Published : 01 Oct 2025 06:45 AM
Last Updated : 01 Oct 2025 06:45 AM
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 18 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கு முன்பு ஓர் அரசியல் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெற்றதில்லை என்கிற அளவுக்கு இந்தக் கூட்ட நெரிசல் மரணங்கள் பேசுபொருள் ஆகியிருக்கின்றன.
இந்தியாவில்... இந்தியாவில் கூட்ட நெரிசல் விபத்துகள் புதிதல்ல. மத நிகழ்வுகள், திருவிழாக்கள், ரயில் நிலையங்கள், மக்கள் திரள் கூடும் பொது நிகழ்ச்சிகள் உள்படப் பல்வேறு நிகழ்வுகளின்போது கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக, இந்தியாவில் ஏற்படும் கூட்ட நெரிசல் விபத்துகளில் 70% மத நிகழ்வுகளில் ஏற்படுபவை என்கின்றன தரவுகள்.
அரசியல் கட்சிகளின் மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், பிரச்சாரக் கூட்ட நிகழ்வுகளில் கூட்ட நெரிசல் விபத்து ஏற்படுவது அரிது. அந்த வகையில், 2022 டிசம்பர் 28 அன்று ஆந்திர மாநிலம் நெல்லூரில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, கால்வாயில் விழுந்த 8 பேர் உயிரிழந்தனர். அரசியல் கட்சிக் கூட்டத்தில் நிகழ்ந்த முக்கியமான விபத்து என இந்தச் சம்பவம் பதிவாகியிருக்கிறது.
தமிழகத்தில்... தமிழக வரலாற்றில் முக்கியமான சில கூட்ட நெரிசல் விபத்துகள் பதிவாகியிருக்கின்றன. 1992இல் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற கும்பகோணம் மகாமக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர். 2005 நவம்பர், டிசம்பரில் முறையே சென்னை வியாசர்பாடி, எம்ஜிஆர் நகரில் அரசின் நிவாரண உதவிகள் பெறும் நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர்.
இவை அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால், தமிழகத்தில் இதுவரை அறிந்திடாத அளவுக்கு கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த மரணங்கள், வரலாற்றின் கறுப்புப் பக்கங்களாக இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
கட்டுப்பாடான கூட்டங்கள்: தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளில் லட்சக்கணக்கிலோ பல்லாயிரக்கணக்கிலோ தொண்டர்கள் கூடுவது புதிது கிடையாது. தமிழகத்தில் இன்றுபோல் பெரிய பாதுகாப்பு வழிமுறைகளோ நடைமுறைகளோ இல்லாத காலக்கட்டத்தில்கூட எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அரசியல் நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.
1969இல் அன்றைய முதல்வர் அண்ணா மறைந்த பிறகு இறுதி அஞ்சலி நிகழ்வில் சுமார் 1.5 கோடி பேர் பங்கேற்றதாகக் கூறப்படுவது, 1977இல் அதிமுக ஆட்சியைப் பிடித்த பிறகு சென்னை அண்ணா சாலையில் எம்.ஜி.ஆர். மிகப் பெரிய மக்கள் திரள் கூட்டத்தில் பங்கேற்றது போன்றவை சில உதாரணங்கள். இதேபோல தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் மிகப் பெரிய மாநாடுகள், கூட்டங்களை முன்னெடுத்துள்ளன.
இன்றைய சூழல்: இந்தியாவில் கூட்ட நெரிசல் விபத்துகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளன. 2003 – 2025 காலக்கட்டத்தில் மட்டும் 23 கூட்ட நெரிசல் விபத்துகள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளன. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 11 கூட்ட நெரிசல் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, 2025இல் மட்டும் 6 கூட்ட நெரிசல் விபத்துகள் நடந்தேறியுள்ளன. 2025இல் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தியிருப்பது, கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்துதான்.
நெரிசல்கள் ஏன்? - அரசியல் கட்சி மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள் ஆகியவற்றில் மட்டுமல்ல, பொதுவாகக் கூட்ட நெரிசல் அசம்பாவிதங்களைத் தடுப்பதற்குத் திட்டவட்டமான கூட்ட மேலாண்மை விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது அவசியம். அரசியல் கட்சி நிகழ்வுகளில் திட்டமிட்ட எண்ணிக்கையை விட அதிகக் கூட்டம் குவிகிறபோது, திறமையான கூட்ட மேலாண்மை என்பது கூட்ட அமைப்பாளர்கள், அக்கூட்டத்தில் பங்கேற்பாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பையும் திட்டமிடலையும் பொறுத்தது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 10 ஆயிரம் பேர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றது திட்டமிடலில் ஏற்பட்ட தவறான முன்கணிப்பு. இதுபோன்று எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையைவிடக் கூட்டம் அதிகரிக்கும்போது, திமிறும் மக்கள் கூட்டத்தில் குழப்பங்கள் ஏற்படுவதும், தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முண்டியடிக்கும் போக்கும் விபத்துகளுக்கு வித்திடுகின்றன.
அதேநேரத்தில், குறைத்து மதிப்பிடப்படும் எண்ணிக்கை, பாதுகாப்பு விதிமுறைகளைப் பலவீனமாக நடைமுறைப்படுத்துதல், போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, அசம்பாவிதங்களை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இல்லாதிருப்பது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் - காவல் துறை - உள்ளூர் நிர்வாகத்தின் மோசமான ஒருங்கிணைப்பு போன்றவையும் கூட்ட நெரிசல் விபத்துகளுக்குக் காரணங்களாகின்றன. இந்தியாவில் இந்த மரணங்கள் மீண்டும் மீண்டும் ஏற்படுவது, கூட்ட மேலாண்மையில் ஒரு நாடாகவே நாம் பின்தங்கியிருப்பதை அம்பலப்படுத்துகிறது.
தொடர்கதையாவது ஏன்? - இந்தியாவில் கூட்ட நெரிசல் விபத்துகள் துல்லியமான கூட்ட மேலாண்மை விதிகள், வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் வகுக்க வேண்டிய தேவையை உணர்த்தி வருகின்றன. பெரிய கூட்டங்களுக்குக் கவனமாகத் திட்டமிடுவதும், பாதுகாப்பு நெறிமுறைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும் அவசியம்.
ஆனால், பிரபலமான நபர்களுக்கு ரசிகர்களின் மத்தியில் இருக்கும் புகழை மூலதனமாக மாற்ற முயன்றால், உயிர்ப் பாதுகாப்பு அங்கு கேள்விக்குறியாகிவிடும். பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட் வெற்றிப் பேரணி, கரூர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த விபத்துகள் அதை உணர்த்துகின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் முன்னெச்சரிக்கைகள் அலட்சியப்படுத்தப்படுவதால் கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்க்க முடிவதில்லை.
என்ன தேவை? - நெரிசலான இடங்களில் அதீதக் கூட்டமானது பீதியை விரைவாகப் பரப்பிவிடும். இந்தச் சூழலில் மக்களை அமைதியாக வழிநடத்துதல், நீர்ச்சத்துக் குறைபாடு, மூச்சுத் திணறல் ஏற்படுவதைத் தடுப்பது, பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவி பெற வழிகளை ஏற்படுத்தி, பாதையைத் திறந்துவைப்பது போன்றவை தேவை. கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் காவல் துறை, தன்னார்வலர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு முறையான பயிற்சியும் அவசியம்.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு அதற்கான காரணங்களை ஆராய ஒரு நபர் விசாரணை ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. என்றா லும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க அரசியல் கட்சிக் கூட்டங்கள், பேரணிகள், ஆன்மிக நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், கலாச்சாரக் கூட்டங்கள் அனைத்துக்கும் பொருந்தும் வகையில் நிகழ்ச்சிப் பாதுகாப்புக்கான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
1989இல் பிரிட்டனில் ஹில்ஸ்பரோ விளையாட்டு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்து, அங்கு பாதுகாப்பு நெறிமுறைகளை மறுவடிவமைக்கும் பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. இந்தியாவில் மத்திய அரசும் மாநில அரசுகளும் முறையான வழிகாட்டுதல்களை உருவாக்குவதற்கு, மேற்கண்ட நிகழ்வுகளில் இருந்து பாடங்களைக் கற்க வேண்டும்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT