Last Updated : 19 Sep, 2025 12:04 PM

 

Published : 19 Sep 2025 12:04 PM
Last Updated : 19 Sep 2025 12:04 PM

தகுதி இல்லாதவர்கள் தரும் ஆலோசனைகள் ஆபத்தானவை! - மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு.கணேசன் நேர்காணல்

மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு.கணேசன்

தமிழில் துறைசார்ந்த எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில் முதன்மையாக இடம்பெறுபவர் மருத்துவர் கு.கணேசன். மருத்துவராகச் செயல்படுவதைவிடவும் மருத்துவ எழுத்தாளராகத் தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர். மருத்துவத் துறையின் நிகழ்வுகள், நோய் அறிகுறிகள், சிகிச்சை முறைகள், புதிய நோய்கள், நோய்த் தடுப்பு வழிமுறைகள், புதிய கண்டுபிடிப்புகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகவும் ஆழமாகவும் எழுதிவருகிறார். அவருடன் ஒரு நேர்காணல்...

எழுது​வதில் உங்களுக்கு ஆர்வம் வந்தது எப்படி? - நான் எட்டாம் வகுப்பு படித்​துக்​கொண்​டிருந்தபோது எழுத்​தாளர் அழ.கிருஷ்ண​மூர்த்தி எனக்கு வரலாற்று ஆசிரியராக இருந்​தார். அவர் நடத்தும் நீதிபோதனை வகுப்புகள் வாசிப்பு, எழுத்து மேல் ஆர்வத்தை உண்டாக்கும் விதத்தில் இருக்​கும். எழுத வேண்டும் என்​றால், நிறைய வாசிக்க வேண்டும் என்பார். என் கிராமத்தில் உள்ள நூலகத்தில் என் வாசிப்புத் தாகம் தீராது. அதனால் 15 கி.மீ. தூரத்தில் இருக்கிற திருவில்​லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்​துக்கு நடந்தே செல்வேன்.

வகுப்பு​களில் கதை, கவிதை எழுதுவது எப்படி என்று அவர் பயிற்சி அளிப்​பார். நல்ல படைப்பு​களுக்குப் பரிசும் கொடுப்​பார். அவரிடம் நான்தான் அதிக பரிசு வாங்கி​யிருப்​பேன். பரிசு பெற்ற படைப்பு​களைப் பத்திரி​கைகளுக்கு அனுப்ப வழிகாட்டு​வார். அப்படி நான் எழுதிய ‘யாருக்கு முத்து​மாலை?’ என்கிற கதை ‘முயல்’ சிறார் இதழில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து ‘கோகுலம்’, ‘பூந்​தளிர்’, ‘ரத்ன​பாலா’, ‘பாப்பா மஞ்சரி’ போன்ற இதழ்களில் கதைகளை எழுதினேன்.

குழந்தைகளை வைத்து அழ.வள்ளியப்பா வாசகர் வட்டம், வானொலியில் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறீர்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்... அழ.வள்​ளியப்பா வாசகர் வட்டத்தை 1980களில் ராஜபாளை​யத்தில் கொ.மா.கோ​தண்டம் - ராஜேஸ்வரி தம்பதி​யர்தான் நடத்தினர். அதில் நான் கலந்து​கொள்​வேன். அங்கு சிறாருக்குக் கவிதை, கதை, கட்டுரை எழுதும் பயிற்சி​களை​யும், நடிப்புப் பயிற்​சி​யையும் வழங்கு​வோம்.

அப்படி என் சிறார் நாடகங்​களுக்குப் பயிற்சி அளித்து திருச்சி, திருநெல்வேலி வானொலி நிலையங்​களுக்குச் சிறாரை அழைத்துச் சென்று நடிக்க வைத்துள்ளேன். அவ்வாறு நடித்த அன்றைய சிறாரில், வள்ளி​தாசன் இன்றைக்குப் பத்திரி​கை​யாள​ராக​வும், பதிப்​பாள​ராகவும் பரிணமிக்​கிறார். கொ.மா.கோ. இளங்கோ சிறார் எழுத்​தாளராக இருக்​கிறார்.

நீங்கள் எழுதவந்த காலக்கட்டத்தில் மருத்துவ அறிவியல் எழுதுவதற்கான சூழல் எப்படி இருந்தது? - 1975களில் அச்சு ஊடகங்​களில்தான் மருத்துவ அறிவியல் பகுதிகள் வெளிவந்தன. பெரும்​பாலும் குறிப்​பிட்ட சில மருத்​துவர்​களின் நேர்காணல்​களாகத்தான் அவை இருக்​கும். கோவையி​லிருந்து வெளிவந்த ‘கலைக்​க​தி’ரும், ‘கலைமகள்’ நிறுவனம் வெளியிட்ட ‘மஞ்சரி’​யும், ‘தினமணி’யில் என்.ராமதுரையைப் பொறுப்​பாசிரிய​ராகக் கொண்டு வெளிவந்த ‘தினமணி சுட’ரும் தனித்​தன்மை வாய்ந்த அறிவியல் மலர்கள். நான் பெரிய​வர்​களுக்கு எழுதிய மருத்​துவக் கட்டுரை முதன்​முதலில் ‘தினமணி சுட’ரில்தான் வெளிவந்தது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக ‘கேட்கட்டுமா டாக்டர்?’ என்கிற பகுதியை ‘கோகுலம்’ இதழில் தொடர்ச்சியாக எழுதியிருக்கிறீர்கள். அது இளம் வாசகர்களிடம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது? - சிறுகதைகள் எழுது​வதில் ஆர்வமாக இருந்த என்னை மருத்துவ எழுத்​தாளராக மாற்றியவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்​ளியப்​பா​தான். அவர் ஆசிரியராக இருந்த ‘கோகுல’த்தில் ‘கேட்​கட்டுமா டாக்டர்?’ பகுதியை எனக்காக ஆரம்பித்​தார்.

‘கோகுல’த்தில் மூன்று தலைமுறை​யினருக்கு எழுதி​யிருக்​கிறேன். சிறு வயதில் என் வாசகர்களாக இருந்​தவர்கள், இன்றைக்கும் என் வாசகர்​களாகத் தொடர்​கிறார்கள். நிதித் துறைச் செயலர் உதயச்​சந்​திரன், அகில இந்தியக் குடிமைப் பணிப் பயிற்சி மையத்தின் முதல்வர் தே.சங்கர சரவணன், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (சுகா​தாரம்) வீ.ப.ஜெயசீலன், தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் அவர்களில் முக்கிய​மானவர்கள்.

மருத்​துவப் பணியையும் எழுத்துப் பணியையும் எவ்வாறு சமாளிக்​கிறீர்கள்? - தகுந்த திட்ட​மிடல்தான் காரணம். மருத்​துவப் பணி செய்கிற நேரத்தில் எழுத்துப் பணியைச் செய்வ​தில்லை. தினமும் அதிகாலையில் என் எழுத்துப் பணியை வைத்துக்​கொள்​வதால் மருத்​துவப் பணி பாதிக்​கப்​படு​வ​தில்லை. எதை எழுத வேண்டும், யாருக்கு எழுத வேண்டும், எத்தனை வார்த்தைகள் என்பதைத் தெளிவாகத் திட்ட​மிட்டுக்​கொள்​வேன்.

மருத்துவர், எழுத்தாளர் மட்டுமன்றி, ஒரு தேர்ந்த வாசகராகவும் இருக்கிறீர்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம், என்னென்ன வாசிக்கிறீர்கள்? - என் வீட்டில் நூலகம் வைத்திருக்​கிறேன். 7 நாளிதழ்கள், 4 வார இதழ்கள், 3 இலக்கிய இதழ்கள், 3 மருத்துவ மாத இதழ்களை வாங்கு​கிறேன். அதிகாலை 4 மணியி​லிருந்து 6 மணி வரை வாசிக்​கிறேன் அல்லது எழுதுகிறேன். 6 – 7 மணிக்கு நடைப்​ப​யிற்சி முடிந்​ததும், 7 - 8 மணி வரை நாளிதழ்களை வாசிக்​கிறேன். இணையத்தில் சில வெளிநாட்டு நாளிதழ்​களையும் முக்கியமான மருத்துவ இதழ்களையும் வாசிப்​பேன்.

இவை தவிர, ஆண்டு​தோறும் சென்னைப் புத்தகக் காட்சி​யிலும் (குறைந்தது 10,000 ரூபாய்க்கு) பலதரப்பட்ட புத்தகங்களை வாங்கு​வேன். வாசித்துப் புதுப்​பித்​துக்​கொண்டே இருந்​தால்தான் வாசகர்​களுக்குப் புதிய புதிய செய்தி​களைத் தர முடியும். பயணங்​களின்போது எனக்குத் துணை புத்தகங்களே. அரிதாகவே தொலைக்​காட்சி பார்ப்​பேன். சமூக ஊடகங்​களுக்குத் தினமும் அரை மணி நேரம் மட்டுமே செலவிடு​வேன்.

மருத்​துவத்தில் மக்களின் விழிப்புணர்வு எந்த நிலையில் இருக்​கிறது? இயற்கை மருத்​துவம் என்கிற பெயரில் இன்றும் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது போன்ற செயல்களை எப்படிப் பார்க்​கிறீர்கள்? - மருத்​துவர்கள் எதிர்​பார்க்கிற அளவுக்கு இன்னும் மக்களுக்கு மருத்துவ விழிப்பு​ணர்வு ஏற்பட​வில்லை. நவீன மருத்​துவத்தில் 80% நாள்பட்ட நோய்களையும் அகால மரணங்​களையும் தகுந்த முன்னெச்​சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தவிர்க்க முடியும்.

ஆனால், பெரும்​பாலான மக்கள் அதற்குத் தயாரில்லை. முன்பெல்லாம் பத்திரி​கைகள், தொலைக்​காட்சி வழியாக மருத்​துவச் செய்திகளை மக்கள் தெரிந்து​கொண்​டார்கள். இவை நம்பகத்​தன்மை கொண்டிருந்​ததால் பிரச்சினை இல்லை. இப்போது சமூக ஊடகங்​களில் கட்டுப்​பாடில்​லாமலும் தணிக்கை இல்லாமலும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்​படு​கின்றன.

இவற்றில், தகுதி​யானவர்கள் சொல்வதை​விடத் தகுதி இல்லாதவர்கள் தருகிற மருத்துவ ஆலோசனை​கள்தான் அதிகம். இவற்றால் மக்கள் குழப்பம் அடைகிறார்கள். தவறான மருத்துவ சிகிச்சை​களுக்குத் தள்ளப்​படு​கிறார்கள். பெரும்​பாலும் படித்​தவர்​கள்கூட நோயின் ஆரம்பத்தில் மருத்​துவர்​களிடம் ஆலோசனை கேட்பது இல்லை.

முதலில் கூகுள் அல்லது ‘ஏஐ’ மருத்​துவரிடம்தான் ஆலோசனை கேட்கிறார்கள். இவற்றில் மருத்​துவம் குறித்து அரைகுறை​யாகத் தெரிந்து​கொண்டு, மனதைக் குழப்​பிக்​கொள்​கிறவர்​களும், நோயைத் தீவிரப்​படுத்​திக்​கொண்டு மருத்துவ ஆலோசனைக்கு வருகிறவர்​களும்தான் அதிகம்.

வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் மனநிலைக்குச் சமூக ஊடகங்​களின் தவறான வழிகாட்டு​தல்தான் காரணம். ஒவ்வொரு பெண்ணுக்கும் உடலமைப்பு, உடல்செயல்​பாடு, உடல்தகுதி ஆகியவை வேறுபடும். அதைப் பொறுத்​துத்தான் சுகப்​பிரசவம் ஆவதும், சிசேரியன் ஆவதும் கணிக்​கப்​படும்.

பெரும்​பாலான கர்ப்​பிணி​களுக்கு உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றாநோய்கள் அதிகரித்து வருகிற இன்றைய காலக்​கட்​டத்​தில், சிலருக்குப் பிரசவ நேரத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்படச் சாத்தியம் உண்டு. தகுந்த மருத்​துவரிடம் பிரசவம் பார்த்தால் இந்தச் சிக்கல்​களைத் தடுக்க முடியும். இயற்கை வழியில் வீட்டில் பிரசவம் பார்க்​கப்​படும்​போது, இந்தச் சிக்கல்​களைத் தவிர்க்க முடியாது. அப்போது தாய்க்கும் சேய்க்கும் உயிராபத்து நேரக்​கூடும்.

இன்றைய மருத்​துவர்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டு​கிறார்களா? - இன்றைய மருத்​துவர்​களுக்கு மருத்​துவத்தைத் தமிழில் எழுதும் ஆர்வம் குறைந்து​வரு​கிறது. யூடியூப் போன்ற சமூக ஊடகங்​களில் பேசுவ​தில்தான் அதிக ஆர்வம் காட்டு​கிறார்கள். இதைவிட, மருத்​துவத்தை மக்கள் புரிந்து​கொள்ளும் வகையில் எழுது​வதற்குத் தமிழ்ப் புலமையும் வேண்டும்; மருத்​துவப் புலமையும் வேண்டும்; கலைச்​சொல்​லாக்கம் தெரிந்​திருக்க வேண்டும். இந்தப் புலமைகள் ஒருசேர இருக்கிற மருத்​துவர்கள் தமிழ்​நாட்டில் குறைவு.

- தொடர்புக்கு: sujatha.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x