Published : 27 Sep 2025 02:26 PM
Last Updated : 27 Sep 2025 02:26 PM

கொங்கு மண்டலத்தின் கொடை பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்: நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 59

பரம்பிக்குளம் அணை

தமிழகத்தில் விவசாயம் பிரதானமாக இருந்ததால் பாசன வசதி மற்றும் நீர் மின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பைக்காரா மின் திட்டம் பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டின் மின் தேவையில் ஒரு பகுதி பூர்த்தி செய்யப்படுகிறது.

பைக்காரா மின் திட்டத்தை நிறைவேற்ற திருவிதாங்கூர் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி ஐயர் பெருமுயற்சி எடுத்தார். நதிகளை இணைக்க வேண்டும் என்ற கருத்தை அந்தக் காலத்திலேயே முன்வைத்தார். நாட்டில் ஒரு பக்கம் மழைவெள்ளம், மறுபுறம் வறட்சி போன்ற நிலைகளை மாற்றி சமநிலை ஏற்பட நதிநீர் இணைப்பு மிகவும் அவசியம் என்று தனது கருத்தை வலியுறுத்தினார்.

திருவிதாங்கூர் திவானாக அவர் இருந்தபோதும், தமிழக மக்களின் மீதான நல்லெண்ணத்தில், தமிழகத்துக்கான புதிய திட்டங்கள் குறித்து பிரிட்டிஷாரிடம் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்.சி.பி.ராமசாமி ஐயர் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் வாராணசி இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். சிறந்த வழக்கறிஞரும் கூட. அவருடைய மகன்தான் சி.ஆர்.பட்டாபிராமன். இவர் மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவருடன் எனக்கு நல்ல தொடர்பு உண்டு. சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருந்தாலும், வழக்கமாட மாட்டார்.

ஆனால் சென்னை உயர் நீதிமன்ற பார் அசோசியேஷனுக்கு அடிக்கடி வருவார். அப்போது, தமிழக மேலவை உறுப்பினராக இருந்த வசந்தபாய், மூத்த வழக்கறிஞர் கோவிந்தசாமிநாதன், என்னுடைய சீனியர் காந்தி, பி.எச்.பாண்டியன், பின்னாளில் உயர் நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.ஜெகதீசன், கே.எஸ்.பக்தவத்சலம் ஆகியோருடன் நானும் சேர்ந்து பட்டாபிராமனுடன் காபி அருந்தியபடி அரசியல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருப்போம். இதில் நான் மட்டும்தான் ஜூனியர். இவையெல்லாம் 1980-களில் நடைபெற்றவை.

சி.பி.ராமசாமி

அந்த சமயத்தில் ஈழப் பிரச்சினை தீவிரமடைந்திருந்தது. அதனால் ஈழத்தில் என்ன மாதிரியான சூழல் நிலவுகிறது என்பது குறித்தெல்லாம் பட்டாபிராமன் என்னிடம் கேட்டதுண்டு. பிரபாகரனைக் கூட இவரிடம் அழைத்துச் சென்றுள்ளேன். பட்டாபிராமனின் மூதாதையருக்கு சொந்தமாக இருந்த இடம்தான் சென்னை தேனாம்பேட்டையில் தற்போதுள்ள சீத்தாம்மாள் காலனி.

சி.பி.ராமசாமி ஐயர் தமிழ் இலக்கியங்களில் அதிக ஆர்வம் காட்டினார். ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் குறித்து சொற்பொழிவாற்றும் அளவுக்கு அவற்றில் ஈடுபாடு கொண்டவர். சாவித்திரி அம்மையாருடைய ராமாயண சொற்பொழிவுகளை படியுங்கள் என்று மற்றவருக்குச் சொல்வதுண்டு.

பைக்காரா நீர்மின் திட்டம் வருவதற்கு பல்வேறு வகையில் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கியவர் சி.பி.ராமசாமி ஐயர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவரைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்குத் தெரிவதில்லை. அவரைப் பற்றிய குறிப்புகளையும் காண முடியவில்லை.

அவர் குறித்து யாரும் பேசுவதும் இல்லை. காரணம் அவர் ஒரு அந்தணர் என்ற காரணமாகக் கூட இருக்கலாம். இந்த விஷயத்தில் சிலருக்கு சரியான புரிதல் இருப்பதில்லை. டி.வி.எஸ்., சிம்சன் போன்ற தொழிற்சாலைகளை அமைத்து ஏராளமானோருக்கு வேலைவாய்ப்புகளை அந்த சமுதாயத்தினர் வழங்கியுள்ளனர். ஹிக்கின்பாதம்ஸ் என்ற புத்தகக் கடையை தொடங்கி கல்வியறிவை ஊட்டியவர்கள்.

இப்படி அந்தச் சமுதாயத்தைச் சார்ந்த ஏராளமானோர் பொதுச் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பைக்காரா திட்டம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதால், கோவை மாவட்டத்தில் தொழிற்சாலைகள், நெசவாலைகள் அதிகரிக்கத் தொடங்கின. கோவையில் தொழில் முன்னேற்றத்துக்கு முதற்காரணமாக இருந்தவர் நரசிம்மலு நாயுடு ஆவார். விடுதலைப் போராட்ட வீரர். தமிழறிஞர். கோவை நகரில் தொழில் புரட்சி ஏற்பட முக்கியமானவராக விளங்கினார்.

அதுமட்டுமல்ல, ‘ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்’ என்று 18-ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியா மற்றும் தென் இந்தியா எவ்வாறு இருந்தது, மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாட்டு கலாச்சாரங்கள் குறித்து 500 பக்கங்களில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இதை மேம்படுத்தி சரிபார்த்து தொகுத்து டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் மீண்டும் வெளிக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ‘டிஸ்கவரி’ வேடியப்பனும் உறுதுணையாக உள்ளார். இந்த நூல் விரைவில் வெளிவர உள்ளது.

கோவையில் தற்போது செயல்படும் மாநகராட்சி கட்டிடத்தைக் கட்டியவரும் நரசிம்மலு நாயுடுதான். மேலும், சிறுவாணி தண்ணீரை கோவைக்கு கொண்டுவர முதன்முதலில் குரல் கொடுத்தவரும் இவர்தான். கோவையில் ஆரம்பக்கட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவியதால் அங்கு யாரும் குடியேற மறுத்த காலத்தில் நரசிம்மலு நாயுடுவும், அதேபோல் பெருவெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் பி.எஸ்.ஜி. குடும்பத்தாரும் கோவையை மீட்டுருவாக்கம் செய்ததில் பெரும்பங்கு வகித்தனர். அந்த வகையில் கோவையை நிர்மாணித்த நரசிம்மலு நாயுடு குறித்து எந்த அடையாளங்களும் கோவையில் இன்று காணப்படவில்லை என்பது வருத்தமான விஷயம்.

ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் பைக்காரா நீர்மின் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கிணறுகள், நிலத்தடி நீரை மின் மோட்டார்கள் மூலம் பயன்படுத்தி பருத்தி போன்ற பயிர்களை விவசாயிகள் விளைவித்து வந்தனர். தமிழகத்தில் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றிருந்த குறிப்பாக 1957 முதல் 1967 வரையிலான காலகட்டங்களில் நீர் மின் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

நீலகிரி மலைப் பகுதியில் பள்ளத்தாக்குகள் பல உள்ளன. அவைகள் நீர்நிலையங்களை நிர்மாணிப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்திருந்தன. அந்த வகையில் குந்தா திட்டம் தொடங்கப்பட்டது. அன்றைய தலைமைப் பொறியாளர் அப்பாத்துரை, இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டார். மேற்கு நோக்கி சென்று கேரளாவில் பாயும் நதிகளைக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதேபோல், கோவை மாவட்ட போர்டின் தலைவராக இருந்த வி.கே.பழனிசாமி கவுண்டர், பரம்பிக் குளம் திட்டத்தை வலியுறுத்தினார். இவர் சீர்திருத்த காங்கிரஸில் சேர்ந்து, காமராஜருக்கு எதிராகச் செயல்பட்டவர். 1952-ல் சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்பேரவையில் பரம்பிக்குளம் திட்டம் குறித்து பலமுறை பேசியுள்ளார்.

தற்போதைய திமுக ஆட்சியில் சமீபத்தில், பரம்பிக்குளம் திட்டத்தை முன்னெடுத்த பழனிசாமி கவுண்டர், பொள்ளாச்சி மகாலிங்கம், சி.சுப்பிரமணியம், காமராஜர் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பரம்பிக்குளம் திட்டம் கடும் பிரயத்தனத்தனங்களுக்குப் பிறகே நிறைவேற்றப்பட்டது. அமைச்சர் சி.சுப்பிரமணியம், பழனிசாமி கவுண்டர் மற்றும் பொறியாளர்கள் மேற்கு தொடர்ச்சி மலைப்பாதையில் கிட்டத்தட்ட 50 கி.மீ. காரில் சென்றும், பின் யானை மீதும் பயணம் மேற்கொண்டு நதிகள் உற்பத்தியாகும் இடத்தை ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து பரம்பிக்குளம் திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றுவது, இத்திட்டத்தால் ஏற்படும் பயன்கள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டது.

இதற்கிடையே கேரள அரசின் அனுமதி பெறாமல் சி.சுப்பிரமணியம் குழுவினர், கேரள வனப்பகுதிக்குள் சென்றதாக அன்றைக்கு பெரிய விவாதங்கள் நடைபெற்றன. இத்தனைக்கும் தேவிகுளம், பீர்மேடு, மலபார் பகுதிகள் சென்னை மாகாணத்தில்தான் இருந்தன. இன்றைக்குக்கூட கேரளாவின் சண்டித்தனம் தொடர்கிறது.

குறிப்பாக கன்னியாகுமரி நெய்யாறு, திருநெல்வேலி மாவட்டம் கொடுமுடி ஆறு, பச்சையாறு, செங்கோட்டை அருகில் உள்ள அடவி நயினார், செண்பகவல்லி தடுப்பணை சீரமைப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் அழகர் அணை திட்டம், முல்லை பெரியாறு, ஆழியாறு - பரம்பிக்குளம், பாண்டியாறு, புன்னம்புழா, பம்பாறு, சிறுவாணி, அமராவதி போன்ற நதி நீர் பிரச்சினைகள், கண்ணகி கோயில் பிரச்சினை ஆகியவற்றில் கேரளா மோதல் போக்கையே கையாண்டு வருகிறது. அதோடு தமிழக அரசுக்குத் தெரியாமல் அத்துமீறி, மாநில எல்லையில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக்கழிவுகளை கொட்டுவது போன்ற அடாவடி செயல்களிலும் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது.

இத்தனைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அவர் ‘சேட்டன்’ என்று அன்புடன் அழைக்கும் பினராயி விஜயனுக்கும் இடையே நல்ல நட்புணர்வு உள்ளது. அதேபோல் இங்கே திமுகவும், கம்யூனிஸ்ட் இயக்கங்களும் தோழமையாக இருக்கின்றன. இருந்தபோதிலும், இப்பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை என்பது வருத்தத்துக்குரியதாகும்.

அதேபோல், முல்லை பெரியாறு நீர் தேனி, மதுரை மாவட்டங்களுக்கு எவ்வாறு அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது என்பதைக் குறித்து சம்பந்தப்பட்ட எம்.பி. கூட, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது கிடையாது. இன்றைய அரசியல் சூழ்நிலையைப் பார்க்கும்போது ‘விதியே, விதியே, என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை’ என நினைக்கத்தான் தோன்றுகிறது.

இ.எம்.எஸ்

பரம்பிக்குளம் அணை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு முதல்வர் காமராஜரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, காமராஜரும் இத்திட்டத்தை செயல்படுத்துவோம். முன்னதாக கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியை கேரளாவுக்கு அனுப்பி, கேரள முதல்வர் இ.எம்.எஸ்.நம்பூதிரி பாடிடம் பேசச் சொல்வோம் என்றார். கேரளாவில் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக வி.ஆர்.கிருஷ்ண ஐயர் இருந்தார். பின்னாளில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றினார்.

கேரள முதல்வர் இ.எம்.எஸ்.நம்பூதிரி பாடு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். 1932-ல் வேலூர் சிறையில் இருந்தவர். அதே சிறையில் சில நாட்கள் காமராஜரும், சி.சுப்பிரமணியமும் இருந்தது உண்டு. இப்படியான நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜரின் அறிவுறுத்தலின்படி, நீர்ப்பாசன அமைச்சர் சி.சுப்பிரமணியம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி ஆகியோர் திருவனந்தபுரம் சென்று கேரள முதல்வர் இ.எம்.எஸ்.நம்பூதிரி, நீர்ப்பாசனத் துறை அமைச்சர் வி.ஆர்.கிருஷ்ண ஐயர் ஆகியோருடன், பரம்பிக்குளம் திட்டம் குறித்து விவாதித்தனர்.

அதைத்தொடர்ந்து விரிவான அறிக்கை அனுப்புகிறோம்... உங்கள் ஒப்புதல் தேவை என்று இஎம்எஸ்ஸிடம் சி.சுப்பிரமணியம் சொன்னபோது, அனுப்புங்கள், கண்டிப்பாக ஏற்கப்படும் என்று உறுதியளித்தார் இஎம்எஸ். அதேபோல் விரிவான அறிக்கை அனுப்பப்பட்டது. அவரும் ஒப்புதல் அளித்தார். கேரள முதல்வரின் ஒப்புதலைப் பெறுவதில் முக்கியப் பங்காற்றியவர் பி.ராமமூர்த்தி.

ஆனால் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த சிலைகளில் பி.ராமமூர்த்தி சிலை இடம்பெறவில்லை. இந்தத் திட்டம் நவீன தொழில்நுட்பத்தில் மலைகளைக் குடைந்து தண்ணீரை விசையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஓடும் மேற்கு நோக்கிய ஆறுகளின் நீரை கிழக்கு நோக்கி திருப்பி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்குப் பாசனம் அளிக்கும் தமிழக-கேரளாவின் கூட்டு நீர்ப்பாசனத் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஆனமலையாறு, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட ஆறுகளின் நீர் பகிரப்படுகிறது. இதனால் இத்திட்டம் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. முதலமைச்சர் காமராஜர், நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சி.சுப்பிரமணியம் ஆகியோரின் விடாமுயற்சியால் பணிகள் மும்முரமாக நடைபெற்றன. முதல்கட்டப் பணிகள் முடிவடைந்து 1958-ம் ஆண்டு இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்துக்கு 30 டிஎம்சி நீரும் கேரளாவுக்கு 20 டிஎம்சி நீரும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

பின்னாளில், இந்த திட்டத்தின் ஒரு பகுதியான நீரை பெறுவதிலும், திட்டத்தின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிலும் அடுத்துவந்த திமுக முதலமைச்சர் கருணாநிதி முக்கிய பங்காற்றினார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பரம்பிக்குளம் திட்டம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பணிகள் தொடங்கியதில் முதல்கட்டப் பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்து செயல்பாட்டுக்கு வந்தது. அதன்பின்னர் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கியபோது கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதனால் இத்திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்துவதில் சிக்கல்கள் எழத் தொடங்கின. அதுகுறித்து அடுத்து பார்ப்போம்...

(தொடர்வோம்...)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x