Published : 15 Sep 2025 09:29 AM
Last Updated : 15 Sep 2025 09:29 AM
ஒரு வீடு வாங்குவதற்காக தங்கள் வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் கொடுத்து வீடும் கிடைக்காமல் வங்கிக் கடனையும் அடைக்க முடியாமல் நிர்கதியாக நிற்கும் நடுத்தர மக்களின் நிலையை உணர்ந்து கொண்டு அவர்களைப் பாதுகாக்க தேசிய அளவில் திட்டம் உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இடைக்கால உத்தரவு ரியல் எஸ்டேட் துறையில் பெரும்மாற்றங்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வீடு கட்டும் பில்டர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்தபோது, நடுத்தர மக்களின் இன்னலை உச்சநீதிமன்றம் சரியாக புரிந்து கொண்டு பல முக்கிய உத்தரவுகளைபிறப்பித்திருப்பது பாராட்டுக்குரியது. வீடு வாங்குவோரின் நலனைப் பாதுகாக்க ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (RERA) போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், வீடுகளை குறிப்பிட்ட நேரத்தில் கட்டி முடிக்காமல் இழுத்தடிப்பது, பாதியில் திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு திவாலாகி விட்டதாக முறையீடு செய்வது போன்ற நடவடிக்கைகளால் வீடு வாங்குவோர் ஏமாற்றப்படுவது அதிகரித்து வருவதையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
வீடு என்பது நாட்டு மக்களின் அடிப்படை உரிமை. அதற்காக அவர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை செலவழிக்கும்போது, அவர்களை அனைத்து வகையிலும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் அரசியலமைப்பு கடமை என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை அரசே கையிலெடுத்து, அதற்கென தனியார் உதவியுடன் நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி திட்டங்களை முடிக்க வேண்டும். பணம் செலுத்தியவர்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ள வீடுகளை பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யலாம்; அல்லது அரசு ஊழியர்களின் வாடகை குடியிருப்பாக மாற்றலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் (NCLT), தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம்(NCLAT), ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம்(RERA) ஆகியவை முதலீட்டாளர்களையும், வீடு வாங்குவோரையும் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்தாலும், அவை முறையாக செயல்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்றம், அதிலுள்ள காலியிடங்களை நிரப்பவும், நடுத்தர மக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நடுத்தர மக்களை பாதுகாக்க வேறென்ன மாற்றங்களைச் செய்யலாம் என்பது குறித்து பரிந்துரை அளிக்க நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்து 6 மாதங்களுக்குள் பரிந்துரைகள் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நடுத்தர மக்களின் வாழ்நாள் கனவாகஇருந்துவரும் வீடு வாங்குவதில் உள்ள சிக்கல்களையும், அதில் நடைபெறும் முறைகேடுகளையும் உச்சநீதிமன்றம் சரியாக புரிந்து கொண்டு இந்த வழக்கில் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பது சாதாரண மக்களின் வயிற்றில் பால் வார்ப்பதாக அமைந்துள்ளது.
வீடு வாங்க நினைப்போரின் பணத்தை சுருட்டிக் கொண்டு, அவர்களை ஏமாற்றிவிட்டு சட்டத்தின் ஓட்டைகளில் நுழைந்து தப்பிவிடலாம் என்று நினைக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கு கடிவாளம் போட முன்வந்துள்ள உச்சநீதிமன்றத்தின் முயற்சி போற்றுதலுக்குரியதாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT