Published : 24 Oct 2025 06:15 AM
Last Updated : 24 Oct 2025 06:15 AM

காடு என்பது பழங்குடிகளின் உரிமை! - பழங்குடி செயல்பாட்டாளர் வி.பி.குணசேகரன்

வி.பி.குணசேகரன்

‘வன மக்களின் தோழன்’ என்று அழைக்கப்படும் வி.பி.குணசேகரன், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டின் பழங்குடியினர், மலைவாழ் மக்களின் உரிமைகளுக்காகக் களமாடிவரும் சமூகப் போராளி. பழங்குடி மக்களின் நில உரிமை மீட்பு, கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் ஆகியவற்றுக்காகச் சுணக்கமின்றி உழைத்துவரும் வி.பி.குணசேகரனுடன் உரையாடியதிலிருந்து...

‘கால்நடைகளை வனப் பகுதியில் மேய்க்க உரிமையில்லை’ என்று 2022இல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நில உரிமை, வன உரிமை என்று வரும்போது, பழங்குடி மக்களை இதுபோன்ற தீர்ப்புகள் கட்டுப்படுத்த என்ன காரணம்?

பழங்குடி மக்கள் தங்கள் நில உரிமையை இழந்தது தான் காரணம். நில உரிமை, காட்டு உரிமை, பயிரிடும் உரிமை அவர்களின் கையைவிட்டுப் போய்ப் பல காலம் ஆகிறது. பஞ்ச பூதங்கள் எப்படிப் பொதுச்சொத்தாக இருக்கின்றனவோ, அப்படித்தான் நிலமும் பொது என்கிற மனநிலையில் பழங்குடிகள் இருக்கிறார்கள், இருந்தார்கள். ஆங்கிலேயர் காலத்தில்தான் பட்டா கொடுக்கிற முறையே வந்தது.

சொத்தின் மீது ஆசையற்ற பழங்குடிகள், தங்களுக்கு நிலம் வேண்டும் என்று ஆங்கிலேயரிடம் முறையிடவில்லை. ஆனால், சமவெளியில் இருப்பவர்கள் பழங்குடிகளுடைய நிலங்களை வசப்படுத்திக்கொண்டார்கள். அதனால், பழங்குடிகள் பெரும்பாலும் நிலம் அற்றவர்களாக மாறினர். அவர்களின் கையை விட்டுப்போன இந்த நிலங்களை எப்போதோ மீட்டிருக்க முடியும்.

இவ்வளவு காலம் நிலம் பறிக்கப்பட்டதற்கு உரிய இழப்பீட்டை அரசு கொடுக்க வேண்டும். அதேபோல் அவர்களிடம் திரும்பச் சென்றுசேரும் நிலங்களைச் சமவெளியில் வாழ்பவர்களோ வணிக நிறுவனங்களோ வாங்குவதற்குத் தடை செய்கின்ற ஒரு சட்டத்தையும் இயற்ற வேண்டும். பழங்குடிகளின் நிலம் ஏற்கெனவே வாங்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்யும் சட்டமும் தேவை.

ஆங்கிலேயர் காலத்தில் பட்டா முறை வந்ததுபோலவே, ‘இவையெல்லாம் பழங்குடிகளின் நிலம்’ என வரையறை செய்யப்பட்டதாகவும் தகவல் இருக்கிறதே...

பழங்குடிகள், 200 ஆண்டு​களுக்கு முன்புவரை காட்டில் இடம்விட்டு இடம் மாறிப் பயிர் செய்யும் முறையை (Shifting Culture) பின்பற்றி​னார்கள். ஆனால், காட்டை அரசுடைமை ஆக்கியது உள்ளிட்ட பல சட்டங்​களைக் கொண்டுவந்த ஆங்கிலேயர், அவற்றின் மூலமாக அந்த உரிமை​களைப் பறித்து​விட்​டனர்.

அதற்குப் பிறகுதான் அந்தந்தக் காடுகளில் பழங்குடிகள் விவசாயம் செய்து, குடியிருந்து வருகிற சில இடங்கள் மட்டும் காட்டுக் குடியிருப்புகளாக (Forest settlement) அறிவிக்​கப்​பட்டன. அதற்கும்கூட, வாழையடி வாழையாக வாழ்ந்த நிலத்​துக்கு வனத் துறைக்கு வாடகை கொடுத்​துத்தான் பழங்குடிகள் அதைப் பயன்படுத்தி வந்தார்கள்.

அதேபோல், நில உச்சவரம்புச் சட்டத்​துக்குப் புறம்பாக, பினாமி பெயர்​களில் ஆக்கிரமிக்​கப்பட்ட பெரும்​பகுதி நிலங்கள், தேயிலை, காபித் தோட்டங்களாக மாற்றப்​பட்​டிருக்​கின்றன. பழங்குடிகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற ஒரு திட்டத்தின் அடிப்​படையில், 1882இல் ‘பழங்குடிகளுக்கான நிலங்கள்’ என்கிற பட்டியல் ஒன்றை ஆங்கிலேயர்கள் தயாரித்​தனர்.

அதற்கான தரவுகளை அரசு கண்டறிந்து, ஆங்கிலேயர் காலத்தில் வரையறை செய்த நிலங்களை மீட்டுப் பழங்குடிகளிடமே திரும்ப வழங்க வேண்டும். பழங்குடிகள் பயன்படுத்தி வருகிற தரிசு நிலங்​களுக்குப் பட்டா வழங்க வேண்டும்​.

2006இல் கொண்டுவரப்பட்ட ‘வன உரிமை அங்கீகாரச் சட்டம்’ எப்படிப்பட்ட உரிமைகளை வழங்கியிருக்கிறது?

இச்சட்டம் பழங்குடிகளுக்கு ஒரு வரம் போன்றது. ஆனால், அது அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. இழந்த உரிமைகளை மீட்பதற்காக, பழங்குடிகள் பல பத்தாண்டுகளாக, பல கட்டமாக நீண்ட, பெரிய போராட்டங்களை முன்னெடுத்துவந்தார்கள். இதில் 300க்கும் அதிகமானோர் இறந்தனர்.

இதன் பிறகே அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, ‘2006 வன உரிமை அங்கீகாரச் சட்ட’த்தைக் (The Scheduled Tribes and Other Forest Dwellers (Recognition of Forest Rights) Act, 2006) கொண்டுவந்தது. ‘பழங்குடிகளுக்கு இதுவரையிலும் இழைக்கப்பட்ட அநீதி, இந்தச் சட்டத்தின் மூலமாகத் துடைத்தெறியப்படுகிறது’ என்று மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.

2005 டிசம்பர் 13க்கு முன்பு வரை காட்டை வாழிடமாகக் கொண்டிருந்த பழங்குடிகள், மூன்று தலைமுறைகளாக (சுமார் 75 ஆண்டுகள்) காட்டில் வாழ்ந்துவரும் பழங்குடி அல்லாதவர்கள், பிற வனவாசிகள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகக் காட்டையும் மலையையும் சார்ந்து வாழும் உரிமையை இச்சட்டம் பாதுகாக்கிறது. எனினும், பெரும்பாலான பழங்குடி மக்களுக்கு இந்தச் சட்டம் பற்றி எதுவும் தெரியவில்லை என்பது வேதனை.

இந்தச் சட்டத்தை மாநிலங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றனவா?

இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு, மாநிலங்களின் பழங்குடியினர் நலத் துறைக்கு (Nodal Agency - Tribal Department) உண்டு. ஆனால், பழங்குடிகள் நலத் துறையில் உள்ளவர்களுக்கும் இந்தச் சட்டம் குறித்துப் போதிய புரிதல் இல்லை.

தற்போது தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத் துறை எடுத்துள்ள முயற்சியின் விளைவாக, பழங்குடி மக்களிடம் ‘2006 - வன உரிமை அங்கீகாரச் சட்ட’த்தை அறிமுகப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. சில இடங்களில் காட்டுப் பகுதிகளில் உழவு செய்துகொண்டிருக்கிற நிலங்களுக்கு 2006ஆம் ஆண்டு சட்டத்தின்படி ‘நில உரிமைச் சான்று’ வழங்கி வருகிறார்கள்.

பழங்குடிகளின் கிராம சபைத் தீர்மானங்கள் மத்திய, மாநில அரசுகளால் மதிக்கப்படுகின்றவா?

வனஉரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இன்னும் பெரும்பாலான இடங்களில் கிராம சபைகள் அமைக்கப்படவில்லை. ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கிராம சபைகளால் போடப்பட்ட தீர்மானங்கள், ஒப்புதல் அளிக்கப்படாமல் கோட்டாட்சியர் அலுவலகங்களில் தேங்கிக் கிடக்கின்றன.

வனத் துறை போடும் முட்டுக்கட்டைதான் இதற்குக் காரணம். பழங்குடிகளின் கிராம சபைத் தீர்மானங்கள் முடக்கப்படுவதன் மூலம் ‘வனச் சமூக உரிமைகள் (Forest Community Rights), சமூக வன வள உரிமைகள் (CFR- Community Forest Resource Rights) ஆகிய இரண்டு உள்ளாட்சி அதிகார அம்சங்களும் முழுமை அடையாமலேயே இருக்கின்றன.

பழங்குடிகள் மீதான அணுகுமுறையில் வனத் துறை, காவல் துறையின் மனமாற்றம் எந்தப் புள்ளியிலிருந்து தொடங்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

காடு அழிந்துவிடும் என்பதுதான் வனத் துறையினரின் பார்வை. அவர்கள் 60 வயதுவரை பணியாற்றி ஓய்வுபெற்றுப் போய்விடுவார்கள். ஆனால், அங்கேயே வாழ்ந்து, காலம் காலமாகக் காட்டைப் பாதுகாப்பது பழங்குடிகள்தானே! சிலர் சில தவறுகளைச் செய்திருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான மக்கள், அங்குள்ள உயிரினங்களையும் தாவரங்களையும் நேசிக்கிறவர்கள்.

காட்டைப் பாதுகாக்கிற பொறுப்பு பழங்குடிகளுக்கு உண்டு என வனஉரிமை அங்கீகாரச் சட்டம் 2006 சொல்கிறது. வனத் துறை இதைப் புரிந்துகொண்டு, வனத்தைப் பாதுகாக்கும் ஒரு கூட்டுத் திட்டத்தை உருவாக்கி, பழங்குடிகளோடு இணைந்து செயல்பட வேண்டும்.

- தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x