Published : 23 Sep 2025 06:33 AM
Last Updated : 23 Sep 2025 06:33 AM
21ஆம் நூற்றாண்டில் வேளாண்மை, உயிர்ப் பன்மை, காட்டுவளம், மனித உடல்நலம், வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது ஆக்கிரமிப்பு உயிரினங்கள்தான் (Invasive species) என்கிறது, பல்லுயிர்-சுற்றுச்சூழல் சேவைகளுக்கான அரசுகளுக்கு இடையேயான அறிவியல்-கொள்கைத் தளம் (Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem Services).
உலகம் முழுவதும் நுண்ணுயிரிகள் தொடங்கிச் சிறு செடிகள், மரங்கள், உயிரினங்கள் ஆக்கிரமிப்பு இனங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கடந்த 500 ஆண்டு கால வரலாற்றில், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 3,500 உயிரினங்கள் ஆக்கிரமிப்பு இனங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசக் கூட்டமைப்பு (International Union for Conservation of Nature) அறிக்கை, 100 ஆக்கிரமிப்பு இனங்கள் மிகவும் மோசமான சூழலியல், பொருளாதார, சமூகச் சீர்கேடுகளை உருவாக்கும் என்கிறது. இவற்றுள் 14 வகை உயிரினங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பரவிக் காணப்படுகின்றன.
அவற்றுள் ஒன்றுதான், சமீப நாட்களாகத் தமிழக ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கும் ஆப்ரிக்க ராட்சத நத்தை (Giant African Snail-Achatina fulica/ Lissachatina fulica). மிக மோசமான ஆக்கிரமிப்பு உயிரினங்கள் பட்டியலில் இந்த நத்தை இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சென்னையின் பல்வேறு நீர்நிலைகள், ஈரப்பதம் நிறைந்த நிலப்பரப்புகளில் இந்த நத்தைகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இதன் பூர்விகம் எத்தியோப்பியா, கென்யா, தான்சானியா போன்ற கிழக்கு ஆப்ரிக்க நாடுகள். பல்வேறு காலக்கட்டங்களில் இவை செல்லப்பிராணிகளாகவும், உணவு / வர்த்தகப் போக்குவரத்தின் வழியாகவும் உலகின் பல பகுதிகளுக்குப் பரவின. குறிப்பாக, ஆப்ரிக்கா முதல் அமெரிக்கா வரை உள்ள இந்தோ-பசிபிக் பகுதிகள், பல்வேறு ஆசிய நாடுகள், பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த தீவு நாடுகளான நியூஸிலாந்து, ஃபிஜி, பபுவா நியூ கினி என 52 நாடுகளில் பல்வேறு சூழலியல் / வேளாண் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் பரவிக் கடுமையான பொருளாதார / உணவு நெருக்கடிகளை உருவாக்கிவருகின்றன.
உயிரியல் பண்புகள்: சிவப்பு, பழுப்பு, பாலாடை நிறத்தில் நீண்ட கோடுகள் உடைய இந்த நத்தைகள் 20 முதல் 30 செ.மீ.வரை வளரக்கூடியவை. வேளாண் நிலங்கள், இயற்கை வனப்பகுதிகள், ஈர நிலங்கள், நகர்ப்புறங்களில் அதிக அளவில் காணப்படும். இரவில் அதிகம் உலவும். ஆறு மாதங்களிலேயே இனப்பெருக்கம் செய்கின்ற முதிர்ச்சியை அடைந்துவிடும் இந்த நத்தை, ஓர் இருபாலின உயிரினம் (இருபால் உடலி - hermaphrodite).
அதாவது, ஆண்-பெண் இனப்பெருக்க உறுப்புகள் ஒரே உயிரினத்தில் இருக்கும். இந்தக் காரணத்தால் இவற்றால் ஒவ்வொரு வருடமும் 100% இனப்பெருக்கம் செய்ய முடியும். சராசரியாக ஒரு வளர்ந்த நத்தை ஓர் ஆண்டுக்கு 500 முதல் 900 முட்டைகளை உற்பத்திசெய்யும். முட்டைகளை நிலத்தின் அடியில் பாதுகாப்பாக மறைத்து வைக்கும். நிலத்தின் கரிமத்தன்மை, ஊட்டச்சத்துகள், கார-அமிலத்தன்மை, தட்பவெப்ப நிலை போன்றவை இந்த நத்தைகள் விரைவாக வளர முக்கியக் காரணிகள்.
தீங்கிழைக்கும் தன்மைகள்: கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட தாவரங்களின் இலை, பூ, பழம், பட்டை, வேர்களை உணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டவை இந்த நத்தைகள். இந்தியாவைப் பொறுத்தவரை வாழை, பீன்ஸ், முட்டைக்கோஸ், மரவள்ளிக்கிழங்கு, பருத்தி, சோயாபீன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வேளாண் தாவரங்களுக்கு இவை பெரும் தீங்கை விளைவிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தொற்றுநோய்கள் பரவுவதற்கும் இந்த நத்தைகள் காரணமாக உள்ளன.
குறிப்பாக, சால்மொனெல்லா பாக்டீரியா, எலி நுரையீரல் புழு (Angiostrongylus cantonensis) போன்றவற்றுக்கு இவை பரப்புயிரிகளாகச் (vectors) செயல்படுகின்றன. குறிப்பாக, மெனன்ஜைட்டிஸ் (Meningitis) மூளைக்காய்ச்சல் நோய் பரவுவதற்கு இந்த நத்தைகள் காரணமாக இருக்கின்றன. கேரள வன ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சிக் குழுவின் குறிப்புகளின்படி, இந்த நத்தையை அப்புறப்படுத்தும் பணியின்போது - குழந்தைகள் உள்பட ஏழு பேருக்கு மூளைக்காய்ச்சல் நோய் தொற்றியது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்திய வரவு: 1847இல் பிரிட்டிஷ் நத்தை ஆராய்ச்சியாளர் வில்லியம் ஹென்றி பென்சன் மொரீஷஸ் தீவிலிருந்து ஒரு ஜோடி ஆப்ரிக்க நத்தைகளை கொல்கத்தாவுக்குக் கொண்டுவந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு, தன்னுடைய நண்பர் வசம் அவற்றை ஒப்படைத்துவிட்டுத் தாய்நாடு திரும்பினார்.
அவருடைய நண்பர் தோட்டத்தில் அவற்றை விடுவித்தார். பின்பு, 1858இல் கொல்கத்தாவின் பல பகுதிகளில் இது பரவியதைத் தரவுகள் உறுதிசெய்கின்றன. அசாம், மணிப்பூர், மேகாலயம், நாகாலாந்து, திரிபுரா, ராஜஸ்தான், கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம்,, அந்தமான் - நிகோபார் தீவுகள் எனப் பல பகுதிகளில் இந்நத்தைகள் பரவலாகக் காணப்படுகின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை இந்த நத்தைகள் ஏற்படுத்திய பொருளாதார - பல்லுயிர்ச் சீரழிவுகளைப் பற்றிய தரவுகள் நம்மிடையே இல்லை. இந்தியாவில் இதனுடைய தீங்கிழைக்கும் தன்மை இருபதாம் நூற்றாண்டில்தான் உணரப்பட்டது. இதற்கு முக்கியக் காரணம், தற்போது நிகழும் காலநிலை மாற்றம்தான் என்கின்றன அறிவியல் தரவுகள்.
மணிபால் பல்கலைக்கழகம், அசோகா சுற்றுச்சூழல்-பசுமை அறக்கட்டளையின் ஆராய்ச்சிக் குறிப்புகளின்படி, தற்போதைய காலநிலை மாற்றம் ஏற்படுத்திய உந்துதல் காரணமாக, இந்த ஆப்ரிக்க நத்தைகள் இனிவரும் காலத்தில் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு, ஆந்திரக் கடலோர மாவட்டங்களில் அதிக அளவு பரவி பாதிப்புகளை ஏற்படுத்தும் எனத் தெரியவந்திருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடலூர், விழுப்புரம் - அவற்றைச் சுற்றியுள்ள டெல்டா மாவட்டங்களில் இது அதிக அளவு பரவக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வேளாண் பயிர்களுக்குப் பெரும் தீங்கு விளைவிப்பவை என்பதால், சிறு குறு விவசாயிகளுக்கு இழப்பு நேரிடலாம்.
பலனளிக்கும் தீர்வுகள்: உலக அளவில் ஆப்ரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த ஒரே தீர்வு இதுவரை இல்லை. நில அமைப்பு, மக்கள்தொகை நெருக்கம், காலநிலை போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டுதான் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும். உதாரணமாக, கர்நாடகத்தின் குடகு காபித் தோட்டங்களில் இந்த நத்தைகளைக் கட்டுப்படுத்தத் தொடர்ந்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தோட்டத் தொழிலாளர்கள், அழிப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு இந்திய காபி வாரியம் சார்பாக ஒரு ஜோடி கையுறைகள், 25 கிலோ அரிசித் தவிடு, 100 கிராம் லார்வின் பிராண்டு தியோடிகார்ப் (பூச்சிக்கொல்லி), 3 கிலோ வெல்லம், 100 மில்லி ஆமணக்கு எண்ணெய் அடங்கிய பைகள் சலுகை விலையில் வழங்கப்பட்டன.
இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் கலவையினைக் காபிச் செடிகளுக்கு நடுவே சிறு சிறு உருண்டைகளாக வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அவற்றை உண்ணும் நத்தைகள் மரணித்தன. மேலும், இந்த நத்தைகளை கிலோ 4 முதல் 8 ரூபாய்க்கு இந்திய காப்பி வாரியம் வாங்கி அவற்றை கவனமாக அப்புறப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக 90% வெற்றியை பெற முடிந்தது.
அதேநேரம், கேரளத்தில் மக்கள் அதிகம் உள்ள 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் பரவலாகக் காணப்பட்ட இந்த நத்தைகளைப் பூச்சிக்கொல்லி கலந்து அழிக்க முடியவில்லை. மக்கள்தொகை அடர்த்தி அதிகமாக உள்ள பகுதிகளில் இந்தப் பூச்சிக்கொல்லியால் தீய விளைவுகள் ஏற்படலாம் என்பதால் அந்த முயற்சி தவிர்க்கப்பட்டது. அதேவேளையில், புகையிலைச்சாறு, காப்பர் சல்பேட் தெளிக்கப்பட்டு இந்த நத்தைகள் கேரளத்தின் பல பகுதிகளில் கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டன.
சென்னையைப் பொறுத்தவரை, தற்போது இந்த நத்தைகள் மாதவரம், வடக்கு சூளைமேடு, மத்திய சென்னை, தரமணி, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன. இவை மேலும் பரவுவதைத் தடுக்கத் தொலைநோக்கு அறிவியல் கண்ணோட்டத்துடன், நிலச்சார்புத் திட்ட வரையறைகளை வகுக்க வேண்டும். இதற்கான திட்டத்தைத் துறைசார் வல்லுநர்களுடன் தமிழக அரசு கலந்தாலோசித்துச் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்த நத்தைகளால் ஏற்படக்கூடிய பேராபத்துகளைத் தவிர்க்க முடியும்!
- தொடர்புக்கு: ssandilyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT