Published : 12 Oct 2025 06:55 PM
Last Updated : 12 Oct 2025 06:55 PM
தென் மாவட்டங்களில் மேற்கொள்ளும் அரசியல் சுற்றுப்பயணத்துக்காக தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் வந்துள்ளேன். இங்குள்ள பென்னிங்டன் நூலகத்தில் இருந்து இதைப் பதிவிடுகிறேன். இந்த நூலகம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையானது. ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கு தேவையான ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இங்கு உள்ளன. ரசிகமணி டி.கே.சி, ஜஸ்டிஸ் மகாராஜன், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் போன்ற ஏராளமான ஆளுமைகள் இங்கு வந்துள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமனுடைய ஆய்வுக்கு உறுதுணையாக இருந்தவர் வத்ராயிருப்பு கே.எஸ்.கிருஷ்ணன். அவருக்கும் இந்த நூலகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சூடிக் கொடுத்த சுடர்கொடியாள் வீற்றிருக்கும் ஆண்டாள் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது இந்த நூலகம். இங்கு கூட்ட அரங்கம் ஒன்றும் உள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பென்னிங்டன் நூலகத்தைப் பற்றி தமிழகத்தில் பலருக்கும் தெரிவதில்லை. அவ்வளவு ஏன்... இப்பகுதி மற்றும் சுற்றுவட்டாரங்களில் வசிப்பவர்களுக்கே இந்த நூலகத்தின் அருமை பெருமை சரிவரத் தெரிவதில்லை. அந்த அளவுக்கு இன்றைய இளைய தலைமுறையினரின் நிலை உள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நான் படிக்கும்போது, அங்குள்ள பேராசிரியர் ஒருவர், பென்னிங்டன் நூலகத்தைப் பற்றி என்னிடம் கேட்டார். வடபுலத்தில் இருக்கின்றவர்களுக்கு இந்த நூலகத்தின் சிறப்பு தெரிந்திருக்கிறது. ஆனால் இங்குள்ளவர்களுக்கு...? என்னவென்று சொல்வது!
சரி... இனி விஷயத்துக்கு வருவோம்... இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகின்றன. இதேபோல் மேலும் சில கட்சிகளும் நூற்றாண்டைத் தொட்டுள்ளன. அதில் சோசலிஸ்ட் இயக்கமும் ஒன்று.
ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா போன்றவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சோசலிஸ்ட் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். காங்கிரஸின் கொள்கைகளில் இருந்து இது வேறுபட்டதாக இருந்தது. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவரும், பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவருமான ப.ஜீவானந்தமும் சில காலம் இருந்தார். இந்த சோசலிஸ்ட் இயக்கம் பின்னாளில் பிரஜா சோசலிஸ்ட் கட்சி, சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி என இரண்டாகப் பிரிந்து விட்டது.
அடுத்தது நீதிக்கட்சி. பின்னாளில் தென்னிந்திய நல உரிமை சங்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இவையெல்லாம் நீதிக்கட்சியின் நீட்சியே. இதே காலகட்டத்தில்தான் காங்கிரஸில் இருந்து விலகிய ராஜாஜி, சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். இவ்வாறு 100 ஆண்டுகள், 75 ஆண்டுகள் கடந்த இயக்கங்கள் உள்ளன. அந்த வகையில் சோசலிஸ்ட் கட்சியைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்...
இன்றைய தலைமுறையினருக்கு சோசலிஸ்ட் கட்சியைப் பற்றி சரியான புரிதலோ, அறிதலோ இல்லை. இன்றைக்கு 60 - 70 வயது நிரம்பியவர்களுக்கு ஓரளவு தெரிய வாய்ப்பு உள்ளது. 1967 காலகட்டத்தில் தமிழக சட்டமன்றத்தில் எஸ்.எஸ்.பி., பி.எஸ்.பி என்ற கட்சிகளின் சார்பில் 7 - 8 பேர் எம்எல்ஏக்களாக இருந்தனர். காங்கிரஸும், கம்யூனிஸ்ட் இயக்கமும் இந்திய மண்ணுக்கு சரிப்பட்டு வராது என்ற எண்ணத்தில் உருவானதுதான் சோசலிச இயக்கம். ஆனால் இன்றைக்கு அந்த இயக்கம் அஸ்தமித்து விட்டது.
அந்த காலத்தில் இந்தி பேசும் மாநிலங்கள் மட்டுமல்லாது ‘கெளவ் பெல்ட்’ என்று சொல்லக்கூடிய மாநிலங்களில் இந்த சோசலிச இயக்கம் சற்று வீரியத்துடன் இருந்தது. இக்கட்சியின் கடைசி தளகர்த்தர்களாக லல்லு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், நிதிஷ்குமார், சுரேந்திர மோகன், முலாயம் சிங் யாதவ் போன்றவர்கள் இருந்தனர்.
அதேநேரம், எந்த காங்கிரஸ் வேண்டாம் என்று அதற்கு மாற்றாக இந்த இயக்கம் தொடங்கப்பட்டதோ, அந்த எண்ணத்துக்கு மாறாக காங்கிரஸுடனேயே இவர்கள் கூட்டணியும் வைத்தார்கள். இதே காலகட்டத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும்இருந்த சரண்சிங், காங்கிரஸில் இருந்து விலகி லோக்தளம் என்ற கட்சியை நிறுவினார்.
குறிப்பாக உத்தரப் பிரதேசம் மேற்கு மாநிலத்தில் கரும்பு விவசாயிகள் மத்தியிலும், ஜாட் இன மக்களின் மத்தியிலும் இக்கட்சி செல்வாக்கு மிக்கதாக விளங்கியது. அவசர நிலை முடிந்து அடுத்து ஆட்சிக்கு வந்த ஜனதா ஆட்சியின்போது அதன் அமைச்சரவையில், சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தண்டவதே, ரபிரே போன்ற பலர் இடம் பெற்றிருந்தனர். இதற்குப் பிறகு சோசலிஸ்ட் கட்சி என்ற மகத்தான இயக்கம் மங்கி விட்டது. இன்றைக்கு சோசலிஸ்ட் கட்சியில் இருக்கக் கூடியவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம் என்ற நிலை உள்ளது.
சோசலிஸ்ட் கட்சி நலிவுற்றதற்கு மற்றொரு காரணமும் உண்டு. சோசலிஸ்ட், கம்யூனிஸ்ட் மற்றும் தலைமறைவு வாழ்க்கை வாழும் மாவோயிஸ்ட் - இவற்றுக்கான வித்தியாசம் மக்களுக்கு தெரியாமல் போய்விட்டது. சோசலிஸ்ட் இயக்கமும் ஒரு தீவிரவாத இயக்கமோ என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்தது. இதனால் 1970 காலகட்டங்களில் சோசலிஸ்ட் இயக்கங்களை பலர் கடுமையாகச் சாடியதும் உண்டு. நாங்கள் கம்யூனிஸ்ட்கள், நக்சல்பாரி மாவோயிஸ்ட்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்று சோசலிஸ்ட் கட்சியினர் சொல்லிக் கொண்டாலும், அவர்களிடம் சில தீவிர வலதுசாரி எண்ணங்களும் அடையாளங்களும் இருந்ததை மறுக்க முடியாது.
1975 காலகட்டத்தில் ரயில்வே தொழிலாளர்களுடய போராட்டத்தை ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையேற்று தீவிரமாக நடத்தினார். அந்த நேரத்தில் அவர் கைது செய்யப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. இதனால் அவர் சேலம் அருகே ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தங்கியதெல்லாம் உண்டு. அதேபோல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட பின்னர், தமிழகம் வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், சென்னை சாந்தோம் சர்ச் பகுதியில் தலைமறைவாக இருந்தார். அவரை எம்.கே.நாராயணன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர் என்ற செய்திகள் எல்லாம் அன்றைக்கு வெளிவந்தன.
அதேபோல் இந்திரா காந்தியை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ராஜ்நாராயணன், அச்சுதபட்டவர்தன், யூசுப் மெஹரலி, கிஷன் பட்நாயக், கர்பூரி தாக்கூர், எஸ்.எம்.ஜோஷி, ரபிரே, மிருணாள் கோரே என நீண்ட பட்டியல் உண்டு. ஜனதா ஆட்சிக் காலத்தில் ரபிரே மக்களவைத் தலைவராக இருந்தார்.
சோசலிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களாக ஜெயப்பிரகாஷ் நாராயணன், ஆச்சாரியா நரேந்திரதேவ், ராம் மனோகர் லோகியா இருந்தனர். ஜெயப்பிரகாஷ் நாராயணன் சர்வோதயத் தலைவராக மட்டுமல்லாமல், நெருக்கடி நிலை காலத்தில் ஜனநாயகத்தை மீட்க ஜனதா கட்சி உருவாகக் காரணமாகவும் இருந்தார்.
இந்தியக் கைவினை கலைகள் மற்றும் இந்திய கலாச்சாரத்துடன் முன்னெடுத்த கமலா தேவி சட்டோபாத்யாயா, முக்கிய நிர்வாகியாகவும் ஜெ.பி.க்கு ஆதரவாகவும் இருந்தார். பழங்குடியினத் தலைவர் பாலேஸ்வர் தயாள், சமூக சீர்திருத்தவாதியாக அறியப்பட்ட உஷா மேக்தா இவர்கள் எல்லாம் அன்றைக்கு சோலிஸ்ட்கள். இப்படி ஒரு நீண்ட பட்டியல் உண்டு.
இன்றைக்கு சோசலிஸ்ட் என்றால் வட மாநிலங்களில் ராம் மனோகர் லோகியாவை மட்டுமே சொல்வார்கள். மற்றவர்களைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. ராம் மனோகர் லோகியா பிற்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கு அடித்தளம் அமைத்தவர். மண்டல் கமிஷன் தலைவர் மண்டல் லோகியாவின் சிஷ்யர். அவர் தலைமையில்தான் அன்றைக்கு ஜனதா ஆட்சியில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது பிற்பட்டோர் நலனுக்காக மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் அறிக்கை தயார் செய்த நிலையில் ஜனதா அரசாங்கம் கவிழ்ந்தது.
அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தியிடம் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் சோசலிஸ்ட்கள் பங்கேற்ற வி.பி.சிங் ஆட்சியின்போதுதான் மண்டல் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தப்பட்டது. சமீபத்தில் சோசலிஸ்ட் இயக்கம் சார்பில் புனேயில் நடைபெற்ற மாநாட்டில் சோசலிஸ்ட் கட்சித் தலைவர்களின் படங்கள் எல்லாம் திறந்து வைக்கப்பட்டன.
ஒரு காலத்தில் இந்திரா காந்தியும் சோசலிச சித்தாந்தங்களை முன்னெடுத்தார். அதற்கு முன்னதாகவே சோசலிஸ்ட் சித்தாந்தத்தின் தாக்கத்தால்தான், சென்னை ஆவடியில், முதலமைச்சர் காமராஜர் நடத்திய மாநாட்டில் சோசலிச கொள்கைப் பிரகடனத்தை நேரு கொண்டுவந்தார்.
இந்தியாவில் சமூக மாற்றம், பொருளாதாரம், சமத்துவம் இருக்க வேண்டும் என்பதுதான் சோசலிஸ்ட் கட்சியின் நோக்கம். அவற்றை அடைவதற்காகத்தான் அக்கட்சியினரும் பாடுபட்டனர். ஜெயப்பிரகாஷ் நாராயணன், மார்க்சிய சிந்தனையைக் கடந்து, நம் பண்பாடு, கலாச்சாரத்தையொட்டிய சித்தாந்தம் தேவை என்பது குறித்து நரேந்திர தேவ்விடம் கலந்து பேசினார். அந்தப் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் சோசலிஸ்ட் இயக்கம் கட்டமைக்கப்பட்டது. நரேந்திர தேவ் கடைசி காலத்தில் ஈரோட்டில் பயணிகள் விடுதியில் தங்கியிருந்தபோது காலமானார். அவரது நினைவாக அந்த பயணிகள் விடுதிக்கு ஆச்சார்யா நரேந்திர தேவ் விடுதி என்று பெயர் வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சோசலிஸ்ட் கட்சிக்கு பெரிய செல்வாக்கு இல்லை என்றாலும், 1967 - 72 காலகட்டத்தில் உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். பின்னாளில் ஒருசிலர் காங்கிரசில் சேர்ந்தனர். காங்கிரஸ் சட்டமன்றத் தலைவராக இருந்த பட்டுக்கோட்டை ஏ.ஆர்.மாரிமுத்துகூட சோசலிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்தான்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற இயக்கத்தில் காந்தியோடு சேர்ந்து போராட்டக் களத்தில் இறங்கியவர்களில் பலர், நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் காங்கிரஸில் இருந்து வெளியேறி இடதுசாரி ஜனநாயக சோசலிஸ்ட் வழி அரசியல் என்ற கோட்பாட்டில் சோசலிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள். அன்றைய தலைவர்களிடம் தொலைநோக்குப் பார்வை இருந்தது, பரந்த மனப்பான்மை இருந்தது. அவர்களால் அரசியல் பாதையில் வெற்றி அடைய முடியவில்லை என்றாலும் களமாடினார்கள்.
நான் அடிக்கடி சொல்வது போல் இந்த வியாபார அரசியலில் தகுதியே தடை. அதேநேரம் சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், பாஜகவை நிறுவிய சியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ராஜபாளையம் குமாரசாமி ராஜா - இவர்கள்தான் எனக்கு ரோல் மாடல் அரசியல் தலைவர்கள்.
தமிழகத்தில் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட எத்தனையோ தியாக சீலர்கள் சட்டமன்றம், நாடாளுமன்றத்தை எட்டி கூடப்பார்க்காமல் மறைந்து போனார்கள். அத்தகைய மூத்த தலைவர்களுள் நல்லகண்ணு இன்றைக்கும் நம்மோடு உள்ளார். அதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செ.மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உ.வாசுகி உள்ளிட்டோர் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலருக்குக் கூட அத்தகைய வாய்ப்பை மக்கள் வழங்கவில்லை. நாட்டுக்காக, மக்களுக்காக குரல் கொடுத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனதற்கு ஒருவகையில் மக்களும் பொறுப்பாளர்கள்தான். வியாபார அரசியலில் இவர்களை மக்கள் அங்கீகரிக்கவில்லை. அதனால் இழப்பு மக்களுக்குத்தான். தலைவர்களுக்கல்ல!
இந்தியாவில் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றியதற்கு காங்கிரஸ் எவ்வாறு காரணமோ அதேபோல் சோசலிஸ்ட்கள், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சார்ந்தவர்களின் பணிகளும், செயல்பாடுகளும் இருந்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆர்.எஸ்.எஸ். தீண்டப்படாத சக்தியல்ல! விளம்பரம் இல்லாமல் பெரும் பணிகளை அவர்கள் செய்து வருகிறார்கள். இந்திய வரலாற்றில் நூற்றாண்டு கண்ட அந்த இயக்கத்தின் வழித்தோன்றல்தான் பாஜக.
இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் சோசலிஸ்ட் கட்சியின் மாணவர் தலைவராக ராம்குமார் ஜெயின் இருந்தார். இன்றைக்கு அவர் பேராசிரியராக உள்ளார். சிந்தனையாளர் விஜய் பிரதாப், தொழிற்சங்கவாதி தலிப் சிங், அவசர நிலை எதிர்த்து அமெரிக்காவில் அணி திரட்டிப் போராடிய பேராசிரியர் ஆனந்தகுமார் போன்றவர்கள் இன்றைக்கும் உள்ளனர். மக்கள் நலனுக்காக பணியாற்றி வருகிறார்கள்.
சோசலிஸ்ட் இயக்கம் பற்றி வினோத் பிரசாத் சிங் மற்றும் சுனிலம் ஆகியோர் இணைந்து எழுதிய ‘இந்திய சோசலிஸ்ட் இயக்கம்’ என்ற நூலின் 2 தொகுப்புகள், சோசலிஸ்ட்களின் வரலாற்றையும், பணிகளையும் பறைசாற்றுகின்றன. ஐரோப்பிய சோசலிசம் என்று ஒன்றும் உண்டு. ஆனால் இந்திய சோசலிஸ்ட் கட்சிகள் இந்திய மரபுகளையும், சமதர்மத்தையும் பேணிக் காத்தல், நகரம் சார்ந்த தொழில் வளர்ச்சி, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத நீடித்த வளர்ச்சி, காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள்... என தெளிவான பரந்த பார்வையுடன் செயல்பட்டனர்.
அறம் சார்ந்த நெறிமுறைகளைக் கையாண்டனர். மனிதனை மனிதன் அழிக்கும் நக்சல்பாரி மாவோயிஸ்ட் இயக்கங்களைக் புறந்தள்ளினர். சோசலிஸ்ட்டுகளின் செயல்பாடுகளில் வெறித்தனமோ, தீவிரவாதத்தன்மையோ இருந்ததில்லை. எதையும் ஆழ்ந்து, ஆராய்ந்து அணுக வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். இந்த சோசலிஸ்ட் கட்சி இப்போது 90 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சோசலிஸ்ட்கள் தமிழ்நாட்டில் எவ்வாறு இருந்தார்கள் என்பதை அடுத்து பார்ப்போம்...
(தொடர்வோம்...)
முந்தைய அத்தியாயம்: சேலம் உருக்காலை, திருச்சி கனரக மின்சாதன தொழிற்சாலை உருவாக்கம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 63
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT