Published : 11 Oct 2025 08:19 PM
Last Updated : 11 Oct 2025 08:19 PM
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) அமைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக சேலம் சிறப்பு உருக்காலை அமைப்பது குறித்து காமராஜர் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசிடம் பேசப்பட்டது. சேலம் மாவட்டத்தில் கிடைக்கும் இரும்புத் தாது குறித்து மன்னர் ஆட்சிக் காலம் தொட்டே பேசப்பட்டு வந்தது. அந்த வகையில், திப்பு சுல்தான் காலத்தில் போருக்குப் பயன்படுத்தப்பட்ட வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரிப்பதற்கு சேலம் மாவட்டத்தில் இருந்துதான் இரும்புத் தாது எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
சேலம் உருக்காலை அமைக்க சென்னை மாகாண அரசு விரும்பியபோதிலும், அதற்கான நிலக்கரி போன்ற எரிபொருள் இங்கு கிடைக்கவில்லை. பிஹார், மேற்கு வங்கம் போன்ற தொலைவான இடங்களில்இருந்துதான் நிலக்கரியை கொண்டுவரவேண்டிய சூழ்நிலை அப்போது இருந்தது. சேலம் இரும்புத் தாது மிகவும் தரம் வாய்ந்தது. இதனால் பிற்காலத்தில் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தட்டுகள், நாணயங்கள் தயாரிப்பிற்கும் சேலத்தில் இருந்து கிடைக்கும் இரும்பு பயன்படுத்தப்பட்டது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
தொழில்நுட்ப நிபுணர்களும் சேலத்தில் கிடைக்கும் இரும்புத் தாதுவின் தரத்தை உறுதி செய்து, உருக்காலையை கண்டிப்பாக அமைத்தே தீரவேண்டும் என்று சென்னை மாகாண அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். இதுகுறித்து முதலமைச்சர் காமராஜர், அமைச்சர்கள் சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமனிடம் விளக்கிக் கூறினர். அதைத் தொடர்ந்து சேலம் இரும்பாலை அல்லது உருக்காலை அமைப்பது தொடர்பாக அறிக்கை தயார் செய்யப்பட்டு திட்டக் கமிஷனிடம் வழங்கப்பட்டது. இருப்பினும் அந்த அறிக்கையின் மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், 1962-ஆம் ஆண்டில் அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் இத்திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டினார். அதன்படி இதன் செயலாக்கம் தஸ்தூர் கமிஷனிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை இந்த கமிஷன் வழங்கியது. அந்த காலகட்டத்தில் மத்திய நிதி அமைச்சராக மொரார்ஜி தேசாய் இருந்தார். அவரிடம் எந்த ஒரு திட்டத்துக்கும் ஒப்புதல் வாங்குவது என்பது சவாலான காரியம். ஆயிரம் கேள்விகள் கேட்பார். அதில் திருப்தி அடைந்தால் மட்டுமே ஒப்புதல் கிடைக்கும். அந்த அளவுக்கு நேர்மையானவர். அவரிடம் இத்திட்டம் குறித்து பேசப்பட்டபோது, நல்ல திட்டம்தான். செயல்படுத்தலாம் என்றார்.
சேலத்தில் உருக்காலை அமைய வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும் வற்புறுத்தி வந்தனர். மேலும் துருப்பிடிக்காத எஃகு தகடுகளை அமைப்பதற்கு பிரத்யேகப் பிரிவை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இருந்த போதிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் இழுபறி நீடித்து வந்தது. காமராஜர் ஆட்சிக் காலத்தில் திட்டமிடப்பட்டு, திமுக ஆட்சியில் அண்ணா முதல்வராக இருந்தபோதும் வலியுறுத்தப்பட்டது.
இத்திட்டத்தை வலியுறுத்தி எழுச்சி நாளும் நடத்தப்பட்டது. அண்ணாவைத் தொடர்ந்து கலைஞர் காலத்திலும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதற்கிடையே கடந்த 10 - 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஆலையை தனியாருக்கு விற்கப் போவதாக பேச்சு எழுந்தது. இதுகுறித்து விரிவாக பல கட்டுரைகளை நான் எழுதியுள்ளேன்.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் சேலம் இரும்பாலை அமைப்பதில் நீண்ட இழுபறியாக இருந்துவந்த நிலையில், திருச்சியில் கனரக மின் தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், ஓரிடத்தில் இருந்து மின்சாரத்தை மற்றொரு இடத்துக்கு அனுப்புவதற்கும் தேவையான அனைத்து சாதனங்களையும் கனரக மின் தொழிற்சாலையில் தயாரிக்க அன்றைய மத்திய அரசு திட்டமிட்டது. பிரிட்டன் ஒத்துழைப்போடு முதலாவது ஆலை போபாலில் அமைக்கப்பட்டது. அது சிறிய தொழிற்சாலையாக இருந்தது. அடுத்து சோவியத் யூனியன் ஒத்துழைப்போடு ஹரித்துவாரில் பெரிய ஆலை அமைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கொதிகலன்கள் மற்றும் பல்வேறு கனரக மின் சாதனங்கள் தயாரிக்கும் 3-வது ஆலை தென்னிந்தியாவில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதேநேரம் அந்த ஆலையை திருச்சியில் அமைக்க வேண்டும் என்று சென்னை மாகாண அரசும், ஆந்திராவில் அமைக்க வேண்டும் என்று அந்த மாநில அரசும் கோரிக்கை வைத்தன. அப்போது நேரு தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இந்தத்துறை, லால் பகதூர் சாஸ்திரியிடம் இருந்தது. எனவே 3-வது கனரக மின் சாதன தொழிற்சாலையை தென்மாநிலங்களில் எங்கு அமைக்கலாம் என்பது குறித்து அம்மாநிலங்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்குமாறு சாஸ்திரியிடம் பிரதமர் நேரு கேட்டுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து புதுடெல்லியில் லால்பகதூர் சாஸ்திரி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சென்னை மாகாண அரசு சார்பில் அமைச்சர் சி.சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகளும், ஆந்திரப் பிரதேச மாநிலப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இறுதியில் கொதிகலன்கள் தயாரிப்பு ஆலை மற்றும் திட்ட அறிக்கையில் குறிப்பிட்ட இதர சாதனங்களை தயாரிக்கும் மற்றொரு ஆலை என 2 ஆலைகள் திருச்சியில் அமைக்க சி.சுப்பிரமணியத்துக்கு மத்திய அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி அனுமதி வழங்கினார்.
அதன்படி, திருச்சியில் கொதிகலன் ஆலை அமைக்க 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு தேவைப்படும் என்று திட்ட அதிகாரிகள் கூறினர். அதைத் தொடர்ந்து
தாழ்வாகப் பறந்து செல்லும் விமானத்தில் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை அன்றைய தொழில்துறை அமைச்சர் சி.சுப்பிரமணியம் பார்வையிட்டார். போக்குவரத்து மற்றும் இதர வசதிகள் அடங்கிய பொருத்தமான இடம் திருவெறும்பூர் என்று முடிவெடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து தனியார் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை சென்னை மாகாண அரசு மேற்கொண்டது. கொதிகலன் ஆலை அமைக்கப்பட்டு, அதன் நிர்வாக அதிகாரியாக ஆர்.எஸ்.கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இவர் ரயில்வே இன்ஜினீயரிங் பணியில் இருந்தவர். மிகவும் திறமை வாய்ந்தவர். கொதிகலன் ஆலை அமைவதில் சிறப்பாகப் பணியாற்றினார். இந்நிலையில் திடீரென அவர் காலமாகி விட்டார். அதைத் தொடர்ந்து வி.கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டார். இவரும் திறமையாகச் செயல்பட்டார்.
இந்த கொதிகலன் தயாரிப்பு ஆலையில் இன்றைக்கு கிட்டத்தட்ட 15 ஆயிரம் தொழில்நுட்ப ஊழியர்கள், தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆலையின் தற்போதைய ஆண்டு சராசரி விற்பனை ஏறக்குறைய ரூ.700 கோடிக்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பல்வேறு தனியார் தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டன. இவற்றில் பணியாற்ற தொழில்நுட்பம் பயின்றவர்கள் அதிக அளவில் தேவைப்பட்டனர். எனவே பாலிடெக்னிக் என்று சொல்லக்கூடிய தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டன. அதேபோல் அரசு பொறியியல் கல்லூரிகளும் பெருமளவில் தொடங்கப்பட்டன.
சென்னை ஐஐடி வந்த வரலாறு: இதே காலகட்டத்தில்தான் சென்னையில் பிரம்மாண்டமாக ஐஐடி அமைக்கப்பட்டது. இதற்கு அடுத்து கான்பூரிலும் ஐஐடி தொடங்கப்பட்டது. சென்னை ஐஐடி உருவானது குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்...
மேற்கு ஜெர்மனியின் ஒத்துழைப்போடு 3-வது ஐஐடி தென்னிந்தியாவில் அமைப்பது என மத்திய அரசு திட்டமிட்டது. அந்த வகையில் தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில், எந்த மாநிலத்தில் ஐஐடி அமைக்கலாம் என்று பரிசீலிக்கப்பட்டது. 4 மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் ஐஐடி அமைய வேண்டும் என முனைப்பு காட்டின. இதனால், இந்த பிரச்சினை நீண்டகாலமாக நீடித்தது.
அதைத்தொடர்ந்து 4 மாநில முதலமைச்சர்களும் சென்னையில் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை மூலம் முடிவெடுக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தரான ஏ.லட்சுமண சாமி முதலியார் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார். அவர் மருத்துவர், கல்வியறிஞர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர்.

ஆந்திரப் பிரதேச முதல்வரான சஞ்சீவரெட்டி, ஐஐடியை ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இத்தனைக்கும் சஞ்சீவரெட்டி சென்னையில்தான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமித்த கருத்து ஏற்படாததால் அந்தக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.
இந்நிலையில், ஐஐடி போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை எங்கே நிறுவுவது என்பதை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது, தொழில்நுட்ப அறிஞர்களின் ஆலோசனைகளைக் கேட்க வேண்டும். அப்படி இருந்தால்தான் இது சாத்தியமாகும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இதை 4 மாநில முதல்வர்களும் ஒப்புக்கொண்டனர்.
பின்னர், இறுதியாக ஐஐடியை சென்னையில் அமைப்பது என முடிவானது. இந்திய தொழில் நுட்ப நிறுவனம் என்று சொல்லக்கூடிய உயர் கல்வி நிறுவனமான ஐஐடியை சென்னையில் அமைக்க தகுந்த இடத்தை தேர்வு செய்ய, மேற்கு ஜெர்மனி நாட்டின் நிபுணர்கள் மற்றும் இந்திய உயர் அதிகாரிகள் ஆகியோர் பல இடங்களைப் பார்வையிட்டனர். அதில் ராஜ்பவன் அருகில் உள்ள இடம்தான் ஐஐடி அமைய சரியான இடம் என முடிவெடுக்கப்பட்டது.
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை அமைந்திருந்த பகுதி 1,500 ஏக்கர் உள்ள காட்டுப் பகுதியாகும். அதில் இருந்து 750 ஏக்கர் நிலப்பரப்பை, சென்னை ஐஐடி அமைய இடம் ஒதுக்குவதாக ஆளுநர் பிரகாசம் அறிவித்து இடத்தையும் ஒதுக்கினார். அந்த பிரம்மாண்டமான நிலப்பரப்பை சீர்படுத்தி சென்னை ஐஐடி அமைக்கப்பட்டது. இந்த நிலப்பரப்புக்கு அருகே 5 ஆயிரம் ஏக்கர் காலி மனைப் பகுதியும் இருந்தது. அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியமும், தொழில் துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமனும், அந்த நிலப்பகுதியை கையகப்படுத்தி, அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று ஒரு திட்ட அறிக்கையை தயார் செய்து முதலமைச்சர் காமராஜரிடம் வழங்கினார்கள்.
அந்த நிலப்பகுதியில் பல தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. அந்த வகையில், இன்றைக்கு தரமணி பகுதியில் உள்ள வி.ஹெச்.எஸ். எனும் தன்னார்வ சுகாதார சேவை மருத்துவமனை என்ற மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மகளிர் பாலிடெக்னிக், வேளாண் அறிவியல் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் இன்ஸ்டிடியூட், ரோஜா முத்தையா நூலகம், உலகத் தமிழாராய்ச்சி மையம் என பல்வேறு சிறப்பு வாய்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே இந்தப் பகுதி ‘இன்ஸ்டிடியூஷனல் ஏரியா’ என்று அழைக்கப்படுகிறது.
புதுடெல்லியிலும் இதேபோன்ற ‘இன்ஸ்டிடியூஷனல் ஏரியா’ உள்ளது. ஒருமுறை நேரு இங்கு வந்து இந்தப் பகுதியைப் பார்வையிட்டு வியந்தார். டெல்லியில் இருப்பதுபோல, இந்தப் பகுதி ‘சென்னையின் இன்ஸ்டிடியூஷனல் ஏரியாவா?’ என்று முதலமைச்சர் காமராஜரைப் பார்த்து நேரு கேட்டார். காமராஜருக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது நேரு, ‘டெல்லியில் இதேபோன்று இடம் ஒதுக்கி, அங்கு கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதற்கு ‘இன்ஸ்டிடியூஷனல் ஏரியா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இப்பகுதியையும் ‘இன்ஸ்டிடியூஷனல் ஏரியா’ என்று வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினாராம்.
இந்தப் பகுதியில் தொழிலாளர் நல நிறுவனம், சிஎஸ்ஐஆர் நிறுவனத்தின் கிளை, கணித விஞ்ஞானக் கழகம், புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டன. அதேபோல், நெடுஞ்சாலை ஆய்வு நிறுவனம், ரசாயன பொறியியலுக்கான அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, உலகப் புகழ் பெற்ற நாயுடு அம்மா என்ற விஞ்ஞானி தலைமையேற்று நடத்திய மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்றவை எல்லாம் நிறுவப்பட்டன. மேலும் ராஜ்பவனுக்கு நேர் எதிராக பழமையான பொறியியல் கல்லூரி ஒன்றும் இருந்தது.
மேற்கண்ட பகுதியில்தான் மற்றொரு முக்கியமான கல்வி நிறுவனமான எம்.ஐ.டி. (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) தொழில்நுட்பக் கல்லூரியும் இருந்தது. இங்கே ஆகாய விமான தொழில்நுட்பம், கருவி மயமாக்கல் துறை போன்ற முக்கிய துறைகள் இருந்தன. இந்த நிறுவனத்தின் மற்றொரு பெரிய வளாகம் குரோம்பேட்டையில் உள்ளது. சி.ராஜம் என்ற பிரபல வர்த்தகர் எம்.ஐ.டி.யை உருவாக்கினார். இந்த கல்லூரியை உருவாக்க தனது அரண்மனை போன்ற மாளிகையை விற்றார். வயதான காலத்தில், கண் பார்வை இழந்தபோதும், இந்த தொழில்நுட்பக் கல்லூரியை திறம்பட செயல்படுத்தினார்.
கிண்டி பொறியியல் கல்லூரி அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாறியது. பொறியியல் கல்லூரி, ரசாயன தொழில்நுட்பக் கல்லூரியான அழகப்பா கல்லூரி (ஏசிடெக்), எம்.ஐ.டி. ஆக அனைத்தும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.
தமிழகத்தின் தொழிற்சாலைகளின் தலைநகர் கோயம்புத்தூர், கலாச்சாரத் தலைநகர் மதுரை என்ற வரிசையில் அறிவியல் கல்லூரிகளின் தலைநகரம் சென்னை என்று பெயர் சூட்ட வேண்டும் என்று 65-66-களில் கோரிக்கை எழுந்தது. காலப்போக்கில் அந்தக் கோரிக்கை காணாமல் போய்விட்டது.
(தொடர்வோம்...)
> முந்தைய அத்தியாயம்: அண்ணாவின் சட்டசபை முதல் அனுபவம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 62
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT