Published : 19 Apr 2014 12:00 AM
Last Updated : 19 Apr 2014 12:00 AM
‘நூறாண்டு காலத் தனிமை' நாவலின் மூலம் இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தின் மகத்தான ஆளுமையாக வலம்வரத் தொடங்கிய காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் மெக்ஸிகோ சிட்டியில் உள்ள தனது இல்லத்தில் வியாழன் அன்று காலமானார். அவருக்கு வயது 87.
1982-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற மார்க்வெஸின் எழுத்துகள் அவரது கற்பனையில் உருவாகிய லத்தீன் அமெரிக்க நிலப்பரப்பை விவரித்தாலும் உலகளாவிய ஈர்ப்பைக் கொண்டவை அவை. முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் அவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. டிக்கன்ஸ், டால்ஸ்டாய் போன்ற காலத்தை வென்று நிற்கும் எழுத்தாளர்கள் வரிசையைச் சேர்ந்தவர் மார்க்வெஸ். விமர்சகர்களாலும் பெரும் அளவிலான வாசகர்களாலும் ஒரே நேரத்தில் அரவணைக்கப்பட்டவர் அவர்.
மார்க்வெஸின் விந்தை உலகம்
அற்புதங்களும் யதார்த்தமும் ஒன்றுக்கொன்று ஊடாடும் ‘மாய யதார்த்தம்' (மேஜிக்கல் ரியலிஸம்) என்னும் இலக்கிய வகைமையின் தளகர்த்தர் அவர். வருடக் கணக்கில் பெய்யும் மழை, வானிலிருந்து உதிரும் பூக்கள், பல நூற்றாண்டுகள் வாழும் கொடுங்கோலர்கள், தரையிலிருந்து மேலெழும் பாதிரியார்கள், அழுகாத பிணங்கள் என்று பல்வேறு அதிசயங்களைக் கொண்டவை அவரது கதைகள். இவற்றோடு யதார்த்தமான அதிசயமொன்றாக, அரை நூற்றாண்டு இடைவெளியில் காதலைப் புதுப்பித்துக்கொள்ளும் காதலர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.
மாய யதார்த்தம் என்பது லத்தீன் அமெரிக்க நாடுகளின் கொடுங்கோலர்கள், புரட்சியாளர்கள், நீண்ட காலப் பஞ்சம், நோய், வன்முறை ஆகியவற்றிலிருந்து உருவாகிறது என்கிறார் மார்க்வெஸ். இந்த யதார்த்தத்தை மரபான சொல்முறையில் நம்பகத்தன்மையுடன் சொல்ல முடியாது என்றும் இதைச் சொல்வதற்கான மாற்று யதார்த்தம்தான் மாய யதார்த்தம் என்றும் அவர் கூறுகிறார்.
ஒரு மழைநாளில் மார்க்வெஸின் எடிட்டர் ‘நூறாண்டுகாலத் தனிமை' நாவலின் கைப்பிரதியைப் படிக்க ஆரம்பிக்கிறார். முன்பின் தெரியாத அந்த கொலம்பிய எழுத்தாளரின் நாவலை ஒவ்வொரு பக்கமும் படிக்கப் படிக்க அந்த எடிட்டருக்கு உற்சாகம் எல்லை மீறுகிறது. உடனே, அர்ஜெண்டினாவைச் சேர்ந்த நாவலாசிரியர் தொமாஸ் எலோய் மார்த்தினெஸை உடனடியாக வரச்சொல்லி அவரிடம் தன் உற்சாகத்தைப் பகிர்ந்துகொள்கிறார். இதைப் போன்ற ஒரு உற்சாகத்தைதான் அந்த நாவல் வெளியானதும் உலகெங்கும் உள்ள வாசகர்கள் வெளிப்படுத்தினார்கள்.
இதுவரை மூன்று கோடி பிரதிகளுக்கும் மேல் அந்த நாவல் விற்றிருக்கிறது. “தொன் கிஹோதெ (Don Quixote) நாவலுக்குப் பிறகு ஸ்பானிய மொழியில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வு இதுதான்” என்று பாப்லோ நெருதாவாலும், “ஆதியாகமத்துக்குப் பிந்தைய படைப்புகளில் ஒட்டுமொத்த மனித குலமும் படிக்க வேண்டிய முதல் படைப்பு” என்று வில்லியம் கென்னடியாலும் புகழப்பட்டது.
இளமைப் பருவம்
கொலம்பியாவிலுள்ள அரகதகா என்ற சிற்றூரில் மார்ச் 6, 1927-ல் பிறந்தார் மார்க்வெஸ். சகோதர-சகோதரியர் 12 பேர்களில் அவர்தான் மூத்தவர். சிதிலமடைந்த தன்னுடைய அம்மாவழி தாத்தா-பாட்டியின் வீட்டில் இளமைப் பருவத்தைக் கழித்தார். அந்த வீடு அவருடைய எழுத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய பாட்டியின் கதைகளில் வந்த பேய்களெல்லாம் அந்த வீடுகளில் வசித்தவை என்றே சொல்லத் தோன்றும் என்றார் மார்க்வெஸ். அவரது தாத்தா நிகோலஸ் மார்க்வெஸ் மெஸியாவும் மார்க்வெஸ் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். தனது பேரன் ஓவியம் வரைந்து விளையாடட்டும் என்பதற்காகத் தன்னுடைய பட்டறையின் சுவர்களுக்கு வெள்ளை வண்ணம் பூசிவைப்பார் அவர். தாத்தா-பாட்டி இருவரும் மார்க்வெஸின் ஆளுமை உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தனர்.
அவருடைய ஊர் அரகதகாவும் அவருடைய படைப்புகளில் பெருமளவுக்குத் தாக்கம் செலுத்தியிருக்கிறது. 2002-ல் அவர் வெளியிட்ட ‘கதை சொல்வதற்காக வாழ்தல்’ என்ற தன்வரலாற்றுப் புத்தகத்தில் 1950-ல், குழந்தைப் பருவத்துக்குப் பிறகு அரகதகாவுக்குத் தான் மேற்கொண்ட முதல் பயணத்தைப் பற்றி மார்க்வெஸ் இப்படி எழுதுகிறார்: “என்னை உடனடியாகக் கவர்ந்த விஷயம், அந்த அமைதிதான். என் கண்ணைக் கட்டிவிட்டுக் கேட்டால்கூட இந்த உலகத்து அமைதிகளுக்கிடையே நான் அடையாளம் கண்டுவிடுவேன் அந்த பௌதிக அமைதியை.”
பிழைப்புக்காகச் செய்தித்தாள்களில் எழுதத் தொடங்கினார் மார்க்வெஸ். எழுத்து, இதழியல், பெண்கள், மது என்று கழிந்த நாட்கள் அவை. அந்தக் காலகட்டத்தில் விழுந்துவிழுந்து படித்தார். ஹெமிங்வே, ஃபாக்னர், ட்வைன், மெல்வில், டிக்கன்ஸ், டால்ஸ்டாய், ப்ரூஸ்த், காஃப்கா, வர்ஜினியா வுல்ஃப் என்று விரிவாக வாசித்தார்.
“நமக்கும் முன்னால் இருக்கும் பத்தாயிரம் ஆண்டு கால இலக்கியங்களைப் பற்றிய பிரக்ஞை சிறு அளவில்கூட இல்லாமல் ஒரு நாவல் எழுத யாராவது உத்தேசிக்க முடியுமா என்று என்னால் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை” என்றார். அதே நேரத்தில், “நான் வியந்து போற்றிய படைப்பாளிகளைப் போலவே எழுத நான் ஒருபோதும் முயன்றதில்லை. மாறாக, அவர்களை என் எழுத்தில் பிரதிபலிக்காமல் இருக்க என்னால் முடிந்ததையெல்லாம் செய்திருக்கிறேன்” என்றார்.
முதல் படைப்பு
மார்க்வெஸ்ஸின் குறுநாவல் ‘லீஃப் ஸ்டார்ம்' 1955-லும், மற்றொரு குறுநாவல் ‘நோ ஒன் ரைட்ஸ் டூ த கர்னர்ல்' 1961-லும் வெளியாயின. அவருடைய முதல் நாவல் ‘இன் ஈவில் ஹவர்' 1962-ல் வெளியானது. அதற்குப் பிறகு நான்கு வருடங்கள் அவரால் எதையும் எழுத முடியவில்லை.
1961-ல் மெக்ஸிகோ சிட்டிக்கு அவர் இடம்பெயர்ந்தார். இறப்பு வரை அவ்வப்போது இடைவெளி விட்டு அங்கேதான் வாழ்ந்தார் அவர். அங்கேதான், 1965-ல் ‘நூறாண்டுகாலத் தனிமை' நாவலை எழுத ஆரம்பித்தார். ஆகபுல்கோ நகரத்துக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோதுதான் அந்த நாவலை எழுதுவதற்கான திடீர் உத்வேகம் வந்ததாக மார்க்வெஸ் குறிப்பிடுகிறார். பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு வீடு திரும்புகிறார்.
வீடு திரும்பியதும் இடைவிடாமல் 18 மாதங்களாக அந்த நாவலை எழுதுகிறார். அவருடைய மனைவி மெர்செதிஸ் குடும்பத்தைப் பார்த்துக்கொள்கிறார். “நான் நாவலை முடித்ததும் என் மனைவி என்னிடம் சொன்னாள்: 'உண்மையிலேயே முடித்துவிட்டீர்களா? நமக்கு 12,000 டாலர்கள் கடன் சேர்ந்திருக்கிறது” என்று மார்க்வெஸ் நினைவுகூர்கிறார்.
1967-ல் அந்த நாவல் வெளியான நாளிலிருந்து மார்க்வெஸின் குடும்பம் மறுபடியும் கடன் வாங்க வேண்டிய அவசியமே எழவில்லை. வெளியான ஒரு சில நாட்களில் அந்த நாவல் விற்றுத்தீர்ந்துவிட்டது. புயெந்தியா குடும்பத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பல தலைமுறைகள் போர், சமாதானக் காலம், வசதி, வறுமை ஆகியவற்றினூடாகச் சித்தரித்த இந்த நாவல் லத்தீன் அமெரிக்காவின் சமூக, அரசியல் வரலாற்றுக் காவியமாகவே விமர்சகர்களாலும் வாசகர்களாலும் பார்க்கப்பட்டது.
மாய யதார்த்தத்தோடு மார்க்வெஸ் பெயர் எப்போதும் சேர்த்துக் கூறப்பட்டாலும் அந்த இலக்கிய வகைமையைத் தான் கண்டுபிடித்ததாக மார்க்வெஸ் ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. தனக்கு முன்பே லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் மாய யதார்த்தத்தின் கூறுகள் இருந்ததாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். இருந்தாலும் அவர் அளவுக்குக் கலை நேர்த்தியுடனும் உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் அவருக்கு முன்னால் இந்தப் பாணியில் யாரும் எழுதியதில்லை. மாய யதார்த்தப் பாணி எழுத்துகள் மிக விரைவிலேயே இஸபெல் அயெந்தே, சல்மான் ருஷ்தி உள்ளிட்ட எழுத்தாளர்களை சுவீகரித்துக்கொண்டது.
“சாதாரண மக்களின் தொன்மங்களும் யதார்த்தத்தைச் சேர்ந்தவையே. காவல் துறையினர் மக்களைக் கொல்கிறார்கள் என்பது மட்டுமல்ல யதார்த்தம். சாதாரண மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் யதார்த்தமன்றி வேறென்ன?” என்று ஒரு முறை மார்க்வெஸ் கூறினார்.
அரசியல் ஈடுபாடு
1973-ல் சிலேயின் அதிபர் சல்வாதோர் அயெந்தேவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, வலதுசாரி சர்வாதிகாரி அகுஸ்தோ பினோசெட் ஆட்சிக்கு வந்தார். அதையடுத்து அயெந்தே தற்கொலை செய்துகொண்டார். பினோசெட் பதவியிலிருக்கும்வரை தான் எழுதப்போவதில்லை என்று மார்க்வெஸ் சபதமெடுத்தார். பினோசெட் 17 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
ஆனாலும், மார்க்வெஸ் தன் சபதத்தை 1975-லேயே முறித்துக்கொண்டார். “எனது முடிவு தவறானது என்பதைக் காலப்போக்கில் நான் உணர்ந்துகொண்டேன். நான் எழுதுவதை நிறுத்துவதற்கு பினோசெட்டுக்கு நானாகவே அனுமதியளித்துவிட்டதுபோல்தான் அந்த முடிவு. தணிக்கை முறைக்கு நானாகவே அடிபணிந்துவிட்டதாகத்தான் இதற்கு அர்த்தம்” என்று பின்னாளில் மார்க்வெஸ் கூறினார்.
நேசத்துக்கான அதீதமான காத்திருப்பையும் யதார்த்தம் மீதான தீவிர ஈடுபாட்டையும் மார்க்வெஸின் கதாபாத்திரங்கள் வலியுறுத்துகின்றன. எழுத்தாளனாக இல்லாவிட்டால் யாராக ஆக விரும்பியிருப்பீர்கள் என்று ஒரு தடவை அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவருடைய பதில்: “மது விடுதி ஒன்றில் பியானோக்காரனாக இருந்திருப்பேன். காதலர்கள் இன்னும் அதிகமாக நேசிக்க அந்த வழியில் என் பங்களிப்பு இருந்திருக்கும்.”
மார்க்வெஸின் எழுத்துகள் செய்வதும் இதைத்தான்.
© நியூயார்க் டைம்ஸ், சுருக்கமான மொழிபெயர்ப்பு: ஆசை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT