Published : 20 Sep 2025 02:55 PM
Last Updated : 20 Sep 2025 02:55 PM

ஈழத்தில் பலனளிக்காத அறவழிப் போராட்டம் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 57

இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர்காலம் குறித்து 1964 அக்டோபர் 30 அன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் நடந்த சில சம்பவங்களை நினைவுகூர்ந்து, வேலுப்பிள்ளை பிரபாகரனின் சகாவாக இருந்து, தற்போது லண்டனில் வசித்துவரும் ராகவன், இணையதள ஊடகத்துக்கு எழுதிய கட்டுரையை கடந்த 3 தொடர்களில் பதிவு செய்திருந்தேன். அவரது பல கருத்துகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதையும், அந்த கட்டுரையை ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த ஒரு முன்னோட்டமாக எடுத்துக் கொள்ளும்படியும் கூறியிருந்தேன்.

என்னைப் பொருத்தவரை, பிரபாகரனுடன் நெருங்கிப் பழகியவன் நான். அதுமட்டுமல்ல, தமிழ் ஈழத் தலைவர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், யோகேஸ்வரன், நவரத்தினம், சம்பந்தன், சேனாதிபதி ராஜா போன்றவர்களிடமும் நெருக்கமாக இருந்தவன். பிரபாகரனை நான் சந்திக்கும்போது, ‘‘அமிர் அண்ணன் என்னைப் பற்றி என்ன சொன்னார்?’’ என்று பிரபாகரன் கேட்பார். அதேபோல், அமிர்தலிங்கத்தை நான் சந்திக்கும் வேளையில், ‘‘உங்கள் சகோதரன் பிரபாகரன் என்ன சொன்னார்... நீங்கள்தான் அவருடைய தீவிர ஆதரவாளராச்சே...?’’ என்று கிண்டலாகக் கேட்பதுண்டு.

மேலும், டெலோ இயக்கத்துக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர் கரிகாலனோடும் நான் நெருக்கமாக இருந்தேன். தற்போது அவர் கனடாவில் வசித்து வருகிறார். இவர்கள் மட்டுமல்ல, தமிழ் ஈழத்துக்காகப் போராடிய பல்வேறு தலைவர்களும், அமைப்பினரும் என்னோடு நட்பு பாராட்டினார்கள். என்னுடைய திருமணத்துக்கு அமிர்தலிங்கம், பிரபாகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் வந்திருந்தனர். இருந்தபோதும், அமிர்தலிங்கத்தை நேரில் சந்திப்பதை தவிர்க்கும் எண்ணத்தில் பிரபாகரன் மேடைக்கு வரவில்லை.

இங்குதான் பிரபாகரனை முதன்முதலாக கலைஞர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், பிரபாகரனின் திருமணம் எல்லாம் என் வாழ்வில் முக்கியமான தருணங்கள். பிரபாகரன் கிட்டத்தட்ட 1979 முதல் 1987 வரை சென்னையில்தான் இருந்தார். அப்போதெல்லாம் தினமும் என்னை சந்திப்பார். நான் ஊரில் இல்லாத காலங்களில் திரும்பி வந்ததும் உடனே எங்கள் சந்திப்பு நிகழும். அப்போது அரசியல் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் மணிக்கணக்கில் உரையாடியதுண்டு. இதைப்பற்றியெல்லாம் பின்னால் வரும் அத்தியாயங்களில் கூற இருக்கிறேன்.

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஈழத் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர். குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத் தீவு, திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என கடற்கரையோரமாக, தங்களுடைய மரபுரீதியிலான அந்த மண்ணின் மைந்தர்களாகவே வாழ்ந்தனர். இருந்தபோதும் அவர்களை இரண்டாம்தர குடிமக்களாகவே சிங்கள அரசு கருதி வழிநடத்தியது. அங்கு இரண்டு விதமான தமிழர்கள் உள்ளனர். அவர்களை பூர்வீக மண்ணின் மைந்தர்கள் மற்றும் மலையகத் தமிழர்கள் என பிரிக்கலாம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்கள் மண்ணின் மைந்தர்களாகத் திகழ்ந்தனர்.

இப்பகுதியில்தான் சங்கிலியான் உள்ளிட்ட அரசர்கள் ஆட்சி செய்தனர். நீண்ட நெடிய வரலாற்றுக்கு உட்பட்ட தமிழர் மண் இது. இந்நிலையில்தான், இந்தியா, இலங்கையை தனித்தனி ஆளுகையின் கீழ் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தனர். அன்றைய காலகட்டத்தில், இந்தியாவின் தென்பகுதியான தமிழகப் பகுதியில் இன்றைய கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கிய ஒன்றுபட்ட திருச்சி மாவட்டம், திண்டுக்கல் தேனி அடங்கிய மதுரை மாவட்டம், இன்றைய விருதுநகர், சிவகங்கை அடங்கிய ராமநாதபுரம் மாவட்டம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து தேயிலை, காப்பி, ரப்பர் தோட்ட வேலைக்காக தமிழர்களை இலங்கைக்கு ஆங்கிலேயர்கள் அழைத்துச் சென்றனர்.

ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் ஏழை எளிய மக்கள் நடந்தே வந்தனர். பின்னர் துறைமுகத்தில் இருந்து கப்பலிலும், படகுகளிலும் இவர்களை இலங்கை மலையகப் பகுதிகளுக்கு ஆங்கிலேயர்கள் கொண்டு சென்றனர். மலையகப் பகுதிகளை சீர்படுத்தி தேயிலை தோட்டங்கள் அமைத்தல், பராமரித்தல், தேயிலை பறித்தல், பதப்படுத்துதல், தொழிற்சாலைகளுக்கு கொண்டு சென்று அரவை செய்து தரம் பிரித்தல் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புதல் வரை தமிழர்களின் உழைப்பை ஆங்கிலேயர்கள் உறிஞ்சினர்.

அதேபோல் ரப்பர், காப்பி தோட்டங்களிலும் தமிழர்கள் பணியமர்த்தப்பட்டனர். தங்களது குடும்பங்களை விட்டுப் பிரிந்தும், குடும்பத்தோடும் வயிற்றுப் பிழைப்புக்காக மலையகம் சென்ற தமிழர்கள், இரவு பகல் பாராது உழைத்தனர். கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன் சென்ற இவர்கள் மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இலங்கை பூர்வீகத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும் இலங்கை அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மலையகத் தமிழர்களுக்கு பிரஜா உரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் உழைப்புக்கான ஊதியமும் சரிவர கொடுக்கப்படாமல், மாட்டுத் தொழுவங்களில் அவர்களைத் தங்க வைத்து கொடுமைப்படுத்தினர்.

லால் பகதூர் சாஸ்திரி - சிறிமாவோ பண்டார நாயக்கா ஒப்பந்தம்

இந்நிலையில், இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டார நாயக்காவுக்கும், இந்தியப் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையே 1964 அக்டோபர் 30 அன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி லட்சக்கணக்கான தமிழர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அப்படியாக மலையகத்தில் இருந்து இந்தியா திரும்பிய குடும்பங்களில் ஒன்றுதான், திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசாவின் குடும்பம்.

அதேபோல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த அந்த மண்ணின் பூர்வீக மைந்தர்களையும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆட்படுத்தியது சிங்கள அரசு. தமிழை ஆட்சி மொழியாக ஆக்க மறுத்ததோடு, வேலைவாய்ப்புகளும் சிங்களருக்கே வழங்கப்பட்டன. தமிழர்களின் அடிப்படை உரிமைகள், வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடிய அளவுக்கு சிங்கள காவல் துறையினரும், ராணுவமும் அத்துமீறி நடந்த வரலாறைப் பற்றியெல்லாம் பின்னால் பார்க்க இருக்கிறோம்.

இப்படியாக சிங்கள அரசால் தமிழர்கள் நசுக்கப்படுவதைக் கண்டு பொங்கியெழுந்த தலைவர்கள் பலர். அவர்களில் முக்கியமானவர் தந்தை செல்வநாயகம். ஈழத் தமிழர்கள் உரிமைகள் தொடர்பாக சேனநாயகா, கொத்தளவாலா, பண்டாரநாயகா போன்றவர்களுடன் 9 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் தந்தை செல்வா. ஆனால் ஒப்பந்தப்படி சிங்கள அரசு நடந்து கொள்ளவில்லை. உரிமைகளைத் தருவோம் என்று ஒப்பந்தத்தில் கூறிவிட்டு, ஏற்கெனவே இருந்த உரிமைகளையும் பறிக்கும் நோக்கில் அவர்களின் செயல்பாடுகள் இருந்தன. கடைசியாக ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம் வரை எந்த ஒப்பந்தத்தையும் சிங்கள அரசு நிறைவேற்றவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அதேநேரம், இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது வேறு விடயம். ஈழத் தமிழர்களின் உரிமைக்காக தந்தை செல்வா அறவழியில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டார். சத்தியாக்கிரகம் போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன. ஆனால் எந்தப் போராட்டமும் பலனளிக்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, சிங்கள காவல் துறையினரும், ராணுவமும் அத்துமீறி, அடித்து துவம்சம் செய்தது.

ஒருமுறை, போராட்டத்தில் ஈடுபட்ட அமிர்தலிங்கமும் தாக்குதலுக்கு உள்ளானார். தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. ரத்தம் சொட்டச் சொட்ட, இலங்கை நாடாளுமன்றத்துக்கே சென்று, ‘‘இதோ பாருங்கள்.... உங்களுடைய காவல்துறை மற்றும் ராணுவத்தினரின் அத்துமீறல்’’ என்று சொன்னதெல்லாம் உண்டு. இதேபோல் தந்தை செல்வாவும் தாக்குதலுக்கு உள்ளானார்.

ஈழத் தமிழர் தலைவர்கள் எவ்வளவோ போராடிப் பார்த்தும் எந்த நீதியும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து, சாத்வீகமாக காந்திய எண்ணத்தில் போராடிய அகிம்சா வழித் தலைவர்கள் தந்தை செல்வா தலைமையில் வட்டுக்கோட்டையில் கூடி, ‘இனிமேல் சிங்களரோடு இணைந்து வாழ முடியாது. நமக்கென தனி ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இனிமேல் தனி நாடுதான், ஈழம் தான் என்று ஒருமித்த குரலில் சூளுரையாற்றினார்கள்.

இதையே தேர்தல் பிரகடனமாகவும் மக்கள் முன் வைத்தார்கள். அந்தப் பிரகடனத்தை மக்கள் முழுமனதோடு ஏற்றுக் கொண்டனர். இதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஈழத் தமிழர் பகுதிகளில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தந்தை செல்வாவும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் நுழைந்தார். ‘மக்களின் விருப்பமும், தீர்வும் தமிழ் ஈழம்தான். அதை தேர்தல் வெற்றி மூலம் மக்கள் மெய்ப்பித்துள்ளனர். அதை நோக்கி நாங்கள் முன்னோக்கிச் செல்ல இருக்கிறோம்’’ என்று நாடாளுமன்றத்தில் முழங்கினார் தந்தை செல்வா. அதற்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராத சில தடங்கல்கள், தவிர்ப்புகள் நடந்தன.

மாணவர்கள், இளைஞர்களை ஒருங்கிணைத்த மாணவர் தலைவர் சத்தியசீலன்

இந்தச் சூழ்நிலையில் சத்தியசீலன் என்ற மாணவர் தலைவர் இளைஞர்களையும், மாணவர்களையும் யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைத்தார். அந்தக் கூட்டத்தில், ‘‘இனிமேல் சாத்வீகப் போராட்டத்தால் எந்தத் தீர்வும் நமக்குக் கிட்டாது. ஆயுதப் போராட்டத்தின் மூலமே நமது இலக்கை எட்ட முடியும்’’ என்று போர்க்குரல் எழுப்பினார். அவரின் பின்னே ஆயிரக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் திரண்டனர். அந்தக் காலகட்டத்தில்தான் பள்ளி மாணவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் போராட்டக் களத்துக்கு வருகிறார்.

காவல் துறையினர், மற்றும் ராணுவத்தினரால் தன் வீட்டில் உள்ள பெண்கள் துன்புறுத்தப்பட்டதைக் கண்டு உள்ளக் குமுறலோடு இருந்தார் பிரபாகரன். இதேபோன்ற கொடுமைகளுக்கு உள்ளான பெண்கள் எத்தனையோ பேர் தமிழர் குடும்பங்களிலும் இருப்பார்களே... அவர்களுக்கும் இந்த வேதனையும் ரணமும் இருக்கத்தானே செய்யும் என்று எண்ணினார். ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்தும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராட வேண்டும் என்று வெகுண்டு எழுந்தார்.

அதைத் தொடர்ந்து அவரின் செயல்பாடுகள், முதன் முதலில் அவருக்கு துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது? அதைக் கொண்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் எவ்வாறு சுடப் பழகினார் என்பதைப் பற்றியெல்லாம் பின்னர் சொல்ல இருக்கிறேன்... ஈழப் பிரச்சினையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனக்குத் தெரிந்து 1950-களில் இருந்தே ஆராய வேண்டியிருக்கும். அதுகுறித்தான தரவுகளையும், உங்களிடம் பின்னாட்களில் பகிர உள்ளேன்.

கல்விக்கு முக்கியத்துவம் தந்த காமராஜர்

தமிழகத்தில் காமராஜர் முதலமைச்சரான பிறகு ஆவடி காங்கிரஸ் மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்திக் காட்டினார் என்பதை முன்னரே பார்த்தோம். காமராஜரை பிரதமர் நேரு பாராட்டியதன் மூலம் காமராஜரின் பெயர் வடமாநிலங்களிலும் பிரபலமானது. காமராஜர் தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். குறிப்பாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். தமிழகம் முழுவதும், 9, 10 மற்றும் எஸ்எஸ்எல்சி வகுப்புகளுக்காக கழக உயர்நிலைப் பள்ளிகளை அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டன.

உயர் கல்வியைப் பொருத்தவரை அப்போது சென்னை பல்கலைக்கழகம் மட்டுமே இருந்தது. அதேபோல் தனியார் வசம் அண்ணாமலை பல்கலைக்கழகம் இருந்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான அனைத்துக் கல்லூரிகளையும் நிர்வாகம் செய்தது சென்னை பல்கலைக்கழகம்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை அப்போது, சென்னை மாநிலக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, தாம்பரம் கிறித்துவக் கல்லூரி, பெண்கள் கிறித்துவக் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, வடசென்னை அரசினர் மகளிர் கல்லூரி, வேலூர் ஊரிஸ் கல்லூரி, சேலம் அரசினர் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி கலைக் கல்லூரி, கோவை அரசினர் கலைக் கல்லூரி, அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரி, கிருஷ்ணம்மாள் கல்லூரி, நிர்மலா கல்லூரி, ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரி, திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி, நேஷனல் கல்லூரி, சீத்தாலட்சுமி ராமசாமி கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி, புதுக்கோட்டை அரசர் கல்லூரி, தஞ்சை சரபோஜி கல்லூரி, கும்பகோணம் அரசினர் கல்லூரி, மதுரை அமெரிக்கன் கல்லூரி, தியாகராஜர் கல்லூரி, பாத்திமா பெண்கள் கல்லூரி, லேடி டோக் கல்லூரி, மதுரா கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி, நெல்லை ம.தி.த. இந்துக் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரி, செயின்ட் ஜோன்ஸ் கல்லூரி, சாரா டக்கர் மகளிர் கல்லூரி, நாகர்கோவிலில் எஸ்.டி. இந்துக் கல்லூரி, கிறித்துவக் கல்லூரி, சிவகங்கை ராஜா ஆர்டிஎம் கல்லூரி, காரைக்குடி அழகப்பா கல்லூரி இவைதான் அன்றைக்கு அந்த காலகட்டத்தில் இருந்ததாக நினைவு.

அதேபோல் மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை, சென்னையில் ஸ்டான்லி, சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி), கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, தஞ்சை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி, வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி, (சிஎம்சி), மதுரை மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி ஆகியவைதான் இருந்தன. பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை சென்னையில், கிண்டி இன்ஜினீயரிங் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி, திருச்சி பிராந்திய பொறியியல் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சிஐடி (கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி), கோவை அரசினர் பொறியியல் கல்லூரி, காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி ஆகியவை இருந்ததாக நினைவு. விவசாயக் கல்லூரி கோவையில் மட்டும் இருந்தது.

பின்னர் 60களில் மதுரையில் தொடங்கப்பட்டது. கால்நடைக் கல்லூரி ஒன்றேயொன்றுதான். அது, சென்னை வேப்பேரியில் இருந்தது. என் நினைவுக்குத் தெரிந்தவரை அன்றைய உயர் கல்வி நிலையங்கள் குறித்து இங்கே குறிப்பிட்டுள்ளேன். ஒருசில விடுபட்டிருக்கலாம். தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமான சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சர் ஆற்காடு ராமசாமி முதலியாரின் சகோதரர் ஏ.லட்சுமிசாமி முதலியார் இருந்தார். இவர் மருத்துவர். ஆங்கிலப் புலமை மிக்கவர். நல்ல நிர்வாகியும் கூட.

இந்தக் கல்வி நிலையங்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தன. கல்வி அனைத்து நிலை மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்று காமராஜர் திட்டம் தீட்டினார். அதன்படி உயர்நிலைப் பள்ளிகள், கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டன. அரசினர் கல்லூரிகளும் பல இடங்களில் திறக்கப்பட்டன. கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் உணவுப் பசியோடு பள்ளிக்கூடத்தில் இருக்கக் கூடாது என்ற உயரிய எண்ணத்தில் மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார்.

இத்திட்டத்துக்காக அமெரிக்க அரசிடம் இருந்து ‘கேர்’ என்ற அமைப்பின் மூலம் கோதுமை, ரவை, பால் பவுடர் போன்றவை அனுப்பி வைக்கப்பட்டன. ஏற்கெனவே நீதிக்கட்சி காலத்தில் பிட்டி தியாகராயர் சென்னை நகரில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். பள்ளிக்கல்வி இயக்குநராக என்.டி.சுந்தரம் வடிவேலு இருந்த காலத்தில் முதலமைச்சர் காமராஜரால் தமிழகம் முழுவதும் மீண்டும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.

‘தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்று முழங்கிய முண்டாசுக் கவிஞன் மகாகவி பாரதி பிறந்த எட்டையபுரத்தில் இத்திட்டத்தை முதலமைச்சர் காமராஜர் தொடங்கி வைத்தார். இதுபோன்ற எத்தனையே நல்ல திட்டங்களை காமராஜர் தொடங்கி செயல்படுத்தி வந்தாலும், காங்கிரஸ் கட்சிக்குள் சிலர் காமராஜருக்கு எதிராக பேசத் தொடங்கினார்கள். எதிர்வினையாற்றினார்கள். ‘சோசலிசம் என்று சொல்கிறோம். ஆனால் முதலாளிகளை நம்பி ஆவடி மாநாட்டை நடத்தினார். பஸ் முதலாளிகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்.

பஞ்சாலை முதலாளிகளை பெரிதும் நம்புகிறார்’ என்ற முணுமுணுப்புகள் வெளிப்பட்டன. காமராஜரால் தாங்கள் ஒதுக்கப்படுவதாக புதுக்கோட்டை வல்லத்தரசு, செங்கோட்டை கரையாளர், திருச்செந்தூர் கே.டி.கோசல்ராம், வேதாரண்யம் வேதரத்தினம், எ.பழனிசாமி கவுண்டர், ஆர்.எஸ்.நாயுடு போன்றவர்கள் வெளிப்படையாகவே பொதுவெளியில் கூறினார்கள். அதேநேரம் எத்தனை வசைபாடுகள் வந்தாலும் காமராஜருக்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் தளபதிகளாக பலர் இருந்தனர். அவர்களுள் முக்கியமானவர்கள் செல்லப்பாண்டியன், ரா.கி., சேலம் என்.ஆர்.தியாகராஜன், திருச்சி டி.எஸ்.எஸ்.ராஜன் என பலரைச் சொல்லலாம்.

இதற்கிடையே மாகாண எல்லைப் பிரச்சினைகளும் காமராஜருக்கு நெருக்கடிகளைத் தந்தது. இன்றைய தமிழகத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு கேரளாவுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது எதிர்வினையாக அமைந்தது. அதேநேரம், ‘மெட்ராஸ் மனதே’ என்று ஆந்திரர்கள் குரல் எழுப்பியபோது, சென்னை மாகாணத்தில் இருந்து சென்னையை ஒருக்காலும் விட்டுத்தர முடியாது என்பதில் ராஜாஜியும், ம.பொ.சியும் உறுதியுடன் நின்றனர். இதே காலகட்டத்தில் பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாகக் கொண்டாடப்பட வேண்டும் பலதரப்பில் இருந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றைப் பற்றியெல்லாம் அடுத்து காண்போம்....

(தொடர்வோம்....)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x