Published : 05 Oct 2025 06:32 PM
Last Updated : 05 Oct 2025 06:32 PM
அன்றைய கால அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதேபோல், அரசியல் சாராத அன்றைய நிகழ்வுகளையும் ஆங்காங்கே குறிப்பிட்டு வருகிறேன். அந்த வகையில் சில தகவல்களைத் தருகிறேன்.
அந்தக் காலங்களில் பள்ளிகளில் தமிழ் பாடநூல் வழிகாட்டியாக விளங்கிய ‘கோனார் நோட்ஸ்’ மிகவும் பிரபலமானது. இதை எழுதிய ஐயன் பெருமாள் கோனார், புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியில் தமிழாசிரியராகவும், பின் திருச்சி ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். ஐயன் பெருமாள் கோனார் எழுதிய ‘கோனார் தமிழ் அகராதி’, பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் - தமிழ் அகராதி ஆகும். இது பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மிகவும் பயனுள்ளதாகக் கருதப்பட்டது.
சென்னை எழும்பூர் ஹால்ஸ் சாலையில் மினர்வா டுடோரியல் ஒன்று இருந்தது. அதன் நிறுவனர் பரசுராமன் தயாரித்த ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கான துணை நூல்களும் அந்தக் காலத்தில் மாணவர்களிடையே பிரபலமாக இருந்தன.
கல்லூரி புகுமுக வகுப்பாக பியூசி என்ற படிப்பு இருந்தது. அதற்கு நான்-டீடெய்லாக ஆங்கிலத்தில் மகாத்மா காந்தி பற்றிய நூல் இருந்தது. சுப்பிரமணியம் என்பவர் அதற்கு எழுதிய துணை நூல் மிகவும் பிரபலமானது. இதேபோல் பல ஆசிரியர்கள் ‘நோட்ஸ்’ என்று சொல்லக் கூடிய துணை நூல்களை வெளியிட்டிருந்தார்கள். ஷேக்ஸ்பியர் நாடகம் அன்றைக்கு பி.ஏ., பி.எஸ்சி பட்ட வகுப்புகளுக்கு எனக்குத் தெரிந்தவரை கிட்டத்தட்ட 1976-77 வரை இருந்ததாக நினைவு. அதன் பிறகு ஏற்பட்ட பாடத்திட்ட மாற்றத்தில் ஷேக்ஸ்பியர் நாடகம் இடம் பெறாமல் போனது.
பள்ளி மாணவர்கள் நகரங்களுக்கு வரும்போது, பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் கல்லூரிக் கட்டிடங்களை வியப்புடனும் ஆர்வத்துடனும் பார்ப்பதுண்டு. இந்தக் கல்லூரி வளாகங்களுக்குள் நம்மால் நுழைய முடியுமா? அங்கு படிக்க முடியுமா? என்ற ஏக்கமும் அவர்களிடம் இருந்ததுண்டு. இத்தகைய கல்லூரி கட்டிடங்களைக் கண்டு நானும் வியந்திருக்கிறேன்.
ஏனென்றால் இன்றைக்கு இருப்பது போன்று தாலுகா அளவிலோ, ஒன்றிய அளவிலோ அன்றைக்கு கல்லூரிகள் கிடையாது. மாவட்டத் தலைநகரங்களில் மட்டுமே கல்லூரிகள் இருக்கும். கிராமங்களில் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் உயர் படிப்புகளுக்கு மாவட்டத் தலைநகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை அப்போது இருந்தது.
பள்ளிப் பாடப் புத்தகங்களை விலைக்குதான் வெளியே வாங்க வேண்டும். இன்றைக்கு இருப்பதுபோல் விலையில்லா புத்தகங்களோ, சீருடை போன்றவைகளே அப்போது கிடையாது. இன்று கல்வி பயில வரும் மாணவர்களுக்கு அரசு எத்தனையோ வசதிகளை செய்து கொடுக்கிறது. குறிப்பாக, இலவச பேருந்து பயணம், சைக்கிள், மடிக்கணினி வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
1957-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக போட்டியிட்டது. இதில் அண்ணா, கலைஞர் உட்பட 15 பேர் வெற்றி பெற்றனர். முதன்முதலாக அண்ணா சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து அண்ணா கீழ்கண்டவாறு விளக்குகிறார்....
“முதன்முதலாக சட்டப்பேரவைக்குள் நான் நுழைந்தேன். நான் என்ன பேசிவிடப் போகிறேன் என்று மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் கேலி பேசுவார்கள், என்னை அலட்சியப்படுத்துவார்கள், பகை காட்டுவார்கள், பேசும்போது அமளியில் ஈடுபடுவார்கள் என பலவாறான எண்ண ஓட்டங்கள் என் மனதை அலைக்கழித்தன. ஆனால் சட்டப்பேரவையில் அத்தகைய நிலையைக் காண முடியவில்லை. கட்சி உறுப்பினர்களுக்குள் கருத்துவேறுபாடுகள், மாறுபாடுகள் இருந்தாலும் கனிவோடு பேச, பழக, வாதாட முடிந்தது. இது எனக்கு முதல் அனுபவம். அங்கு கருத்து மோதல்கள் இருந்தன; காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன...
இருந்தபோதும் இவை எல்லாவற்றையும் கனிவு என்ற ஒற்றைப் பார்வையோடு அனைவரையும் அரவணைத்து சென்றது சட்டப் பேரவைத் தலைவராக இருந்த டாக்டர் யு.கிருஷ்ணாராவ்தான். அவரது தலைமையில் சட்டப்பேரவை சிறப்பாக நடந்தது. உறுப்பினர்களை நல்ல முறையில் வழிநடத்தினார். அவர் கன்னடத்து அந்தணர். இருந்தபோதும், பகைமை பாராட்டாமல் எங்களைப் பார்த்தார்.
தமிழர்கள் பிற மொழியினரை தாழ்த்திப் பேசும் கொள்கை கொண்டவர்கள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தினர் என்று பலவாறாக எங்கள் மீ்து அவதூறு குற்றச்சாட்டுகளைக் கூறிய நிலையில், பேரவைத் தலைவர் எங்களிடம் எப்படி இவ்வாறு கனிவுடன் நடந்து கொண்டார் என்பது எங்களுக்கு வியப்பைத் தந்தது. அவர் எங்கள் மீது அன்பு பொழிந்து, நாங்கள் பேசக் கூடிய விஷயங்களை அனுமதித்து கண்ணியமாக நடந்து கொண்டார்.
கள்ளங்கபடமற்ற டாக்டர் கிருஷ்ணாராவை பாராட்டியே ஆகவேண்டும். அவருடைய தமிழ்ப் பேச்சு இனிமையாக இருக்கும். இன்னும் நன்றாக தமிழ் பேச வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதற்காக நல்ல தமிழைத் தேடிப் பிடித்து பேசுகிறார். அவரது முயற்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். சட்டமன்றத்தில் தமிழ் மணம் கமழ்கிறது. திருக்குறளும், சிலப்பதிகாரமும் பலரால் எடுத்து வைக்கப்படுகிறது.
சட்டமன்ற ஆவணங்களில் தங்களுடைய கருத்தாழமிக்க கருத்துகள் இடம்பெற வேண்டும் என்று அனைத்து உறுப்பினர்களும் முனைப்புடன் இருந்தனர். காங்கிரஸ் உறுப்பினர் அனந்தநாயகி அம்மையார் எங்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசுவார். இருப்பினும் அதில் ஒரு நியாயம் இருக்கும். அவருடைய தமிழ் ஆர்வத்தைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், எங்களுடைய கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதும் எங்களுக்கு உரிய மரியாதை தரப்பட்டது. பிரச்சினைகளின் நியாயம், அநியாயம் குறித்து நாங்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.
விவாதங்களில் உறுப்பினர்கள் பாராட்டியோ, விமர்சித்தோ பேசினாலும் அதன் மீதான தீர்வில் வெளிப்படைத் தன்மை இருந்தது.
சட்டமன்றத்தில் தொடக்கத்தில் நாங்கள் பேசும்போது எங்களை அடுக்குமொழி பேசுபவர்கள் என்று மற்ற கட்சிகளின் உறுப்பினர்கள் கிண்டலாகச் சொன்னதும் உண்டு. காலப்போக்கில், ஆளும்கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்களே எங்களைப் போல அடுக்கு மொழி பேச முயன்றனர்; விரும்பினர்.
சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் ஆசைத்தம்பி பேசும்போது, ஒவ்வொரு முறையும் வாக்கியங்களை முடிக்கும்போது ஆசைப்படுகிறேன்... ஆசைப்படுகிறேன்.. என்று கூறி வந்தார். அதைத் தொடர்ந்து நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் பேசும்போது என்னைப் பார்த்து, ‘ஆசைத்தம்பி ஆசைப்படுகிறார்...’ என்று கூறியபோது, உங்களுக்கும் அடுக்குமொழியில் பேச ஆசை இருக்கிறது என்று சொன்னேன். சபை கலகலப்பானது...
அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் சம்பவம், சட்ட புத்தகம் எரிப்பு தடுப்புச் சட்டம் பற்றியும், நேருவுக்கு கருப்புக்கொடி காட்டியபோது ஆளும் அரசு மேற்கொண்ட அடக்குமுறை குறித்தெல்லாம் திமுக உறுப்பினர்கள் எதிர்த்துப் பேசினோம். அப்போது ஏற்பட்ட விவாதங்களில் ஆத்திரம், கோபம், நெகிழ்ச்சி, எழுச்சி ததும்ப உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள்.
இருந்தபோதும் சபை கட்டுப்பாடுகளை மீறவில்லை. மரபு விதிகள் பாழ்படுத்தப்படவில்லை. கலகம் ஏற்படவில்லை. அத்தகைய பண்பான முறையில் சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற்றதென்றால் அதற்கு முழுமுதற் காரணம் சபையை வழிநடத்திய பேரவைத் தலைவர் டாக்டர் கிருஷ்ணாராவ்தான்.” இவ்வாறு தனது சட்டசபை முதல் அனுபவத்தை அண்ணா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
அந்த காலகட்டத்தில்தான் ‘விகடன்’ இதழில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய ‘தில்லானா மோகனாம்பாள்’ தொடர் வெளியாகி வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பின்னாளில் அந்தத் தொடர் திரைப்படமாக வெளியானது வேறு விஷயம்! அதேபோல் ஜெமினி நிறுவனம் தயாரித்த ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படம் பற்றிய முன்னோட்டம் 23.2.58 விகடன் இதழில் பிரசுரமானது. இது அப்படத்தின் மீதான பொதுமக்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.
அகமதாபாத் உள்ளிட்ட குஜராத் பகுதிகள் மகாராஷ்டிராவுடன் இணைந்து மும்பை மாகாணத்தில் இருப்பது அகமதாபாத் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, 1956-ம் ஆண்டு தனி குஜராத் மாநில கோரிக்கை விஸ்வரூபமெடுத்தது. அகமதாபாத்தில் மகா குஜராத் இயக்கத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களால் தலைமையேற்று மாநில கோரிக்கையுடன் பெரும் கலவரம் நடைபெற்றது.
தனி குஜராத் மாநிலம் கேட்டு அகமதாபாத் காங்கிரஸ் அலுவலகத்துக்கு மாணவர்கள் சென்றபோது, மொரார்ஜி தேசாய் அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தார். அதைத் தொடர்ந்து காவல்துறை மேற்கொண்ட அடக்குமுறையால் கிட்டத்தட்ட 8 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குஜராத் முழுவதும் பெரும் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் தூண்டியது, இந்த போராட்டங்கள் மற்றும் மக்களின் எதிர்ப்பின் காரணமாக, 1960 மார்ச் 1-ஆம் தேதி குஜராத் தனி மாநிலமாக உருவானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கலவரம் நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
1957-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஜவஹர்லால் நேரு தலைமையில் மீண்டும் மத்திய அமைச்சரவை அமைக்கப்பட்டது. குடியரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும், குடியரசு துணைத் தலைவராக டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதே காலத்தில் சென்னை மாகாணத்தில் காமராஜர், ஒரிசாவில் ஹரே கிருஷ்ணா மகதாப், பஞ்சாபில் பிரதாப்சிங் கைரோன், உத்தரப் பிரதேசத்தில் டாக்டர் சம்பூர்னானந்த், பம்பாய் மாகாணத்தில் யஷ்வந்த்ராவ் சாவன், மத்தியப் பிரதேசத்தில் டாக்டர் கைலாசநாத் கட்ஜு, மைசூரில் எஸ்.நிஜலிங்கப்பா, அசாமில் சென்னை மாகாண கவர்னராக இருந்த விஷ்ணுராம் மேதி, மேற்கு வங்கத்தில் டாக்டர் பி.சி.ராய், பீகாரில் ஸ்ரீகிருஷ்ணா சின்ஹா, ஆந்திராவில் டி.பிரகாசம், காஷ்மீரத்தில் பக்ஷிகுலாம் முகமது ஆகியோர் அந்த மாநிலங்களின் முதல்வர்களாகப் பொறுப்பேற்றனர்.
அன்றைய காலகட்டத்தில் உணவு தானியப் பற்றாக்குறை நாடெங்கும் இருந்ததால் சேமிப்புக் கிடங்குகளை நாடு முழுவதும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஷேக் அப்துல்லா, 1958 ஜனவரி 8-ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அதே ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி மீண்டும் நாட்டு விரோதச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல், ஹரிதாஸ் முந்த்ரா என்ற பெரிய வர்த்தகர், தனி நிறுவனங்களின் பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம் (LIC) விற்பனை செய்ததில் நடந்த ஊழலுக்குத் துணை போனார் என்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று, டி.டி.கிருஷ்ணமாச்சாரி மீது விசாரணை நடத்திட நீதிபதி எம்.சி.சாக்ளா கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை முடிவில் டி.டி.கே. அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. மைசூர் முதல்வராக இருந்த நிஜலிங்கப்பா ராஜினாமா செய்ததையடுத்து, முன்னாள் துணை ஜனாதிபதியாக இருந்த பி.டி.ஜாட்டி தலைமையில் அங்கு புதிய அமைச்சரவை உருவானது.
பாகிஸ்தானின் ஜீலம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு பல்நோக்கு அணை மங்களா அணை. இது உலகின் 6-வது பெரிய அணையாகும். விவசாயம், குடிநீர் மற்றும் நீர் மின்சாரம் போன்றவற்றுக்கு ஆதாரமாக உள்ளது. இந்த அணை, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இந்த அணை தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து ஐ.நா. மன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றன.
அதேபோல் இந்தியா - பாகிஸ்தான் ஒப்பந்தத்தின்படி கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்கம் எல்லையில் உள்ள பெருபாரி யூனியன் பிரதேசம், இரு நாடுகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டாலும், பிரச்சினைகள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தன. அந்தப் பகுதியை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் இந்த காலகட்டங்களில் எடுக்கப்பட்டன.
ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் மாநிலப் பகுதியில் அமைந்துள்ள தாமோதர் பள்ளத்தாக்கு அணையில் மின் உற்பத்தி, நீர் வளம் குறித்து ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இயற்கை எரிவாயு குறித்தான திட்டமும் இந்தக் காலகட்டத்தில்தான் முன்மொழியப்பட்டன. இந்துஸ்தான் உப்பு கம்பெனி, இண்டியன் ரீபைனரி பிரைவேட் லிமிடெட், இண்டியன் காட்டன் மில்ஸ் ஃபெடரேஷன், சீட் டயர்ஸ், இந்துஸ்தான் அலுமினியம், ஜெர்மன் நிறுவனமான பேயர் என்னும் பன்னாட்டு மருந்து நிறுவனம் என பல நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டன.
இந்தியன் ரயில்வே துறை சார்பில் கொல்லம், கோட்டயத்துக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டது. அதேபோல் அகல ரயில் பாதைகளும் உருவாக்கப்பட்டன. பம்பாயில் ஐஐடி நிறுவனம் தொடங்கப்பட்டது.
மராத்வாடா பல்கலைக்கழகம் (டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம்), மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் (முன்னர் அவுரங்காபாத் என அழைக்கப்பட்டது) தொடங்கப்பட்டது.
புதுடெல்லியில் உள்ள இந்தியாவின் உச்ச நீதிமன்ற கட்டிடம், இந்திய-பிரிட்டிஷ் கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டது, இது தலைமை கட்டிடக் கலைஞர் கணேஷ் பிகாஜி தியோலாலிகரால் வடிவமைக்கப்பட்டது. வட்ட வடிவ கட்டிடக்கலை மற்றும் ரோட்டுண்டா போன்ற அமைப்புகளுடன் கூடிய ஒரு பிரமாண்டமான முக்கோண வடிவில் உள்ளது. மத்தியில் உள்ள கோபுரம் 117 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக 20 லட்சம் சதுர அடியில் இந்தக் கட்டிடம் எழுப்பப்பட்டது.
இருபதாம் நூற்றாண்டின் முதற்பகுதியில் மலையாள நவீன கவியுலகின் மும்மூர்த்திகள் எனப் போற்றப்படும் மூவரில் ஒருவரான வள்ளத்தோள் நாராயண மேனனுக்கு 1955-ம் ஆண்டு பத்மபூஷண் விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
(தொடர்வோம்...)
முந்தைய அத்தியாயம்: தமிழ்நாட்டின் அடையாளம் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 61
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT