Published : 13 Sep 2025 02:01 PM
Last Updated : 13 Sep 2025 02:01 PM
ஆயுத அமைப்புகளின் ஆரம்ப தளகர்த்தர்களில் ஒருவரான சிவகுமாரனால், பிப்ரவரி 1971-ல் யாழ்ப்பாண மேயர் துரையப்பா குறிவைக்கப்பட்டார். வேம்படி மகளிர் கல்லூரிக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த துரையப்பா காருக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டது. துரையப்பா சற்று தாமதமாக வந்ததால் அவர் அக்கொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
இக்காலகட்டத்தில் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்ட்டின், தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அருளம்பலம், தியாகராஜா ஆகியோர் 1972 குடியரசு அரசியல் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கத் தீர்மானித்து அரச சார்பாகினர். இவர்களும் ‘துரோகி’ப் பட்டம் சூட்டப்பட்டனர். தமிழ் மாணவர் பேரவை, தியாகராஜாவை அவரது பம்பலப்பிட்டி வதிவிடத்தில் வைத்துக் கொலை செய்ய முயற்சித்து தோல்வியடைந்தது. துப்பாக்கிதாரி சுடும்போது, தியாகராஜா தற்காப்பு முறையில் கீழே விழுந்துகொண்டதால் அவர் மேல் குறிவைக்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் சுவரில் பட்டன.
1972 குடியரசு அரசியல் அமைப்பும் அதன் விளைவுகளும்: 1972 குடியரசு அரசியல் அமைப்பு சட்டமானது பௌத்த மதத்திற்கு விசேட அந்தஸ்து கொடுத்து, சிங்கள மொழியை அரச மொழியாக (1958 மொழிச் சட்டமானது தமிழ் மொழியை வடக்கு -கிழக்கில் பயன்படுத்துவது, மற்றும் கல்வி போன்ற விடயங்களை உள்ளடக்கியது. அவை நீக்கப்படவில்லை) அறிவித்து, 1946 அரசியலமைப்பு யாப்பில் இருந்த சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பு சரத்தையும் நீக்கியது. இது இலங்கை அரசியல் தளத்தில் நிகழ்ந்த மாபெரும் அரசியல் மாற்றம்.
பொருளாதாரச் சீர்திருத்தம், தேசியமயமாக்கல் கொள்கை, நிலஉச்சவரம்பு போன்ற முற்போக்கு அம்சங்களை 1972 குடியரசு முன்வைத்திருப்பினும், சிறுபான்மை இனங்களின் அரசியல் அபிலாசைகளை முற்றுமுழுதாக நிராகரித்ததன் விளைவு வடக்கில் தமிழ்த் தேசியவாத அலையின் எழுச்சிக்கும் அணிதிரட்டலுக்கும் காரணமாகியது.
குடியரசு அரசியலமைப்புக்கு எதிராகத் தமிழர் ஐக்கிய கூட்டணி அடையாள உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள், கருப்புக் கொடிகாட்டுதல் போன்ற அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது. ஆனாலும், அன்று நிலவிய அரசியல் யதார்த்தம் மிகச் சிக்கலானது. இந்த நிகழ்வுகளை வெறும் தமிழ் – சிங்களத் துருவப்படுத்தல் எனப் பொருள்கொள்ள முடியாது.
உதாரணத்துக்கு, அரசின் பொருளாதாரக் கொள்கையால் யாழ்ப்பாண விவசாயிகள் மிகவும் பயனடைந்தனர். 1974-ல் அன்றைய பிரதமர் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க யாழ்ப்பாணம் வந்தபோது, அவரை வரவேற்க மக்கள் பெருமளவில் திரண்டனர். 1960-களில் வடக்கில் நிகழ்ந்த சாதி எதிர்ப்பு போராட்டத்தால் அரசியல் விழிப்புணர்வு கொண்ட ஒடுக்கப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த விளிம்பு நிலை மக்கள், தமிழ்த் தேசியப் போராட்டத்தைச் சந்தேகக் கண்ணுடனேயே அணுகினர். அவர்கள் மத்தியில் இடதுசாரிகளுக்குச் செல்வாக்கு இருந்தது.
எனினும், காலனித்துவ உருவாக்கமான ‘இன அடையாளம்’ பின்காலனித்துவ அரச உருவாக்கத்தில் முடிவுக்கு கொண்டுவரப்படாமல், காலனித்துவ இன அரசியலின் தொடர்ச்சியாகப் பயணித்ததன் விளைவு சிறுபான்மை – பெரும்பான்மை எனும் கருத்தாடலின் வலிமைக்குக் காரணமாகி இலங்கை அரசியலில் பெரும் தாக்கத்தை விளைவித்தது.
தமிழ்த் தேசியக் கருத்தியலின் உள் முரண்பாடுகள்: சாதியப் பிளவுகளும், ஆதிக்க சாதி அடக்குமுறையும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் விடை காணா வினாக்கள். யாழ்ப்பாணக் குடாநாடு சாதியப் படிமுறையாலும், ஆதிக்க சாதி அடக்குமுறையாலும் புரையோடிப் போன சமூகம். அறுபதுகளில் சாதியத்திற்கு எதிரான முக்கியமான தொடர் போராட்டங்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. 1970 -இல் காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில்
செல்வநாயகத்துக்கு எதிராகப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி (மாஸ்கோ பிரிவு) உறுப்பினர் வி.பொன்னம்பலம் கணிசமான வாக்குகளைப் பெற்றார். ஒடுக்கப்பட்ட சாதியினரிடமிருந்தும் கூலித் தொழிலாளர்களிடமிருந்தும் அவருக்குப் பேராதரவு கிடைத்தது.
தமிழரசு கட்சிக்கோ பின்னர் தமிழர் ஐக்கிய கூட்டணிக்கோ சமூக நீதி அரசியல் பார்வை கிஞ்சித்தும் இருக்கவில்லை; அறுபதுகளில் எழுந்த சாதியத்திற்கு எதிரான போராட்டங்களில் அவர்கள் பங்குபற்றவில்லை. ஒருவகையில், வெள்ளாளர்கள் குடாநாட்டில் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால் சாதிய எதிர்ப்பு போராட்டம் தமது வாக்கு அரசியலுக்குக் கேடு என அவர்கள் எண்ணினர்.
மறுபுறம், சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்த் தேசிய ஒற்றுமைக்குப் பாதகம் என்ற பார்வையும் அவர்களுக்கு இருந்தது. இந்தக் குறுகிய சிந்தனைப்போக்குடன் பிரதேசம் சார்ந்த வேறுபாடுகளும் இருந்தன. யாழ். மாவட்டத்தில் அவர்களுக்கு அரசியல் செல்வாக்கு கணிசமாக இருந்தபோதும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மத்தியிலோ, முஸ்லிம் மக்கள் மத்தியிலோ அவர்களது அரசியல் ஆதிக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. கிழக்கு மாகாணத் தமிழர்களும், முஸ்லிம்களும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கு ஓரளவு ஆதரவு வழங்கும் நிலை காணப்பட்டது.
அமைப்புரீதியான பலவீனமும் கருத்தியல் வேற்றுமையும்: கூட்டணியின் குறைபாடு சமூக நீதி அரசியல் விழுமியங்களை கொண்டிருக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அவர்களுக்கு ஒரு தெளிந்த அரசியல் நோக்கும் இருக்கவில்லை. மக்களை அணி திரட்டித் தொடர்ச்சியான சட்ட மறுப்புப் போராட்டங்களை அவர்கள் முன்னெடுக்கவில்லை. கட்சிக் கட்டுமானமும் அவர்களுக்கு இருக்கவில்லை.
தென்னிலங்கையிலுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து பரந்துபட்ட ஒரு முன்னணியையும் அவர்கள் கட்டவில்லை. தமிழ் பேசும் மக்கள் என்ற பதாகையின் கீழ் முஸ்லிம், மலையக மக்களை இணைக்கும் பரந்த அரசியல் அணிகட்டலிலும் அவர்கள் தோல்வி கண்டனர். இதனால், தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுக்கும் அமைப்பு என்பது பேரளவில்தான் இருந்தது. நடைமுறையில் இருக்கவில்லை.
கூட்டணியின் இக்குறைபாடுகளின் வெளிப்பாடாகவே தீவிரத் தமிழ்த் தேசியவாதச் சிந்தனை முகிழ்த்தது. 1968 -ல், வி.நவரத்தினம் தமிழரசுக் கட்சியில் இருந்து பிரிந்து சுயாட்சி கழகத்தை நிறுவி, தமிழர் தன்னாட்சி, தமிழர் ஒரு தனி இனம் என்ற கோசத்தை முதன்மைப்படுத்தினார்.
முஸ்லிம்கள் தமிழ் பேசியபோதும், அவர்கள் தமிழ் இனமல்ல என்ற இனத்தூய்மை அரசியலை அவர் முன்வைத்தார். யூத தேச உருவாக்கம் அவருக்கு ஆதர்சமாக இருந்தது. ‘எக்சொடஸ்’ என்ற நாவலை அவர் மொழிபெயர்த்து ‘நமக்கொரு நாடு’ என்ற தலைப்பில் சுயாட்சிக் கழக ஏடான ‘விடுதலை’யில் தொடராக அவர் வெளியிட்டார். இந்த கருத்தியல், ஆயுத இயக்கங்களுக்கான அத்திவாரமாக அமைந்தது. பிரபாகரனும் வி.நவரத்தினத்தின் கருத்தியலால் உந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பழி சுமத்தும் அரசியல்: அமைப்புரீதியான அணி திரட்டல் அரசியலின் பற்றாக்குறையும், தீவிரம் கொண்ட தமிழ்த் தேசியவாத இளைஞர்களின் அழுத்தமும் ஒன்று சேர்கையில், தேர்தல் அரசியலை மட்டும் முதன்மையாக வரித்திருந்த கூட்டணிக்கு வேறு அரசியல் தேர்வும் இருக்கவில்லை. தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தைத் தாம் இழந்துவிடுவோம் என்ற அச்சமானது தமிழர்களின் ஒற்றுமையின்மைக்கு அடிப்படைக் காரணம் ‘துரோகிகள் தமிழரைப் பிரிக்கிறார்கள்’ எனும் மலினமான அரசியலை அவர்கள் தேர்ந்தெடுக்க வழி சமைத்தது.
அழித்தொழிப்பு கருத்தியலின் எழுச்சி: 1970-களின் ஆரம்பத்தில், தமிழ்த் தேசியவாத இளைஞர்கள் ‘துரோகி அழித்தொழிப்பு’ எனும் பேராபத்தான கருத்தியலை முன்னெடுத்தனர். இதுவே தமிழ் அரசியலை தலைகீழாகப் புரட்டிப்போட்ட அரசியல் பார்வையாக மாறியது. இக்கருத்தியலை மறுதலிக்காமல், கூட்டணி பாராமுகமாகச் செயற்பட்டது. கூட்டணியினர் பொது மேடைகளில் அரச ஆதரவாளர்களை ‘துரோகி’ என முத்திரை குத்தினர், அரச ஆதரவாளர்களை அழித்தொழிப்பதற்கான அரசியல் உத்வேகத்தை இது வழங்கியது எனலாம்.
மொழியாடலின் ஒன்றிணைவும் வன்முறையும்: துரோகி – அழித்தொழிப்பு என்ற இரு பதங்களும் ஒன்றிணைந்த ஆபத்தான அரசியல் 1970-களிலிருந்து முகிழ்த்தது. துரோகி – அழித்தொழிப்பு என்ற பதங்களின் ஒன்றிணைவானது தமிழ்த் தேசியவாத அரசியல் பரப்பின் மொழியாடலாகியது.
கூட்டணியின் மிதவாத அரசியலையும் அவர்களது தீவிரமின்மையையும் கேள்விக்குள்ளாக்கிய தமிழ்த் தேசியத்தால் கட்டுண்ட இளைஞர்கள் ஆயுத வன்முறையே தீர்வு என முடிவுசெய்தனர். துரோகிகள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, அது தமிழ் தேசிய போராட்டத்திற்கு அத்தியாவசியமானது எனும் சித்தாந்தம் தமிழ்த் தேசியவாத இளைஞர்களின் மத்தியில் வேரூன்றியது.
துரோகி ஒழிப்பு பற்றிய கூட்டணியின் மவுனம் அவர்களது அரசியல் இருப்புக்கான தளத்தைக் கொடுத்தது. தங்களுக்குத் துரோகி ஒழிப்பில் சம்பந்தமில்லை எனக் காட்டிக்கொண்டாலும், தீவிரவாத இளைஞர்களின் துரோகி ஒழிப்புப் படலமும் அது உருவாக்கிய பீதியும் கூட்டணியினருக்கு அரசியல் ஆதாயத்தை வழங்கியது என்பதில் ஐயமில்லை.
துரோகி ஒழிப்பின் கலாச்சார விரிவாக்கம்: துரோகி ஒழிப்பு மொழியாடல், கலாச்சார தளத்தில் எவ்வாறு நஞ்சை விதைத்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் அரசியல் பரப்பில் சிந்திக் கிடக்கின்றன. துரோகிக்கு இயற்கை மரணம் இல்லை என்ற சிலாகிப்புகளுடன் சேர்ந்த பல படைப்புகள் உருவாகின. தமிழ்த் தேசியவாதப் பத்திரிகைகள், பிரசுரங்கள், கவிதைகள் அதற்கு வழி சமைத்தன.
இந்தக் கலாச்சார முன்னெடுப்பின் பிதா காசி.ஆனந்தன் என்பது மிகையல்ல. அவரது கவிதைகள் தமிழ்த் தேசிய மொழியாடலில் வகித்த பங்கும், துரோகி அரசியல் தமிழ் தேசியவாதச் சிந்தனையில் பாய்ச்சிய மோசமான கருத்தியலும் அவரது கவிதையொன்றின் சில வரிகள் மூலம் வெளிப்படுகின்றன. அக்கவிதை இது:
“களை எடுப்போம் வாரீர் தமிழரே
தமிழரைக் காட்டிக்கொடுக்கும் தமிழர்
தலை எடுப்போம் வாரீர் மீண்டும் நாம்
தலையெடுக்க வேண்டுமாயின் இவரை
முளை தனிலே கிள்ளி எறிதலே
முதல் வேலை! ஓடிப்புறப்படுங்கள்!
கொலை நெடுவாள் தூக்கி இவர்சிந்தும்
குருதியில் பகைவரை மூழ்கடிப்போம்.
நிறைகருவில் எமைப் பல திங்கள்
சுமந்த தாயெனினும் சரியே இன்னல்
சிறிதளவுமின்றி எமை வளர்த்துச்
சிறப்பீர்ந்த தந்தை எனினும் சரியே
உறுபகைவர் நட்பில் மகிழ்ந்தெங்கள்
தமிழருக்குலை வைப்பாராயின் ஓடி
வெறியோடவர் உடலம் வீழ்த்துமின்கள்!
அதன்பின் போர் விழாவும் நடத்திவைப்போம்”
எதிரியுடன் நட்பு கொண்டவர் பெற்றோர் ஆயினும் அவர்கள் களையெடுக்கப்படவேண்டியவர்கள் எனும் மனித உறவுகளையும் மனிதத்தையும் மறுக்கும் சிந்தனை மரபின் கலாச்சார படிவங்கள் இவை. களையெடுத்தல் மனிதர்களை வெறும் பதர்கள் - களைகள் என அஃறிணை ஆக்கி அவை அப்புறப்படுத்த வேண்டியவை எனும் சிந்தனை முறைக்கான வித்தாக கலாச்சார தளத்தில் ‘துரோகி’ கருத்தியல் உருவாக்கப்பட்டது.
1974 - தமிழாராய்ச்சி மாநாடும் பொலிஸ் வன்முறையும்: யாழ்ப்பாணத்தில், ஜனவரி 1974-ல் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளில் நிகழ்ந்த பொலிஸ் வன்முறை, தீவிரத் தமிழ்த் தேசியவாதத்தின் எழுச்சிக்கும் ஆயுத வன்முறைக்கான நியாயப்படுத்தலுக்குமான தூபமாக விளங்கியது. மாநாட்டின் இறுதி நாளன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பொதுக்கூட்டத்தில் பங்குகொள்ளத் திரண்டிருந்தனர்.
பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பொலீஸ் உதவி மா அதிபரின் வாய்மொழி அனுமதியைப் பெற்றிருந்தனர். எனினும், தமிழ்நாட்டில் இருந்து வந்த இரா.ஜனார்த்தனம் மாநாட்டு விருந்தினராக அழைக்கப்படவில்லை. அழையா விருந்தினராக வந்த அவரது பிரசன்னம் சிக்கல்களை ஏற்படுத்தியிருப்பினும் பொலிஸ் வன்முறை நியாயப்படுத்த முடியாதது.
கூட்டம் தொடங்கும்போது பொலிசார் எவ்வித முன்னறிவுப்புமின்றி, திடீரென்று வாகனங்களில் வந்து தமக்கு வழிவிடுமாறு கூறிக் கூட்டத்தின் மீது வன்முறையை ஏவிவிட்டதும், அதன் தொடர்ச்சியாக வானில் சுட்டு எச்சரிக்கை விடுத்ததும், அதன் விளைவாக மின்கம்பி அறுந்துவிழுந்து ஒன்பது பொதுமக்கள் மின்சாரம் தாக்கிக் கொல்லப்பட்டதும் நிகழ்ந்தது. பொதுமக்கள் மேலான இந்த பொலிஸ் வன்முறை அவசியமற்றதும் மோசமானதுமாகும். இதன் விளைவு, துரோகிகள் கொல்லப்பட வேண்டும் என்ற சிந்தனைக்கு மேலும் வலுவூட்டியது.
(குறிப்பு: ‘அரங்கம் செய்திகள்’ இணையதளத்துக்கு ராகவன் எழுதியுள்ள ‘துரையப்பா படுகொலையும் தமிழ்த் தேசியப்பரப்பில் ‘துரோகி’ மொழியாடலும்’ என்ற கட்டுரை இது. இந்த கட்டுரை தகவல்கள் எனது கருத்தாக்கம் அல்ல… இது பார்வைக்கு மட்டுமே!)
(குறிப்பு - இந்த கட்டுரை தகவல்கள் எனது கருத்தாக்கம் அல்ல… இது பார்வைக்கு மட்டுமே!)
(தொடர்வோம்)
முந்தைய அத்தியாயம்: ஈழத் தமிழர் பிரச்சினை - ஒரு முன்னோட்டம்: நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 54
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT