Published : 21 Sep 2025 04:47 PM
Last Updated : 21 Sep 2025 04:47 PM

இந்தியாவில் பூதாகரமான இந்தி திணிப்பு பிரச்சினை - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 58

கே.எம்.முன்ஷி, என்.கோபால்சாமி அய்யங்கார்.

சென்னை மாகாண முதலமைச்சராக ராஜாஜி இருந்தபோது கொண்டுவரப்பட்ட பகுதிநேர வேலை கல்வித் திட்டத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பு, அதனால் அத்திட்டம் திரும்பப் பெறப்பட்டது, அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மொழிப் பிரச்சினை என்பதைப் பற்றியெல்லாம் முன்னரே சொல்லியுள்ளேன். இந்தி மொழி திணிப்பு என்பதை தமிழகம் மட்டுமின்றி, வேறு சில மாநிலங்களும் எதிர்த்தன.

ஏற்கெனவே சென்னையில் 1918-ம் ஆண்டு ஜூன் 17-ம் தேதி இந்தி பிரச்சார சபை தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தி மற்றும் அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோர் இதை தொடங்கி வைத்தனர். தென்னிந்தியாவில் உள்ள இந்தி பேசாத மக்களிடையே இந்தி மொழிக் கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மத்திய கல்வி நிறுவனமாகும் இது.

ஆந்திராவைச் சேர்ந்த மோட்டூரி சத்யநாராயணா, இந்தி பிரச்சார சபையை பொறுப்பேற்று நடத்தினார். அவர் அரசியல் நிர்ணய சபையிலும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினராக இருந்தவர். சென்னை மாகாணம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நகரம். இந்தி மொழியை மக்கள் கற்றுக் கொள்வது மிகவும் நல்லது என்று மகாத்மா காந்தி அந்த காலகட்டத்தில் கூறினார். அதன்பிறகு 1930-களில் தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது.

தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தியதோடு, இந்தி கூடாது என்ற கருத்தை மறைமலையடிகள் போன்ற தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருந்த திரு.வி.க., நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்களும்கூட இந்தி திணிப்பு என்பதை நாங்கள் எதிர்க்கிறோம் என்ற குரலை எழுப்பினார்கள்.

இந்திய நாடு 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு மொழிப் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு விதமான கருத்துகள் இருந்தன. ஒருசிலர் இந்தி வேண்டும்; இந்துஸ்தானியை ஏற்க வேண்டும் என்றார்கள். மற்றொரு தரப்பினரோ இந்தியை திணிக்கக் கூடாது என்று தீவிரமாக எதிர்த்தார்கள்.

இந்தியை உடனடியாக தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்த புருஷோத்தமன் தாண்டன் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தார்கள். இந்தி மொழி பேசும் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியை நாட்டின் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்றனர்.

தேவநாகரி என்ற எழுத்து வடிவம் கொண்ட இந்தி மொழியை ஏற்றுக் கொள்ளும் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் நிறைவேற்றினார்கள். அதேநேரம் தென்னிந்தியப் பகுதிகளான சென்னை ராஜதானி, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எதிர்த்தனர். இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்தி ஆதரவு தீர்மானங்களை ஒத்திவைக்கும்படி காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டது.

இந்தியாவின் ஆட்சி மொழியாகவும், உயர் நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாகவும் இந்தியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் முன்வைத்தனர். விடுதலைக்குப் பின்னர் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டு ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக வைத்துக் கொள்ளலாம். இந்தியை இரண்டாம் மொழியாக வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இருந்தபோதிலும் பெருவாரியான காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்கியே தீரவேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டியிடம் முறையிட்டனர்.

இதற்கிடையே ஏற்கெனவே உள்ள ஆங்கில நடைமுறையில் உள்ள பணிகளை மேற்கொள்ள இந்தி மொழி தயாராகின்ற வரை ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று ஒரு கருத்தை வைத்தபோது அதற்கு சிலர் எதிர்ப்பும், சிலர் ஆதரவும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும், சிக்கல்கள் வந்துவிடக் கூடாது என்ற நோக்கில், மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காண கே.எம்.முன்ஷி, என்.கோபால்சாமி அய்யங்கார் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. சமரச தீர்வு காண்பது எப்படி என்று இக்குழு ஆய்வு செய்தது.

இந்நிலையில், ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இருக்கும் வகையில் மொழித் திட்டத்தை உருவாக்கினால் அது அடிமை மனப்பான்மையை வளர்க்கும், பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தையே எதிரொலிக்கும் என்று இந்தி ஆதரவாளர்கள் கூறினார்கள். அதைத் தொடர்ந்து, ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியை ஆட்சி மொழியாக ஆக்குவதற்கு 15 ஆண்டுகாலம் அவகாசம் வழங்கலாம் என்று அரசியல் நிர்ணய சபை தீர்மானித்தபோது, அதுவரை ஆங்கிலம் பயன்பாட்டில் இருக்கும் என்று உறுதிமொழி தரப்பட்டது.

பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் இந்தி மொழியை பயிற்சி மொழியாக ஆக்கப்படாமல் இருப்பதற்கு இந்த உறுதிமொழி உத்தரவாதமாகக் கருதப்பட்டது. அதேநேரம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இந்தி மொழிப் பாடங்கள் இருக்கத்தான் செய்தன. அரசியல் சாசனத்தின் 7-வது அட்டவணையில் குறிப்பிட்டவாறு, ஒவ்வொரு மொழியிலும் படிக்க வேண்டும் என்ற ஒரு நிலையை இடைக்காலமாக அறிவித்தாலும், இந்தி திணிப்பு ஒருவகையில் நடந்து கொண்டே இருந்தது.

அரசியலமைப்பு சபையில் மைசூர் சமஸ்தானத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி ராவ் ஆவார். இந்திய மொழியியல் மற்றும் தேசிய மொழி குறித்த விவாதங்களில், இந்தி ஒரு தேசிய மொழியாகும் என்ற கருத்தை எதிர்த்து, ஆங்கிலம் அரசு மொழியாக நீடிக்க வேண்டும் என்று வாதிட்டவர்களில் இவரும் ஒருவர்.

இதற்கிடையே, அரசியல் நிர்ணய சபையில் ஆட்சி மொழி குறித்த ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த என்.கோபால்சாமி அய்யங்கார், தனது அறிக்கையில் கிருஷ்ணமூர்த்தி ராவின் கருத்துக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்தி மொழியின் மாறிக் கொண்டே இருக்கும் தன்மையைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக அரசியல், அரசியல் சாசனம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் இதர விஷயங்கள் சம்பந்தமாக கல்வி கற்பிப்பது குறித்து கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கிருஷ்ணமூர்த்தி ராவின் யோசனை ஏற்பதாகவும், அதேநேரம், பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள் இருக்கின்ற நம் நாட்டில் நம்மிடையே கருத்து மாறுபாடுகள் வந்துவிடக் கூடாது என்றும் அறிக்கையில் கோபால்சுவாமி அய்யங்கார் சுட்டிக் காட்டினார்.

இந்திய அரசியல் சாசனத்தின் 17-வது பகுதியில் ஆட்சி மொழி பற்றிய பிரிவுகள் உள்ளன. 243-வது பிரிவில் கீழ்க்கண்டவாறு இந்திய யூனியன் ஆட்சி மொழி தேவநாகரி எழுத்துடன் கூடிய இந்தி மொழியாக இருக்க வேண்டும். இந்திய யூனியன் ஆட்சிப் பணிகளுக்கு அதைப் பயன்படுத்த வேண்டும். 1-வது உட்பிரிவின் படி தொடர்ந்து 5 ஆண்டுகள் ஆங்கிலமே பயன்பாட்டில் இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மொழிப் பிரச்சினை விவகாரத்தில் அந்தக் காலகட்டத்தில் பல்வேறு விதமான கருத்துக்கள் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எழுந்தன. இதைப்பற்றி மேலும் ஆராய பி.ஜி.கேர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

இதற்கிடையே, தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் மொழிப் பிரச்சினை குறித்து திமுக கேள்வி எழுப்பியது. அதற்குரிய பதிலை அன்றைய கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் சட்டப்பேரவையில் எடுத்துவைத்தார். கல்வித் துறை செயலாளராக அப்போது ஆர்.ஏ.கோபால்சாமி இருந்தார். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களையும் பரிசீலித்து கோபால்சாமி ஓர் அறிக்கையைத் தயாரித்திருந்தார்.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் உள்ளன. பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன. அதை அனுசரித்து மொழிக் கொள்கையைத் தீர்மானிக்க வேண்டும் என்ற வரைவுத் திட்டத்தை சி.சுப்பிரமணியத்திடம் அவர் சமர்ப்பித்திருந்தார். அந்த வரைவுத் திட்டம் குறித்து தமிழக அமைச்சரவை விவாதித்தது. இந்த வரைவு திட்டத்தை அன்றைய திமுக தலைவர் அண்ணா பாராட்டினார். சட்டப்பேரவையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இதை ஒப்புக் கொண்டன.

இப்படியாக மொழிப் பிரச்சினை தமிழ்நாட்டில் அன்றைக்கு இருந்தது. அதேபோல் மேற்கு வங்கத்திலும் இந்தப் பிரச்சினை தீவிரமாக விவாதிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் லால் பகதூர் சாஸ்திரி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த குல்ஜாரியா நந்தா, தேவையில்லாமல் இந்தியைத் திணிக்க வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார். மொழிப் போராட்டங்கள் 1960-களிலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன.

தமிழகத்தில் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கம்

சென்னை மாகாணத்தில் 1957 முதல் 1967 வரை தொழில்கள் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சராக ஆர்.வெங்கட்ராமன் இருந்தார். அப்போது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. ஆவடியில் காங்கிரஸ் மாநாடு முடிந்த நிலையில் அந்த இடத்தில் தொழிற் பேட்டை உருவாக்கப்பட்டது. அதேபோல் அம்பத்தூர், கிண்டி, மதுரை, கோவை, திருநெல்வேலி என பெரும்பாலான மாவட்டத் தலைநகரங்களில் தொழிற்பேட்டைகள் அமைந்தன.

அந்தக் காலகட்டத்தில் கோயம்புத்தூரில் நெசவாலைகள் அதிகமாக இருந்தன. பம்பாய், அகமதாபாத்தைத் தொடர்ந்து ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’ என்று கோயம்புத்தூர் அழைக்கப்பட்டது. பள்ளிக்கூட ஆசிரியரின் சம்பளத்தை விட நெசவாலைத் தொழிலாளியின் சம்பளம் அதிகம் என்று அப்போது பேசப்பட்டது.

கரிசல் மண் சூழ்ந்த எங்கள் கோவில்பட்டி நகரத்தில் மிகச் சிறப்பு வாய்ந்த லட்சுமி பஞ்சாலை மற்றும் கரு முத்து தியாகராஜரின் லாயல் பஞ்சாலை இரண்டும் அக்காலத்தில் மிக முக்கியமானவையாக இருந்தன. இவ்விரண்டு மில்களும் கோவில்பட்டி நகருக்கு உலக அளவில் சிறப்புச் சேர்த்தவை.

மூடப்பட்ட லாயல் மில்ஸ்

ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு அளித்தன. கோவில்பட்டியின் முக்கிய அடையாளமாக இந்த நெசவாலைகளும், கடலை மிட்டாயும், காரச்சேவும், கடம்பூர் போளியும் திகழ்ந்தன. இந்திய அளவில் நடக்கும் ஹாக்கிப் போட்டிக்கு கோவில்பட்டி சிறப்பிடம் பெற்றது சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். லட்சுமி மில்ஸ் சார்பில் மிகச்சிறப்பான மைதானம் அமைக்கப்பட்டிருந்தது. சர்வதேச ஹாக்கிப்போட்டிகள் கூட இங்கு நடந்திருக்கின்றன. பல ஆண்டுகள் இயங்கி வந்த லாயல் மில் கடந்த வாரம் மூடப்பட்டது என்னைப் போன்றவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எங்கள் குடும்பத்தினருக்கும் பருத்தி விவசாயம் உண்டு. பத்தாண்டுக்கு ஒருமுறைதான் பருத்திக்கு லாபமான விலை கிடைக்கும். கடுமையான கோடை காலத்தில்தான் பருத்தி வேளாண்மை நடக்கும். கிராமங்களில் உள்ள ஆணும், பெண்ணும் கடின உழைப்பைக் கொடுத்தும், அதற்கேற்ற வருமானம் கிடைக்காது. இப்போதும்கூட பஞ்சுக்கு போதிய விலை இல்லை. பருத்திக்கு போதிய விலை இல்லை என் தலைமையில் கோவில்பட்டியில், அரசு மருத்துவமனை அருகே 1997-ல் விவசாயிகள் போராட்டம் நடந்தது உண்டு.

தற்போது லாயல் மில் மூடப்பட்டதால் ஏறக்குறைய கோவில்பட்டி ஒரு வளமான வாழ்க்கை வாய்ப்பையும் இழந்து போயிருக்கிறது. லாயல் மில் ஆலையில் இருக்கும் விருந்தினர் தங்கு விடுதியில் ஒரு காலத்தில் நானும் பி.எச்.பாண்டியனும் தங்கியதும் உண்டு. மிகச் சிறப்பாக உணவு போன்ற விருந்து உபசாரங்களை மரியாதையும் அன்பும் கொண்டு செய்வார்கள்.

அவ்வளவு சிறப்பு மிக்க நூற்றாண்டு கடந்த ஆலையை மூடிவிட்டார்கள். இப்படிப் படிப்படியாக பஞ்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. ஆர்வி மில் என்ற பிரசித்தி பெற்ற பஞ்சாலை தூத்துக்குடி, அம்பாசமுத்திரம், மதுரையில் இருந்தது. அதுவும் மூடப்பட்டு விட்டது. கோவை மற்றும் பல்லடம், திண்டுக்கல், ராஜபாளையம் பகுதிகளில் இருந்த அதிகமான பஞ்சாலைகள் படிப்படியாக மூடப்பட்டு இன்று ஒரு சிலவே மிஞ்சி இருக்கின்றன. மில்கள் இடத்தில் மிகப்பெரிய மால்களும் வணிகக் கடைகளும் உருவாகிவிட்டன.. அப்பார்ட்மெண்ட் குடியிருப்புகளும் பெருகி, ஆலைத் தொழில் தமிழ்நாட்டில் மிகுந்த சரிவை சந்தித்து விட்டது.

காலத்தைப் பொறுத்தவரையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என மாற்றங்கள் பலவாறாக நிகழத்தான் செய்யும் என்றாலும் இந்த மில்களினால் ஏற்பட்ட உத்தரவாதமான வாழ்க்கை முறை இன்றளவில் நசிந்து போய்விட்டது. அவற்றுக்கு இணையாக வேறு தொழில் வாய்ப்புகளும் உருவாக முடியாத அளவுக்கு இன்றைக்கு தமிழகத்தின் நகரங்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளன. சிறு தொழில்களையும் பெரும் முதலீட்டு நிறுவனங்கள் எடுத்துக் கொண்ட நிலையில் இவற்றுக்கு இணையாக அதிக வேலை வாய்ப்புகளை பெருக்க வேண்டியது மனித வளத்துக்கு இன்றைக்குத் தேவையானதாக இருக்கிறது.

காமராஜர் ஆட்சிக் காலத்தில் கிராமங்கள் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கிராமங்கள்தோறும் மின்வசதி, சாலை வசதி, ஆழ்குழாய் கிணறுகள் என்று திட்டங்கள் போட்டு அடிப்படை வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.

ஓமந்தூரார் காலத்தில் பெரியசாமி தூரனால் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தின் 2-வது மற்றும் 3-வது பகுதி இந்தக் காலகட்டத்தில் வெளியிடப்பட்டது. அதேபோல் முதுகுளத்தூர் கலவரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை சிறையில் அடைத்ததும் இந்தக் காலகட்டம்தான். கிராம நூல் நிலையங்கள் பஞ்சாயத்து அளவில் உருவாக்கப்பட்டன. மு.வ., அகிலன் போன்ற படைப்பாளிகளின் நூல்கள் அதிகமாக நூல் நிலையங்களில் இடம்பெற்றிருந்தன.

சிறுவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிராமங்கள் தோறும் சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டன. அங்கு சீஷா, சருக்கு விளையாட்டு இரும்பு ஏணிகள் இடம்பெற்றிருந்தன. தொடக்கப் பள்ளிகளுக்கு உலக வரைபடங்கள், இந்திய வரைபடங்கள், பாரதியார், திருவள்ளுவர் படங்கள் வழங்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் மின் உற்பத்தி நிலையங்கள், அணைகள், நீர்ப்பாசன கால்வாய்கள் போன்றவையும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன.

(தொடர்வோம்...)

முந்தைய அத்தியாயம்: ஈழத்தில் பலனளிக்காத அறவழிப் போராட்டம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 57

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x