Last Updated : 22 Sep, 2025 06:37 AM

34  

Published : 22 Sep 2025 06:37 AM
Last Updated : 22 Sep 2025 06:37 AM

ஏன் வெறுக்கப்படுகிறார்கள் இந்தியர்கள்?

அண்மைக்காலமாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்தோருக்கு - குறிப்பாக இந்தியர்களுக்கு எதிரான மனப்போக்கு அதிகமாக நிலவுகிறது. ‘உன் நாட்டுக்குத் திரும்பிப் போ’ என்கிற எதிர்க்குரல் பல்வேறு நாடுகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

கூடுதலாக, எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது எனக் கருதப்பட்ட நிறவெறி புதிய வீரியத்தோடு பரவத் தொடங்கியிருக்கிறது. இவ்வளவுக்கும், அந்தந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெரும்பங்கு ஆற்றிய குடியேறிகளில் கணிசமானவர்கள் இந்தியர்கள். பின் ஏன் இந்த எதிர்ப்பலை?

மெல்லிய கோடு: இந்த வன்மம் திடீரென வந்ததல்ல என்பதுதான் நிதர்​சனம். 2004இல் நான் அமெரிக்கா​வுக்குச் சென்றிருந்த​போது, நியூயார்க் நகரிலிருந்து தங்களுடைய ஊருக்கு என்னை அழைத்துச் செல்வதற்காக நண்பரின் மகளும் அவரின் இணையரும் வந்திருந்​தார்கள். நியூயார்க், நியூ ஜெர்சி நகரங்களை இணைக்கும் லிங்கன் கணவாயைக் கடந்து ஓர் இடத்துக்கு வந்தபோது, அங்கிருந்து பல்வேறாகப் பிரிகிற சாலைகளில் எந்தப் பாதையைத் தேர்ந்​தெடுப்பது எனச் சிறு குழப்பம் ஏற்பட்டது.

அப்போது ஓரிடத்தில் காரை நிறுத்​தி​விட்டு, அங்கிருந்த வாகன ஓட்டி​யிடம் விசாரித்​தோம். அதற்கு அந்த அமெரிக்கர் அமைதியாக முகத்தை வைத்துக்​கொண்டு, “உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள்” என அழுத்தமான குரலில் சொல்லி​விட்டுக் கண்ணாடியை ஏற்றி​விட்டுப் போய்விட்​டார்.

அதுவரை உற்சாக​மாகப் பயணித்த எங்களை அச்சொற்கள் அதிர்ச்சியில் உறைய வைத்து​விட்டன. ஆனால், அதற்குப் பிறகு நாங்கள் யாரும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே இல்லை. இது குறித்து நானும் இதற்கு முன் யாரிடமும் பேசியதோ எழுதியதோ இல்லை. ஆனால், அந்த வடு இன்னும் மறையவில்லை.

வெளிநாடுவாழ் இந்தி​யர்கள் இத்தகைய சூழல் பற்றி நிறையச் சொல்வார்கள். பெரும்​பாலான வெள்ளை​யர்கள் வெளிப்​படையாக நிறவெறியைக் காட்ட மாட்டார்கள். ஆனால், சிறு செயல்கள் மூலம் மறைமுக​மாக வெளிப்படுத்து​வார்கள்.

உதாரணமாக, சேவை மையங்கள் போன்ற இடங்களில் பணிபுரிபவர்கள், சக வெள்ளை​யினத்​தவரிடம் சத்தமாகச் சிரித்து நட்பாகப் பேசுவார்கள். அடுத்து வரும் நம்மிடம் கூடுதலாக ஒரு வார்த்தை பேச மாட்டார்கள். வேலையை மட்டும்தான் பார்ப்​பார்கள். அந்த மெல்லிய இழை போன்ற வேறுபாட்டைப் புரிந்து​கொள்ள முடியும். இதன் பின்னே பல நுட்பமான விஷயங்கள் அடங்கி​யுள்ளன.

மூன்று பிரிவினர்: இந்தியா​விலிருந்து வெளிநாடு​களில், குறிப்பாக மேலை நாடுகளில் குடிபெயர்ந்​தவர்கள், மூன்று விதமான அலைகளில் சென்ற​வர்கள். முதல் அலை, 60களிலும் 70களிலும் நிகழ்ந்தது. அப்போது மருத்​துவர்கள், பொறியாளர்கள் போன்ற துறைசார் வல்லுநர்கள் சென்றார்கள், குடியுரிமை பெற்றார்கள். காலப்​போக்கில் அந்தப் பண்பாட்டுடன் தங்களை இணைத்​துக்​கொண்ட அவர்கள், இப்போது அந்த நாடுகளிலேயே மூன்றாவது தலைமுறை​யினரையும் கண்டு​விட்​டார்கள். அவர்களின் வழிவந்த இன்றைய தலைமுறைக்கு இந்தியா​வுடன், தமிழ்​நாட்டுடன் அவ்வள​வாகப் பரிச்சயம் இல்லை.

பட்ட மேற்படிப்பு படிக்க 90களில் பல்லா​யிரக்​கணக்கில் சென்ற​வர்கள் இரண்டாவது அலையைச் சேர்ந்​தவர்கள். இவர்களில் பலர் பொறியியல், மேலாண்மைத் துறையில் பட்ட மேற்படிப்பு படிக்கச் சென்ற​வர்கள். இவர்கள் படிப்பு முடிந்​தவுடன் அங்கேயே கிடைத்த வேலையைப் பார்க்கத் தொடங்​கி​னார்கள். ஒரு சாதாரண உள்நாட்டுக்​காரருக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியையே இவர்கள் வாங்கி​னார்கள். ஒன்றரை மடங்கு நேரம் கூடுதலாக வேலை செய்தார்கள்.

எளிமையாக வாழ்ந்து, சம்பா​தித்த சொற்பப் பணத்தில் மிச்சம்​பிடித்து இந்தியா​வுக்கு அனுப்​பி​னார்கள். அந்தப் பணமே இங்கே ஒரு குடும்பத்தை நடத்து​வதற்குப் போதுமானதாக இருந்தது. இந்தியா​வில், சொந்த வீடு வாங்கு​வதற்குப் பலருக்கு வாய்ப்​பளித்தது.

மூன்றாவது அலை, 2000க்குப் பிறகு கணினித் துறையை மையமாகக் கொண்டு குடியேறிய​வர்கள். அமெரிக்​காவில் தலைமை நிர்வாகம்; இங்கே கிளைகள் அல்லது இங்கே தலைமை; அமெரிக்​காவில் கிளைகள் எனப் பற்பல நிறுவனங்கள் தொடங்​கப்​பட்டன (இவற்றில் போலிகளும் அடங்கும்) அப்படி வேலைக்குச் சென்ற​வர்கள் லட்சக்​கணக்​கானவர்கள்.

வெறுப்பு​ணர்வின் வேர்கள்: சரி, இந்தி​யர்கள் மட்டும் ஏன் அதிகம் குறி வைக்கப்​படு​கிறார்கள்? முதல் இரண்டு அலைகளில் சென்ற​வர்​களால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட​வில்லை. காரணம், அவர்கள் அந்தப் பண்பாட்டோடு ஒன்றி​விட்​டார்கள். தங்களை அந்த நாட்டுக்​காரர்​களாகவே மாற்றிக்​கொண்​டனர். திருமணங்​கள்கூட மனம் விரும்​பிய​வரோடு சாதி, மதம் கடந்து இயல்பாக நடந்தன.

இரண்டாவது அலையில் சென்ற​வர்கள் அமைதியாக, குறிப்பாக யாரிட​மும், சக இந்தி​யரிடம்கூட நட்பு பாராட்​டாமல் விலகியே இருந்​தனர். வீடு-அலு​வல​கம்​-வீடு, வார இறுதி நாட்களில் இந்தியா​வுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு, எப்போ​தாவது நண்பர்கள் வீடு, மூன்றாண்​டு​களுக்கு ஒருமுறை தாய்நாட்டுப் பயணம் என்கிற அளவில் வாழ்க்கையை வகுத்​துக்​கொண்​டார்கள்.

மூன்றாவது அலையில் சென்ற​வர்​களால்தான் பிரச்சினைகள் தொடங்கின. காரணம், முன்னர் சென்ற​வர்​களைப் போல இவர்களுக்குத் தயக்கமோ, மனத்தடையோ இல்லை. எங்கெங்கு காணினும் நம்மவர்கள் என்கிற அசட்டுத் துணிச்​சலும் அலட்சி​யமும் கூடின. கொத்துக்​கொத்தாக ஒரே பகுதியில் குடிபெயர ஆரம்பித்​தார்கள்.

தொடக்​கத்தில் எல்லாரும் இந்தி​யர்கள் என வசித்த நிலை மாறி, என் மொழிக்​காரர், சாதிக்​காரர் என எல்லைகளைக் குறுக்​கிக்​கொண்​டார்கள். பிறருக்கு வேலை தரும் பொறுப்பில் இருப்​பவர்கள், ‘நம் ஆள்’ எனத் தேடிப் பிடித்து வேலைக்குச் சேர்த்தது போன்றவை உள்ளூர் ஆட்களுக்கு அறமற்ற போட்டியை ஏற்படுத்​தியது. இது சாதாரணப் பிரச்சினை அல்ல.

தவிர, இந்தி​யர்​களின் வசதி வாய்ப்புகள் பெருகப்​பெருக, மதப் பண்டிகைகள், சாதிச் சடங்கு​களைக் கோலாகல​மாகக் கொண்டாடத் தொடங்கி​விட்​டார்கள். பண்டிகைக் காலங்​களில் நம் ஊர் போலவே ஒலிபெருக்​கிகள் அதிரும். விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது ‘என் நாடு’, ‘என் அணி’ என்கிற மனப்போக்கு பட்டவர்த்​தனமாக இவர்களிடம் வெளிப்​பட்டது. அடுத்​தவருக்கு இடையூறு ஏற்படாத வரைதான் நம்முடைய சுதந்​திரம் என்பதை மறந்து​விட்​டார்கள். பொது இடங்களில் உரக்கப் பேசுவதும், குப்பைகளைப் போடுவது, பீடா போட்டுத் துப்பு​வது என இந்தியத் தன்மை​களையும் இவர்கள் அங்கே இறக்குமதி செய்தனர்.

அண்மைக் காலங்​களில் உலகெங்கும் அழைப்பு மையங்கள் வழியாக, அப்பாவி மக்கள், குறிப்பாக முதிய​வர்கள் ஏமாற்​றப்​
படு​கிறார்கள். இதில், இந்தி​யர்​கள்கூட ஏமாந்து பெரும் பணத்தை இழந்து இருக்​கிறார்கள். கொடுமை என்னவென்​றால், இத்தகைய அழைப்பு மையங்கள் பெரும்​பாலும் இந்தியா​விலிருந்து செயல்​படுபவை.

இப்படி இங்கொன்றும் அங்கொன்றும் நடப்பவற்றை வெளிநாட்டு ஊடகங்கள் ஊதிப்​பெருக்​கும்​போது, ஒட்டுமொத்​த​மாகவே நம் நாட்டின் மீது கெட்ட பெயர் ஏற்படு​கிறது. எல்லை மீறப்​படும்போது ஏற்கெனவே கோபம் கொண்டிருந்த உள்ளூர்க்​காரர்கள் எரிச்சல் அடைகின்​றனர். இது பல்வேறு விதங்​களில் வெளிப்​படு​கிறது.

இனி என்ன? - உலகப் பொருளா​தாரம் செழிப்பாக இருக்​கும்வரை பெருமளவில் கண்டு​கொள்​ளப்​ப​டாமல் இருந்த பிரச்சினைகள், இப்போது பூதாகர​மாகி​விட்டன. பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, விலையேற்றம் எனப் பல்வேறு காரணிகள் இதில் சுட்டிக்​காட்​டப்​படு​கின்றன. செயற்கை நுண்ணறிவு தன்னுடைய வேலையைக் காட்ட ஆரம்பித்து​விட்டது. வரலாற்றில் எப்போதெல்லாம் வறுமை, பசிப் பிணி அதிகரிக்​கிறதோ அப்போதெல்லாம் பிற்போக்குச் சிந்தனைகள் எழுவது வாடிக்கை.

வெளிநாடு​களில் திடீரென நாட்டுப்​பற்று, மதப்பற்று, நிறப்​பற்று வரிசைகட்டி மக்களை ஒரு புள்ளியில் கொண்டு​வந்து நிறுத்து​கின்றன. எல்லா​வற்றுக்கும் காரணம், குடியேறிகள்தான் என எளிதாக எதிர் மனநிலை கட்டமைக்​கப்​படு​கிறது. அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் காலங்​களில் வாக்கு​களைப் பெற இது வசதியாக அமைகிறது.

அமெரிக்​காவைப் பொறுத்தவரை இன்னொரு காரணமும் இருக்​கிறது. ரஷ்யா உடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும், அவர்களிட​மிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது. அப்போதுதான் ரஷ்யப் பொருளா​தாரம் சரியும்; உக்ரைனில் போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டு​வரலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருதுகிறார்.

அமெரிக்கா விதித்​திருக்கும் 50 சதவீதத்​துக்கும் அதிகமான அபராத வரி ஒரு பக்கம் நமது பொருளா​தா​ரத்தின் கழுத்தை இறுக்கிப் பிடிக்​கிறது; இன்னொரு பக்கம், இந்தியக் குடியேறிகளை விரட்டும் நடவடிக்கைகள் மூலமாக இந்தியாவை வழிக்குக் கொண்டு​வரலாம் என்று அமெரிக்கா கருது​வ​தாகப் புவிசார் அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்​காட்டு​கிறார்கள். அமெரிக்கா​வுக்குச் சுற்றுலா செல்கிற அல்லது குறுகிய காலப் பயணிகளாகச் செல்கிற இந்தி​யர்​களுக்கு அமெரிக்கா விதிக்கும் கடும் நிபந்​தனைகள் இதை உறுதிப்​படுத்து​கின்றன.

வெளிநாடு​களில் இந்தி​யர்கள் எதிர்​கொள்ளும் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிவரும் நிலையில், இந்திய வெளியுறவுத் துறையின் நகர்வு​களைப் பொறுத்தே அதிகாரபூர்வமாக இந்தி​யர்​களுக்குப் பாதுகாப்புக் கிடைக்​கும். அதேவேளை​யில், இந்தியர்கள் குறித்த பார்வை மாறுவதற்கான வாய்ப்​புகள் குறித்தும் நாம் சிந்தித்தாக வேண்டும்​!

- தொடர்புக்கு: olivannang@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x