Published : 06 Oct 2025 10:02 AM
Last Updated : 06 Oct 2025 10:02 AM
அது ஒரு வழக்கமான விடுமுறைக் காலை நான் உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்றிருந்தேன். டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தபோது, அங்கு சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். அந்த அமைதியான, அசையாத வடிவமும், அதில் மெல்லச் சுழலும் இரண்டு முட்களும், மின்னல்போல என் மனதைத் தாக்கின. ஆம்! சக மனிதனால் உருவாக்கப்பட்ட சிறிய இயந்திரம் நமக்கு நேரத்தை, காலத்தைக் காட்டுகிறது.
நம் அனைவர் மீதும் ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்தின் பொருள்தான் என்ன? காலப் பகுப்பின் வசதிக்காகப் பிறந்த இந்த அருவமான கருத்துரு, நம் வாழ்வின் மீது அமைதியாக ஆதிக்கம் செலுத்தி ஆளத் தொடங்கியது எப்படி? உண்மையில், நேரம் என்பது ஈர்ப்புவிசை போல இயற்கையின் விதி அல்ல. இது மனிதனின் கண்டுபிடிப்பு. சமூகத்தின் செயல் பாடுகளில் ஒரு ஒழுங்கு நிலவ, இயற்கையின் சுழற்சியிலிருந்து நாம் அதைக் கண்டுபிடித்தோம்.
சூரியன் உதித்து மறைகிறது; சந்திரன் வளர்ந்துதேய்கிறது. இந்த இயற்கையின் ஒழுக்கத்தைத்தான் நாம் நாள், மணி நேரம், நிமிடம், விநாடி எனப்பகுத்தோம். கடிகாரங்கள், காலண்டர்கள், அட்டவணைகள், நேரப் பட்டியல் கள் என உருவாக்கினோம்; இவற்றுடனேயே நாகரிகத்தையும் கட்டி எழுப்பினோம். கடிகார நேரம் இல்லையேல், ரயில்கள் ஓடாது, நீதிமன்றங்கள் இயங்காது, கூட்டங்கள் நடக்காது. வசதிக்காக நாம் பயன்படுத்திய ஒரு கருவி, இப்போது நமது விசுவாசத்தைக் கோரும் படைத்தலைவனாக மாறிவிட்டது.
நேரம் தவறாதே, பொன் போன்ற காலத்தை வீணாக்காதே, பிறர் பொழுதை வீணாக்காதே. காலத்தை வீணடிப்பது, வாழ்க் கையையே வீணடிப்பதாகும் என நேரத்தின் அருமையை நமக்கு விளக்கிக் கொண்டே இருக்கிறார்கள். இதன் பின்னணியில் நுட்பமான பதற்றம் இருப்பதை மறுக்க முடியாது.
சப்தம் இல்லாத கடிகாரத்தைப் பார்த் தால் எனக்கு ஏன் அடிக்கடி கோபம் வரு கிறது என்று ஆராய்ந்தேன். அதன் முட்களை உடைத்துவிட்டால், என் மீது அது பிறப்பித் துக் கொண்டிருக்கும் மறைமுகமான கட் டளையிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று ஏன் சில சமயம் என் மனம் பிதற்றுகிறது? விந்தை என்னவென்றால், நேரத்தைப் பற்றி இவ்வளவு பேசும்போதே, விலை உயர்ந்த ஆடம்பரக்கடிகாரங்கள் மீதுமனிதனுக்குஇருக் கும் ஆசையையும் மனம் அசைபோடுகிறது.
அதிகாரத்தையும், பண பலத்தையும் காட்டும் அடையாளமாக மக்கள் விலை உயர்ந்த ஆடம்பரக் கடிகாரங்களை கைகளில் அணி கிறார்கள். ஆனால், இந்தக் கடிகாரத்தை வைத் திருப்பவர்கள் பலரும் பெரும்பாலும் சரியான நேரத்துக்கு வராதவர்களாகவே இருக் கிறார்கள். நகைப்புக்குரிய முரண் இது! சிலருக்கு நேரத்தைக் கடைப்பிடிப்பதை விட, அந்தஸ்தைப் கடைப்பிடிப்பது முக்கிய மாக இருக்கிறது.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மக்கள், காலத்தை குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகரும் அம்புபோல கருதுகிறார்கள். அவர்களுக்கு, வாழ்வு என்பது ஒரே ஒரு பிறப்பு மட்டுமே கொண்டது என்ற நம்பிக்கையால் கட்டமைக்கப்பட்டது. அந்தக் கண்ணோட்டம், ஒரே பிறவி என்ற வரையறுக்கப்பட்ட காலத் துக்குள் எல்லாவற்றையும் செய்து முடிக்க அவர்களைத் தூண்டுகிறது. அவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியம். எனவே, நேரம் தவறாமை ஒரு நெறிசார் விழுமியமாக, புனிதமான கடமையாக பார்க்கப்படுகிறது.
ஆனால், நம் பகுதியில் காலம் குறித்த பார்வையே வேறு. நம் முன்னோர் காலத் தைச் சுழற்சியாக நிகழும் நிகழ்வாகப் பார்த்தார்கள். மறுபிறவி என்ற எண்ணம் நம் கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்திருக் கிறது. வாழ்க்கை நமக்கு குறுகிய நேர் கோடல்ல, அது ஒரு சுழலும் சக்கரம். இப் போது இல்லை என்றால் அடுத்த பிறவியில் ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்த எண்ணத் தால், நாம் நேரத்தை கடைப்பிடிப்பதில் பதற் றமற்று இருக்கிறோம்.
யார் எந்தக் கருத்தைக் கொண்டிருந்தாலும், காலம்தான் எல்லாவற் றையும் தீர்மானிக்கிறது. உத்தியோகம் ஆண் டுகளால் அளக்கப்படுகிறது. வெற்றி என்பது வயதுடன் இணைத்து விவாதிக்கப்படுகிறது. தொழில்நுட்பம் நேரத்தை மீதப்படுத்தும் என்று வாக்குறுதி அளித்தாலும், அது நேரத்தை மேலும் தின்று தீர்க்கிறது. நேரம் என்பது பணம் மட்டுமல்ல; அது அந்தஸ்து, வாழ்வாதாரம், சுய மதிப்பாகவும் ஆகிவிட்டது.
இந்த முரண்பாடு என்னை அமைதியிழக் கச் செய்கிறது. எனக்கான நேரம் நான் உரு வாக்கியது, எனவே, அது என் கட்டுப்பாட் டில் இருக்கவே விரும்புகிறேன். ஆனால், உண்மையில் கடிகாரம்தான் என்னை தன் ஆளுகைக்கு உட்படுத்துகிறது. இந்த காலக் கருவி, வரம் கொடுத்தவன் தலையிலேயே கைவைக்கும் கதையை நினைவூட்டுகிறது.
அதேநேரத்தில், கடிகாரத்தைக் கண்டு கோபப்படுவது முட்டாள்தனம். சமூகம் இயங்கு வதற்குகால,நேர அளவீடுகள் தேவைப்படுகின் றன. நம் ஆன்மாவுக்கு அந்த எல்லைகளோ அளவீடுகள் இல்லை என்பதை புரிந்துணர் வதுதான் ஆன்ம விடுதலையின் அரிச்சுவடி. அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது குறிப் பிட்ட காலக்கெடுவுக்குள் பூர்த்தி செய்யப் பட்ட வேலைகளால் அளவிடப்படுவதில்லை.
கடிகாரம் எனது நாட்களை அளவிடலாம், ஆனால் எனது வாழ்க்கையின் தரத்தை நம் செயல்திறத்தால் மட்டுமே அளவிட முடியும். நான் டிரெட்மில்லை விட்டு வெளியே வந்து அன்றாட வேலைக்குள் நுழைந்த போது, காலத்துடன் சேர்ந்து நடப்பதே சரி யான வழி என்று உணர்ந்தேன். காலத்துக்கு நம்மைப் பற்றிக் கவலை இல்லை. நாம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது ஓடிக் கொண்டேதான் இருக்கும். நாம்தான் அதன் இணக்கத்தைக் கண்டறிய வேண்டும்.
இரும்பில் இதயம் கொண்டு
இயங்கும் இனிய கடிகாரமே!
திசையெங்கும் தீராது நீ
என் மீது நிகழ்த்தும் அதிகாரமே!
கால்கள் விரைவதும், கண்கள் துயில்வதும்
உன் கட்டளைப்படியே நிகழ்கின்றன!
நாளும் பொழுதும் இரவும் பகலும்
உன் ஆணைப்படியே அமைகின்றன!
அசையும் முட்களின் தாளலயத்தில்
அகப்படா பேருண்மை
கரையும் கால லயத்தில்
காட்சியாய் விரிகிறது.
ஆன்ம விழிபிற்காய்
அசையாது நிற்கும் சில நொடிகள் -
தூண்டிய ஆடம்பரத்தால்
நிரம்புவதில்லை காலத் துகள்கள்!
காற்று போல் விரவிய
கால கீதமே! உன்னில் அகப்படாது உன்னோடு நடக்கிறேன்.
நித்தியத்தன்மை என்னுள் நீங்காதிருக்க நீளும் காலமே உனை என் சாட்சியாய் அழைக்கிறேன்!
- என்.ஆனந்த் வெங்கடேஷ், நீதியரசர், சென்னை உயர் நீதிமன்றம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT