Published : 28 Sep 2025 02:43 PM
Last Updated : 28 Sep 2025 02:43 PM
தமிழகத்தைப் பொறுத்தவரை கேரளா மட்டுமின்றி பிற அண்டை மாநிலங்களுடனும் நதிநீர் பங்கீடு பிரச்சினை காலம்காலமாகத் தொடர்ந்து வருகிறது. காவிரி, தென்பெண்ணையாறு, ஒகேனக்கல் பிரச்சினைகள் உள்ளன. மேட்டுப்பாங்கான கர்நாடகாவில் மழை பெய்தபோதும், தமிழகத்தின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு நீர் வராமல் அணைக்கட்டுகள் மூலம் தடுக்கப்படுகிறது. ஆந்திராவில் இருந்து வரவேண்டிய பாலாறு இடையில் கணேசபுரத்தில் 7, 8 தடுப்பணைகளால் தடுக்கப்படுகிறது. வேலூர் மாவட்ட பாசனத்துக்கு வருகின்ற பொன்னியாற்றுக்கும் நீர் மறுக்கப்படுகிறது. இவற்றைப் பற்றியெல்லாம் பெரிதாகப் பேசப்படுவதில்லை.
நீர் பங்கீடு பிரச்சினை என்றால் காவிரி, முல்லை பெரியாறு இவற்றைப்பற்றி மட்டும்தான் பேசுகிறோம். அதுதான் செய்தியாகிறது. அதுவும் முக்கியப் பிரச்சினைதான். அதேநேரம் இதுபோன்று 25 நதிநீர் பங்கீடு சிக்கல்கள் உள்ளன. இவையெல்லாம் எப்போது தீர்க்கப்படும் என தெரியவில்லை.
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தை 3 கட்டங்களாக செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டு அதற்கான உடன்பாடும் எட்டப்பட்டது. மத்திய அரசின் தலையீடு எதுவும் இன்றி தமிழகத்தை ஆண்ட காங்கிரஸ் அரசும், கேரள மாநிலத்தில் இருந்த கம்யூனிஸ்ட் அரசும் தங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொண்டு பணிகளை விரைவுபடுத்தின. இப்பணிகளைப் பார்வையிட பிரதமர் நேருவை, தமிழக அமைச்சர் சி.சுப்பிரமணியம் பரம்பிக்குளத்துக்கு அழைத்துச் சென்றார். நேரு வருகையையொட்டி அங்கு விருந்தினர் விடுதியும் அமைக்கப்பட்டது.
முதல்கட்டப் பணிகளை பார்வையிட்ட நேரு வியந்து பாராட்டினார். பின்னர் விருந்தினர் விடுதியில் அவர் ஓய்வு எடுத்தார். அங்கு அவருக்கு பரிமாறப்பட்ட உணவில் கொங்குமண்டலத்தின் பிரசித்தி பெற்ற ‘பச்சைப்புளி ரசம்’ இடம் பெற்றிருந்தது. அதை ரசித்து சுவைத்த நேரு, இந்த ரசம் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கிறது என்று பாராட்டினார்.
முதல் கட்டப் பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு 1958-ம் ஆண்டு நேரு தொடங்கி வைத்தார். பின்னர் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கின. அந்த சமயத்தில் கேரளாவில் இஎம்எஸ் நம்பூதிரியின் கம்யூனிஸ்ட் அமைச்சரவை 356-வது பிரிவைப் பயன்படுத்தி 1959-ம் ஆண்டு கலைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவோடு பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் பட்டம் தாணுப்பிள்ளை தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற தாணுப்பிள்ளைக்கு இந்தத் திட்டம் குறித்து சரியான புரிதல் இல்லாமல் இருந்தது. இதனால் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சி எளிதாகக் கையாண்ட இந்தத் திட்டம், தாணுப்பிள்ளையால் குழப்பத்துக்கு உள்ளானது. எனவே மத்திய அரசின் மூலம் மத்தியஸ்தம் செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கு தாணுப்பிள்ளையும் ஒப்புக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து முதல்வர் தாணுப்பிள்ளை, அவரது அமைச்சர்கள், நீர்ப்பாசன பொறியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரும், சென்னை மாகாண முதலமைச்சர் காமராஜர், நீர்ப்பாசன அமைச்சர் சி.சுப்பிரமணியம், நீர்ப்பாசன அதிகாரிகள், பொறியாளர்கள் ஆகியோரும் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
ஆட்சியாளர்களுக்கு ‘பாலபாடம்’ : மத்திய உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப பந்த் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடாயிற்று. இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு முன், டெல்லியில் இருந்த கொச்சி இல்லத்தில் (இன்றைக்கு கேரள மாளிகை) தங்கியிருந்த கேரள முதலமைச்சர் தாணுப்பிள்ளையை சந்திக்கும்படி சி.சுப்பிரமணியத்திடம் கூறினார் காமராஜர். அதன்படி தாணுப்பிள்ளையை சந்தித்த சி.சுப்பிரமணியம், ‘‘தமிழகமும், கேரளமும் ஒரே கலாச்சாரம், பண்பாட்டை விரும்புகிற அண்டை மாநிலங்கள், இரு மாநில மக்களும் சகோதர மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகிறோம்.
நம்முடைய பிரச்சினைகளை நாமே பேசித் தீர்த்துக் கொள்வதே நல்லது, இதற்கு மத்தியஸ்தம் செய்ய மூன்றாவது தரப்பு தேவையா என்பதை யோசியுங்கள். நீங்களும் சோசலிசக் கொள்கையை ஆதரிப்பவர்கள். நாங்களும் அதே கொள்கையை ஆதரிக்கிறோம். ஆச்சாரிய நரேந்திர தேவ், ஜெயப்பிரகாஷ் நாராயணன், லோகியோ வழியில் வந்தவர்கள் நீங்கள். அந்தத் தலைவர்களை நாங்களும் மதிக்கின்றோம். எனவே நாம் இரு தரப்பும் பேசி இந்தப் பிரச்சினைக்கு சுமுக முடிவு எட்டுவோம்’’ என்று நயமாகப் பேசி அவரை சம்மதிக்க வைத்துவிட்டார்.
மேலும், ‘‘தாணுப்பிள்ளை... நீங்கள் உயர்ந்த தேசியத் தலைவர். நீங்கள் எடுக்கும் முடிவு, உங்கள் மாநிலம் மட்டுமல்லாமல் நாடு தழுவிய முடிவாக இருக்கும். அப்படிப்பட்ட ஆளுமை மிக்கவர் நீங்கள்...’’ என்று பேசப் பேச பட்டம் தாணுப்பிள்ளையின் மனம் குளிர்ந்து விட்டது. உடனே அவர், ‘‘எனக்கு இந்தத் திட்டம் குறித்து சரியான விவரங்கள் தெரியாது. இப்போது முழுமையாகப் புரிந்து கொண்டேன். இது சின்ன பிரச்சினைதான். நாமே பேசித் தீர்த்துக் கொள்வோம்’’ என்று சி.சுப்பிரமணியத்திடம் கூறினார் தாணுப்பிள்ளை.
அதைத் தொடர்ந்து இரண்டு மாநிலங்களும் எந்த வகையில் நீரை பகிர்ந்து கொள்ளலாம் என்ற திட்டத்தை முன்வைத்தவுடன், அதை தாணுப்பிள்ளையும் ஏற்றுக் கொண்டார். இதை முதலமைச்சர் காமராஜருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார் சி.எஸ். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் காமராஜர். பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே, இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்ததற்காக சி.சுப்பிரமணியத்தை மனதாரப் பாராட்டினார் காமராஜர்.
பிரச்சினை தீர்க்கப்பட்டதால் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அவசியம் ஏற்படவில்லை. இந்தத் தகவல் அமைச்சர் கோவிந்த் வல்லப பந்திடம் தெரிவிக்கப்பட்டது. அவர் ஆச்சரியப்பட்டுப் போனார். மாநிலங்களுக்கு இடையிலான இதுபோன்ற பிரச்சினைகளை நீங்களே பேசித் தீர்த்துக் கொண்டால், எங்களுக்கும் பணி குறையும். மனம் விட்டுப் பேசிக் கொள்வதன் மூலம் தீர்க்க முடியாத நீண்டகாலப் பிரச்சினைகளுக்குக்கூடத் தீர்வு கிடைக்கும் என்பதற்கு இது சான்று என்று பாராட்டு தெரிவித்தார்.
இன்றைக்குள்ள ஆட்சியாளர்களுக்கு இதுபோன்ற பக்குவம் இருப்பதில்லை. இத்தகைய விடயங்களை எல்லாம் இன்றைய ஆட்சியாளர்கள் தெரிந்திருக்க வேண்டும். இதுவெல்லாம்தான் அரசியல் பாலபாடமாகும்.
பரம்பிக்குளம் திட்டத்தின் இரண்டாவது கட்டம் நடைமுறைக்கு வந்தது. இதில் கோவை மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கர் புஞ்சை நிலங்கள் பாசன வசதி பெற்றன. ஏற்கெனவே ஆழியாறு பாசனத்தால் 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நீர் வசதியை பெற்று வந்தன. ஆக, 77 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனமும், மின் வசதியும் பெற்றன. எனவே இதற்கு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் என்று பெயர் வந்தது.
பரம்பிக்குளம் 3-வது திட்டம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வந்த நிலையில், அடுத்து வந்த திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞர் முதல்வராக இருந்தபோது 3-வது திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதற்காக கால்வாய்கள் தோண்டப்பட்டு, அன்றைய ஒன்றுபட்ட கோவை மாவட்டமான, இன்றைய கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு கொடுமுடி வரை வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. அடுத்துவந்த ஆட்சியாளர்களும் கூடுதல் நீர் வராத நிலையிலும், நீர்ப்பாசன கால்வாய்களை வெட்டி ஆயக்கட்டுப் பகுதிகளை அதிகப்படுத்திக் கொண்டு வந்தனர்.
தேர்தல் வாக்குறுதிகளாக பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்களை அரசியல் கட்சிகள் அளித்து வருகின்றன. அந்த வகையில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அதிமுக ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஆனால் அடுத்து வந்த திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் முடிவுறாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்த காமராஜராலேயே 1967 தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. கோவை மண்டலத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டார். அதேபோல் பவானி சாகர் அணையை கொண்டுவர முயற்சித்த ஈஸ்வரன், எளிமையான மனிதர். சாதாரண வீட்டில் குடியிருந்தார். அவரையும், சி.சுப்பிரமணியம் போன்றவர்களையும் கோவை மாவட்ட மக்கள் 1967 தேர்தலில் தோல்வியுறச் செய்தனர். இத்தகைய தலைவர்கள் கொண்டு வந்த திட்டங்களால் நாம் எந்த வகையில் பயன்பெற்றோம் என்று கூட எண்ணிப் பார்க்கவில்லை அப்பகுதி மக்கள். இதை என்னவென்று சொல்வது?
இந்த வகையில் மக்களுக்கு ஒரு பரந்த பார்வை வேண்டும். தனி மனித ஆளுமை முக்கியமல்ல. அவரால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? நாட்டு மக்கள் எவ்வாறு பயன் பெற்றார்கள், மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்கள் என்னென்ன என்பதை சீர்தூக்கிப் பார்த்து வாக்களிக்க வேண்டும். தகுதியான நபர்கள் மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்கோ, சட்டமன்றத்துக்கோ செல்ல முடிவதில்லை. இவையெல்லாம் மாற்றப்பட வேண்டும். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா, ராஜாஜி, காமராஜர், அண்ணா, அதேபோல் கோப்புகளை அன்றன்றைக்கு முடிக்கும் பக்தவத்சலம், எளிமையின் சின்னம் கக்கன், ஆர்.வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியம் போன்ற எத்தனையோ தலைவர்கள் முதலமைச்சர்களாக, அமைச்சர்களாக இருந்து அவர்களின் பணிகளால் இன்றைக்கும் மக்களால் அவர்கள் நினைவுகூரப்படுகிறார்கள்.
தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான ஆட்சியின்போது, சேலம் இரும்பாலை, தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திர திட்டம் போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. திருச்செந்தூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அவர் சேது சமுத்திரம் திட்டம் கொண்டு வருவேன் என்றார். பின்னாளில் அவர் மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார்.
சேலத்தில் இரும்பாலை அமைக்க வேண்டும் என்று காமராஜர் கோரிக்கை வைத்தார். ஆனால் ஆந்திரா பிரிந்தவுடன் இரும்பாலை திட்டத்தை விசாகப்பட்டினத்துக்கு நீலம் சஞ்சீவரெட்டி கொண்டு சென்று விட்டார். அதேபோல் கப்பல் கட்டும் துறைமுகமும் விசாகப்பட்டினத்துக்கு சென்று விட்டது. அத்தகைய சூழலில் சேலத்திலும் இரும்புத்தாது கிடைக்கிறது. எனவே இங்கும் இரும்பு ஆலை அமைக்க வேண்டும் என்று காமராஜர் பலவாறு முயற்சி மேற்கொண்டார். பக்தவத்சலம் காலத்திலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கிடையே தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது. முதல்வராக அண்ணா இருந்தபோது, சேலம் இரும்பாலை, தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், சேது சமுத்திர திட்டம் ஆகியவற்றை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. இதில் சேலம் இரும்பாலை, தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம் ஆகியவை இந்திரா காந்தி காலத்தில் நிறைவேறியது. சேது சமுத்திர திட்டம் மத்தியில் வாஜ்பாய் காலத்தில் அறிவிக்கப்பட்டு, மன்மோகன்சிங் காலத்தில் தொடங்கப்பட்டது. பின்னர் ஏற்பட்ட பல்வேறு சட்ட சிக்கல்களால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
சேலத்தில் இரும்பாலை அமைக்க வேண்டும் என்று காமராஜர், பக்தவத்சலம், அண்ணா, கலைஞர் ஆகியோர் ஆட்சிக் காலங்களில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட போதும், எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்தான் அந்தக் கோரிக்கையை நிறைவேற்றினார் பிரதமர் இந்திரா காந்தி. சேலம் இரும்பாலையால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றனர். இந்நிலையில், இந்த ஆலையை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு மேற்கொண்டபோது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அரசு பின்வாங்கியது. தமிழகத்துக்குத் தேவையான பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முன்வராமல் மாற்றாந்தாய் மனப்போக்குடன் செயல்படுவது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கி இன்றும் தொடர்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை நீர்வளங்கள் அவ்வளவாக இல்லை. தாமிரபரணி மட்டும் அகத்தியர் மலையில் உற்பத்தியாகி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வலம்வந்து கடலில் கலக்கிறது. மற்ற பெரும்பாலான நதிகள் எல்லாம் கேரளம், கர்நாடகம், ஆந்திராவில் உள்ளன. தாதுவளத்தை எடுத்துக் கொண்டால் நமக்கு நெய்வேலி மட்டுமே. கேரளத்தை எடுத்துக் கொண்டால் நீர்வளமும், காடு வளமும் அதிகம். அதேபோல் கர்நாடகா, ஆந்திராவில் நீர்வளம், தாதுவளம், காடு வளம் அதிகம். தமிழ்நாட்டில் இந்த வளங்களை விட மனித ஆற்றல், மனிதர் உழைப்பு அதிகம். இன்றைக்கு அதுவும் கேள்விக்குறியாகி வருகிறது. எல்லா வேலைகளிலும் வடமாநிலத் தொழிலாளர்களையே இப்போது பார்க்க முடிகிறது.
இப்படியான நிலையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி எப்படி அமைந்தது ? ஐஐடி சென்னை எப்படி அமைந்தது? திட்டக்கமிஷன் தமிழ்நாட்டுக்கு எந்த வகையில் முன்னுரிமை தந்தது என்பது குறித்து அடுத்து காண்போம்....
(தொடர்வோம்...)
முந்தைய அத்தியாயம்: கொங்கு மண்டலத்தின் கொடை பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்: நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 59
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT