகிய பிறகு, ராஜ்நாத்சிங் இரண்டாவது முறையாக 2013-ம் ஆண்டு பாஜக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 2014-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலுக்கான பாஜகவின் பிரச்சாரத்தில் ராஜ்நாத்சிங் பெரும் பங்கு வகித்தார். பாஜகவுக்குள் இருந்துவந்த எதிர்ப்பையும் மீறி நரேந்திர மோடியை கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்தார் . கட்சியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் பதவியேற்றார். இதனால் பாஜக தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

அமித் ஷா (2014–2020): இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரும், நம்பிக்கைக்குரியவருமான அமித் ஷா, பிரதமர் மோடி அமைச்சரவையில் ராஜ்நாத் சிங் இணைந்த பிறகு, மீதமுள்ள பதவிக் காலத்துக்கு பாஜகவின் தற்காலிகத் தலைவரானார். பின்னர் 2016-ல் அமித் ஷா முழு மூன்று ஆண்டு காலத்துக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது பாஜக தலைவராக ஜே.பி.நட்டா, கடந்த 2020 முதல் பதவி வகித்து வருகிறார். இவர் மத்திய அமைச்சராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரான தீனதயாள் உபாத்யாயாவால் எழுதப்பட்ட புத்தகத்தின் அடிப்படையில், ஒருங்கிணைந்த மனிதநேயம் என்ற தத்துவத்தை தனது அதிகாரப்பூர்வ கொள்கையாகக் கொண்டுள்ளது பாரதிய ஜனதா கட்சி.

‘தேசியவாதக் கட்சி’ என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொள்ளும் இக்கட்சியானது, சுதேசி இயக்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சுயச்சார்பு கொள்கையையும், தேசியவாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்திய அரசியலில் வலதுசாரிக் கொள்கையுடைய கட்சி.

1996, 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில், நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் பாஜக மிகப்பெரிய தனிக் கட்சியாக உருவெடுத்தது. அடல் பிஹாரி வாஜ்பாய் முதலில் 13 நாட்கள், பின்னர் 13 மாதங்கள், அதன் பிறகு நான்கரை ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார். அரசு தனது முழு ஐந்து வருட காலத்தையும் பூர்த்தி செய்தது அதுவே முதல் முறையாகும். 2004-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்து ஆட்சியை இழந்தாலும், நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கியது.

அதற்குப் பிறகு, 2014 மக்களவை தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. 2019 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 303 இடங்களையும், 2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இக்கூட்டணி 293 இடங்களைப் பெற்று மூன்றாம் முறை ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 3 முறை ஆட்சியமைத்த காங்கிரஸ் அல்லாத முதல் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி திகழ்கிறது.

(தொடர்வோம்...)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x