Published : 20 Sep 2025 07:32 AM
Last Updated : 20 Sep 2025 07:32 AM
சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த நவீன உலகம், பிறரின் ஒப்புதல்களுக்கான வேட்டையில் நம்மை முடிவில்லாமல் ஈடுபட செய்கிறது. பிறர் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்ற கவலை, நமது பதிவிற்கு வந்து விழும் (likes) ‘லைக்ஸ்’ன் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளும் முடிவில்லாத விழைவால் நம் மனம் அமைதியற்று அலைபாய்கிறது.
அங்கீகாரத்தின் மீதான இந்த அளவில்லா தாகம், நம் ஆன்மாவை எளிதில் காயப்படுத்தக்கூடியதாகவும், அமைதியற்றதாகவும் மாற்றிவிட்டதை நாம் கவனிப்பதில்லை. ஆயினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு தெய்வப் புலவர் மனிதகுலத்திற்கு ஒரு புதிய வழியைக் காட்டினார். அவர் தன் பெயரையோ, வாழ்க்கைக் குறிப்புகளையோ வெளிப்படுத்தாமல், தன் ஞானத்தை மட்டுமே உலகிற்கு ஈந்தார். அவரே திருவள்ளுவர். அவர் தனது தனிப்பட்ட அடையாளங்களை முன் நிறுத்தாமல், சாதி, மதம், போன்ற புற அடையாள குறிகளால் பாதிக்கப்படாத ஒரு அழியாத பொக்கிஷத்தை உலகிற்குக் கொடுத்துள்ளார். அவரது எழுத்துக்கள் மாறாத உண்மையை தாங்கி உலகளாவிய சுடராகப் பிரகாசிக்கின்றன.
இது தொடர்பான சிந்தனையில், நான் சமீபத்தில் கேட்க நேர்ந்த, பேச்சாளர்/ சிந்தனையாளர் பாரதி பாஸ்கரின் பேச்சு என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. திருக்குறள் என்பது தொலைவிலிருந்து வியந்து பார்க்க வேண்டிய பண்டைய செய்யுள் தொகுப்பு மட்டுமல்ல, அது நவீன வாழ்விற்கான ஓர் உயிர்த்துடிப்புள்ள வழிகாட்டி என்பதை அவர் நினைவூட்டினார். அவரது சொற்கள், திருவள்ளுவரைப் பக்தியுடன் மட்டும் பார்க்காமல், அவரது காலத்தால் அழியாத போதனைகள், நம் அன்றாடங்களின் சிக்கல்களுக்கு தீர்வுகள் காண நடைமுறைப்படுத்த வேண்டியவை என்ற உணர்வை என்னுள் மீண்டும் எழுப்பியது. ஆம், திருவள்ளுவரே அதை உறுதிப்படுத்தும் வண்ணம் இவ்வாறு மொழிகிறார்
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன். (குறள் : 237)
வாழ்வு முழுவதும் போராட்டங்கள் நிறைந்தது என்றறிந்துள்ளார் வள்ளுவர். அந்த சோதனைகள் நம்மைச் சோதிக்கும், தோல்விகள் நம்மைச் சரணடையத் தூண்டும். ஆனால், நம்பிக்கை இழப்பது அதற்கான தீர்வாகாது என்று சொன்ன வள்ளுவ ஆசான்; முயற்சியால் விதியைக் கூட மாற்றி வடிவமைக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார்.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.(குறள் : 619)
வள்ளுவரின் இந்தக் கருத்து எல்லாவற்றிற்கும் உடனடியாக அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் நம் எண்ண ஓட்டத்திற்கு ஒரு விடையை பகர்கிறது. நாம் எவ்வளவு விரைவாகப் பாராட்டை நாடுகிறோமோ, அவ்வளவு விரைவாக அந்த அங்கீகாரம் தாமதமாகும் போது முயற்சிகளைக் கைவிட்டுவிடுகிறோம். ஒரு விதை முளைப்பதற்கு யாரும் பார்க்க வேண்டியதில்லை. கைத்தட்ட வேண்டியதில்லை. மனிதன் மட்டுமே இயற்கைக்கு மாறாய் அடையாளங்களுக்காகவும் அங்கீகாரத்திற்காகவும் அலைபாய்கிறான். அதுபோலவே, முயற்சி என்பது யாரும் காணாத போதும், புகழாத போதும் விடாது தொடர வேண்டிய ஒன்று.
அதுவே வள்ளுவர் நமக்கு உணர்த்தும் பாடம். இந்தக் கருத்தை வலியுறுத்தும் வள்ளுவரின் குறள் இதோ:
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்(குறள்: 613)
புகழைத் தேடும் ஆசையில் அறத்தை பின்னுக்குத் தள்ளுகிறோம் நாம். ஆனால் வள்ளுவர் நன்மையையும் நம்பகத் தன்மையையும் எப்போதும் கைவிடலாகாது என்கிறார். இதோ அந்த குறள்,
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (குறள் : 292)
தன்நலமற்ற சேவைக் குறித்து பேசும்போது, உயர்ந்த பெருமை என்பது தனிப்பட்ட புகழில் இல்லை, மாறாக இரக்கத்திலும் பிறருக்குச் செய்யும் சேவையிலும்தான் உள்ளது என்கிறார் வள்ளுவர்.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. (குறள் : 72)
இதனை மேலும் ஆழமாக,
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. (குறள்: 571)
என்ற குறள் மூலம், இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது என்கிறார்.
நிலையில்லா அங்கீகாரத்தில் மூழ்கியிருக்கும் நம் உலகிற்கு இதைவிட ஒரு சிறந்த உண்மை இருக்க முடியுமா? திருவள்ளுவர் தன்னைக் குறித்து எங்கும் கூறவில்லை. ஆனால், அவரது வார்த்தைகள் அவரை என்றென்றும் நிலை பெறச்செய்கின்றன. அவர் ஓர் அரசனாகவோ, அரசியல்வாதியாகவோ, மதகுருவாகவோ அறியப்படவில்லை. ஆனால், அவரது ஞானம் மன்னர்களையும், பேரரசுகளையும் கடந்து இன்றும் நிலைத்து நிற்கிறது. அவரது குறள்கள் நமக்கு, அகந்தைக்குப் பதிலாகத் தன்னலமின்மை, சோர்வுக்குப் பதிலாக விடாமுயற்சி, பொய்க்குப் பதிலாக உண்மை. உதாசீனத்திற்குப் பதிலாக அன்பு, சுயநலத்திற்குப் பதிலாக சேவை ஆகியவற்றுக்கு வழிகாட்டுகின்றன.
ஒருவர் தனது பெருமையை புறம்தள்ளி விட்டு, சமூகத்திற்குச் சேவை செய்யும்போது, அவரது பணி அழிவற்றதாகிறது. மிகச் சிறிய அன்பான செயலுக்குக்கூட கற்பனைக்கு எட்டாத சக்தி உண்டு. வாருங்கள்! அங்கீகாரத்திற்காக அல்லாமல் அன்பிற்காக, அன்பாக உண்மையாக செயல்கள் செய்வோம்!
- ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT