Published : 04 Oct 2025 04:24 PM
Last Updated : 04 Oct 2025 04:24 PM

தமிழ்நாட்டின் அடையாளம் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 61

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் (என்எல்சி) | வலது: ஜம்புலிங்கம் முதலியார்

பழுப்பு நிலக்கரி சுரங்கத் தொழில் என்பது இந்தியாவுக்கு அப்போது புதிதாக இருந்தது. இதர வகை நிலக்கரியோடு ஒப்பிடும்போது பழுப்பு நிலக்கரி எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. இந்த நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய முடியும். பழுப்பு நிலக்கரி நெய்வேலியில் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இது 25% முதல் 35% வரை கரிமம் கொண்ட, குறைந்த வெப்ப ஆற்றல் திறன் கொண்ட மென்மையான, பழுப்பு நிற எரிபொருளாகும்.

நிலக்கரி மூலமாக மின் உற்பத்தி செய்வது கிழக்கு ஜெர்மனி நாட்டில் மட்டுமே இருந்து வந்தது. அந்த வகையில், அந்த நாட்டில் மின் உற்பத்திக்காக பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி வந்தார்கள். அதேபோல், நைட்ரஜன் உரங்கள் தயாரிப்பதற்கும் பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தினார்கள். எனவே, இந்த தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் கிழக்கு ஜெர்மனியின் உதவியுடன் தமிழகத்தில் நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அந்த காலகட்டத்தில் கிழக்கு ஜெர்மனி தனி நாடாக இருந்தது. தற்போது கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி இணைந்து ஒரே நாடாக மாறிவிட்டது.

நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதற்கான பணிகளை சென்னை மாகாண முதலமைச்சர் காமராஜரும், அமைச்சர் சி.சுப்பிரமணியமும் மேற்கொண்டனர். அதேநேரம், பெரும் பண முதலீடு தேவைப்படுவதால், இத்திட்டத்தை மாகாண அரசால் செயல்படுத்த முடியாது. எனவே மத்திய அரசின் நிதி உதவியுடன் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஏனெனில், அப்போதைய தமிழக பட்ஜெட்டுக்கு ஒதுக்கும் நிதியில் 75 சதவீதம் இத்திட்டத்துக்கு செலவிட வேண்டிய மாபெரும் திட்டமாக இது கருதப்பட்டது.

இந்நிலையில் இத்திட்டத்தை மத்திய திட்டக் கமிஷனின் கவனத்துக்கு கொண்டுபோய், நிதி உதவி பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி டெல்லி சென்று திட்டக் கமிஷன் கூட்டத்தில் நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் குறித்து சென்னை மாகாண அமைச்சர் சி.சுப்பிரமணியம் பேசும்போது, ஓய்வு பெற்ற ஐசிஎஸ் அதிகாரி சி.எம்.திரிவேதி பொறுப்பான பதில் தரவில்லை. இதனால் அதிருப்தியடைந்த சி.சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் அக்கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த விவகாரம் பிரதமர் நேருவுக்குத் தெரிய வந்தது. அவர் உடனே முதலமைச்சர் காமராஜரிடம் பேசினார். அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சர் குல்ஜாரிலால் நந்தாவை அழைத்து, இந்த விவகாரம் தொடர்பாக விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

தமிழகத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியும் அப்போது மத்திய அமைச்சராக இருந்தார். நெய்வேலி நிலக்கரிச் சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் இருந்து எப்படியாவது நிதி உதவி பெற்றுவிட வேண்டும் என்பதில் டி.டி.கிருஷ்ணமாச்சாரியும், சி.சுப்பிரமணியமும் தீவிர முனைப்புக் காட்டினர். இறுதியாக மத்திய அரசின் முதலீட்டுடன் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்.எல்.சி) நிறுவனத்தை உருவாக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

இதற்கிடையே, மாநில அரசின் திட்டங்களை எப்படி மத்திய அரசின் கையில் ஒப்படைக்கலாம் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அண்ணா கடுமையாக விமர்சித்தார். அதற்கு பதில் அளித்து அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், “இவ்வளவு பெரிய முதலீட்டுக்கு நாம் எங்கே போவது? சென்னை மாகாணத்தில் அதற்கான நிதியைத் திரட்ட முடியாது. மத்திய அரசு நிதி உதவி அளித்தால் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த முடியும். எனவேதான் மத்திய அரசின் உதவியைக் கோரினோம்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் வேகமாக நடைபெறத் தொடங்கின. இவ்வாறு தொடங்கப்பட்டதுதான் என்.எல்.சி. நிறுவனம். முதல் சுரங்கம் தோண்டும் பணி முடிவடைந்ததும், 2-வது சுரங்கம் தோண்டும் பணியும் தொடர்ந்து நடைபெற்றது.

நிலக்கரியை வெட்டி எடுப்பது மட்டுமல்லாமல், அதனைக் கொண்டு மின் உற்பத்தி செய்வது முக்கிய அம்சமாகும். இத்திட்டம் இன்றைக்கு ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு தருவதோடு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வருகிறது. மாநில உரிமைகள் பற்றிய கருத்து ஒருபுறம் இருந்தாலும், இதுபோன்ற மெகா திட்டங்களை மத்திய அரசின் உதவி இல்லாமல் செயல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி படிமங்களின் கீழே தண்ணீர் பெருமளவில் இருந்தது. பீறிட்டு வெளியேறி தேங்கும் தண்ணீர், ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றப்பட்டது. இதற்காக வாய்க்கால்கள் வெட்டப்பட்டன. அதன் மூலம் வெளியேற்றப்பட்ட தண்ணீர் விவசாயத்துக்கும் பயன்பட்டது. அதேநேரம் நிலக்கரி வெட்டப்பட்ட பகுதி மேடு பள்ளங்களுடன் பாழ் நிலமாகக் காட்சி அளித்தது.

இந்நிலையில் சுரங்கப்பகுதியை பார்வையிட வந்த அமைச்சர் சி.சுப்பிரமணியம், சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி முடிவடைந்தவுடன் அந்தப் பகுதியில் ஏற்படும் மேடு பள்ளங்களை சமப்படுத்தி அங்கே மரங்களை நட வேண்டும் என்று உத்தரவிட்டார். அவ்வாறு நடப்பட்ட மரங்களால்தான் இன்றைக்கு நெய்வேலி சுரங்கம் பகுதிகள் பசுமையாகக் காட்சியளிக்கின்றன. மரங்கள் நடும் பணிகளை மேற்கொள்வதற்காக விவசாயப் பட்டதாரிகள் நியமிக்கப்பட்டு ஒரு தனி துறையாகவே செயல்பட்டு வருகிறது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம் திட்டத்தை பிரதமர் நேரு 1956 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். சில காலம் கழித்து அங்கு மீண்டும் வந்த நேரு, அப்பகுதியில் மரங்கள் வளர்ந்து பசுமையாக இருப்பதைப் பார்த்து வியந்து பாராட்டினார். தமிழ்நாட்டின் பெருமைமிகு திட்டங்களில் ஒன்று என்எல்சி திட்டம். இன்றைக்கு தமிழ்நாட்டின் ஓர் அடையாளமாகத் திகழ்கிறது இந்த நிறுவனம். இதன் தொடக்கவிழாவில் நேரு பேசும்போது, “இத்திட்டம் சென்னை மாகாணத்துக்கு மட்டுமல்ல; இந்தியாவினுடைய கொடை” என்று பெருமிதத்துடன் பேசினார்.

தனவான் ‘ராவ் பகதூர்’ ஜம்புலிங்கம் முதலியார்

இத்தகைய பெருமை வாய்ந்த நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் அமைந்துள்ள நிலம் யாருடையது? அது எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்...

அன்றைக்கு தென்னார்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கடலூர் வட்டத்தில் பண்ருட்டி அருகில் திருக்கண்டலேஸ்வரம் என்ற கிராமத்தில் செங்குந்த கைக்கோளர் மரபில் வந்த தி.வீ.மாசிலாமணி முதலியார் - சொர்ணத்தம்மாள் தம்பதிக்கு 1890-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி 2-வது மகனாகப் பிறந்தவர் ஜம்புலிங்கம். பெரும் வசதிபடைத்த பெருநிலக்கிழார் குடும்பம். ஜவுளி மற்றும் விவசாயத் தொழிலில் கோலோச்சியவர்கள் இவருடைய குடும்பத்தினர். ஜம்புலிங்கம் தனது இளமைப் பருவத்தில் கடலூர் மற்றும் சென்னையில் கல்வி பயின்றார். 1911-ம் ஆண்டு விஜயலட்சுமி அம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 பெண் குழந்தைகள்.

மிகச் சிறந்த செல்வந்தராக மட்டுமில்லாமல் ஒரு முற்போக்கு சிந்தனை கொண்ட விவசாயியாகவும் திகழ்ந்தவர் ஜம்புலிங்கம். தென்னார்க்காடு மாவட்டத்தில் தாலுகா போர்டு உறுப்பினராக 9 ஆண்டுகள் பணியாற்றினார். கடலூர் மாவட்ட தாலுக்கா போர்டு தலைவராக 6 ஆண்டுகளும், ஜில்லா போர்டு உறுப்பினராக 3 ஆண்டுகளும் பணியாற்றினார். மேலும், கடலூர் நகராட்சியில் நகர மன்ற உறுப்பினராக 3 ஆண்டுகளும், நகர மன்றத் தலைவராக 3 ஆண்டுகளும் பணியாற்றினார்.

நெல்லிக்குப்பத்தில் பேரூராட்சி தலைவராக 20 ஆண்டுகள் பணிபுரிந்தார். பேரூராட்சித் தலைவராக இவர் பணியாற்றிய காலத்தில் நெல்லிகுப்பம் சர்க்கரை ஆலையை கொண்டுவருவதற்கு முழுமூச்சாகப் பாடுபட்டார். இது பலருக்கு வேலைவாய்ப்பைக் கொடுத்தது. சேலம் மாவட்டத்துக்கும் கடலூர் மாவட்டத்துக்கும் தொடர்வண்டி பாதை அமைக்கப்பட்டதில் இவரது பங்கு மிக முக்கியமானது. அதேபோல், புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்ட தனது சொந்த செலவில் முழு முனைப்புடன் ஈடுபட்டு, அரசிடம் அனுமதி பெற்று பாலத்தை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.

கிராமப்புற மக்களிடையே கல்வியறிவை உண்டாக்க வேண்டும் என்பதில் ஜம்புலிங்கம் முதலியார் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மக்கள் சேவகர் என பலராலும் பாராட்டப்பட்டார். இவரது சேவைகளைப் பாராட்டி ‘ராவ் பகதூர்’ பட்டத்தை பிரிட்டன் அரசு, ஜூன் 1934-இல் வழங்கி கவுரவித்தது.

இதற்கிடையே, ஜம்புலிங்க முதலியார் தனக்குச் சொந்தமான நெய்வேலி கிராமத்து விவசாய நிலத்தில் தண்ணீருக்காக கிணறு தோண்டும்போது, கருப்பு நிற திரவப்பொருள் தண்ணீரோடு கலந்து வந்தது. அதை அன்றைய ஆங்கிலேய அரசின் புவியியல்துறையின் கவனத்துக்கு அனுப்பிவைத்தார். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. பின்பு இவரே தன் சொந்த செலவில் ஆய்வுகளை மேற்கொண்டு நிலக்கரி இருப்பதை கண்டுபிடித்தார்.

இந்திய நாடு சுதந்திரம் அடைந்த நிலையில், அப்போது முதலமைச்சராக இருந்த ராஜாஜியிடம் அணுகி, இந்த நிலப்பகுதியில் நிலக்கரி இருப்பதை பற்றி விளக்கினார். அப்போதும் அரசு கண்டு கொள்ளவில்லை. பின்பு காமராஜர் முதலமைச்சர் ஆன பின்பு அவரை அணுகி விளக்கிக் கூறினார். அதன் பின்னர் காமராஜர் மூலமாக பிரதமர் ஜவஹர்லால் நேருவைச் சந்தித்து அவரிடம் விளக்கமாக எடுத்துரைத்தார்.

நிலக்கரி சுரங்கம் தோண்டும் நிறுவனம் தொடங்க அன்று ரூ.150 கோடி தேவைப்பட்டது. இந்நிலையில், நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனம் உருவாகத் தேவைப்படும் 620 ஏக்கர் நிலத்தை காமராஜர் தலைமையிலான சென்னை மாகாண அரசுக்கு தானமாகக் கொடுக்கிறேன் என்று ஜம்புலிங்கம் முதலியார் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, மத்திய அரசின் உதவியுடன், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் தொடங்கப்பட்டது. 620 ஏக்கர் நிலத்தின் இன்றைய மதிப்பு ரூ.2,500 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கு தென்னிந்தியாவுக்குத் தேவைப்படும் மின்சாரத்தில், 90 சதவீதம் அனல்மின் நிலையத்தில் இருந்துதான் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த தென்னிந்திய அனல்மின் நிலையங்களுக்குத் தேவைப்படும் பழுப்பு நிலக்கரி அனைத்தும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் இருந்து அனுப்பப்படுகிறது.

இத்தகைய கொடை வள்ளல் ஜம்புலிங்க முதலியாருக்கு, நெய்வேலி குடியிருப்பில் முழு உருவச் சிலை உள்ளது. இவர் பெயரில் நெய்வேலி குடியிருப்பில் ஓர் சாலை உள்ளது. இவர் தானமாகக் கொடுத்த இடத்தில் கட்டப்பட்ட நெல்லிக்குப்பம் பூங்காவுக்கு ‘ஜம்புலிங்கம் பூங்கா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இவரின் பொருள் உதவியால் கட்டப்பட்ட நெல்லிக்குப்பம் நடுவீரப்பட்டு சாலை ‘ஜம்புலிங்கம் சாலை’ என்று அழைக்கப்படுகிறது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி போன்று ராஜஸ்தான் மாநிலத்திலும் நிலக்கரி இருப்பதாகக் கண்டறியப்பட்டது. நெய்வேலி நிலக்கரி சுரங்கம் திட்டமிடல் அடிப்படையில் அங்கும் சுரங்கப் பணிகள் நடைபெற்றன.

மற்ற வகை நிலக்கரியுடன் ஒப்பிடும்போது, பழுப்பு நிலக்கரி சற்று எளிதில் பற்றக் கூடியது என்பதால், குறிப்பிட்ட முறையில் பதப்படுத்தி, சிறிய கட்டிகளாக ஆக்கி, வீடுகளில் எரிபொருளாகவும் பயன்படுத்த முடியும். சமையல் எரிவாயு (எல்பிஜி) பயன்பாடு இல்லாத அந்தக் காலங்களில் வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் எரிபொருளாக பழுப்பு நிலக்கரி பயன்படுத்தப்பட்டு வந்தது.

தமிழகத்தில் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் போல் அமைந்த மற்றொரு மிகப் பெரும் திட்டம் சேலம் இரும்பாலை திட்டம். 1962-ம் ஆண்டு இரும்பாலை திட்டப் பணி தயாரிக்கும் பொறுப்பை டஸ்தூர் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. அப்போது மொரார்ஜி தேசாய் மத்திய நிதி அமைச்சராக இருந்தார். இந்த ஆலை சேலத்தில் உருவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து பார்ப்போம்...

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x